ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிமிடம் வரை ஆளும்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு முழுமையான தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறார்கள் என்ற முழு விவரம் வெளியிடப்படவில்லை. ஏறக்குறைய 30 நாட்கள்தான் இருக்கிறது தேர்தல் வைபவத்திற்கு. இதில், ஒவ்வொரு நாளாக கடந்து போய் கொண்டிருப்பது, ஆளும்கட்சி மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்த பிரபலங்களிடமே பதற்றத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதிமுக.வைப் பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில், அதாவது கிருஷ்ணகிரி முதல் நீலகிரி வரை யார், யார் வேட்பாளர் என்பதை, அந்தந்த தொகுதியில் செல்வாக்கு உள்ள பிரபலங்களுக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டதாகவே, நமக்கு நம்பகமான அதிமுக முன்னணி தலைவரிடம் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் இருவரில் ஒருவர், மூவரில் ஒருவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் அதே தலைவர் தகவல் தெரிவிக்கிறார்.
இருப்பினும், சென்னையில் உள்ள முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர், தனக்கு மீண்டும் வாய்ப்பு உண்டா என்பதை உறுதி செய்துகொள்ள, முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான ஒரு அமைச்சரின் தரிசனத்திற்காக நாள்தோறும் அவரது வீட்டிற்கோ அல்லது தலைமைச் செயலகத்திற்கோ சென்று வருகிறார்.
ஒருசில நேரங்களில் அவரை சந்திப்பதற்காக பலமணிநேரம் கூட காத்திருக்கிறார் என்ற நம்பகமான தகவல்களும் கிடைக்கின்றன. அவர், யாரென்றால், தீவிரமான சாய்பாபா பக்தர். வியாழக் கிழமைதோறும், மைலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் அதிகாலையிலேயே தரிசனம் செய்யும் அளவுக்கு பக்தியில் ஊறியிருப்பவர்.
இதேபோல, தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரபலங்கள், முதல்வர், துணை முதல்வர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வீடுகளிலும் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே ஆஜராகி, அனுமதி கிடைக்கும் நேரங்களில், தங்களுக்கு போட்டியிட எப்படியாவது வாய்ப்பு கொடுங்கள் என்று மன்றாடி வருகிறார்கள். இந்த தரிசனத்திற்காக செல்வோர், திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கையைவிட, அதிக மதிப்பு கொண்ட தங்கத்திலான கலையம்சம் கொண்ட கலைப் பொருள்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள் என்பதும் நல்லரசு செவிக்கு எட்டிய கசப்பான தகவல்.
கடந்த பல தேர்தலாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு பல நூறு கோடிகளை சம்பாதித்த திடீர் முதலாளிகள், கல்வி தந்தைகளாக ஆனவர்கள்தான், இந்த தேர்தலில் போட்டியிட அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்களாம். இப்படி பேராசை கொண்ட திடீர் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொள்ளும், அதிமுக.வில் இரண்டாம் கட்ட தலைவாகளின் விசுவாசிகள், கோடை கால சிறப்புத் தள்ளுபடியாக, உங்களுக்கு எப்படியாவது எம்.எல்.ஏ. சீட் பெற்று தருகிறேன் என ஆசை காட்டி, 20 லட்சம் முதல் ஒரு கோடி வரை கறக்கிறார்களாம்.
அரசியலைத் தாண்டி நட்பு பாராட்டும் ஒரு சிலர் கூட, ஆளும்கட்சியில் அதிகாரம் படைத்தவர்களை சந்திக்கும்போது, இப்போதெல்லாம் கூடவே எம்.எல்.ஏ. கனவில் உள்ள ஒரு பிரபலத்தை அழைத்துக்செல்கிறார்களாம்.அதனால், இ.பி.எஸ். ஸோடு மிக நெருக்கமாக இருக்கும் அதிமுக வி.வி.ஐ.பி.க்கள், தங்களின் சொந்த வீட்டில் தங்காமல், கடந்த ஒருவாரமாக ரகசியமான இடங்களில் தங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள் அதிமுக நட்புத் தலைவர்கள். அவர்களுக்கு, உறவினர்கள் மூலம் கூட, இந்த தொல்லைகள் அதிகமாக இருக்கிறதாம்.
