முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஐந்தாவது போலீஸ் எஸ்.பி.யாக ஸ்ரேயா குப்தா ஐபிஎஸ் பதவியேற்று இருக்கிறார். பொதுமக்கள் மீது அளவுகடந்த அன்பை பொழியும் ஸ்ரேயா குப்தா ஐபிஎஸ்ஸாவது இரண்டு ஆண்டு காலம் தொடர்ந்து பணியாற்றும் வகையில் ஆட்சியாளர்கள் அனுமதிப்பார்களா என்று விரக்தியோடு கேள்வி எழுப்புகிறார்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.
சின்னச் சிறிய மாவட்டமான திருப்பத்தூரில், மாவட்டத்திற்கென்று தனியாக திமுக அமைச்சர் இல்லாத போதும் கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சமூக விரோதிகளின் ஆட்டம் அதிகமாகிவிட்டது என்று வேதனையை பகிர்ந்து கொள்கிறார்கள் ஜனநாயகவாதிகள்.
திருப்பத்தூர் மாவட்டத்தைப் போலவே, பிற மாவட்டங்களிலும் காவல்துறை அதிகாரிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணிபுரிய ஆட்சியாளர்கள் அனுமதிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தாலும் கூட, திறமையான, நேர்மையான, துணிச்சலான ஐபிஎஸ் அதிகாரிகளை பந்தாடுவதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் ஓய்வுப்பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள்.
அனைத்து தரப்பு மக்களிடமும் அதிருப்தி ஏற்படுத்தும் அளவுக்குதான் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு தலையேற்று இருக்கும் ஆட்சியாளர்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுவது என்பது சீட்டு கட்டுகளை களைத்து போட்டு விளையாடுவதைப் போல சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் கோமாளிதனமானதாகும்.
2021 ம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. அடுத்த மாதத்திலேயே தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் என உயர் பதவிகளில் இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொத்தாக மாற்றினார்கள்.
அடுத்தடுத்து, தலைமைச் செயலகத்தில் துறைச் செயலாளர்களாக இருந்த உயர் ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையில் ஐஜி, டிஜஜி, எஸ்.பி. என ஒட்டுமொத்தமாக காவல்துறையும் பந்தாடப்பட்டது.
அரசு அலுவலர்களை குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டது திராவிட மாடல் அரசு.
ஆண்டுக்கு ஆண்டு ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்படுவதால், பொதுமக்கள் நலனும், மாவட்டங்களின் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலையை பகிர்ந்து கொள்கிறார்கள் அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள்.
2024 ஆம் ஆண்டு நிறைவு பெறுவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து கடைக்கோடி மாவட்டங்கள் வரை ஐஏஎஸ் அதிகாரிகளும் ஐபிஎஸ் அதிகாரிகளும் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
சென்னை போன்ற பெருநகர மாவட்டங்களில், குற்றச் செயல்களை தடுப்பதில் ஆர்வம் இல்லாத போலீஸ் உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதைக் கூட ஏற்றுக் கொள்ளும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், திருப்பத்தூர் போன்ற சிறிய சிறிய மாவட்டங்களில் கூட ஆண்டுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதும் ஓராண்டுக்கு மேல் கலெக்டரை கூட பணியாற்ற விடாமல் தூக்கியடிப்பதும் படு கேவலமாக இருக்கிறது என்று குமறுகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாகவே சமூக விரோதிகளுக்கும் ரவுடிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ்ஸை மாற்றிவிட்டு, ஸ்ரேயா குப்தா ஐபிஎஸ்ஸை பணியமர்த்தி இருப்பதை பார்த்து கொந்தளித்து கிடக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் 60க்கும் மேற்பட்டோர் பலியான சோகத்தில் இருந்து பொதுமக்கள் விடுபடாத நேரத்தில் அண்டை மாவட்டமான திருப்பத்தூரில் கள்ளச்சாராய வேட்டையை அடிக்கடி நடத்தி கள்ளச்சாராய வியாபாரிகளை ரவுண்ட் கட்டிய ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ் மீது ஆட்சியாளர்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, ஆல்பர்ட் ஜானை தூத்துக்குடிக்கு தூக்கியடித்திருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டு காலம் கூட ஒரு ஐபிஎஸ் அதிகாரியை ஒரே இடத்தில் முழுமையாக பணியாற்ற விட மாட்டோம் என்பது துக்ளக் தர்பாருக்கு ஒத்த கேலிக்கூத்து என்கிறார்கள் ஓய்வுப்பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்.
