பிப்ரவரி 24 ஆம் தேதியன்று நல்லரசு தமிழ் செய்திகளில் ஜெயா டிவியைப் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ஜெயா டிவி மீதோ, அதன் நிர்வாகத்தின் மீதோ நமக்கு தனிப்பட்ட முறையில் எந்த பகையுணர்வும் இல்லை. ஆனால், இளம்தலைமுறையைச் சேர்ந்த விவேக் ஜெயராமன், அந்த தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றவுடன்,பழம் பெருச்சாளிகளின் நிர்வாகத்தில் இருந்து விலகி புதிய உத்வேகத்துடன் செயல்படுவார் என்று அதன் ஊழியர்கள் எதிர்பார்த்தார்கள்.
அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப, அதிரடி மாற்றங்களைச் செய்து, வணிக நோக்கத்தில் லாபகரமான நிறுவனமாக ஜெயா டிவியை மாற்ற, பல்வேறு புதிய நடிவடிக்கைகளை எடுத்தார். ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. கொரோனோ காலத்திற்கு முன்பாகவே, ஜெயா டிவி மீது காட்டிய ஆர்வத்தை குறைத்துக் கொண்டு, பழம்பெருச்சாளிகள் வகுத்து தந்த நிர்வாக வழியிலேயே ஜெயா டிவி திரும்ப வழிவகுத்து ஒதுக்கிக் கொண்டு விட்டார் விவேக் ஜெயராமன்.
பிப்ரவரி 24 ல் வெளியிடப்பட்ட செய்தியின் நோக்கம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று, ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஜெயா டிவியில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கேக் கூட வெட்டமாட்டார்கள். அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அன்றைய தினமாவது சந்தோஷப்பட்டுக் கொள்ளும் வகையில் ஸ்வீட் பாக்ஸோ, ஒருவேளை உணவோ வழங்கும் பழக்கம் ஒருபோதும் இருந்தததில்லை என்பதை சுட்டிக்காட்டவே, அந்த பதிவை எழுதியிருந்தோம்.
அந்த செய்தி வெளியான பிப். 24 ஆம் தேதியன்று ஜெயா டிவியின் முன்னாள் பணியாளர் ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு, ஜெயலலிதா பிறந்தநாளை விடுங்கள் சார். அம்மா மறைஞ்சிட்டாங்க. விவேக் ஜெயராமனின தாயார் இளவரசி ஜெயராமன் பெங்களூரில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்பினார். அன்றுதான் வி.கே.சசிகலாவும் திரும்பினார். அன்று காலையில் இருந்து மறுநாள் விடியற்காலை வரை ஜெயா டிவியில், செய்திப்பிரிவில் பணியாற்றிய எல்லோரும் எட்டு மணிநேரத்திற்கு மேலாக உழைத்தார்கள்.
தனது தாயார் விடுதலையாகி நான்காண்டுகளுக்குப் பிறகு சென்னை திரும்புகிறார் என்ற சந்தோஷத்தில் இருந்த விவேக் ஜெயராமன், அந்த மகிழ்ச்சியை ஜெயா டிவி ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், அன்று நாள் முழுவதும் வேலை பார்த்த ஊழியர்களுக்கு ஒரு சாக்லெட் கூட தரவில்லை. அதைவிட கொடுமையாக, நாள் முழுவதும் ஒரு சில வினாடிகள் கூட ஓய்வாக இல்லாமல் செய்தியை நேரடி ஒளிப்பரப்பு செய்ததால், நேரத்திற்கு நேரம் சாப்பிட கூட முடியவில்லை.
காலை மற்றும் பகல் உணவைக் கூட காலதாமதமாகதான் எடுத்துக் கொண்டார்கள். அவரவர் சொந்த காசில் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு வந்ததை, அங்கு வந்த முன்னாள் ஊழியர் ஒருவர் கேள்விப்பட்டு நொந்து போய், விவேக் ஜெயராமனுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு தனது மறதியை நினைத்து வருத்தப்பட்டு, இரவு உணவு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் விவேக் ஜெயராமன்.
வி.கே.சசிகலா குடும்பத்திலேயே இன்னும் ஈர மனசுக்காரராக விவேக் ஜெயராமன் இருக்கிறார். அவரிடம் உள்ள மனிதாபமானத்தையும் கெடுக்கும் வகையில்தான் ஜெயா டிவியில் உள்ள நிர்வாகத்தினர் இருக்கிறார்கள் என்று அன்றைக்கே அவர் நொந்துகொண்டார். இது போன மாச நிகழ்வு.
