விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக.வில் எலியும் பூனையுமாக இருந்து வருபவர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான ராஜவர்மனும்தான்.
சாத்தூர் தொகுதியில் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டம் முழுவதும் ராஜவர்மனுக்கு நல்ல பெயர் நிலவி வருகிறது. அதிமுக.வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் ராஜவர்மன் எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளை, பழக்க வழக்கங்களை பற்றி பெருமையாகவே கூறி வருகிறார்கள்.
பல்வேறு ஊடகத்தினர், சாத்தூர் தொகுதியில் கருத்துக் கணிப்பு மேற்கொண்டபோது, எம்.எல்.ஏ. ராஜவர்மனின் செயல்பாடுகளை அங்குள்ள மக்கள், பாராட்டியே கூறியிருக்கின்றனர். மீண்டும் அவருக்கு வாய்ப்பு தந்தால், அதிமுக நிச்சயம் வெற்றிப் பெறும் என்றும் பெரும்பான்மையான வாக்காளர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர்.
இந்த நேரத்தில், ராஜவர்மன் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமை அறிவித்துள்ள விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரனுக்கு, சாத்தூர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகளை சமாதானப்படுத்துவதும், சமாளிப்பதும் மிகப் பெரிய அளவில் சிரமமாக இருக்கும். ஒருவேளை ராஜவர்மன் சுயேட்சையாக அங்கு களமிறங்கினால் அதிமுக.வின் வெற்றி கேள்விக்குறிதான்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சைக் கேட்டு, தலைமை மாற்று வேட்பாளரை அறிவித்திருந்தால், நட்டம் அதிமுக.வுக்குதானே தவிர ராஜவர்மனுக்கு இல்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுக தலைமை தன்னை அவமானப்படுத்திவிட்டதாக ராஜவர்மன் எம்.எல்.ஏ., நினைத்தால், அமமுக துணையோடு சுயேட்சையாக களம் காண்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள் சாத்தூர் தொகுதி அதிமுக முக்கிய நிர்வாகிகள்.
தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜவர்மன், தலைமைக்கு கட்டுப்படுவாரா அல்லது சுயேட்சையாக களமிறங்கி, அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பாரா இரண்டொரு நாளில் தெரிந்து விடும் என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள்.