திமுக.விலும் இதே காட்சிகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கனவாம். திமுக சார்பில் வேட்பாளர்களை, தேர்தல் வல்லுநர் பிரசாத் கிஷோர் தலைமையிலான ஐ.டி.விங் தான் சல்லடை போட்டு தேர்வு செய்து பட்டியலை வழங்கியிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட, சென்னையில் வசிக்கும் திமுக இரண்டாம் கட்டதலைவர்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் தங்கியிருக்கும் மூத்த தலைவர்களை, திமுக வேட்பாளர் நாம்தான். வேறு யாரையும் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியான நம்பிக்கையுடன் இருப்பவர்கள் கூட, காணிக்கை பொருள்களோடு, அதிகாலை நேரங்களில், இரண்டாம் கட்ட தலைவர்களின் வீடுகளில் தவம் கிடக்கும் காட்சிகளை அந்த தெருவில் உள்ள குடியிருப்பு வாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள்களில் அணிவகுத்து நிற்கும் கார்களால் எரிச்சலும் அடைகிறார்கள் அவர்கள்.
திமுக.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஒருபேச்சுக்காக, முயற்சிக்கலாம் என்று ஒற்றை வார்த்தை சொன்னால்கூட, அவரின் விசுவாசிகள், எம்.எல்.ஏ. சீட் கனவோடு வருவோரை தனிமையில் சந்தித்து, அண்ணானிடம் பேசி முயற்சிக்கிறேன் என அவரவர் செல்வாக்குக்கு ஏற்ப, ஒரு சில லட்சங்களோ, இரட்டை அல்லது மூன்று இலக்கத்திலோ லட்சங்களில் பணத்தை கறந்து விடுகிறார்களாம்.
இதெல்லாம், அதிமுக.திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமைக்கு புகாராக சென்றபோதும், அவர்களால், வெளிப்படையாக அறிக்கை விடவோ, தண்டிக்கவோ முடியவில்லை என்கிறார்கள், இரண்டு கட்சி அலுவலகங்களிலும் பொறுப்பில் உள்ள பணத்திற்கு அலையாத கட்சி நிர்வாகிகள்.
சென்னையில்தான் இப்படி என்றால், சேலத்தில் ஒரு மாவட்டச் செயலாளரே, புரோக்கராக மாறி, ஒரு சில கோடிகளை பார்த்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல். சேலம் மாநகரத்திற்குள் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என துடித்துக் கொண்டு இருக்கும் இரண்டு பிரபலங்களுக்கு குறி வைத்து, அவர்களை அண்ணா அறிவாலயத்திற்கே அழைத்து வந்து, அவர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு காரியம் செய்து விட்டாராம் அந்த மாவட்ட செயலாளர்.
இருவரில் ஒருவர், கல்வித் தந்தை. மற்றொருவர், சேலத்தில் செல்வாக்காக இருந்த அரசியல் தலைவரின் மகன். இப்படி, இதுதான் அறுவடைக் காலம் என நினைத்து, அதிமுக, திமுக இரண்டாம் கட்சித் தலைவர்களின் விசுவாசிகள், மாவட்டச் செயலாளர்களில் ஒரு சிலர், எம்.எல்.ஏ. சீட்டை கூவி கூவி விற்காத குறையாக, விற்று வருகிறார்கள் என்பதுன் இன்றைய கள யதார்த்தம்.
இதேபோல, தேமுதிக.வில், தலைமையே, பணம் கொடுப்பவர்களுக்குதான் சீட் என்று கறாராக கூறி விட்டது என்பதுதான் கொடுமை. பாமக.வை பொறுத்தவரை, ஒவ்வொரு நிர்வாகியின் நிதி நிலைமை, அவரது பின்னணி என அனைத்து ஜாதகத்தையும் பாமக நிறுவனரே, சிறப்பு தரிசனத்திற்காக காத்திருக்கும் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து விட்டாராம்.
ஆக மொத்தத்தில், ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்பதற்கு அடிப்படை தகுதியே, 15 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வைத்திருப்பவர்களைதான் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சித் தலைமையும் பரிசீலித்து, இறுதி கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில், குடம் குடமாக கொட்டப்படும் பாலில், ஒரு கையளவு பிடித்து குடித்து இன்பம் கண்டால் தப்பா என்று கேள்வி எழுப்புகிறார்களாம், அரசியலையே முழு நேர தொழிலாக கொண்டவர்கள்.
இரண்டொரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிடும். தேர்தல் களம் களை கட்ட தொடங்கிவிடும்.. விலை பேசி எம்.எல்.ஏ. சீட்டை வாங்குபவர், விலை கொடுத்து வாக்காளர்களை வாங்குபவர், எம்.எல்.ஏ.வாக வெற்றிப் பெற்று சட்டமன்றத்திற்கு வந்து மக்களின் முன்னேற்றத்திற்காகதான் குரல் கொடுப்பார், நலிந்த, விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காகதான் உழைப்பார் என நம்பினால், நம்மை எப்படி அவர்கள் அழைப்பார்கள்? யோசித்துப் பார்த்தாலே அவமானத்தில் கூனி குறுகி போக வேண்டியிருக்கிறது.