சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்பம் ஒன்றில் பணியாற்றி வரும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்குடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 40 பணியாளர்களுக்கு கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் உள்ள எஞ்சியு ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
மேலும், அந்த ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களையும் அடையாளம் கண்டு, கொரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையும் வேகமெடுத்துள்ளது.
கொரோனோ தொற்று பரவலின் காரணமாக, அந்த நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் அவரவர் இல்லத்தில் இருந்தே அன்றாட பணியை மேற்கொள்ள வேண்டும் என அந்த மென்பொருள் நிறுவனத்தின் உயரதிகாரி உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாள்களாக தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையைப் போல இன்னொரு அதிர்ச்சியாக, தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் இடையேயும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 168 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சையில் 2 பள்ளி மாணவர்கள், கும்பகோணத்தில் 10 மாணவர்கள் என புதிதாக பாதிப்பு பதிவாகியுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள கல்லூரியில் மேலும் 5 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களிடம் கொரோனோ தொற்று அதிகரித்துவருவதை கண்டு பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. கொரோனோ தொற்றால் மேலும் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதாரத்துறை முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.