முதல்வர் பழனிசாமி தனது தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வனவாசியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடி தொகுதி ராசியானது. ஒவ்வொரு முறையும் நீங்கள் என்னை வெற்றிப் பெற செய்யும்போது உயர்ந்த பதவிக்கு செல்கிறேன். தற்போதைய தேர்தலிலும் தான் பெறும் வெற்றி எடப்பாடி தொகுதிக்கு பெருமை சேர்ப்பதாக அமைய வேண்டும்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு 65 முறை தொகுதிக்கு வந்து சென்றுள்ளேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில் அவரது தொகுதிக்கு எத்தனை முறை சென்றிருக்கிறார் என்று கூறுவாரா? முதலமைச்சருக்குரிய தகுதி எனக்கில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். திறமை இருப்பதால்தான் 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து 5 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.
எடப்பாடி தொகுதியில் கடந்த 45 ஆண்டுகளில் திமுக ஒருமுற கூட வெற்றிப் பெற்றதில்லை. நான் முதலமைச்சராக பதவியேற்றாலும், அதற்குரிய சிந்தனையோடு நான் இருப்பதில்லை. எப்போதுமே தொடக்க காலத்தில் நான் எந்த சிந்தனையோடு இருந்தோனோ, அதுபோலதான் இப்போதும் இருக்கிறேன்.
பெருந்தலைவர் காமராஜர், நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்து போனவர். அவர் இறந்தபோது, மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டபோது,அப்போதைய முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வருக்கு எல்லாம் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார்.
ஆனால், கருணாநிதி மறைந்த போது 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 45000 சதுர அடி நிலத்தை ஒதுக்கி தந்தேன். ஆனால், அவருக்கு 6 அடி நிலம் கூட அதிமுக அரசு ஒதுக்கிக் தரவில்லை என்று ஸ்டாலின் பொய் சொல்கிறார்கள். பத்திரிகைகளில் விளம்பரம் பெறுவதற்காக இதுபோன்று அவர் பேசி வருகிறார்.
நீர் மேலாண்மை திட்டம் மூலமாக ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு அதன்மூலம் கிடைக்கப்பட்ட மண்ணை விவசாயிகளே இலவசமாக எடுத்துச்சென்று தன்னுடைய நிலத்திற்கு அடி உரமாக பயன்படுத்தலாம். நானும் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகளின் தேவையை அறிந்து இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து முதல்வர், மேட்டூரில் பாமக வேட்பாளரை ஆதரித்தும், ஓமலூரில் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலத்தை ஆதரித்தும் வாக்கு சேகரித்தார்.