தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மீண்டும் களத்தில் நிற்பதால், அவரது ஆதரவாளர்கள் காலை முதலே கடைசி கட்ட வாக்கு சேகரிப்பிலும் முனைப்பு காட்டினார்.
அமைச்சரின் தீவிர ஆதரவாளரான கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர், அ.தி.மு.க கிளை செயலாளராகவும் உள்ளார். மற்ற அதிமுக.வினரைப் போல இல்லாமல் இவர், அதிமுக.வுக்கு வாக்களிக்குமாறு கூறி பலருக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் பரவியவுடன், அங்கு வந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆரோக்கியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணப் பட்டுவாடா செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இருதரப்பினரிடையேயும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானபோது, தகவலின் பேரில் அங்கு கோவில்பட்டி காவல்துறையினர் ஆரோக்கியராஜை, அமமுக.வினரிடம் இருந்து மீண்டு தங்களது வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர்.
அதிமுக நிர்வாகிகயை அமமுக வினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர் என்று தகவலைக் கேட்டு உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த வந்தார். அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜூ. போலீஸ் பாதுகாப்பில் இருந்த ஆரோக்கியராஜை உடனடியாக விடுவிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் கடுமையான வார்த்தைகளை கூறி எச்சரித்தார். ஆனால் ஆரோக்கியராஜை விடுவிக்க கூடாது. அவரை கைது செய்து உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.ம.மு.கவினர் ஆவேசமாக கூறியதுடன் காவல்துறை வாகனத்தையும் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், அமமுக.வினருக்கு எதிராக முழக்கமிட்டதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இருதரப்பினரிடையே எழுந்த தள்ளுமுள்ளுவால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க, காவல் துறை துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமையிலான போலிஸார், இருதரப்பினரையும் அப்புறப்படுத்திவிட்டு, ஆரோக்கியராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
தேர்தல் நடத்தைக்கு மாறாகவும், சட்டவிரோதமாகவும் வாக்களிப்பதற்கு பணப்பட்டுவாடா செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரித்திருந்தும், போலீஸிடம் மாட்டிய அதிமுக கிளைச் செயலாளரை, அமைச்சர் கடம்பூர் ராஜுவே, விடுவிடுக்க கோரி தகராறில் ஈடுபட்டதைக் கண்டு கோவில்பட்டி மக்கள் அதிருப்தியடைந்தனர்.