Sat. Nov 23rd, 2024

மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சொந்த செல்வாக்கில் பதினொரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், 8 பேர் உற்சாகமாக இருப்பதை பார்த்தோம். ஆனால், வட மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள், சொந்த செல்வாக்கு என்பது பெயரளவுக்குக் கூட இல்லாததால் முழுமையாக திமுக.வை நம்பியிருக்கிறார்கள். ஆனால், அவர்களோ, காங்கிரஸ் வேட்பாளரின் வெறிக்காக கடுமையாக உழைக்காததால், நொந்து போய் கிடக்கிறார்கள். வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், திமுக.வினரின் மனது கரையாதோ என்று உள்ளூர், வெளி மாவட்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னைக்கு அருகே உள்ள பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ சிறுணியம் பலராமன் போட்டியிடுகிறார். அமமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள பொன் ராஜா, அந்த தொகுதியில் பிரபலமானவர் என்பதால், துரை சந்திரசேகர் உற்சாகமாக இருக்கிறார். திமுக.வினர் கூடுதலாக உற்சாகம் காட்டினால் நிம்மதியாகிவிடுவார் சந்திரசேகர் என்பதுதான் இன்றைய கள யதார்த்தம். அதிருப்தி அலை மிகப்பெரிய அளவில் வீசாமல் இருந்தால், அடுத்த 7 நாட்களில் காற்று பலராமன் பக்கம் பலமாக வீசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

கை கூப்பி நிற்பவர் துரை சந்திரசேகர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியிருப்பவர் செல்வப்பெருந்தகை. இவருக்கு யாரை எப்படி கவிழ்க்க வேண்டும் என்ற சூட்மம் எல்லாம் நன்றாக தெரியும். பணப் பலமும், படை பலமும் அபரிதமாக வைத்திருப்பவர். தொழில் நிறுவனங்கள் நிறைந்த தொகுதி என்பதால், திமுக ஆதரவு மன நிலை கைக் கொடுக்கும் என்ற முழுநம்பிக்கையுடன் களமாடி வருகிறார். 2016ல் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அதிமுக எம்.எல்.ஏ பழனியே இப்போதும் களத்தில் நிற்கிறார். அவர் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக் கொண்டிருக்க, செல்வப்பெருந்தகை, கடந்த முறை அடைந்த தோல்வியின் அனுதாபம், அதிமுக.வின் அதிருப்தி அலையை நம்புகிறார். காற்று கொஞ்சம் காங்கிரஸ் பக்கம் வீசுவதாகவே தெரிகிறது.

ழுத்தில் கலர் துண்டு அணிந்திருப்பவர் செல்வப் பெருந்தகை

சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முனிரத்தினம் களமிறங்கியுள்ளார். 8 முறை தேர்தல் களம் கண்ட அனுபவம் உள்ளவர். திமுக வாக்கு வங்கியை நம்பியும், தனது சமுதாயத்தை நம்பியும் வாக்கு சேகரிப்பில் உற்சாகமாக இருக்கிறார். அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் போட்டியிடுகிறார். கடுமையான போட்டி இருவருக்கும் இடையே இருக்கிறது. அதிமுக வாக்கு வங்கியை, அமமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் பதம் பார்ப்பார் என்பதால், முனிரத்தினம், சென்னைக்கு எப்ப கிளம்பலாம் என்ற ஆர்வத்திலேயே உள்ளார்.

ஊத்ததங்கரையில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம், தொடக்கத்தில் சோம்பலாக இருந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்குப் பிறகு களம் மாறி வருவதால் உற்சாகமாகி வாக்கு சேகரிப்பில் ஆர்வம் காட்டுகிறார். எதிர்முகாமில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிக்கு எதிரான கூட்டம், இங்குள்ள அதிமுக.வில் அதிகம். அவர்களை கண்டு பயப்படுகிறார் தமிழ்ச்செல்வன். கூட்டிக் கழித்துப் பார்த்தால், காங்கிரஸ் முகாம் உற்சாகமாக இருக்கிறது.

கூப்பிய கரமோடு நிற்பவர் ஆறுமுகம்…

ஓமலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம், பரிதாபமாக காட்சியளிக்கிறார். இந்த தொகுதியை திமுக குறி வைத்தது. கடந்த 2016 தேர்தலில் தோல்வியடைந்த அம்மாசி, தொகுதி பறிபோனதால், சங்ககிரி தொகுதியில் முழுவீச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சொந்த கட்சியும் கை கொடுக்காததால், தடுமாறுகிறார் மோகன். எதிரணி அதிமுக வேட்பாளரான மணி, உற்சாமாகவே இருக்கிறார். நாள்தோறும இரட்டை இலை துளிர்த்துக் கொண்டு இருக்கிறது.