தலைப்புச் செய்திக்கு வருவோம். மார்ச் முதல்வாரத்தில், செய்தி ஆசிரியர் தில்லை, செய்திப்பிரிவு ஊழியர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்திற்குச் சென்ற ஊழியர்கள், ஆசை, ஆசையாக அவர் சொல்லப் போகும் வார்த்தையை கேட்க தயாரானார்கள். ஏனெனில் கொரோனோ காலத்தில் குறைக்கப்பட்ட சம்பளத்தை, மீண்டும் பழைய முறைபடி வழங்குவார்கள். கூடவே, ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வும் உயர்த்தி கொடுப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று ஆவலோடு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் ஆசைக்கு கொள்ளி வைக்கும்படி, தொடக்கத்திலேயே செய்தி ஆசிரியர் கூறிய வார்த்தைகளை கேட்டு வியர்த்துப் போனார்கள் செய்திப்பிரிவு ஊழியர்கள்
செய்திப்பிரிவில் பணியாற்றுபவர்கள் மீது திடுக்கிடும் பகார்கள் வருகின்றன. பெண் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு நள்ளிரவில் போன் செய்து காதல் வசனம் பேசுவதாக சிலர் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் காதலிப்பதாக இருந்தால் கூட, இரவு நேரத்தில் பெண்களை அழைத்து பேசுவது தவறு. காதல் அல்லது கடலை போடுவது என்று எதுவாக இருந்தாலும் புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காதல் விவகாரத்தில் இருந்து தடம் மாறி பாலியல் புகாராக நிர்வாகத்திற்கு வந்தால், சம்பந்தபட்ட ஊழியரை அழைத்து விசாரணையெல்லாம் நடத்த மாட்டார்கள். பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். அதனால் எச்சரிக்கையாக பணியில் இருங்கள். பெண் பணியாளர்களிடம், அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் அவர்களை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்.
அடுத்து, தேர்தல் நெருங்கிவிட்டது. நமக்கு போட்டியாக இல்லை. நம்மை விட முன்னிலையில் இருக்கிற டிவி நிர்வாகமாகட்டும், பின்தங்கியிருக்கிற நிர்வாகமாகட்டும் உயிரைக் கொடுத்து தேர்தல் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்ம டிவியில் இருப்பவர்கள், ஏதோ ஆண்டி மடத்திற்கு வருவதைப் போல வந்து சொல்கிறார்கள். ஒருவரிடமும் கூட கடமையுணர்வு இல்லை. வாங்குகிற சம்பளத்திற்கு வேலைப்பார்க்க வேண்டும் என்கிற உணர்வே கொஞ்சம் கூட இல்லை.
அலுவலகத்தில் இருப்பவர்களைப் போலவே, மாவட்டங்களில் இருக்கும் நிருபர்களும் இருக்கிறார்கள். தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு எடுத்து தருமாறு, அனைத்து மாவட்ட நிருபர்களுக்கும் செய்தி அனுப்பினோம். ஒரு தொகுதிக்கு 150 பேரிடம் கருத்துக் கேட்டு, அதன் விபரங்களை அனுப்பி வையுங்கள் என்று சொன்னோம். ஆனால், ஒரு வாரத்திற்கு மேலாகியும் ஒன்றிரண்டு செய்தியாளர்கள்தான் கருத்துக் கணிப்பை எடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.
கருத்துக் கணிப்பு எடுப்பதில் அக்கறை காட்டாதவர்களுக்கு இறுதி எச்சரிக்கை என்று தகவல் அனுப்பிய பிறகுதான், ஏனோதானோ என்று கருத்துக் கணிப்பு எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஏன் இப்படி, அலட்சியமாக இருக்கிறீர்கள் என்று விசாரித்தபோது, ஒரு சில மாவட்டச் செய்தியாளர்களுக்கு மட்டுமே மாதச் சம்பளமாக 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. மிஞ்சிய 25க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கூட மாதச் சம்பளம் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்களாம்.
நம்முடைய அலட்சியமான பணியை நிர்வாகம் எத்தனை நாளைக்கு பொறுத்துக் கொள்ளும் என்று தெரியாது. தேர்தலுக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கப் போகிறது. உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளவர்கள், ஜெயா டிவியில் தொடர்ந்து பணியாற்ற முடியும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை .
இவ்வாறு கூறி கூட்டத்தினரின் மறுமொழியைக் கூட கேட்காமல் செய்திப்பிரிவு கூட்டத்தை கலைத்தாராம் செய்தி ஆசிரியர் தில்லை.
ஜெயா டிவிக்கு முன்பே புதிய தலைமுறை, தந்தி டிவி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள், மாநிலம் முழுவதும் சுற்றி வந்து கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டு வருகின்றன. நிறுவனமயமான ஊடகங்களைத் தவிர, துக்ளக் மதுரை மண்டல செய்தியாளர் இதயா, தனிப்பட்ட முறையில் கருத்துக் கணிப்புகளை பல மாதங்களாக எடுத்து வருகிறார். ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரை சந்தித்து அவர் கருத்துக் கேட்கிறார். 5 ஆயிரம் பேர் எங்கே? 150 பேர் எங்கே? யாரை திருப்திப்படுத்த ஜெயா டிவி, கருத்துக் கணிப்பு நாடகத்தை நடத்துகிறது…
பதில் நம்மிடம் இல்லை….