2018 ல் கஜா புயல், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களை சின்னாபின்னாமாக்கியது. அந்த பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் உரிய நிவாரண தொகையை அரசு வழங்கிவிட்டது என்றும் சூறையாடப்பட்ட குடிசை வீடுகள் எல்லாம் கான்கீரிட் வீடுகளாக மாற்றப்பட்டுவிட்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் முழங்கி வருகிறார்.
ஆனால், திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.மாரிமுத்துவின் குடிசை வீடே, கஜா புயலின் கோரப் பசிக்கு இரையாகி, இன்றைக்கும் விடியலை காணாமல், அந்த துயரத்தின் சாட்சியாக நின்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், (விதிலக்காக கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ) கோடீஸ்வரராகதான் காட்சியளிக்கிறார்கள். தேர்தல் செலவு 33 லட்சத்திற்கு மேல் அதிகமாகக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஒட்டுமொத்த சொத்து மதிப்பே 3 லட்சத்திற்கு மேல் இல்லாத வேட்பாளராகதான் உள்ளார், திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.மாரிமுத்து.
இளங்கலை பட்டதாரியான சு.மாரிமுத்து, குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார். கஜா புயலில், குடிசை வீட்டின் கூரை பியந்து எறியப்பட, அதைக் கூட மாற்று ஓலை கொண்டு மூட வசதியில்லாதவராக அவர் காட்சியளிக்கிறார். மழை நீர் வீட்டிற்குள் ஒழுகாமல் இருக்க, தார்ப்பாய் கொண்டு குடிசை வீட்டை மூடியிருக்கிறார். குடிசை வீட்டிற்கு கதவு கூட இல்லை என்பதுதான் சோகம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காடுவாகுடி கிராமத்தில்தான் மாரிமுத்து வசித்து வருகிறார். விவசாய கூலித் தொழிலாளிகளான கண்ணு-தங்கம்மாள் தம்பதியினரின் புதல்வரான மாரிமுத்து, கடந்த 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேவையாற்றி வருகிறார்.
ஏழ்மையிலும் நேர்மை தவறாத அவரின் நற்பண்பை அங்கீகரிக்கும் வகையில், திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரின் கைவசம் உள்ள பணம் 58 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அவரின் மனைவி ஜெயசுதாவின் கையிருப்பு ஆயிரம் ரூபாய். தங்க நகை 3 பவுன் மட்டுமே. 66 சென்ட் விவசாய நிலத்தை நம்பிதான் ஒட்டுமொத்த குடும்பமே வாழ்ந்து வருகிறது. குடிசை வீடு, விளை நிலம் உள்ளிட்டவற்றின் ஒட்டுமொத்த மதிப்பே 3 லட்சம் ரூபாய்க்குள் அடங்கிவிடும்.
சு.மாரிமுத்து, ஜெயசுதா தம்பதியினிருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும், ஏழாம் வகுப்பு படிக்கும் ஜெயவர்மனும், ஏழ்மையுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தளவுக்கு ஏழ்மையாக இருந்தபோதும் அரசியலை, தொழிலாக கொள்ளாமல், சேவையாக நினைத்து கடந்த 25 ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார், சு.மாரிமுத்து.
அரசியலை சேவையாக மட்டுமே பார்த்ததால், அகில இந்திய கட்சியான கம்யூனிஸ்ட் பேரியக்கத்தில் கிளைச் செயலாளர், கோட்டூர் ஒன்றிய இளைஞர் பெருமன்றச் செயலாளர், ஒன்றியத் துணைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதி என மாவட்ட அளவிலான கட்சிப் பதவிகளில் இருந்து வருகிறார்.
ஆனால், கட்சி ஆரம்பித்த ஒன்றிரண்டு வருடங்களுக்குள்ளாவே, அந்த கட்சியின் நிரந்தர தலைவர் என்ற பதவியை கமல்ஹாசனால் எட்ட முடிகிறது. ஜனநாயகமும், நேர்மையும் எந்த பக்கம் இருக்கிறது என்பதை சின்னப்பிள்ளைகள் கூட எளிதாக புரிந்து கொள்வார்கள்.
1971 ல் இருந்து திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி கம்யூனிஸ்ட்கள் வசம்தான் இருந்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் திமுக.வைச் சேர்ந்த ஆடலரசு இங்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருக்கிறார். மீண்டும் கம்யூனிஸ்ட்டுக்கு இந்த தொகுதியை திமுக வழங்கியுள்ளது. மொத்தம் 50 ஆண்டுகளில் 45 ஆண்டுகளுக்கு மேல், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி தொகுதி போலவே, தமிழகத்தில் உள்ள எஞ்சிய 233 தொகுதிகளும் மாறினால், சாமான்யனின் குரல் சட்டமன்றத்தில் அதிகமாக ஒலிக்கும். ஆனால், கோவை தெற்கு தொகுதியைப் போல, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளும் இருந்தால், சமூக அக்கறையோடு அரசியலுக்கு வருபவர்கள் அருகி போய்விடுவார்கள். அப்படிபட்ட ஆபத்து ஏற்படுவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு 176 கோடிரூபாய்க்கு சொத்து இருக்கிறது. வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளியின் சொத்து 3 லட்சத்தை மீறி எகிறவில்லை. ஆனால், கலைக் கூத்தாடியான கமல்ஹாசனின் சொத்து 177 கோடி ரூபாயாக பிரமிக்க வைக்கிறது.
தமிழகத்திற்கு யார் தேவை? முடிவு செய்ய வேண்டியது வாக்காளர்கள்தான்….