தமிழக அமைச்சரவையிலேயே அரசியல் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் அன்றாட நிகழ்வுகளின் புள்ளிவிவரங்களை விரல் நுனியும் வைத்திருக்கும் அதீத புத்திசாலி தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்தான். இதில், மாஃபா என்பது அவரது மனிதவள மேம்பாடு நிறுவனத்தின் பெயர். 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே பி.டெக் பொறியல் பட்டமும், அதன்பிறகு எம்.பி.ஏ. பட்டத்தையும் முடித்த அவர், 1992ல் மாஃபா என்ற நிறுவனத்தை தொடங்கி குறுகிய ஆண்டுகளிலேயே 1000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை ஈட்டும் நிறுவனமாக அசுர வளர்ச்சிப் பெற்றார்.
அறிவிலும், ஆஸ்தியிலும் தன்னிறைவு பெற்றவருக்கு அரசியல் ஆசை துளிர்த்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். 2010 ஆம் ஆண்டில் பாஜக.வில் சேர்ந்த அவர், அதே காலக்கட்டத்தில் அரசியல் களத்தில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தில் இணைந்தார். 2011 ல் அதிமுகவோடு கூட்டணி அமைந்த போது விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே எம்.எல்.ஏ.வாகி சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த், குறுகிய காலத்திலேயே அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவோடு மோதினார். அதன் விளைவு, தேமுதிக எம்.எல்.ஏ.க்களிடையே பிளவு ஏற்பட்டது. அதேநேரத்தில் விஜயகாந்த்தோடு மாஃபா பாண்டியராஜனுக்கு மனவருத்தம் ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தவருக்கு, ஆவடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தந்தார், செல்வி ஜெயலலிதா.
பாண்டியராஜனுக்கு மட்டுமல்ல, அதிமுக முன்னணி தலைவர்களுக்கே அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அதிக மக்கள் தொகையை கொண்டது, ஆவடி தொகுதி. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜனுக்கு ஆவடியில் சொல்லிக் கொள்ளும்படி சொந்தமும் இல்லை. சொந்த செல்வாக்கும் இல்லை. இரட்டை இலை மற்றும் செல்வி ஜெயலலிதாவின் செல்வாக்கு மட்டுமே இருந்தது. அந்த தேர்தலில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு மாஃபா பாண்டியராஜன் வெற்றிப் பெற்றார். அவருக்கு பள்ளிக் கல்வித்துறையை வழங்கினார் செல்வி ஜெயலலிதா. அவரது புத்திசாலித்தனத்திற்கு தீனிப் போடும் துறை என்பதால் புகுந்து விளையாடினார்.

அவரது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல, அதிமுக.வினருக்கே பேரிடியாக தான் அந்த துயர நிகழ்வு அமைந்தது. 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்தார். டெல்லி பாஜக மேலிடம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தர்மயுத்தம் நாயகன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவினார். அமைச்சர் பதவி பறி போனது. 5,6 மாதங்கள் அமைச்சர் பதவி இல்லாமல் தவித்தார். மீண்டும் பிளவுபட்ட அணி இணைந்தபோது, துணை முதல்வர் பதவியை வாங்கிக் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தால், ஏற்கெனவே பாண்டியராஜன் வகித்த பள்ளிக் கல்வித்துறையை பெற்று தர முடியவில்லை. அவருக்கு தமிழ் வளர்ச்சித் துறையை ஒதுக்கினார் முதல்வர் இ.பி.எஸ்.
அந்த துறையிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதால், இ.பி.எஸ்.ஸின் விசுவாச கூட்டத்தில் ஒருவராக அங்கம் வகிக்க முடிந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆளும்கட்சி அமைச்சர்கள் அவரவர் தொகுதியிலேயேதான் போட்டியிட வேண்டும் என்று முதல்வர் இ.பி.எஸ்., உறுதி காட்டினார். எல்லோரும் சம்மதித்தனர், ஒரே ஒருவரைத் தவிர. அவர்தான் மோடி எங்கள் டாடி என்று கூறிய மஞ்சச்சட்டை மைனர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
சிவகாசி தொகுதியில் இருந்து ராஜபாளையத்திற்கு மாற முண்டாசு கட்டினார். பிடிவாதமாக மறுத்துவிட்டார் இ.பி.எஸ். அந்த தொகுதியில் 6 மாதத்திற்கு மேலாக பாஜக பிரபலமான நடிகை கவுதமி பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். இ.பி.எஸ்.ஸின் தடுப்புகளை உடைத்து பா.ஜ.க. மேலிட செல்வாக்கு மூலம் ராஜபாளையம் தொகுதியை கைப்பற்றினார் ராஜேந்திர பாலாஜி.
இந்த கூத்து ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தபோது, ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சந்தேகம் என்று, அந்த தொகுதியை உள்ளடக்கிய அதிமுக மாவடடச் செயலாளர் அலெக்ஸாண்டர், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, திருவள்ளூர் ரமணா ஆகியோர் மாஃபா பாண்டியராஜனிடம் எடுத்துரைத்தனர். உங்கள் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக இருக்கும், ஏற்கெனவே 2011ல் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுங்கள் என்று அந்த மூவர் அணி வற்புறுத்தியது.
ஆனால், ஆவடி தொகுதிக்கு நிறைய வளர்ச்சிப் பணிகளை செய்திருக்கிறேன். மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என வீம்பு பேசினார், பாண்டியராஜன். பஞ்சாயத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் போனது. அவரும் பாண்டியராஜனை அழைத்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடுங்கள் என வலியுறுத்தினார். அவரின் பேச்சையும் கேட்கவில்லை.


