சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி வேட்பாளாகள், தொகுதிக்குள் முதல் ரவுண்டையை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஆளும்கட்சியான அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வாக இருந்தாலும், இவ்விரு கட்சிகளின் தலைவர்கள், மாநிலம் முழுவதும் பிரசாரத்திற்கு செல்ல முடியாத நெருக்கடியில், பறந்து பறந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில் வருமான வரித்துறை, தனது வேட்டையை தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் எழும் வகையில், கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.
பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரத்தில், எதிர்க்கட்சியான திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை அண்மையில் சோதனையில் ஈடுபட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்தே எதிர்க்கட்சியினர் இன்னும் மீளாத நேரத்தில், திருப்பூரில் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி காட்டியது.
அதே சூட்டோடு, கடலூரில் இன்று தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத்தின் ஆதரவாளர்கள் என கூறப்படும் 8 அதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சரின் நெருங்கிய வட்டத்தில் உள்ள சூரப்பன்நாயக்கன்சாவடி மதியழகன், பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், மகேஷ்வரி உள்பட 8 அதிமுக நிர்வாகிகளுக்குச் சொந்தமான இல்லங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பாஜக.வுக்கு எதிரான அணியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் மட்டும் சோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆளும்கட்சி அமைச்சரின் ஆதரவாளர்கள் வீடுகளிலேயே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியிருப்பதுதான், அதிமுக முன்னணி தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உண்மையான தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறதா அல்லது தேர்தல் நேரத்தில் மிரட்டி ஒடுக்கும் பாணியை கடைப்பிடிப்பதற்காக வருமான வரித்துறையை மத்திய அரசு ஏவி விடகிறதா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.