Sun. Nov 24th, 2024

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளரான நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதே தொகுதியில் நன்கு அறிமுகமான பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசனும் வீராங்கனையாக மாறி தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார். இவர்கள் இவருக்கும் இடையே ஜோக்கர் மாதிரி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் இப்போதுதான் முகம் கழுவிக்கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறார்.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை வி.வி.ஐ.பி. தொகுதியாக இருந்தது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதிதான். இந்த தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை, போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளதால், மூன்றாவது முறையும் ஹாட்ரீக் சாதனை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தொண்டாமுத்தூர் தொகுதியில்தான், கடந்த பல மாதங்களாக அனல் பறந்து கொண்டிருந்தது, ஆனால், நேற்று ஒரே நாளில் எஸ்.பி.வேலுமணியை பின்னுக்குத் தள்ளிவிட்டது, வானதி சீனிவாசன், கமல்ஹாசன் இடையே நடைபெற்ற வார்த்தைப் போர்.

கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, பிரசாரத்தை தொடங்கிய பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், முதல் பந்தையே நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராகதான் வீசினார். அந்த பந்துக்கே பயந்து, மிரண்டு போனதுடன் பாய்ந்து பாய்ந்து பதிலளித்துள்ளார் கமல்ஹாசன். அவருக்கு எதிராக வானதி சீனிவாசன் எடுத்த ஆயுதம், சினிமாவையும் பிக் பாஸ் ஷோவையும்தான்.

திரையுலக நட்சத்திரங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. திரைத்துறையில் வெற்றிப் பெற்றவர்களாக இருந்தாலும் மக்கள் சேவை செய்தவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

டிவி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றியவர்களுக்கு எல்லாம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மே 2-ம் தேதிக்குப் பிறகு ‘பிக் பாஸ்’ என்ற டிவி ஷோவிலோ அல்லது புதிய சினிமாவிலோ நடிக்க போயிடுவார் கமல் என்று போட்டுத் தாக்கினார், இந்த வார்த்தையோடு நின்று இருந்திருந்தால் கூட கமல்ஹாசன் டென்ஷன் ஆகியிருக்கமாட்டார். அடுத்து வானதி கொளுத்திப் போட்டதுதான், கமல்ஹாசனை, சிகப்பு மனிதனாக மாற்றிவிட்டது.

கமல் கோவை தெற்கு தொகுதியிலோ, அரசியலிலோ ஜெயிக்க முடியாது என்று போகிற போக்கில் வானதி சீனாவசன் சொல்லிவிட்டு போக, கொந்தளித்துவிட்டார் கமல்ஹாசன்..

அவரின் பேட்டி வெளியான சில மணிநேரங்களிலேயே கொத்தளித்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன். வானதி சீனிவாசனை அமில வார்த்தைகளால் தாளித்துவிட்டார் அவர்.

தேர்தலில் போட்டியிடும் மருத்துவர் தேர்தலுக்கு பிறகு மருத்துவப் பணியை செய்வார். தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர் தேர்தலுக்கு பின் நீதித்துறைப் பணியை செய்வார். அதேபோல் திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தலுக்கு பிறகு திரைப்பட பணியை தொடர்வார்கள்.

திரைப்படத்தில் நடிப்பது எங்களுடைய தொழில். அதனால் அதை செய்வோம். ஆனால் அரசியல் என்பது எங்கள் கடமை. அதை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். அதை தொழிலாக ஒருபோதும் நாங்கள் நினைப்பதை இல்லை, என்று மறைமுகமாக அரசியலையே தொழிலாக கொண்டுள்ளார் வானதி சீனிவாசன் என போட்டுத் தாக்கினார் கமல்ஹாசன்.

https://twitter.com/ikamalhaasan/status/1371500337262174209?s=20

வானதி சீனிவாசனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே வேட்பு மனு தாக்கிய முதல் நாளிலேயே அனல் பறந்த வார்த்தைப் போர்தான், மாவட்ட செய்தியாகி, மாநில செய்தியாகி, தேசிய செய்தியாக முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

கோவையை பொறுத்தவரை ஒட்டுமொத்த ஊடக வெளிச்சமும், இந்த இருவரின் மீது விழுந்ததைப் பார்த்து, கொண்டாட்டத்தின் உச்சிக்கே போய்விட்டாராம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்பதுதான், நமது செய்திக்கு கிடைத்த டிவிஸ்ட்..தொண்டாமுததூர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தில் முனைப்பு காட்ட தொடங்கிவிட்டார், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு இடையேயான வார்த்தை போர், அதற்கு நாடு முழுவதும் கிடைத்துள்ள பப்ளிசிட்டி ஆகியவற்றை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கூறியுள்ளனர், கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள். அதை கேட்டு உற்சாகமாகிவிட்டாராம் அமைச்சர்.

தேர்தல் முடியும் வரை இவர்கள் இரண்டு பேரும் இப்படியே சண்டை போட்டுக் கொள்ளட்டும். அப்பதான் ஒட்டுமொத்த மீடியாவும் அவங்க ரெண்டு பேரு பக்கமே சுத்துவாங்க.. நம்மல கண்டுக்க மாட்டாங்க..அப்படியே கண்டுகிட்டாலும் நம்ம பிரசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க.. நமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திமுக சொன்னாலும், அமமுக சொன்னாலும் அது தொண்டாமுத்துதூர் மக்கள்கிட்டேயே பரவாது, அப்படியிருக்கும் போது கோவை மாவட்ட மக்களுக்கு எப்படி எட்டும். தமிழகம் முழுவதும் எப்படி பரவும்..அதனால், நாம நிம்மதியாக நம்ம பிரசாரத்தை செய்வோம். இந்த சந்தர்ப்பை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வழியை பார்ப்போம் என செம ஹேப்பியாக சொல்லி கலகலவென சிரித்தாராம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..

ஊரு ரெண்டுபட்டா, கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆனால், கோவையிலே, கூத்தாடிக்கு எதிரான கலாட்டா, அமைச்சர் வேலுமணிக்கு சாதமாக இருக்கிறது. அமைச்சருக்கு செம மச்சமண்ணே எனகிறார்கள் கோவை அதிமுக பிரமுகர்கள்…