Sun. Apr 20th, 2025

திருச்சி ஆட்சியராக உள்ள எஸ். சிவராசு மாற்றப்பட்டு, தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜனும், இதேபோல தேர்தல் அல்லாத பணியில் நியமிக்க அறிவுரை கூறப்பட்டுடள்ளது. ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடம் மாற்ற உத்தரவில் நேர்மையில்லை என்ற பூதம் கிளம்பியுள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகளுக்குப் பதிலாக, திருச்சி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷிணியும், கோவை காவல் துணை ஆணையர் மயில்வாகனன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஸ்ரீரங்கம் துணை ஆட்சியர் நிஷாத் கிருஷ்ணா ஐஏஎஸ், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக விசு மகாஜன் ஐஏஎஸ், துணை ஆட்சியராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. நிஷாத் கிருஷ்ணா மாற்றமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி அதிமுக எம்.எல்.ஏ.செல்வராசுவுக்கு சொந்தமான காரில் ஒரு கோடி ரூபாய் கடத்தப்பட்டதை கண்டுபிடித்த விவகாரத்தில், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த எம்.எல்.ஏ.வின் கார் ஓட்டுனர் உள்பட 4 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், ஸ்ரீரங்கம் சப் கலெக்டர் நிஷாத் கிருஷ்ணா ஆகியோர் நேர்மையாகவும் துணிச்சலாகவும் நடந்து கொண்டதாக கூறும் நேர்மையான மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீதே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கோடிக்கணக்கில் கள்ளப்பணம் கடத்தப்படும் போது, அதுவும் ஆளும்கட்சி தரப்பினரே ஈடுபடும் போது, மிரட்டல்களைப் பற்றி கவலைப்படாமல் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை தேர்தல் ஆணையமே மாற்றி தண்டனைக்கு உள்ளாக்கினால், தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் புரள்வதை எப்படி தடுக்க மற்ற அதிகாரிகள் முன்வருவார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.