Sun. Apr 20th, 2025

தஞ்சையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

தஞ்சையில் ஏற்கனவே 14 பள்ளிகளில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் மேலும் 2 பள்ளிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வகையில் அலட்சியமாகவும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளில் அலட்சியம் காட்டியதற்காகவும் 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அரசாங்கம் அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.