படங்கள் உதவி.. மதுரை புகைப்படக்கலைஞர் பாலமுத்துக்கிருஷ்ணன்….
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக, அம்மா பேச்சுதான் அதிகமாக இருக்கிறதாம். வீட்டை வீட்டு வெளியே வந்தாலும் சரி, காலை நேர தேநீர் கடை சந்திப்பாக இருந்தாலும் சரி, காய்கறி சந்தையாக இருந்தாலும் சரி, என்னப்பா அம்மா வந்துடுவாங்களா என்று பேச்சு, நகரம், கிராமம் என வித்தியாசம் இல்லாமல், அம்மா பேச்சு கலக்கிக் கொண்டிருக்கிறதாம்.
முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அம்மா என்ற வார்த்தை அவருக்கு மட்டுமே பொருந்தியிருந்தது. அதிமுக.வினர் மட்டுமின்றி, பொது மக்களில் ஒரு தரப்பினரும், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவை, அம்மா என்றே அழைக்கும் அளவிற்கு பழக்கமாகியிருந்தனர்.
அவரின் மறைவுக்குப் பிறகு அம்மா என்ற பெயர், அவ்வளவு எளிதாக யாருக்கும் பொருந்தாது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த பல நாட்களாக அம்மா பெயர் மீண்டும் பிரபலமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்மா….அம்மா...என உச்சரித்து வருகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான அம்சமாக மாறியிருக்கிறது…
யார் அந்த அம்மா? பட்டப் பெயரை சுமக்கும் அளவிற்கு அவருக்கு என்ன முக்கியத்துவம்? அம்மா ஸ்தானத்தை எட்டும் அளவுக்கு அவர் சாதித்தது என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழுந்து அம்மாவை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் அதிமாகி கொண்டே இருக்கிறதாம், மதுரையைக் கடந்த மக்களிடமும்.
விளிம்பு நிலை வாழ்க்கை. எளிய குடும்ப பின்னணி.. அன்றாடம் உழைத்தால்தான், மூன்று வேளை சாப்பாட்டிற்கே உத்தரவாதம். கணவரும், மனைவியும் உழைத்தால்தான், ஒவ்வொரு நாளையும் சச்சரவுகள் இன்றி கடத்த முடியும் என்ற நிலை. ஒருநாள் கூலி வேலைக்குக் செல்லவில்லை என்றாலும், ஒரு வேளை சாப்பாட்டை இழக்க நேரிடும் என்ற நிலையிலும், அநீதிக்கு எதிராக பொங்கும் மனதை அடக்க முடியாமல் சாலையில் இறங்கி, அதர்மத்திற்கு எதிராக ஆவேசம் காட்டிய அந்த மனஉறுதிக்குத்தான் காலம் கடந்த அங்கீகாரமாக இன்றைக்கு கழுத்தில் மாலைகள் விழுகின்றன.
ஆண்கள் சாலையில் இறங்கி குரல் கொடுத்தாலே, ஏளனப் பார்வை பார்க்கும் மக்கள் நிறைந்த ஊரில், குடும்பத் தலைவி சாலையில் நின்று அநீதிக்கு எதிராக ஆவேசமாக பொங்கினால், ஆராதனைகளாக அணிவகுக்கும். ஆபாச அர்ச்சனைகள்தான் அதிகமாக கேட்கும். அதைப் பார்த்து துவண்டு போகாமல், கடந்30 ஆண்டுகளாக சாலைகளாக இருந்தாலும் சரி, ஆணவம் நிறைந்த அதிகார மையமாக இருந்தாலும் சரி, முதல் ஆளாக ஓங்கிக் குரல் கொடுத்து வந்தவருக்கு, சட்டமன்றத் தேர்தல் எனும் வடிவில் அவரின் சமுதாய பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
சட்டமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட உடனேயே, திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மக்களிடம், யார் அவர் என்று விழிகள் விரிய விசாரணைகள் தொடங்கின. அடுத்தடுத்த நாட்களில், அவரின் போராட்டக் குணமும், எளிய வாழ்வும், அதையெல்லாம் கடந்த அவரின் நேர்மையான மக்கள் சேவையையும் அறிந்து கொண்டாட்ட மனநிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், கடந்த பல நாட்களாக நெகிழ்ச்சியோடு அம்மா என்று பட்டப்பெயரை சூட்டி அழைக்க தொடங்கிவிட்டனர்.
