Sun. Nov 24th, 2024

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிடுமோ? என்ற பதைபதைப்பு அந்த இரண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் நாடித்துடிப்பை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது…ஒன் பாயிண்ட் அஜெண்டாவோடு பீகாரில் இருந்து தமிழகம் வந்த தேர்தல் வல்லுநர் பிரசாந் கிஷோர், எந்த குறிக்கோளோடு தமிழகம் வந்தோமோ, அதில் 90 சதவிகிதம் நிறைவேறிவிட்டது என்று திருப்தியோடு பஞ்சாப் மாநிலத்திற்கு பறந்து விட்டார்.. அவரின் நோக்கம், 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக, 2021ல் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதுதான். அண்மையில் வெளியான வட இந்திய நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பும் திமுக கூட்டணி 140 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

இந்தநேரத்தில், தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸும், மதிமுக.வும் தொடர்ந்து திமுக.வுடன் மல்லுக்கட்டி வருவது, திமுக உள்ளிட்ட இந்த மூன்றுக் கட்சித் தொண்டர்களிடம் அதிகளவு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவைப் பெருமளவில் திரட்டி வரும் நேரத்தில், தொகுதி பங்கீடு விவகாரம் சுமுகமாக முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருப்பது, திமுக.விற்குள்ளேயே அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது.

அதேநேரத்தில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட வேண்டும் என ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் பா.ம.க.வினர். இந்த விவகாரத்தில் அதிமுக. கூட அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக வெளிப்பார்வைக்கு தெரியவில்லை. ஆனால், பா.ம.க. நிர்வாகிகள் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் உள்ள வன்னிய சங்க நிர்வாகிகள்தான், வெறியோடு பேசி வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழற்றி விடப்பட வேண்டும் என்ற அவர்களின் ஆவேசக் குரல்தான் விசித்திரமாக உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக.வுடன் பாமக. கூட்டணி அமைக்க வில்லை என்ற வெறுப்பில், அக்கட்சி நிறுவனர் ராமதாஸின் கட்டளையை புறக்கணித்துவிட்டு, ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கு வாக்களித்து, பாமக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த இதே நிர்வாகிகள்தான், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஓங்கி குரல் எழுப்புகிறார்கள் என்பதுதான் அரசியல் விநோதம்.

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என சிரத்தில் அக்னி சட்டியை சுமந்து வேண்டுதல் வைக்காத குறையாக, அவரவர் சக்திக்கு ஏற்ப, அவர்களுக்கு அறிமுகமான காங்கிரஸ் நிர்வாகிகளை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் சித்து விளையாட்டில், அவர்களது நிறுவனர் டாக்டர் ராமதாஸைவிட, பா.ம..க கட்சி நிர்வாகிகள் மிகபெரிய ராஜதந்திரியாக மாறி விடுவார்கள் போல..

ஆனால், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் ஒருபோதும் வெளியேறி விடக் கூடாது என்று அக்கட்சியின் தமிழக முன்னணி தலைவர்களே, டெல்லி தலைமையோடு முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். திமுக.விடம் போராடி 30 தொகுதிகள் பெற்றால்கூட, ஒன்றிரண்டு இடங்களில் தோல்வி கிடைக்கும். 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைத்துவிடும். சட்டமன்றத்தில் திமுக ஆளும்கட்சி என்றால், எதிர்க்கட்சியாக அதிமுக வரலாம். அதற்கடுத்த இடத்தில் காங்கிரஸ் நிச்சயம் இடம் பிடிக்கும். அல்லது, அதிமுக கட்சிக்குள் நிலவும் குழப்பத்தாலும், தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதித் தலைவர்கள், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக முண்டாசு கட்டி வருவது தேர்தலில் பலமாக எதிரொலித்தால், காங்கிரஸ் கூட பிரதான எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளது என்ற வாதத்தை, டெல்லி மேலிடத்திடம் அழுத்தமாக வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், திமுக கூட்டணி பிளவுப்பட வேண்டும் என்ற டெல்லி பாஜக மேலிடத்தின் திட்டமும் பொடி பொடியாக்க வேண்டும் என்று, அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட தமிழக மூதத காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

என்னதான் பெரியண்ணனாக திமுக நடந்து கொண்டாலும்கூட, காங்கிரஸ், இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் நீடிப்பதையே விரும்புகிறது. கமல்ஹாசனுடன் இணைந்து 3 வது அணி காண்பதில், தமிழகத்தில் உள்ள ஒரு காங்கிரஸ் தலைவர்களுக்கு கூட விருப்பம் இல்லை. ஏனெனில், 110 இடங்களில் போட்டியிட்டால் கூட ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டோம் என்பது தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

“மே 24 க்குப் பிறகு அமைகிற புதிய சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்பதுதான் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா கூட்டணியின் மாஸ்டர் பிளான். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், காங்கிரஸை கழற்றிவிட்டாலும் கூட, சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக.வுக்குதான் மத்திய பாஜக அரசு சாதகமாக நடந்து கொள்ளுமே தவிர, திமுக அமோக வெற்றி பெறுவதற்கு எந்தவகையிலும் உதவாது என்பதும், ஏப்ரலில் நடக்கும் 5 மாநில தேர்தலில், தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிப் பெற்று, இந்திய அளவில் திமுக.வுக்கு கிடைக்கும் அமோக வரவேற்பு, ஒட்டுமொத்தமாக தன்னுடைய அரசியல் ராஜதந்திரமாகதான் பார்க்கப் படும் என்பதையும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதனால், அதிமுக, பாமக., பாஜக ஆகியோரின் எதிர்ப்புக்கு மாறாகதான் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார்” என்று அவரது நிழலாக சுற்றும் திமுக முன்னணி தலைவர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.

காங்கிரஸை கழற்றி விடாமல், தேர்தலை எதிர்கொள்ள திமுக பயணப்பட்டாலே, அரசியல் சதுரங்க விளையாட்டில், அக்கட்சிக்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துவிட்டது என்றுதான் அர்த்தமாகும். சாதிப்பாரா, சறுக்குவாரா மு.க.ஸ்டாலின்.

24 அல்லது அதிகபட்சமாக 48 மணிநேரத்திற்குள் பூனைக்குட்டி வெளியே வந்துவிடப் போகிறது.