தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வமாக அதிகாலையிலேயே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், அதிகாலையிலேயே வந்து வரிசையில் காத்திருந்த முதியோர்கள் அவதிப்பட்டனர். தியாகராயநகர் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் பாத்திமா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி எண் 125 ஆண்கள் மற்றும் 125 பெண்கள் உள்ளிட்ட மையங்களில் வைத்திருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு அடைந்தது. சரியாக 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு, நிர்ணயிக்கப்பட்ட அந்த நேரத்தில் தொடங்கவில்லை. 45 நிமிடம் தாமதமாகதான் தொடங்கியது.
பெண்கள் மையத்தில் இருந்த மின்ன1 வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டு, 45 நிமிடத்திற்குப் பிறகே தொடங்கியது. இதேபோல, ஆண்கள் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டு தொடங்கியது.
வெயிலுக்கு முன்பே வாக்குப்பதிவை செய்துவிடலாம் என்று காலை 6,45 மணிக்கே வந்த வயதானவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, அவர்களது மகன் உதயநிதி (சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர்) உள்ளிட்ட குடும்பத்தினர், தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். வரிசையில் பொதுமக்களுடன் ஒருவராக நின்றே மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். வாக்குச்சாவடி மைய அதிகாரிகள், பொதுமக்கள் கேட்டுக் கொண்ட போதும், முன்னுரிமையின் அடிப்படையில் வாக்களிக்காமல், வரிசையின் அடிப்படையிலேயே தனது நேரம் வந்த பிறகு வாக்களித்தார்.