அலெக்ஸாண்டர் உள்ளிட்ட மூவர் அணியிடம் பேசிய ஓ.பி.எஸ்., விருதுநகர் தொகுதிக்கு மாறுவதுதான் புத்திசாலித்தனம். நான் சொல்வதை பாண்டியராஜன் கேட்க மாட்டேன் என்கிறார். நீங்கள் வேண்டுமானாலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் இதுகுறித்து பேசுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். மூவர் அணி எஸ்.பி.வேலுமணி வீட்டுக் கதவை தட்டி விஷயத்தை கொட்டியது.
மாஃபா பாண்டியராஜனை அழைத்து, உங்களைப் போன்ற புத்திசாலித்தனம் கொண்டவர்கள் எல்லாம் தேர்தலில் தோல்வியை தழுவுவது நன்றாக இருக்காது. அதனால் நீங்கள் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுங்கள். உங்களின் செல்வாக்கை அறிந்துதான் 2016ல் செல்வி ஜெயலலிதாவே விருதுநகரில் இருந்து தூக்கி வந்து ஆவடியில் நிறுத்தினார். நீங்கள் எம்.ஜி.ஆர் மாதிரி. தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றிப் பெற முடியும். இருந்தாலும் சென்னையை ஒட்டியுள்ள ஆவடி தொகுதி சாதகமானதாக இல்லை. அதனால் வேறு எந்த தொகுதியை வேண்டுமானாலும் தேர்வு செய்து சொல்லுங்கள். உங்களுக்கு அந்த தொகுதியை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸிடம் பேசி நான் பெற்றுத் தருகிறேன் என மகனுக்கு தந்தை கூறும் அறிவுரைப் போல, பொறுமையாக, நிதானமாக அறிவுரை கூறினார், எஸ்.பி.வேலுமணி.

அவரின் பேச்சைக் கேட்டு ஆவேசடைந்த மாஃபா பாண்டியராஜன், எம்.ஜி.ஆரோடு என்னை ஒப்பிடாதீர்கள். நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. ஆவடி தொகுதிக்கு நிறைய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். கொரோனோ காலத்தில் தொகுதி மக்களுக்கும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குடும்பத்திற்கும் நலத்திட்ட உதவிகளை எல்லாம் தாராளமாக செய்திருக்கிறேன். அதனால், அந்த தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்று கூறி எஸ்.பி.வேலுமணியிடமே முறுக்கிக் கொண்டு வந்தவர்தான் மாஃபா பாண்டியராஜன் என்கிறார்கள் ஆவடி அதிமுக நிர்வாகிகள்.
அவருக்கு எதிராக திமுக.வில் வீராதி வீரரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. மண்ணின் மைந்தராக உள்ள திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், அதிரடிப் பேர்வழி என்ற பட்டப்பெயரை சுமந்து நிற்பவர். சாம,பேத,தான, தண்டத்தை கையில் எடுப்பவர் நாசர். ஆவடி தொகுதி முழுவதும் பிரபலமாக உள்ள அவர், இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றால் அமைச்சர் பதவியையே பெற்றுவிடலாம் என்ற ஆசையில், தொகுதியில் தீயாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சென்னை நகரையொட்டியுள்ள தொகுதி என்பதால், சென்னை மக்களின் மனநிலையைப் போலவேதான், ஆவடி தொகுதியிலும் தேர்தல் முடிவு அமையும் என்பதால் உற்சாகமாக இருக்கிறார் சா.மு.நாசர். அவருக்கு ஈடு கொடுத்து தொகுதி முழுவதும் சுற்றி வந்தாலும் மாஃபா பாண்டியராஜனுக்கு அதிமுக கட்சிக்குள்ளேயே ஆப்பு வைக்க பெருங்கூட்டம் தயாராக இருக்கிறது. .

அவருக்கு ஒரே ஆறுதல். திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் அம்பத்தூர் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான அலெக்ஸாண்டர் மட்டுமே. அம்பத்தூர் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்ட போதும், தனது ஆதரவாளர்களை பாண்டியராஜனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுமாறு விரட்டிக் கொண்டிருக்கிறாராம். அவர் மட்டுமே உயிரைக் கொடுத்து மாஃபா பாண்டியராஜனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற நிர்வாகிகள், அண்ணன் எப்ப கிளம்புவார், திண்ணை எப்ப காலியாகும் என்ற எண்ணத்தில், பாண்டியராஜன் விருதுநகர் தொகுதிக்கு மாறிவிடுவார். நாம் ஆவடியில் போட்டியிடலாம் என கனவு கண்டவர்கள்.
அந்த வெறுப்பில், பிரசாரத்தில் இருந்தே ஒதுங்கிவிட்டனர். தொகுதி முழுவதும் பணத்தை தண்ணீராக இறைக்கிறார் பாண்டியராஜன். ஆனால், தொகுதி முழுவதும் 12 பி.ஏ.க்களை நியமித்து, அரசு அதிகாரிகளை பிழிந்தெடுத்து வசூல் வேட்டையை கறாராக நடத்தியதால், பி.ஏ.க்கள் மீதான கோபம், தற்போது அமைச்சரை நோக்கி திரும்பியுள்ளது.
தொகுதி முழுவதும் முட்டி தேய நடந்தாலும், வெற்றிக் கோடே கண்ணில் தெரியலயேப்பா என்று முணுமுணுத்தப்படிதான் ஒவ்வொரு நாள் காலையிலும் பிரசாரத்தை தொடங்குகிறாராம் மாஃபா பாண்டியராஜன்.
பாவம்… கம்ப்யூட்டருக்கே கணக்கு சொல்லி கொடுக்கும் புத்திசாலித்தனம் கொண்ட மாஃபாவுக்கு ஆவடி மக்களின் மனநிலையை படிக்க முடியாமல்போனதுதான் பரிதாபம்….

மு
1