Sat. Nov 23rd, 2024

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், காட்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். திமுக மீதும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மீதும் அவர் கொண்டிருந்த அபரிதமான பக்தியை கூற எண்ணற்ற நிகழ்வுகள் இருக்கின்றன. அதனைதவிர்த்து, அவரது தேர்தல் அரசியலை மட்டும் இங்கே பார்ப்போம். 1938 ஆம் ஆண்டில் பிறந்த துரைமுருகனுக்கு இப்போது வயது 82 . இருதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அவர், அதற்காக தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

திமுக.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைந்ததையடுத்து, அந்த பதவியை பெற துரைமுருகன் காய் நகர்த்திய விதமும், அந்த பதவி அவருக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, அவரோடு ஒன்றி பிணைந்திருந்த பெருங்கூட்டமும் திரைமறைவில் ஆடிய அத்தனை விளையாட்டுகளும் அதிர்ச்சி ரகம். தனது உருக்கமான பேச்சு மற்றும் உடல்மொழியால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி சாந்தா, அவர்களது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கவர்ந்து, பொதுச் செயலாளர் பதவியை பெற்று இன்று உயர்ந்து நிற்கிறார். பெயரளவுக்குதான் அவரை பயன்படுத்தி கொள்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

வேலூர், சொந்த மாவட்டம் என்பதால், அதில் ஒன்றாக உள்ள காட்பாடி தொகுதியில் 9 வது முறையாக களத்தில் நிற்கிறார் துரைமுருகன். 1984 ல் முதல்முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், 2016 தேர்தலை உள்ளடக்கி 6 முறை இந்த தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கிறார். அதற்கு முன்பாக 1977 மற்றும் 1980 ஆகிய இரண்டு முறையும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு துரைமுருகன் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

ஆக மொத்தம் 11 சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதி துரைமுருகன்தான். 37 ஆண்டுகள் தொடர்ந்து இந்த தொகுதியோடு உறவாடிக்கொண்டிருக்கும் இவர், காட்பாடி நகரில் தாலுகா அந்தஸ்து கொண்ட அரசு மருத்துவமனையை உருவாக்க துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது.

1996 ல் இருந்து இதே தொகுதியின் எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் இருந்த துரைமுருகன், காட்பாடி அரசு மருத்துவமனையை தாலுக்கா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருநாள் கூட குரல் கொடுத்ததே இல்லை என்று ஆவேசமாக பேசுகிறார்கள் தொகுதிக்குட்பட்ட சமூக ஆர்வலர்கள்.

தேர்தலுக்கு தேர்தல் மட்டும் காட்பாடிக்கு செல்லும் இவர், வெற்றிப் பெற்ற பிறகு தொகுதி பக்கமே செல்லாமல், சென்னையில் அமர்ந்து கொண்டு, அதுவும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் அருகில் அமர்ந்து கொண்டு செய்யும் அரசியல்தான் அதிகம் என்று குமறுகிறார்கள் வேலூர் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள். 82 வயதிலும் கூட பதவி ஆசை கொண்டு தேர்தலில் போட்டியிடும் துரைமுருகனால், தொகுதி முழுவதும் ஒரு சுற்றுக் கூட முழுமையாக சுற்றி வர முடியாத நிலையில்தான் அவரது உடல்நலம் இருக்கிறது என்று ஆதங்கப்படுவதும் அதே முன்னணி நிர்வாகிகள்தான்.

அவரது மகன் கதிர் ஆனந்தை எம்.பி. ஆக்கி, தனக்கு பின்னால், அரசியல் செய்வதற்கு தனது இடத்தில் அவரது மகனையை முன்னிலைப்படுத்திவிட்டார். அவரது குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு திமுக நிர்வாகிகளும், எம்.பி. பதவிக்கோ, எம்.எல்.ஏ., பதவிக்கோ ஆசைப்பட முடியாது, கூடாது என்பதுதான் வேலூரின் இன்றைய நிலையாக இருக்கிறது. உள்ளூர் திமுக.வினரிடம் மட்டுமல்ல, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஆகியோரும் துரைமுருகன் மீது ஒருவிதமான அதிருப்தியோடுதான் இருந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை..

