அதிமுக.வை 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்வோம் என்று சூளுரைத்துள்ள தேமுதிக. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. ஆனால், வெளிப்பார்வைக்கு இப்படி தகவலை கசிய விட்டாலும், அமமுக.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக.வில் இருந்தே தகவல் கசிந்தது. அதுதொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதை நேரடியாக மறுக்காமல், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். முடிவு எட்டப்பட்டவுடன் ஊடகங்களிடம் தெரிவிப்போம் என்று கூறினார்.
அமமுக.வுடன் பேசி வரும் அதேநேரத்தில், திமுக.வுடனும் தேமுதிக பேசி வருவதாக கூறப்படுகிறது. இரண்டு கட்சிகளுக்கும் நெருக்கமான தொழிலதிபர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் நேற்று மாலையில் இருந்து இதுதொடர்பாக தேமுதிக.வின் விருப்பம் குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கடைசி நேரத்தில் திமுக.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமாகி அசிங்கப்பட்டதைப் போல, இந்த முறையும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, தேமுதிக நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல், சபரீசனுக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
கூட்டணி கட்சிகளுடன் முழுமையாக தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்ட திமுக.வுக்கு தேமுதிக.வை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு விருப்பம் இருந்தாலும்கூட, தொகுதிகளை பங்கீடு செய்வதில் மிகவும் நெருக்கடியாக இருக்கிறதாம். கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வந்தால் 10 ல் இருந்து 15 தொகுதிகள் தருவதாக கூறியிருந்ததால், அந்த தொகுதிகளை தேமுதிக.வுக்கு ஒதுக்க முன்வந்துள்ளதாம் திமுக தலைமை.
இப்போது தன் வசம் உள்ள தொகுதியில் இருந்து அதிகபட்சமாக 12 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ள திமுக., குறைந்த தொகுதியாக இருந்தாலும் அத்தனை தொகுதிகளிலும் தேமுதிக.வின் வெற்றியை உறுதி செய்வது தங்களுடைய பொறுப்பு என்று திமுக தலைமை உறுதியளித்துள்ளதாம்.
திமுக. கூட்டணியில் இடம் பெற தேமுதிக., ஆர்வமாக இருப்பதால்தான், திமுக.வில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதில் காலதாமதமாகி வருவதாக, சபரீசனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி தகவல் தெரிவிக்கிறார்.
தேமுதிக.வின் கடந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், திமுக நிர்வாகியின் தகவலை நம்பாமல் இருக்க முடியவில்லை.
தேமுதிக பந்து எந்த மைதானத்தில் விழும்…இன்னும் சில மணிநேரங்களில் முடிவு தெரிந்துவிடலாம்…