Wed. Nov 27th, 2024

திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பிரபல ஊடகங்கள், குறிப்பாக டைம்ஸ் ஆப் இந்தியா, புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

இதேபோல, அதிமுக கூட்டணி, ஆச்சரியப்படுத்தக்க வகையில், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என பாரம்பரிய அச்சு ஊடகமான குமுதம் நிறுவனத்தின் ரிப்போர்ட்டர் இதழ் உள்ளிட்ட சில ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு வெளியிடும் ஊடகங்களின் மீது ஒரு சந்தேகப் பார்வை விழுகிறது என்பதை புறம்தள்ளிவிடமுடியாது. ஏதாவது ஆதாயத்தை பெற்றுக் கொண்டு ஆளும்கட்சிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என்று எழும் விமர்சனங்களுக்குள் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில், அந்த ஊடகங்களின் கடந்த கால நடவடிக்கைகள் ஊடக அறத்திற்கு அப்பாற்பட்டவையாகதான் இருந்திருக்கின்றன.

நல்லரசு தமிழ் செய்திகளும், சில மாவட்டங்களில் கருத்துக்கணிப்பு நடத்தியது. மாநிலம் தழுவிய கருத்துக் கணிப்பை நாம் மேற்கொள்ளவில்லை. நண்பர்கள் மூலம் ஆயிரம் பேரை தொடர்பு கொண்டு கருத்து கேட்கப்பட்டது. அந்தவகையில், இந்த நிமிடம் வரை யாருக்கு வாக்களிப்போம் என்பதில் தீர்க்கமான முடிவு எடுக்காமல்தான் இருக்கிறோம் என்பதுதான் மக்களிடம் இருந்து கிடைக்கின்ற பதிலாக இருக்கிறது.

குறிப்பாக கிராமங்களில் பெண்களிடம் எந்த மனமாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு கடந்த தேர்தல்களின் போது அவரவர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார்களோ, அதேபோலதான் ஏப்ரல் 6 ஆம் தேதியும் வாக்களிப்பார்கள். அதை கிராமத்தில் உள்ள பெண்கள் வெளிப்படையாகவே பகிர்ந்து கொள்கிறார்கள்.அந்த வகையில், கிராமப்புறங்களில் திமுக.வுக்கும் அதிமுக.வுக்கும் ஒன்றிரண்டு சதவிகித அடிப்படையில் வேறுபாடுகளில் வித்தியாசம் இருக்கும். மேலும், யார் பணம் அதிகம் தருகிறார்களோ, அவர்களுக்கு வாக்களிப்போம் என்று வெளிப்படையாக கூறுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

அவர்களைப் பொறுத்தவரை, எந்த ஆட்சி வந்தாலும் தங்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. தாங்கள் உழைத்தால்தான் உணவுக்கு வழி கிடைக்கும் என்பதில் உறுதியான மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் திமுக.வின் 7 துறைகளில் தொலைநோக்கு செயல்திட்டமோ, அதிமுக அரசின் வாஷிங் மெஷின், கேஸ் சிலிண்டர் இலவசம் என்ற எந்த வாக்குறுதியும் பெரிதாக ஈர்க்கவில்லை.

நகரப் புறங்களில் உள்ள மக்களின் மனநிலைதான் ஊசலாட்டத்தில் இருக்கிறது. இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர், ஆளும் அதிமுக அரசு அதிருப்தியில் இருப்பதை, அவர்களின் பேச்சின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கிட்டதட்ட பத்து மாதங்கள் கொரோனோ ஊரடங்கால், வருமானத்தை இழந்துவிட்ட நடுத்தர வர்க்கம், பள்ளிக் கட்டணம், நிவாரணத் தொகை வழங்காமல் தவிர்த்தது உள்ளிட்ட அம்சங்களில் அதிமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இப்படி ஒருபக்கம் அதிருப்தி குரல் அதிகமாக ஒலித்தாலும், திமுக.வுக்கு எதிரான வன்முறைக் கட்சி என்ற வாதம், இந்துக்களுக்கு, இந்து தெய்வங்களுக்கு எதிரானவர்கள் என்ற வாதம், முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், அனல் கக்கும் வார்த்தைகளில் திமுக.வை வசைபாடி கருத்துகளை பதிவிடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் கடந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பிரசாரக் கூட்டங்களுக்கும் கூடும் கூட்டம், மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோருக்கு கூடும் கூட்டங்களோடு ஒப்பிடும்போது, 60, 70 சதவிகிதம் மக்கள் கூடுகிறார்கள் என்றுதான், மாவட்டங்களில் உள்ள இரண்டு கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் சொல்கிறார்கள்.

அதிமுக, திமுக மட்டும் என்று சொல்லி விட முடியாது. இன்றைக்கு எந்தவொரு அரசியல் கூட்டமாக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் கட்சிக்காரர்களே வருகிறார்கள் என்பதுதான் உண்மை என்று நொந்து போய் கூறுகிறார், கடந்த 20 ஆண்டுகளாக தேர்தல் களத்தை பதிவு செய்து வரும் இளம் ஊடக புகைப்பட கலைஞர்கள். நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி மக்களிடம் துளியும் ஆர்வம் இல்லை என்பதும், தங்களது தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் கூட துளியும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதும், நமது ஜனநாயகத்திற்கு பெரும் கேட்டை விளைவித்துவிடும் என்பதும் அந்த ஊடகவியலாளர்களின் ஆதங்கமாகதான் இருக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள போதும், தெளிவற்ற மனநிலையில் இருக்கும் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் வாக்காளர்களின் முழுமையான மனநிலையை பிரதிபலிக்குமா? என்று சந்தேகத்தை கிளப்புகிறார்கள் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் உள்ள முன்னணி தலைவர்கள்.

அதிமுக வேட்பாளர்களிடம் ஒரு போர்க்குணத்தை பார்க்க முடிகிறது. காரணம், அவர்களிடம் அபரிதமான பணம் இருக்கிறது. ஒரு கை பார்த்துவிடலாம் என்று களத்தை எதிர்கொண்டு உள்ளனர். திமுக.வேட்பாளர்களிடம் பணம் இல்லை என்று கூறிவிட முடியாது. ஆனால், அவர்களுக்குள்ளாகவே, ஒரு அச்சம் எழுந்திருக்கிறது. பணம் கொடுத்தாலும் மக்கள் நமக்கு ஓட்டுப் போடுவார்களா? என்ற சந்தேகத்திலேயே ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறார்கள்.

இதையெல்லாம் கடந்து, ஏப்ரல் 6க்குப் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? மே 2 வரை ஊரடங்கு நீடித்தால், மத்திய அரசு ஏதாவது சித்து விளையாட்டை காட்டுமா? என்ற பயமும் திமுக.வினரிடம் அபரிதமாக உள்ளது.

ஆக மொத்தத்தில், இன்றைய தேதியில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சி வேட்பாளர்களும், களத்தில் மக்களை அணுதினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் சந்தோஷமாக இல்லாமல், சந்தேக உணர்வோடுதான் வாக்காளர்களை கைகூப்பி கெஞ்சி கொண்டிருக்கிறார்கள்..

அவரவரின் தலையெழுத்து ஏப்ரல் 6 ல் எழுதப்பட போகிறது…ஆண்டவன் காப்பாற்றுவாரா? அரசியல் வியூகங்கள் காப்பாற்றுமா? மே 2 வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…