Sun. Nov 24th, 2024

நடிகை விந்தியா மைக் பிடித்து பேசினால், மொத்த கூட்டமும் கை தட்டி ஆர்ப்பரிக்கும். அந்தளவுக்கு அவரின் பிரசாரம் அனல் பறக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என திமுக தலைவர்களை அடுத்தடுத்து அவர் வறுத்தெடுக்கும் விதம், தேர்தல் பிரசாரத்தில் எப்போதுமே பிரதான இடத்தைப் பிடிக்கும். தனது தொகுதியில் ஒன்றிரண்டு நாட்களாவது நடிகை விந்தியா பிரசாரம் செய்ய வேண்டும் என்று கெஞ்சி அழைக்கும் வேட்பாளர்களே அதிமுக.வில் அதிகம்.

முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், விந்தியா ஒரு ரவுண்ட் வந்தால், சோம்பி கிடக்கும் அதிமுக நிர்வாகிகள் கூட வீறுகொண்டு எழுந்து தேர்தல் பணிகளை உற்சாகமாக ஆற்றுவார்கள். அந்தளவுக்கு விந்தியாவின் பிரசாரத்தில் உற்சாக டானிக் அதிகமாக இருக்கும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், ஸ்டார் பேச்சாளர்களில் முதல் இடத்தை பிடித்திருந்தவர் நடிகை விந்தியாதான்.

ஸ்டார் பேச்சாளர்களை கட்டி ஆள்வது மிக, மிக சிரமம் என்று நொந்து கொள்ளும் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட, நடிகை விந்தியாவின் சுற்றுப்பயணத்தை அதிகமாக விரும்புவார்கள். அந்தளவுக்கு தனக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதை மட்டும் கவனத்தை செலுத்திவிட்டு, அமைதியாக திரும்பிவிடுவார். அதிமுக நிர்வாகிகளுக்கு எந்த சங்கடத்தையும் வைக்கமாட்டார். அதிக செலவும் வைக்க மாட்டார் என்ற நற்பெயர், அவருக்கு உண்டு.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் தனக்கு கிடைத்த மரியாதை, அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக.வில் வழங்கப்படவில்லை என்ற வருத்தம் நடிகை விந்தியாவுக்கு இப்போதும் உண்டு.இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்ததால்தான், ஜெயலலிதா மறைந்தவுடனேயே அரசியலில் இருந்து ஒதுங்கினார் நடிகை விந்தியா. ஆனால், அவரின் பிரசாரத்திற்கு மக்களிடமும், கட்சியினரிடமும் உள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு, முதல்வர் இ.பி.எஸ். தலைமையிலான அதிமுக முன்னணி நிர்வாகிகள், அவரை வலிந்து அணுகி மீண்டும் அதிமுக.வை ஆதரித்து பிரசாரம் செய்ய வருமாறு அழைத்தனர்.

அதனை ஏற்று, நடிகை விந்தியா, அதிமுக. பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசத் தொடங்கினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதனையொட்டி நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய காலங்களில், நடிகை விந்தியா பிரசாரம் செய்யாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மின்னல் வேக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டவர்.

அதிமுக பேச்சாளர்கள், குறிப்பாக, நட்சத்திர பேச்சாளர்கள், தங்களுக்கு தேவையான உதவிகளை அல்லது பணி நியமனம், பணியிட மாற்றம், ஒப்பந்தங்களுக்கான சிபாரிசு என ஏதாவது ஒரு கோரிக்கை மனுவோடு தலைமைச் செயலகத்தில் நாள்தோறும் வலம் வந்து அமைச்சர்களை சந்தித்து, பயனடைவார்கள். அந்த பட்டியலில் ஒருபோதும் தன்னுடைய பெயர் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வருபவர் நடிகை விந்தியா.

