Sun. Apr 20th, 2025

பழனி சட்டமன்றத் தொகுதியில் திமுக சிட்டிங் எம்.எல்.ஏ.வும் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் புதல்வரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ஐ.பி. செந்தில்குமார், கடந்த பல நாட்களாக கிராமம், கிராமாகச் சென்று முந்தைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி, வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்றைய நண்பகலில், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரடிக்கூட்டம் பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து திமுகவின் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆதரவு திரட்டினார்.

அவரை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் கெ.ரவி மனோகரன் போட்டியிடுகிறார். பழனியில் இன்று இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய பாஜக கொடியே, எங்கள் பகுதிக்கு வாக்கு கேட்டு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சமாதானப்படுத்தியும், அந்த இளைஞர்கள் அமைதியடையவில்லை. இதனால், வாக்கு சேகரிப்பதை அதிமுக வேட்பாளர் கெ.ரவி மனோகரன் சிறிது நேரம் நிறுத்தினார். பாஜக.வுக்கு எதிராக அந்த இளைஞர்கள் முழக்கமிட்டதால், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இருதரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்படும் சூழலும் உருவானதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் காணப்பட்டது.