பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் தி.மு.க, ம.தி.மு.க நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு. க வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் களம் கண்டுள்ளார். தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர், கயல்விழிக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமாக ஓட்டு வேட்டையாடவில்லை. அவர்களிடம் ஒரு சுணக்கம் இருக்கிறது.
இதனால், தி.மு.க. கயல்விழிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதாக களத்தில் இருந்து வரும் தகவல் கூறுகின்றன. இந்தநிலையில், தாராபுரம் ம.தி.மு.க மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ் வீட்டில் வருமான வரித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல, தாராபுரம் தி.மு.க நகர செயலாளர் கேஎஸ் தனசேகர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
இரண்டு இடங்களிலும் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கையாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த வருமான வரிச்சோதனை, பாஜக தலைவர் முருகனை திருப்திப்படுத்த நடத்தப்பட்டதாக திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.