தனக்கு எதிராக யார் அரசியல் செய்தாலும் ஈகோ பார்க்காமல், அவர்களோடு சமரசம் செய்து கொள்ளும் குணம் கொண்டவர் துரைமுருகன் என்பதும், அதிமுக பிரமுகர்கள், அமைச்சர்கள் என்றாலும்கூட அவர்கள் மனம் இளகும்படி பேசி, அவர்களிடமும் ராசியாகிவிடுவார். கீழ்மட்டத்தில் மட்டுமல்ல, மேல்மட்ட அதிமுக தலைவர்களுடனும்கூட மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் அணுசரித்து போகும் குணம் கொண்டவர் துரைமுருகன் என்று, அவரின் குணாதிசயங்களை வியந்து பேசுகிறார்கள் அவரது விசுவாசிகள்.

அவரிடம் நிறைந்திருக்கும் இந்த அற்புத குணத்தால்தான், தனக்கு எதிராக வலுவான அதிமுக வேட்பாளரை நிறுத்த விடாமல், வன்னியர் அல்லாத வேட்பாளரை போட்டியாக நிறுத்த அமைச்சர் வீரமணி மூலம் காய் நகர்த்தி, அதிலும் வெற்றிப் பெற்றுவிட்டார் துரைமுருகன் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், துரைமுருகனை வீழ்த்தியே ஆக வேண்டும் என முதல்வர் இ.பி.எஸ்.ஸும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும் ஒருமித்த எண்ணத்தில் இருக்கிறார்களாம்.

அதன் வெளிப்பாடுதான், அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் 5 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நிதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், துரைமுருகனை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ராமுவுக்கு கூடுதலாக 3 கோடி ரூபாய் சேர்த்து 8 கோடி ரூபாயாக தேர்தல் நிதி வழங்கியுள்ளார்களாம் இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும். மேலும், நிதி தேவை என்றாலும் தாராளமாக நிதி கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறதாம்.

துரைமுருகனை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என்று இருவரும் கங்கணம் கட்டியிருப்பதற்கு முக்கிய காரணம், ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆளும்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு துரைமுருகன் அடிக்கும் கிண்டலுக்கும், கேலிக்கும் நாம் ஆளாகிவிடக் கூடாது என்ற பயம்தான் காரணமாம் இரட்டையர்களுக்கு என்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிள்.

இந்தளவுக்கு துரைமுருகனுக்கு எதிராக கொம்பு சீவப்படும் அதிமுக வேட்பாளர் வி.ராமுவின் பலம் என்ன? பலவீனம் என்ன? வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக இருப்பவர், அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர். அமைச்சர் கே.சி.வீரமணி முன்பு சேரில்கூட அமர கூட மாட்டார். அந்தளவுக்கு பக்தி என்று சொல்வதைவிட பயம்தான் காரணம் என்று சொல்லாம்.

நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர், வி.ராமு. தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக உள்ள காட்பாடி தொகுதியில், அதிமுக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டால், அதிமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது என்கிறார்கள் வன்னியர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.

வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக துரைமுருகனும், அதிமுக அமைச்சரான கே.சி.வீரமணியும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்றுக்கொண்டு, வன்னியரைத் தவிர வேறு எந்த சமூகத்தினரும் வேலூர் மற்றும் மாவட்டத்திற்குள் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதில் குறியாக இருப்பதைக் கண்டு கொந்தளிப்போடு இருக்கிறார்கள் மற்ற சமுதாய மக்கள் என்கிறார்கள், இருவருக்கும் எதிரான பொது எதிரிகள். அவர்கள் தொழிலதிபர்களாகவும் இருப்பதாலும், அவர்களின் குரலில் உள்ள கோபத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், வன்னியருக்கு அரசியல் அங்கீகாரமும், சமுதாய அங்கீகாரமும் கொடுக்கும் வகையில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதும், வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினராக உள்ள சமுதாய மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும், அதை ஓரணியில் திரட்டி, துரைமுருகனையும், அமைச்சர் கே.சி.வீரமணியையும் ஒருசேர வீழ்த்துவதற்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளும் மதிநுட்பம் கொண்ட அரசியல் ஆளுமைகள், பிற சாதியில் இல்லை என்பதும் வேலூரின் சாபக்கேடு என்பதும் தொழிலதிபர்களின் கோபம்.