அம்மா என்ற பட்டப் பெயரை இன்றைக்கு சுமந்து நிற்பவர், திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கே. பொன்னுத்தாய்தான். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனர், ஆர். கருணாநிதி. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் மார்க்சிய கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டபோது காதல் வயப்பட்டார்கள். தோழர்களுடன் ஆசியுடம் திருமணம் செய்து கொண்டவர்கள். அப்போது இருவருக்கும் இடையே எழுதப்படாமல் போட்டுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம், கணவன், மனைவி வாழ்க்கையில், ஒருவர் தீவிரமான பொதுவுடைமைப் களப்பணியாளராக இருப்பது என்பதுதான்.
அன்றிலிருந்து ஆட்டோ மூலம் வருமானத்தை ஆர். கருணாநிதி ஈட்டி தர, அந்த வருவாயைக் கொண்டு தங்கள் குடும்ப வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட இருவரும், கொள்கைமாறாக் குன்றாக வளர்ந்து, மதுரை மக்களின் துயரங்களுக்கு எல்லாம் விடிவு தேடும் அறப் போராட்டங்களில் பங்கேற்று வந்துள்ளனர். காலையில் எழுந்தால் இன்றைக்கு என்ன போராட்டம், எங்கு போராட்டம் என்ற கேள்வியுடனேயே 20 ஆண்டு குடும்ப வாழ்க்கை கடந்து போயிருக்கிறது.
அவரின் போராட்டக் குணத்திற்கும் தீவிரமான கொள்கைப் பிடிப்பிற்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பதவியும், அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் தமிழ் மாநில செயலாளர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பதவிகளுக்கும் முன்னேறுவது என்பது சாதாரண அம்சம் அல்ல. உடல், பொருள், ஆவி அனைத்திலும் பொதுவுடைமைச் சிந்தனை முழுமையாக நிரம்பியிருந்தால் மட்டுமே சாத்தியம்.
முழுநேர கட்சி ஊழியராகி அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் இன்றைக்கு மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாறு பக்கங்களில் பளபளத்துக் கொண்டே இருக்கிறது. சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், மதுபானக் கடைகளுக்கு தடை விதிக்க கோரி நடத்திய உக்கிரமான போராட்டங்கள் அத்தனையும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்களாலேயே நினைவுக்கூரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
திருப்பரங்குன்றத்தை சொந்த தொகுதியாக கொண்ட மார்க்சிய கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதி நிச்சயம் தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும், அதுவும் திருப்பரங்குன்றம் தொகுதியாக இருக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் அழுத்தம் கொடுக்க வைத்து பெற்ற தொகுதியாகும்.
இந்த தொகுதியை சு.வெங்கடேசன் குறி வைக்கும்போதே அவரது மனதில் எஸ்.கே.பொன்னுதாய் தான் நினைவில் இருந்துள்ளார். சாதாரண மனிதர்களாக வாழ்ந்த சிபிஎம்.மின் போராளிகள் பி.மோகன், என். நன்மாறன் போல பொதுவாழ்வில், எஸ்.கே.பொன்னுதாயிக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் உரிய அங்கீகாரம் தருவார்கள் என்கிறார்கள் பொதுவுடைமைத் தோழர்கள்.
எஸ்.கே. பொன்னுதாயை ஒரு போராளி என்றே அழைத்து வருகிறார், மதுரை எம்.பி சு. வெங்கடேசன். எளிய குடும்ப பின்னணி, ஏழ்மையிலும் நேர்மையான வாழ்க்கை, அறம் தவறாத பொதுப்பணி என இளம் வயதிலேயே தியாக வாழ்க்கையை தரித்துக் கொண்ட எஸ்.கே.பொன்னுதாயிக்கு மக்கள் சேவையைப் பற்றி யாரும் பாடம் நடத்த தேவையில்லை. அடிதட்ட மக்களின் வேதனைகளை அவரே அனுபவித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதால், மக்களுக்காக குரல் கொடுப்பதில் எப்போதுமே அவரின் குரல் முதல் குரலாகவே ஒலிக்கும் என்று எஸ்.கே.பொன்னுதாயை பெருமைப்படுத்துகிறார், சு. வெங்கடேசன் எம்.பி.
இருவாரங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போது, திருப்பரங்குன்றம் எஸ்.கே.பொன்னுதாய் என்ற பெயரை ஒரு விநாடிக்குள் அதானித்து கடந்து போன, அந்த தொகுதி மக்களே, ஆட்டோவில் தனது கணவர் கருணாநிதியுடன் வாக்குசேகரிக்க வந்து நின்ற பொன்னுதாயின் கம்பீரத்தைப் பார்த்து வியந்து போயினர்.
