Fri. Apr 4th, 2025

ஆட்சியாளர்களை மனம் குளிர வைப்பதில்தான் அதிக அக்கறை காட்டுவார்கள் ஐபிஎஸ் உயர் அதிகாரிகள். ஆளும்கட்சியோ…எதிர்க்கட்சியோ…அரசியல் வேடம் தரித்த மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கூழைக் கும்பிடு போடும் காக்கிச் சட்டை அதிகாரிகளால்தான், தமிழ்நாடு காவல்துறைக்கு காலம் காலமாக இருந்து வந்த கம்பீரம் குலைந்துவிட்டது என்று மனம் நொந்து கொள்கிறார்கள் ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் உயரதிகாரிகள்.
ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பாராட்டுகளைப் பெற்றிருந்த தமிழ்நாடு காவல்துறையின் இன்றைய நிலைமையை, ஊடகங்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சியாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தரும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்காவது பொதுமக்களுக்கு காவல்துறையினர் தருவதே இல்லை என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாகும். காவல் நிலையமோ.. கமிஷனர் அலுவலகமோ.. விளிம்பு நிலை மக்களுக்கு ஒருபோதும் விடியலை தந்து விடாது என்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிருப்தி குரல் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாடு காவல்துறையின் உச்சபட்ச பதவியான தலைமை இயக்குனர் பதவியில் அமர்ந்திருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ், காவல்துறையின் தலைமை அலுவலகத்திற்குள் ஏழை எளிய மக்களும் காலடி பதித்து துயரக் நிகழ்வுகளுக்கு எளிதாக தீர்வு காணும் வகையில் அட்டகாசமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுதான் மாநிலத்தின் மூலை முடுக்கிலும் வாழும் விளிம்பு நிலை மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை தந்திருக்கிறது.


சென்னையின் நீண்ட கடற்கரையான மெரினாவில், கம்பீரமாக காட்சியளிக்கும் வெள்ளை மாளிகையும், காவல்துறை தலைமை இயக்குனரின் அறைக்குள்ளும் எளிய மக்களும் துளியும் அச்சமின்றி நடமாடுவதற்கு வசதியை உருவாக்கியிருக்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ். பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடியாக தீர்வு காண்பதற்கு அதீத ஆர்வம் காட்டி வரும் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ், நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்கு உடன் உத்தரவுப் பிறப்பித்து, சோகத்தோடு வரும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முன்பே தீர்வை ஏற்படுத்தி தந்துவிடுவதுதான் வியப்பிற்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.
கம்பீரத் தோற்றத்துடன் காவல்துறை உயரதிகாரிகள் நடமாடும் டிஜிபி அலுவலகத்திற்குள் கிழிந்த, கந்தல் உடைகளுடன் தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் துளியளவும் தயக்கம் இன்றி நுழையும் போதே, புன்னகையோடு வரவேற்கும் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸை பார்த்த முதல் நொடியிலேயே, வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டிருக்கும் துயரத்தில் இருந்து விடுதலை பெற்ற நிம்மதி கிடைப்பதாக மனம் நெகிழ்ந்து கூறுகிறார்கள் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த தாய்மார்கள்.
சொத்துப் பிரச்னை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளின் மாமூல் வசூலிப்பு கொடுமை, குடும்ப பிரச்சனை, வரதட்சணை சித்ரவதை என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கண்ணீர் கதைகள் கனத்துக் கொண்டிருக்கிறது. பளபளப்பான, பரந்த டிஜிபி அலுவலக அறையில், தமக்கு சமமாக பொதுமக்களையும் அமர வைத்து, ஒவ்வொரு வார்த்தைகளையும் செவி மடுத்து கேட்டு, கனிவான வார்த்தைகளில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையளிக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிப்போரைப் போலவே, உண்மையிலேயே மக்களின் டிஜிபி ஆக விஸ்வரூபம் காட்டுகிறார் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் என்கிறார்கள் ஆதரவற்ற மக்களுக்காக களமாடும் சமூக ஆர்வலர்கள்.


சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸின் மனிதநேயத்திற்கு ஏற்பவே, அவரின் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்தமாக இருக்கும் ஐஜி சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக மாவட்டந்தோறும் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு உடனடியாக உத்தரவுகளை பிறப்பித்து, டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸின் மனிதநேயத்திற்கு மகத்துவத்தை தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள்.
குறைகளோடு வரும் பொதுமக்களுக்கு தாய்மடி போல ஆறுதல் தரும் சரணலாயமாக மாறியிருக்கிறது டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸின் அலுவலக அறை. தமிழ்நாடு காவல்துறைக்கு இதுவரை இல்லாத வகையில் பெருமையை சேர்த்துக் கொண்டிருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ், காவல்துறையினருக்கும் ஆபத்பாந்தவனமாக மாறியிருப்பதுதான், ஆச்சரியமாக அம்சமாகும்.
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு காவல்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், காவலர்கள், பெண் அலுவலர்கள் என அனைத்து தரப்பினரையும் சமமாக பாவித்து, அவரவர் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை கூர்மையாக ஆராய்ந்து, உரிய உத்தரவுகளையும் உடனுக்குடன் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார் டிஜஜி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் என்கிறார்கள், அவரால் பயனடைந்த ஆதரவற்ற பெண் போலீஸார் உருக்கமாக..


சென்னையில் அமர்ந்து கொண்டு மட்டும் சட்டம் ஒழுங்கை கண்காணித்தல், பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணுதல் போன்ற மக்கள் பணியை மேற்கொள்ளாமல் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து, குறைகளை விரைவாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் என்பதும், தமிழகம் இதுவரை கண்டிராத புதுமையாகும்.
சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராக பணியாற்றிய நேரத்தில், காவல்துறையினரின் மனஉளைச்சலை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மகிழ்ச்சி எனும் மாபெரும் மறுமலர்ச்சி திட்டத்தை, ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்குவதற்கும் அதீதமாக ஆர்வம் காட்டி வருகிறார் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ். மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சி செயல் திட்டம், மனஉளைச்சலில் வாழ்வை தொலைக்கு இருந்த ஆயிரக்கணக்கான காவல் அலுவலர்களுக்கு புத்தெழுச்சியை உருவாக்கியிருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறையை, இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை எனும் புகழ் மகுடத்தை சுமப்பதற்காக மாநிலம் முழுவதும் காவல்நிலையங்களுக்கு அதிரடி விசிட் அடித்து ஆய்வு மேற்கொள்வதிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலங்களில் போலீஸ் எஸ்பிக்களின் பணிகளை ஆய்வு செய்வதிலும் தளராத ஆர்வத்துடன் முழு சக்தியையும் செலவிட்டுக் கொண்டிருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸின் அசராத உழைப்பை பார்த்து, இளம் ஐபிஎஸ் அதிகாரிகளும் கூட புத்துணர்வு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி வீறாப்பாக கூறுகிறார்கள் ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் உயர் அதிகாரிகள்.
டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸின் கடமையுணர்வுக்கு ராயல் சல்யூட்…

One thought on ““மக்கள் டிஜிபி” சங்கர் ஜிவால் ஐபிஎஸ்…மனம் குளிர பாராட்டும் தாய்மார்கள்… காக்கிச்சட்டைகளின் ஆபத்பாந்தவன்…”
  1. Thank you for some other informative website. The place else may just I am getting that kind of information written in such a perfect manner? I’ve a challenge that I’m simply now operating on, and I’ve been at the look out for such information.

Comments are closed.