அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும், பிரதான எதிர்க்கட்சியான, அதுவும் அடுத்து திமுக.தான் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களையே புலம்ப வைத்திருக்கிறாராம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது, மாவட்டச் செயலாளர்களுக்கே இந்த நிமிடம் வரை தெரியவில்லையாம். அதுவும், மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்கும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கே, மீண்டும் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாமல் புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம்.
சென்னையில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள், அண்ணா அறிவாலய நிர்வாகிகள், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என மு.க.ஸ்டாலினைச் சுற்றியிருக்கும் அனைவரின் செல்போன்களும், சூடாகி விட்டதாம். அந்த அளவுக்கு மாவட்டங்களில் உள்ள திமுக முக்கிய புள்ளிகள், காலை, பகல், இரவு என எந்தநேரமும் போன் போட்டு, சென்னை விஐபி.க்களை நச்சரித்து வருகிறார்களாம்.
திமுக வேட்பாளர்கள் யார், யார்… அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல், மர்மமாகவே வைத்திருக்கிறாராம் மு.க.ஸ்டாலின். திமுக வரலாற்றில் இவ்வளவு சீக்ரெட்டாக வேட்பாளர்கள் பட்டியல் ஒருபோதும் இருந்தது இல்லை என்கிறார்கள், அண்ணா அறிவாலய முக்கிய நிர்வாகிகள்.
இப்படி அனல் மேல் நிற்பது போல, மாவட்டச் செயலாளர்களே துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்களிடம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அண்ணே, நம்ம தொகுதியை கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கிட்டாங்க… காங்கிரஸுக்கு ஒதுக்கிட்டாங்க., வி.சி.க.வுக்கு ஒதுக்கிட்டாங்க என்று குமறும் தொண்டர்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் நொந்துப் போயிருக்கிறார்களாம் திமுக மாவட்டச் செயலாளர்கள்.
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, நொந்துப்போன அந்த தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள், அந்த தொகுதியை உள்ளடக்கிய மாவடடச் செயலாளர் கார்த்திக் எம்.எல்.ஏ.விடம் போய் கண்ணீர் சிந்தியுள்ளார்கள். நேற்று இரவு வரிசையாக வந்து இதுபோல புலம்பிய திமுக முன்னணி நிர்வாகிகளை தேற்றி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த கார்த்தி எம்.எல்.ஏ., ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஏம்ப்பா, எனக்கே மீண்டும் சிங்காநல்லூர் தொகுதியை ஒதுக்குவார்களா என்று தெரியவில்லை.
அண்ணா அறிவாலயத்திற்கு தொடர்பு கொண்டு பேசினால், ஒருத்தர் கூட பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். என் நிலைமையே கேள்விக்குறியாக இருக்கிறது. எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பதே உறுதி இல்லாமல் இருக்கிறது. எல்லோரும் அமைதியாக இருங்கள். தலைவர் எதை செய்தாலும், அது நமக்கெல்லாம் நன்மையளிக்கும் விதமாகதான் இருக்கும்.
நம்முடைய தனிப்பட்ட நலனைவிட, கட்சியும், தலைவரும்தான் முக்கியம். இந்த தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று அரியணையில் ஏறுவதுதான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அதனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தேர்தல் வேலைகளில் மட்டுமே கவனத்தை செலுத்துங்கள்..
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. பாஜக தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்து விடக் கூடாது..இதுதான் நமது சிந்தனையில் இப்போது முக்கியமாக இருக்க வேண்டும். அதனால், வேட்பாளர் யார் , எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல், கடினமாக உழையுங்கள். அவரவரின் விசுவாசத்திற்கும், கடுமையான உழைப்புக்கும் திமுக தலைமை சரியான அங்கீகாரத்தை வழங்கும் என நம்பிக்கை தந்து, தன்னை சந்திக்கும் நிர்வாகிகளை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறாராம், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக்..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு இன்றைக்கு பிறந்தாள். மேலும், மாலை 3 மணிக்கு மேல் அமாவாசை திதி தொடங்குகிறது..அதனால் இன்று மாலை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது.
திமுக தலைவரே., பெயர்களை அடித்து அடித்து எழுதியது போதும்.. இனியும் தாமதம் வேண்டாம்… திமுக தொண்டர்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்.. புலம்பல்களை தாங்க முடியவில்லை…