Mon. Nov 25th, 2024

விருதுநகர் மாவட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுக.வின் விஜபி.க்களில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முக்கியமானவர். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, அவரின் கட்சி விசுவாசத்தைப் பார்த்து கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் வாய்ப்புத் தந்து, அமைச்சராகவும் ஆக்கி அழகுப் பார்த்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்தவர், அவரின் மறைவுக்குப் பிறகு ஆடும் ஆட்டம், பல நேரங்களில் அதிமுக கட்சிக்கே அவப்பெயரைத் தேடித் தந்துக் கொண்டிருக்கிறது. அவரின் இளமைக்காலம் பற்றி இணையத்தளங்களில் பரவிக் கிடக்கும் கதைகளை எல்லாம் படிக்க கூட முடியவில்லை. தனிமனித விமர்சனத்திற்கு நல்லரசு தமிழ் செய்திகள் என்றைக்குமே முக்கியத்துவம் கொடுக்காது.

ஆனால், அரசின் அங்கமாக உள்ள அவர், நடந்து கொள்ளும் விதமும், அவரின் செயல்பாடுகளும், மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி கூட, ஏழைகள்தான் தன்னுடைய நண்பர்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதுதான் தன்னுடைய லட்சியம் என்று அடிக்கடி கூறுகிறார். அவரின் நடவடிக்கைகளும், செயல்திட்டங்களும் பல சமயங்களில் நம்பிக்கையளிக்கக் கூடியவையாகதான் இருக்கிறது.

ஆனால், அவரை எங்கள் டாடி என்று சிறுபிள்ளைத்தனமாக பேசி, பொதுமக்களிடம் கேலிக்குரிய, கோமாளித்தனமான மனிதராக, அமைச்சர் ஒருவரே தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை, சராசரி மனிதர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியிருக்கையில் தூய, எளிய அரசியல் வாழ்க்கையை விரும்பும் சமூக ஆர்வலர்கள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சிறுபிள்ளைத்தனமான செயல்பாட்டை எப்படி பொறுத்துக் கொள்வார்கள். அதனால், அவருக்கு எதிரான விமர்சனங்கள் அனல் கக்கும் விதமாகவே இருக்கிறது.

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்களில் 3 பேருக்குத் தவிர, மற்ற அமைச்சர்களுக்கு, ஏற்கெனவே (2016) சட்டமன்றத் தேர்தலில் நின்று தொகுதிகளிலேயே தான் இப்போதும் போட்டியிடுகிறார்கள். ராஜேந்திர பாலாஜி மட்டுமே விதிவிலக்கு. மீண்டும் போட்டியிடும் 27 அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜி மட்டும் தனி ரகம். இரண்டு முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்டவர், தற்போது ராஜபாளையத்திற்கு மாறியிருக்கிறார்.

இந்த தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், பாஜக வேட்பாளராக, ராஜபாளையத்தில் கடந்த 6 மாதமாக சுற்றி வந்தார் நடிகை கௌதமி. ஆனால், சிவகாசியில் மீண்டும் போட்டியிட்டால், தனது வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என்ற எண்ணத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து, ராஜபாளையத்தில் போட்டியிடும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், இருவருமே, தாங்கள் உள்பட அமைச்சர்கள் எல்லோரும் அவரவர் தொகுதியில்தான் போட்டியிடுகிறார்கள். சிவகாசி தொகுதிக்கு நீங்கள் நல்லது செய்து இருந்தால் மக்கள் உங்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். தொகுதி மாற்றம் என்பதெல்லாம் நடக்காது. சிவகாசி தொகுதியிலேயே பிரசாரத்தை மேற்கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லியுள்ளார்கள்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல், சிவகாசி தொழிலதிபர்கள் மற்றும் தமிழக பாஜக.வின் முக்கிய தலைவர் மூலம் டெல்லி பாஜக.விடம் கெஞ்சி, ராஜபாளையம் தொகுதியைப் பெற்று, அங்கு போட்டியிடுகிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி. இதைகூட வெளிப்படுத்தாமல் விட்டு விடலாம். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள நாடார் மற்றும் தேவர் சமுதாய மக்களுக்கு உரிய மரியாதை தராமல், அவமரியாதையாக பேசுவது, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை உதாசீனப்படுத்துவது போன்ற நாகரிகமற்ற செயல்களில் ஈடுபடுவதுதான் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் பிறவிக்குணம் என்று கண்ணீரோடு பேசுகிறார்கள், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள்.

மானம், மரியாதையை எல்லாம் விட்டுவிட்டு சென்றால்தான், கே.டி.ராஜேந்திர பாலாஜியுடன் பயணிக்க முடியும். அடிமைப்போல யார் தன்னை பாவித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்குதான் கட்சிப் பதவி கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வழி கிடைக்கும் என ரத்தக் கண்ணீர் வடிக்கிறார், அவரின் நிழலாக 20 ஆண்டு காலம் வாழ்ந்து, அண்மையில் மனம் வெறுத்து அரசியலில் இருந்தே ஒதுக்கிவிட்ட அதிமுக நிர்வாகி ஒருவர்.