தேர்தல் பிரசாரக் காலங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுவாரே தவிர, வேறு எந்த நேரத்திலும் தலைமைச் செயலகத்திலோ, எந்த அமைச்சர் அறையிலோ கோரிக்கை மனுவோடு காத்திருந்தார் நடிகை விந்தியா என்று இதுவரை ஒருவர் பேசி கூட நாங்கள் கேட்டதில்லை என்று அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளே பெருமையாக கூறுவார்கள். அந்தளவுக்கு தனிப்பட்ட முறையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு இருப்பவர் நடிகை விந்தியா.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரை அணுகி உதவி கேட்டிருந்தால் ஏதாவது ஒரு பதவியை நடிகை விந்தியாவால் பெற்றிருக்க முடியும். ஆனால், அவர் பணம், பதவி, பட்டம் ஆகியவற்றுக்காக ஏங்கி, அதிமுக.வுக்கு, குறிப்பாக ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொள்ளவில்லை. அம்மா மீதிருந்த பக்தியின் காரணமாக, அவருக்காக உழைக்க, முன்வந்து அதிமுக.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அம்மாவின் கனவான, தனது மறைவுக்குப் பிறகும் அதிமுக நூறாண்டு ஆட்சியில் இருக்கும் என்ற லட்சிய வேட்கைகயை நிறைவேற்றதான், அதிமுக.வில் மீண்டும் சுறுசுறுப்பாக இயக்கி வருகிறார் நடிகை விந்தியா. அப்படி தன்னலம் பார்க்காமல், அதிமுக.வின் வெற்றிக்காக இரவு பகலாக உழைக்கும் தனக்கு, தனது உழைப்புக்கு அதிமுக தலைமை அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையோடு, அதிமுக வேட்பாளர் பட்டியலில் தனது பெயரும் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தார், நடிகை விந்தியா.

ஆனால், அவரின் பெயர் இல்லை. அதில் கூட அவருக்கு வருத்தம் இல்லை. அதிமுக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா இதழின் ஆசிரியருமான அழகு மருதுராஜ், திருப்பத்தூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை பார்த்துதான் அவருக்கு விரக்தி ஏற்பட்டுவிட்டது. நடிவை விந்தியா பேசும் பொதுக்கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்து, அதை நமது அம்மா யூ டியூப் சேனலில் வெளியிட்டு, அதன் மூலமும் வருமானம் பார்ப்பவர்கள், அந்த நாளிதழின் நிர்வாகிகள்தான்.

விந்தியாவின் உழைப்பு மற்றும பிரசாரம் ஆகியவற்றின் மூலம் அதிமுக.வில் பலர் பலனைந்து வரும் நேரத்தில், அவரை புறக்கணித்துவிட்டு, அழகு மருதுராஜுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்த மருதுராஜுக்கு எதிரான கூட்டம், தொலைபேசி வாயிலாக நடிகை விந்தியாவை தொடர்பு கொண்டு, மருது அழகுராஜைவிட நீங்கள் இளக்காரமா போயிட்டீங்களா அம்மா என அழாத குறையாக பேச, அதை கேட்டுதான் கலங்கி போய்விட்டார் நடிகை விந்தியா.

அதே வருத்தத்தோடு, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் தொலைபேசியில் பேசிய நடிகை விந்தியா, அதிமுக நிர்வாகிகள் பேசிய வசனத்தை அப்படியே எதிரொலித்து, தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாராம்.

இப்படியொரு தகவல் தீயாக பரவி வருவதை குறித்து நடிகை விந்தியாவின் சுற்றுப்பயணத்தை ஒழுங்குபடுத்தி வரும் நிர்வாகியிடம் வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டோம். ஒற்றை வார்த்தையில், அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று மறுத்துவிட்டார்.

மீடியாவின் பலம் நடிகை விந்தியாவுக்கு தெரிந்திருக்கும். அதனால் அவர் மவுனம் காக்கலாம். அவரை மையப்படுத்தி வரும் செய்தியை அவர் மறுக்கலாம். ஆனால், நடிகை விந்தியாவை தற்போதைய அதிமுக தலைவர்கள் புறக்கணித்துவிட்டதாகவே குமறுகிறார், அவரின் நலம் விரும்பிகள்.

அதிமுக.வில் சாதாரண தொண்டர்களும் எம்.எல்.ஏ.ஆகலாம்., எம்.பி.ஆகலாம், அமைச்சர் ஆகலாம்,ஏன் முதல் அமைச்சராக ஆக கூட பதவியேற்கலாம் என பேச்சுக்கு முன்னூறு தடவை பேசும் அவர்கள், நடிகை விந்தியாவின் ஆதங்கத்தை தீர்த்து வைப்பார்களா, எம்.பி.யாக இருப்பவர்களுக்கு எல்லாம் சட்டமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பளித்துள்ள இரட்டைத் தலைவர்கள், நடிகை விந்தியாவுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவார்களா என்று ஆவேசமாக கேட்கிறார்கள், அவரது பிரசாரத்திற்கு அடிமையான அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள்.