Sat. Nov 23rd, 2024

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களில் ஸ்டார் வேட்பாளர் அந்தஸ்து பெற்றிருப்பவர் ஒரே ஒருவர்தான். இந்த வரியை முடிப்பதற்கு முன்பாகவே, இதை வாசிக்கக் கூடியவர்கள், அதுதான் எங்களுக்கே தெரியுமே..முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் த.சம்பத்குமார் எம்.சி.ஏ. என்று சொல்லிவிடலாமே என்ற உங்களின் மனதின் குரல் எங்களுக்குக் கேட்டுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சம்பத்குமார் ஸ்டார் வேட்பாளராக இருக்கலாம். ஆனால், சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மருத்துவர் ஆ.கா.தருண் எம்.பி.பி.எஸ்,எம்.டி. தான் ஸ்டார் வேட்பாளர். இதென்ன புதுக்கதையாக இருக்கிறது.அவருக்கென்ன அப்படி முக்கியத்துவம் என்று கேட்பதும் செவிகளில் கேட்கிறது.

சேலம் மாவட்டம் என்றாலே, வீரபாண்டியார்தான் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்திருக்கும் சாதாரண திமுக நிர்வாகி கூட சந்தோஷமாக கூறிவிடுவார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவரைப் பற்றி நேர்மறையான, எதிர்மறையான விமர்சனங்கள் சம பலத்தில் இருந்தாலும் கூட, அரசியலில் ஆளுமையாக காட்சியளித்தவர் வீரபாண்டி ஆறுமுகம்தான்.

அவர் உயிரோடு இருந்தபோதும் சரி, மறைந்த பிறகும் சரி நேரடி அரசியலில் இருந்தவர், அவரது இளைய மகன் வீரபாண்டி ஆ. ராஜா. அவரை புறக்கணித்துவிடாமல், அரவணைத்து வந்தார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். எம்.எல்.ஏ பதவியும் வழங்கப்பட்டது. இருப்பினும், அவரின் செயல்பாடுகள், வீரபாண்டி என்ற சிங்கத்திற்கு புகழைத் தேடி தரும் வகையில் அமையவில்லை. ஆளுமைத்திறனும் இல்லை. பொதுமக்களை, திமுக. தொண்டர்களை ஈர்க்கும் வகையிலும் அவரின் அன்றாட செயல்பாடுகள் இல்லை.

இந்த நேரத்தில்தான் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க கூடிய நேரம் வந்தது. வீரபாண்டியார் குடும்பத்தில், மனிதநேயமிக்க, மக்களின் மனங்களை வெல்லக் கூடிய சிறந்த மனிதரை தேடினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவருக்கு தோதாக அமைந்தார், வீரபாண்டியாரின் மூதத புதல்வரான மறைந்த ஆ. நெடுஞ்செழியனின் மருமகன்.

சேலம் நகரில் பல ஆண்டுகளாக மருத்துவச் சேவையாற்றி, அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் தருணை, வீரபாண்டியார் இடத்தில் வைத்து அழகுப் பார்க்க முடிவெடுத்திருக்கிறார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், தன்னுடைய தேர்வை வெளிப்படையாக, சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கோ, தலைமைக் கழக நிர்வாகிகளுக்கோ தெரியாமல் தன்னுடைய மனதிலேயே பூட்டி வைத்திருந்திருக்கிறார்.

தங்கள் குடும்பத்தின் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவிதமான சிந்தனை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமலேயே, வீரபாண்டியார் குடும்பத்தைச் சேர்ந்த, ஆ.ராஜா, அவரின்( வீரபாண்டியார்) மகள் மலர்விழி, அவரது உறவினர், பாரப்பட்டி சுரேஷ், இரண்டாவது மனைவியின் புதல்வர் மருத்துவர் பிரபு ஆகியோர் வீரபாண்டி மற்றும் சேலம் தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி, போட்டி போட்டுக் கொண்டு விருப்பப் மனுக்களை தாக்கல் செய்தனர். நேர்காணலுக்கும் சென்றனர். அவர்களோடு ஒருவராக மருத்துவர் தருணும் நேர்காணலில் கலந்துகொண்டார்.