அமைச்சரின் பேச்சுக்கும், செயலுக்கும் சுத்தமாக சம்பந்தமே இருக்காது என்பதற்கு உதாரணமாக, ராஜபாளையத்தில் முதல் முறையாக அவர் மேற்கொண்ட பிரசாரத்தையே உதாரணமாக காட்டுகிறார்கள். ஊரில் உள்ள தலைவர் சிலைகளுக்கு எல்லாம் தேடி தேடிச் சென்று மாலையணிவித்து வழங்கினார். அந்த தலைவர்களிடம் காணப்பட்ட அரிய குணங்களில் ஒன்று கூட அமைச்சரிடம் கிடையாது. அவர் மாலையணிவித்த தலைவர்களின் பட்டியல் இதோ…

பசும்பொன்தேவர் சிலை,

தியாகி அரங்கசாமி ராஜா சிலை 

பி.ஏ.சி ராமசாமி ராஜா சிலை

, பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா  உருவப் படம்,

டாக்டர் அம்பேத்கார் சிலை

பி.ஏ.சக்கராஜா சிலை

 பி.எஸ்.குமாரசாமி ராஜா சிலை

 மகாத்மா காந்தியின்  சிலை

கர்மவீரர் காமராஜர்   சிலை

பேரறிஞர் அண்ணா சிலை

ஜவர்கலால் நேரு சிலை

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி சிலை

தியாகி இமானுவேல் சேகரன் சிலை …

இத்தனை தலைவர்களின் சிலைகளுக்கு மாலையணிவித்து வணங்கினாரே அமைச்சர், அவர்களின் தியாக வாழ்க்கை குறித்து ஒரு ஐந்து நிமிடம் பேச முடியுமா, அமைச்சரால். வேஷம் கட்டுவதில் ஒன்னாம் நெம்பர் ஆள் எங்கள அமைச்சர் என்கிறார்கள், விருதுநகர் அதிமுக நிர்வாகிகள்.

இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், எந்த ஜோதிடர் சொன்னார் என்று தெரியவில்லை. மஞ்சள் நிறத்தில் சட்டை அணிந்து கொண்டுதான் எப்போதும் இருக்கிறார். அந்த கோமாளித்தனத்தை தன்னுடன் மட்டும் வைத்துக் கொள்ளாமல், தன்னை நம்பியே அரசியல் செய்து கொண்டிருக்கும் அதிமுக நிர்வாகிகளையும் மஞ்சள் சட்டைக்கு மாறுங்கள் என்று கட்டாயப் படுத்தி வருகிறாராம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. முதல்நாள் பிரசாரத்தை அவர் மேற்கொண்டபோது, மஞ்சள் வண்ணத்தில் டீ சர்ட் அணிந்து ஊர்வலத்தில் கலந்துகொண்ட இளைஞர்களைப் பார்த்து, ராஜபாளையம் ஊரையே , மஞ்சள் கலரில்( லேமினேட்) போர்த்தியது போல காட்சியளித்தது என்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்த மாடுபிடி வீரர்கள் போன்றும் இருந்தது என்று தலைமையில் அடித்துக் கொள்கிறார்கள், உள்ளூர் அரசியல் விமர்சகர்கள்..

ஏப்ரல் 6 ஆம் தேதி வரை இன்னும் என்னென்ன கோமாளித்தனங்களை எல்லாம் செய்யப்போகிறாரோ அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள், ராஜபாளையம் அதிமுக நிர்வாகிகள்..

தன்னைப் போலவே, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களையும், மஞ்சள் உடையில்தான் நாள்தோறும் காட்சியளிக்க வேண்டும் என்று கட்டளை வேற போட்டு இருக்கிறாராம் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. எனது பேச்சை மீறினால், அதிமுக தலைமை வழங்கும் தேர்தல் நிதியை தர மாட்டேன். என்னிடம் இருந்தும் நிதியுதவியை எதிர்பார்க்க கூடாது என்று மிரட்டும் தொணியில் பேசுகிறாராம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்டத்தில் புலம்பல் சத்தம் அதிகமாக கேட்கிறது.

தொகுதி மாறி வெற்றிப் பெற துடிக்கும் ராஜேந்திர பாலாஜி அங்கம் வகிக்கும் அதே அதிமுக.வில்தான், சொந்த மாவட்டத்திற்கு வந்தால் வெற்றி எளிது என்று மற்றொரு அமைச்சரான பாண்டியராஜனுக்கு விருதுநகர் மாவட்ட ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தபோது, இல்லை.. இல்லை, கடந்த முறை நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த ஆவடி தொகுதி மக்கள், இப்போதைய தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் தொகுதி மாற மாட்டன் என்று கூறி மறுத்துவிட்டாராம். இவர், 2011 சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக. சார்பில் களம் கண்டு வாகை சூடியவர்.

ஆவடி தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 3.98, 206

விருதுநகர் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,07,922 (இந்த தொகுதியில் பாண்டியராஜன் சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்)

மண் ஒன்றுதான். மல்லிகையும் பூக்கிறது. கள்ளிச் செடியும் முளைக்கிறது..