துரைமுருகனுக்கு எதிராக வலுவாக பிரசாரம் செய்யவே, அதிமுக வேட்பாளர் ராமுவை அனுமதிப்பதில்லை என்று அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக பொங்குகிறார்கள் வேலூர் அதிமுக நிர்வாகிகள். வாக்கு சேகரிக்க எந்த இடத்திற்கு செல்ல வேண்டும், யார் யாரிடம் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது உள்பட அனைத்து தேர்தல் தொடர்பான பணிகளையும் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கேட்டுதான் செய்து கொண்டிருக்கிறார் அதிமுக வேட்பாளர் ராமு. அவரால் தன்னிச்சையாக பிரசாரத்தைக் கூட மேற்கொள்ள முடியவில்லை. வீரமணி என்பவரின் சங்கிலியால், ராமு உடல் முழுவதும் பிணைக்கப்பட்டுள்ளது.

அதிமுக வெற்றியை விட துரைமுருகன்தான் வெற்றி பெற வேண்டும் என உயிரைக் கொடுத்து போராடுகிறாராம் அமைச்சர் கே.சி.வீரமணி. அதனால்தான், 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் காட்பாடி தொகுதியில் துரைமுருகனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக பிரமுகர் அப்பு என்கிற எஸ்.ராதாகிருஷ்ணனை என்பவரை தொகுதி மாறி போட்டியிட வற்புறுத்தியும், வேலூர் தொகுதியில் போட்டியிடும் வகையில் சதி வேலையும் செய்துவிட்டார், அமைச்சர் கே.சி.வீரமணி என்கிறார்கள் காட்பாடி அதிமுக நிர்வாகிகள்.

அப்பு மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் அனுதாப அலையிலேயே துரைமுருகனை எளிதாக வீழ்த்தியிருக்க முடியும் என்கிறார்கள் வீரமணியின் எதிரணி அரசியல் நிர்வாகிகள்.

இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்.ஸுடன் அப்பு (எ) ராதாகிருஷ்ணன்

தனக்கு எதிராக டம்மி வேட்பாளரை நிறுத்தியிருப்பதால், பைசா செலவின்றி வெற்றி பெற்றுவிட்டதாகவே இன்றைய தேதியிலேயே துரைமுருகன் தெம்பாகிவிட்டார், தொகுதியில் திமுக.வினரையே பெரிதாக விரட்டாமல், கண்ணாமூச்சி மாதிரி சும்மா தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் துரைமுருகன்.

அமைச்சர் கே.சி.வீரமணியின் உள்ளடி வேலைகளால், பத்து கோடி ரூபாய்க்கு மேல் துரைமுருகனுக்கு மிச்சம். செலவே இல்லாமல், திமுக.வில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராக துரைமுருகன்தான் இருப்பார் என்கிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்…

ELECTION KING (தேர்தல் மன்னன்) என்று பெயரெடுத்தவர் துரைமுருகன்…சோளக்காட்டு பொம்மையை எதிர்த்து வெற்றி பெறுவதெல்லாம் வரலாற்று சாதனையாகுமா?

One thought on “திமுக துரைமுருகனை வீழ்த்த 8 கோடி ரூபாய் தேர்தல் நிதி…. அதிமுக வேட்பாளர் ராமு சாதிப்பாரா? காட்பாடி களநிலவரம் கலவரம்…”

Comments are closed.