அதற்கு முன்பாகவே அவருக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது, வீரபாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவீர் என்று. ஆனால், தலைமையின் சிக்னலை வெளியுலகத்தில் விளம்பரப்படுத்தாமல், சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக, மருத்துவர் தருண் நாடகம் ஆடினார். அவர் ஆடிய நாடகத்தில், நல்லரசு தமிழ் செய்திகள் கூட ஏமாந்துபோய்விட்டது. அதனால்தான், வடக்கு தொகுதியில், தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.வும், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளருமான ஆ.ராஜேந்திரனின் தொகுதியை கைப்பற்ற திரைமறைவாக வேலைப் பார்க்கிறார் என்று செய்தி வெளியிட்டோம்.

சேலத்தில்இருந்து நமக்கு கிடைத்த செய்தியை, நம்பகத்தன்மையின் அடிப்படையில் வெளியிட்டோம். அந்த செய்தி சேலத்தில் பரபரப்பை கிளப்ப, நல்லரசு மற்றும் மருத்துவர் தருணுக்கும் பொதுவான நண்பர், அப்போதே நல்லரசு.வில் வந்த தகவலில் உண்மையில்லை. உங்களிடமே நேரடியாக மருத்துவர் தருணைப் பேச சொல்கிறோம். தன்னை சுற்றியிருக்கும் வீரபாண்டியார் குடும்பத்து உறவு என்ற வெளிச்சத்தில் மக்களை அணுகுவதைவிட, தனது சேவை மூலம் மக்களின் மனங்களை வெல்லவே இடைவிடாது உழைப்பதாக தருண் கூறுகிறார். அதனால், நீங்களே நேரடியாக பேசி சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு, விளக்கத்தை அல்லது செய்தியை வெளியிடுங்கள் என்று கூறினார்.

ஆனால், நல்லரசு வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்பதை, வெட்ட வெளிச்சமாகும் போது பார்த்துக் கொள்ளலாம் என காலம் கடத்தினோம்.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது, வீரபாண்டியார் குடும்பத்தில் உள்ளவர்களுக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது நேரடி வாரிசுக்கு அரசியல் மறுவாழ்வு அளிக்காமல், வீரபாண்டியாரையும் மறந்துவிடக் கூடாது, அவரது வாரிசுகளையும் புறக்கணித்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், வீரபாண்டியார் குடும்பத்தோடு சம்பந்தம் வைத்த குடும்பத்தில் இருந்து, அதுவும் மருத்துவத்துறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர் தருணை, வீரபாண்டியாரின் பிறந்த மண்ணான பூலாவரி கிராமத்தை உள்ளடக்கிய, அவரது பெயராலே அழைக்கப்படும் வீரபாண்டி தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதுதான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜதந்திரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள், வீரபாண்டியாரோடு சமகாலத்தில் பயணித்த சேலம் மாவட்ட திமுக முன்னோடிகள்.

வீரபாண்டியார் என்ற பிரம்மாண்டத்தின் முன்பு மருத்துவர் தருண், கோவியாட் மாதிரி தெரியலாம். ஆனால், மனிதர்களின் புறத்திற்கு வரும் தீங்குகளுக்கு தீர்வு காணும் சக்தி கொண்டவர், அகத்தில் உள்ள வலிகளையும் தீர்க்கும் வல்லமையை பொதுவாழ்வில் வெற்றிகரமான பயணத்தை தொடங்கும்போது கற்றுக் கொள்வார். அதன் வழியே தடம் புரளாமல் நடப்பார் என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட சேலத்தையே பூர்வீகமான கொண்ட நல்ல மனம் படைத்தோர்.

மருத்துவர் தருணின் வெற்றிப் பயணம் தொடர, நல்லரசு தமிழ் செய்திகள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. வீரபாண்டியார் ஏற்கெனவே அமைத்துள்ள பாதையில் பயணிக்காமல், புதிய பாதையை அமைத்து, பண்பட்ட சேவையை சேலம் மாவட்ட மக்களுக்கு வழங்க திறந்த மனதோடு வாழ்த்துகிறோம்…