அவரை எதிர்த்து ஆளும்கட்சியான அதிமுக.வில் போட்டியிடுபவர் சாதாரண ஆளில்லை. பணபலமும், படை பலமும் கொண்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,தான் களத்தில் நிற்கிறார். அவரை எதிர்த்து பொன்னுதாய் போட்டியா? என்று அன்றைக்கு அதிர்ச்சியாக கேள்வி கேட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு பொன்னுதாயிக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
பணபலமே இல்லாத பொன்னுதாயிக்கு நன்கொடைகளை வாரி வழங்கி, ராஜன் செல்லப்பாவை தோற்கடிக்க வேண்டும் என்று உறுதி காட்டும் திருப்பரங்குன்றம் மக்கள், குறிப்பாக பெண்கள், சாதிப்பாசத்தை தூக்கியெறிந்துவிட்டு, அம்மா என்ற பட்டப் பெயரைச் சூட்டி அன்போடு அழைப்பதோடு, அம்மாவுக்கு தவறாமல் ஓட்டுப் போடுங்கள் என பிரசாரத்திலும் குதித்திருக்கிறார்கள் என்பதுதான், திருப்பரங்குன்றம் தொகுதி கண்டிருக்கும் வரலாற்று மாற்றம்.
அம்மாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சிறுவர், சிறுமியர்கள் கொடுக்கும் குரல்களின் சத்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதே பட்டு எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. பொன்னுதாயின் எளிய வாழ்க்கையும், நேர்மையான அரசியல் போராட்டங்களும் சமூக ஊடகங்கள மூலம் பரவ, வெளிநாடுகளில் இருந்தெல்லாம் தேர்தல் நிதி குவியத் தொடங்கியிருக்கிறதாம்.
ஆயிரம் கொடுப்பார்களா? இரண்டாயிரம் கொடுப்பார்களா? என்ற கேள்விகள் மறைந்து, பாவம் பொன்னுதாய் அம்மா, தேர்தலுக்கு செலவு இல்லாமல் தவிக்கிறாங்க.. நம்மகிட்டஇருக்கிற காசை கொடுப்போம் என்ற நெகிழ்ச்சியான குரல்கள், திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் கடந்த பல நாட்களாக பரவலாக ஒலிக்க தொடங்கியிருக்கிறது.
தேர்தல் நிதி, சிறுக, சிறுக ஒருபக்கம் சேர, சேர, சென்னை உள்பட பல மாவட்டங்களில் இருந்து பொதுவுடைமைத் தோழர்கள், தன்னார்வலர்களாக திருப்பரங்குன்றத்தில் முகாமிட்டு, அவர்களுக்கே உரிய பாட்டு, ஆட்டம் என தொகுதிகயை சிகப்பு கொடிகளால் சிகப்பு வண்ணமயமாக்கி கொண்டு இருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் உள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும், 20, 30 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல் களத்தைப் போல தற்போது மாறியிருப்பதைக் கண்டு உற்சாகமாகி, அவர்களும் கம்யூனிஸ்ட் தோழர்களோடு இணைந்து கலக்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்றைக்கும் நேர்மைக்கும், தூய அரசியல் தொண்டிருக்கும் தலை வணங்குகிற கூட்டமும், தாங்கி நிற்கிற நெஞ்சங்களும் நிறைந்து இருப்பதைக் கண்டு பூரித்துப் போயிருக்கும் மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கே. பொன்னுதாயி, அரசியல் வெற்றியை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புகழைப் தேடித் தந்து கொண்டிருக்கும் திருததுறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்துவைப் போல, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் புகழைத் தேடி தந்துக் கொண்டிருக்கிறார் திருப்பரங்குன்றம் எஸ்.கே.பொன்னுதாய்.
மனங்களை வெல்தே முதல் வெற்றி என்பதை சாதித்துக் காட்டியிருக்கும் இருவரும், அரசியல் அங்கீகாரத்தை எட்டுவதில் சிரமம் ஒன்றும் இருக்காது என்பதை மே 2 ஆம் தேதி வெளியாகும் தீர்ப்பு மூலம் தமிழக மக்கள் நிரூபிப்பார்கள்.
எளிமையான நடை முழுமையாக ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள கட்டுரை மிக அருமை