“துக்கடா” அரசியல் வாதியா?; கமலுக்கு வானதி சீனிவாசன் கேள்வி..
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசனும், மக்கள் நீதிமய்யம் வேட்பாளராக கமல்ஹாசனும் நேரடியாக களம் காண்கின்றனர்.
வானதிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா? என்று கமல்ஹாசனுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால் விடுத்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் குமரவேல் அறிக்கை மூலம் பதில் அளிக்கும்போது, “மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சவாலை ஏற்றுக் கொள்கிறோம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும்.
ஏற்கனவே இருமுறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாக தோற்கத் தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும் என்றும் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தன்னை துக்கடா அரசியல்வாதி என குறிப்பிட்டுள்ளது தொடர்பாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “மத்தியில் அரசாங்கதைதை அமைத்திருக்கும் கட்சி, பல்வேறு மாநிலங்களில் ஆளுகின்ற கட்சி. அந்த கட்சியில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும், அகில இந்திய தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், கட்சி தலைவரும் இந்த ஊர் பொண்ணு, உங்க ஊர் பொண்ணுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், கமல் அவர்கள் ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை வானதியோடு நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சொன்னதற்கு என்னை துக்கடா அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் கூறுகின்றது. நான் இங்குதான் ஓர் கிராமத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, வழக்கறிஞர் தொழில் செய்து வந்திருக்கிறேன். எனக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
நான் எவ்வளவோ நேரம் குடும்பத்தை விட்டு, நடந்தே இந்த மக்களுக்கான சேவைகளை செய்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதி மக்களுக்கு நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று, என்னுடைய சமூக ஊடக தளங்களைப் பாருங்கள். ஆனால், என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?
ஒரு பெண் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, அரசியலில் உயர்ந்து வரும்போது, இப்படித்தான் கேவலப்படுத்துவாங்களா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் வீட்டு பெண்களுக்கும் இந்த துன்பங்கள் இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். இப்படி முன்னேறி பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதான் என்று கூறினால், பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா, பெண்கள் நலனில் அக்கறை செலுத்துவார்களா?, மக்கள் நீதி மய்யமும், கமல் அவர்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் உங்கள் முன்னர் இந்த கேள்வியை வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.