Sat. Nov 23rd, 2024

சேலத்தில் இன்றைய நிலையில், ஆத்தூர், கெங்கவள்ளி, சங்ககிரி ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே திமுக.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எஞ்சிய 8 தொகுதிகளில் அதிமுகதான் வெற்றிப் பெறும் என்ற நிலைதைதான் இருக்கிறது என்கிறார்கள் அங்குள்ள தேர்தல் களத்தில் நீண்ட அனுபவம் கொண்ட சமூக ஆர்வலர்கள்.

ஏற்காடு தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ சித்ராவை அதிமுக நிர்வாகிகளே விரட்டி விரட்டி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக திமுக.வில் வீட்டு செல்லப்பிராணியை நிறுத்தினால்கூட எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று சொல்லப்பட்ட நிலையில், அங்கு நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனும் திணறிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சேலத்து அரசியல் மேஜிக் என்கிறார் அவர்கள் கிண்டலாக.

தற்போதைய தேர்தல் நேர கூத்துகளை பார்ப்பதற்கு முன்பு, கடந்த 2016 தேர்தலில் நடந்த வியூகங்களை கொஞ்சம் நினைவுக்கூர்ந்து பார்ப்போம்.

கொங்கு மண்டலத்தில் இரட்டை இலக்க தொகுதிகளைக் கொண்டது சேலம் மாவட்டம்தான். முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி உள்பட 11 தொகுதிகளில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 10 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் அதிமுக இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றிப் பெறாத நிலையில், சேலத்தில் அந்த இலக்கை எட்டியதற்காக, அப்போது நடைபெற்ற அதிமுக சட்டமன்றத் தலைவர் தேர்வுக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா, மிகவும் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் எடப்பாடி பழனிசாமியை அந்த கூட்டத்திலேயே வெகுவாக பாராட்டினார்.

அன்றைய தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை. ஆனால், இன்றைய தேர்தலில் முதல்வர் வேட்பாளரே எடப்பாடி பழனிசாமிதான். கடந்த 2016 தேர்தலில் பெற்ற இரட்டை இலக்க வெற்றியைப் போல இந்த முறையும் வெற்றிப் பெற்றிட, ஒட்டுமொத்த சேலம் மாவட்ட அதிமுக.விரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். வெளி மாவட்டங்களில் பிரசாரத்தில் இருந்தால் கூட நள்ளிரவிலும், அதிகாலையிலும், சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உளவுத்துறை மூலமும், தனக்கு நம்பிக்கையான அதிமுக நிர்வாகிகள் மூலமும் தினசரி ஆக்ஷேன் ரிப்போர்ட்டை பெற்று, கள நிலவரத்தை ஆய்வு செய்கிறார். அதிமுக மட்டுமின்றி பாமக கூட்டணி வேட்பாளர்களும் வெற்றிப் பெற வேண்டும் என துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சோம்பலில் இருக்கும் அதிமுக.நிர்வாகிகளை ரிக் மாஸ்டர் கணக்காக விரட்டுகிறார். சாம, தான, பேத தண்டத்தை பயன்படுத்தி, தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோள் செயல்பட்டு வருகிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், எதிர்முகாமான திமுக.விற்குள்ளே, உட்கட்சிப் பூசல் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது.

திமுக.வில் 11 தொகுதிகளில் ஓமலூர் நீங்கலாக 10 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தான் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற மத்திய மாநகர மாவட்டச் செயலாளர் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கெங்கவள்ளி ரேகா பிரியதர்ஷிணி, ஏற்காடு முன்னாள் எம்.எல்ஏ. தங்கதமிழ்ச்செல்வன் ஆகிய மூவரைத் தவிர்த்து மற்றவர்கள்கள் எல்லோரும் புதுமுகங்களே.

வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான வீரபாண்டி குலக் கொழுந்து டாக்டர் தருணுக்கு அவரது உறவினர்களே, அதாவது வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகளே, குறிப்பாக பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட சிலர், எதிராக இருப்பதும், தருண் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்று குழிப்பறிப்பதைக் குறித்தும் ஏற்கெனவே நல்லரசு தமிழ் செய்திகளில் பதிவு செய்திருந்தோம். அந்த தகவல், திமுக முன்னணி நிர்வாகி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தநிலையில், சேலம் வடக்கு சிட்டிங் எம்.எல்.ஏ ஆ.ராஜேந்திரன், சேலம் மேற்கு சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், சேலம் தெற்கு களரம்பட்டி ஏ.எஸ்.சரவணன், எடப்பாடி சம்பத்குமார், மேட்டூர் ஸ்ரீனிவாசப் பெருமாள், வீரபாண்டி டாக்டர் தருண், ஏற்காடு தமிழ்ச்செல்வன், ஓமலூர் காங்கிரஸ் வேட்பாளர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் ஆகிய 8 தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் வெற்றிப் பெறுவது இன்றைய நிலையிலேயே சந்தேகம் என்பதுதான் கள யதார்த்தம்.

திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமானதாக கூறப்படுவது இவைதான். சேலம் வடக்கு, கெங்கவள்ளி, ஏற்காடு ஆகிய மூன்று தொகுதிகளைத் தவிர்த்து மற்ற 8 தொகுதிகளிலும் மக்களிடமும், திமுக கட்சியினரிடமும் செல்வாக்கு இல்லாத பிரமுகர்கள் என்பது மட்டுமின்றி திமுக நிர்வாகிகளிடம் கூட அறிமுகமில்லாதவர்கள் என்று புலம்புகிறார்கள் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள். மேலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரவர் தொகுதிக்குட்பட்ட திமுக முன்னணிநிர்வாகிகளை மரியாதைநிமித்தமாக வீடு தேடி சென்று ஆசிர்வாதம் வாங்குவதும், ஆதரவு தர கோருவதும் நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போது அப்படி வீடு தேடி சென்று திமுக வேட்பாளர்கள் ஆதரவு கேட்கவில்லை என்பது மனக்குறையாகவே இருக்கிறது திமுக முன்னணி நிர்வாகிகளிடம். அதுபோல, தேர்தல் செலவுகளுக்கும் முக்கிய நிர்வாகிகளிடம் பணம் வழங்குவதும் நடைமுறையில் உள்ளதுதான். அதுவும் இப்போது மிஸ்ஸிங்.

இதைவிட முக்கியமானதாக, தனக்கு போட்டியிட வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று கடந்த 6 மாதத்திற்கு மேலாக பல லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கும் பிரபலங்களை, திமுக தலைமை ஆறுதலுக்காக கூப்பிட்டு பேசாததும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இப்படி, திமுக உட்கட்சிக்குள்ளேயே ஆயிரம் ஆயிரமாயிரம் குறைகள் இருக்கின்றன. எதிர்முகாமில் இதுபோன்ற குறைகளை நாள்தோறும் கேட்டு தீர்த்து வைப்பவராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சேலம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் தானாகவே வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று ஏனோதானோ என்று இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற பொருமல்கள் அதிகமாக கேட்கிறது.

மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்த காலத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் சென்று முறுக்கிக் கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளையும் உருட்டியும், மிரட்டியும், தட்டிக் கொடுத்தும் தேர்தல் வேலையில் ஈடுபடுத்தினார். அப்படி செல்வாக்குள்ள ஒரு தலைவர் கூட இன்று சேலம் மாவட்டத்தில் இல்லை. இதனால், தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரராக மாறி, திமுக.வில் கோஷ்டி கோஷ்டியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சிதறிய ஆடுகள் போல திமுக நிர்வாகிகள் ஆளுக்கு ஒரு பக்கம்சுற்றுக் கொண்டிருப்பதால் புதுமுக திமுக வேட்பாளர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல், அரசல் புரசலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எட்டியிருக்கும் என்று கூறும் அண்ணா அறிவாலய நிர்வாகிகள், முதலமைச்சர் பழனிசாமி மாவட்டத்தில் திமுக படுதோல்வியை சந்தித்தால், அது திமுக.வுக்கு மிகப்பெரிய அவமானம் என்று கருதி, வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சேலத்தில் பிரசாரம் செய்த நிலையில், 2 வது கட்டமாக இந்த பயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

இன்றைய தேதியில் சங்ககிரி ராஜேஷ், கெங்கவள்ளி ரேகா பிரியதர்ஷினி, ஆத்தூர் தொகுதி கு.சின்னதுரை ஆகியோர்தான் வெற்றிக் கோட்டை நோக்கி வேகமாக போய் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சேலம் மாவட்ட திமுக கள யதார்த்தம்.

இந்த முறை சேலம் செல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வாழ்வா, சாவா போராட்டத்தில் உள்ள திமுக.வுக்கு வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை கண்டிப்போடு சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு உணர்த்திவிட்டுதான் திரும்புவார் என்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள்.