விருத்தாசலத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அதிமுக.வுக்கு செல்வாக்கு கொஞ்சம் அதிகம். அதனை முழுமையாக அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பங்கம் செய்தால், ராதாகிருஷ்ணன் கிரீடம் சூடுவார். பாமக வேட்பாளர் கார்த்திகேயன், எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை கூறிக் கொண்டே, கடைசி நிமிடம் வரை கையை விரட்டிக் கொண்டே இருப்பார்.

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் போட்டியிடுகிறார். செல்வந்தரான இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் செந்தில்குமார், பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர். கள்ளக்குறிச்சி தனி மாவட்டம், கால்நடைப் பூங்கா போன்ற அதிமுக அரசின் சாதனைகளால், செந்தில்குமாரின் தலையைச் சுற்றி ஒளிவட்டம், நாளுக்கு நாள் பெரிசாகிக் கொண்டே வருகிறது.

கே.எஸ்.அழகிரி பக்கத்தில் இருப்பவர் மணிரத்தினம்

ஈரோடு கிழக்கில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிடுகிறார். இந்த தொகுதியை திமுக முன்னாள் அமைச்சர் முத்துசாமி எதிர்பார்த்தார். தொகுதி கை மாறியதால், அவரது ஆதரவாளர்கள் சுணக்கம் காட்டுகிறார்கள். எதிரணியில் அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளர் யுவராஜா போட்டியிடுகிறார். அதிமுக.வை குக்கர் அதிகமாக சேதப்படுத்தாது என்பதால் யுவராஜா, உற்சாகமாகவே இருக்கிறார்.

குழந்தையை கொஞ்சுபவர் திருமகன்

உடுமலையில் காங்கிரஸ் வேட்பாளராக கே.தென்னரசு போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக இங்கு போட்டியிடுபவர் சிட்டிங் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன். மக்களை கவர்வதில் வல்லவர். அவ்வளவு எளிதாக தொகுதியை விட்டுக் கொடுத்துவிட மாட்டார். டிடிவி தினகரனோடும் மறைமுகமாக நட்பு பேணி வருபவர். அதனால், சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருக்கிறார், அமைச்சர் ராதாகிருஷ்ணன்.

உதகை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர். கணேஷ், காங்கிரஸ் வேடபாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போஜராஜன் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் காங்கிரஸ்காரர். இருவருமே பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்தான். பாஜக வேட்பாளர் வெற்றிக்காக பெரும் படையே இறங்கி வேலைப் பார்க்கிறது. கூடுதலாக அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தன்பங்கிற்கு சித்துவேலைகளை காட்டுவார். கரணம் அடிக்க வேண்டியிருக்கும் தென்னரசுவுக்கு என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

கோவை தெற்கு ஸ்டார் தொகுதியாக மாறியிருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். கடந்த 2016 தேர்தலில் தோல்வியடைந்தவர். திமுக.வினரும் உற்சாகமாக இல்லை. பாஜக. வேட்பாளர் வானதி சீனிவாசன், மநீம. கமல்ஹாசனையே முந்தும் முனைப்பில் இருக்கிறார். இப்போதைக்கு போட்டியை வேடிக்கை பார்க்கும் நபராக மாறியுள்ளார் மயூரா ஜெயக்குமார்.

கை கூப்பி நிற்பவர் மயூரா ஜெயக்குமார்.

காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சியான அதிமுக துளிக் கூட உற்சாகமாக இல்லை. ஊட்டி தொகுதியில் காட்டும் அக்கறையைக் கூட மேலிட பாஜக தலைவர்கள், காரைக்குடி பக்கம் காட்டவில்லை. பரிதாபமாக காட்சியளிக்கிறார் ஹெச்.ராஜா. அவர் மீதான எதிர்ப்பே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கொடியை உயர, உயர பறக்க வைக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு மலர் கிரீடம் சூட்டும் வரை ஓயமாட்டேன் என்ற திட்டத்தோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதரம்பரம் உள்ளாரோ என்று சந்தேகப்பட வைக்கிறது, அவரது பிரசார சுற்றுப்பயணம்.

வேளச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ஜே.எம்.ஹாரூண் ரசித் மகன் ஜே.எம்.ஹெச். ஹஸ்ஸான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.அசோக் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையேயான போட்டி பலமாகவே இருக்கிறது. யார் கொடி உயரும் என உறுதியாக சொல்ல முடியாத நிலையிலேயே உள்ளது.

கை கூப்பி நிற்பவர் ஹஸ்ஸான்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைதோறும் சொல்வி வருவதைப் போல, தனது தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிப் பெற வேண்டும் . என்றால், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உயிரைக் கொடுத்து வேலைப் பார்க்க வேண்டும். அப்போதுதான், அவரது தலைவரின் ஆசை நிறைவேறும். தற்போதைய நிலையில், ஆசை, கானல் நீராக மாறத்தான் வாய்ப்பு இருக்கிறது.