சென்னை பூக்கடையில் காவல்துறை துணை ஆணையராக பணியாற்றிய போது, பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடம் பாராட்டுகளை பெறும் அளவுக்கு முழு மனதோடு கடமையாற்றியிருக்கிறார் ஸ்ரேயா குப்தா ஐபிஎஸ்.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கண்டதுடன், போதை ஒழிப்பு, சமூக விரோதிகளின் அட்டகாசத்தை அடக்கியது என அதிரடி காட்டியிருக்கிறார் ஸ்ரேயா குப்தா ஐபிஎஸ்.
காவல்துறை சீருடையின் மீதான காதலால் ஐபிஎஸ் பதவியை தேர்வு செய்திருக்கிறார் ஸ்ரேயா குப்தா. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் விளிம்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உணர்வுப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருப்பவர்.
பூக்கடை போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய காலத்தில் எளிய மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு சவால்களாக உள்ள விவகாரங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். மிக்ஜாம் புயல் தாக்கத்தின் போது, பொதுமக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை களைவதற்காக பகல், இரவு என உழைத்தவர் ஸ்ரேயா குப்தா ஐபிஎஸ்.
சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவதற்கும் இடையூறு இல்லாத போக்கவரத்து பயணத்திற்கும் முன்னுரிமை கொடுத்தவர். பாதிக்கப்பட்ட மக்களின் அபலக் குரல்களுக்கு ஓடோடி சென்ற ஸ்ரேயா குப்தா ஐபிஎஸ்ஸை, சென்னையிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்காமல், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தூக்கியடித்தது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
பெருநகரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் அதிகமாக இருக்கும் போது, பெண் அதிகாரியிடம்தான் பெற்றோர்கள் தைரியமாக புகார் கொடுக்க வருவார்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு ஆண் காவல்துறை அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற புகார்கள் பெற்றோர்கள் தரப்பில் முன் வைக்கப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
அதிகார வர்க்கத்திற்கு தலை வணங்காமல், தர்மத்திற்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பட்டு காவல்துறை பணியை செம்மையாக ஆற்றி வரும் ஸ்ரேயா குப்தா ஐபிஎஸ்ஸையாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்புகிறார்கள் ஜனநாயகவாதிகள்.
2021 முதல் 2024 வரை மூன்று ஆண்டுகளில் ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ் மட்டுமே ஓராண்டிற்கு குறைவில்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்.பி.யாக பணியாற்றி இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பதவியேற்ற ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ், தனது அதிரடி நடவடிக்கைகளால் அனைத்து தரப்பினரின் அன்பை பெற்றதுடன், காவல்துறை அலுவலர்களுக்கு உற்ற தோழனாகவும் கடமையாற்றியிருக்கிறார்.
இளம் ஐபிஎஸ் அதிகாரியான ஆல்பர்ட் ஜான், ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியின மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். சிறப்பு திட்டங்களையும் அமல்படுத்தி பழங்குடியின மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறார் ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ்.
மலைவாழ் மக்களின் வலியை உணர்ந்து கொள்வதற்காக மலைப்பாதையில் போலீஸ் படையோடு மலையேறி இருக்கிறார். அதேபோல, மனஉளைச்சலுக்கு உள்ளாகும் பெண்கள், வயது முதிர்ந்தோர், அந்த பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு தேவையான ஆலோசனைகளை கைபேசி வாயிலாக வழங்குவதற்கு சிறந்த மனநல ஆலோசர்களை நியமித்து, தற்கொலை முடிவுகளை கைவிடுவதற்கும் வழி ஏற்படுத்தியிருக்கிறார்.
ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியாத திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், அவருக்கு முன்பாக மாவட்ட எஸ்பிக்களாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் கால்நடை மருத்துவர் கே.பாலகிருஷ்ணன், அவருக்கு முன்பாக எம்.ஆர்.சிபி சக்ரவர்த்தி ஆகியோரையும் குறுகிய காலத்திலேயே பணியிட மாற்றம் செய்ததை கண்டு மனம் கொந்தளித்து கிடக்கிறார்கள்.
ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ்ஸைப் போலவே, அவருக்கு முன்பாக பணியாற்றிய கே.பாலகிருஷ்ணனும், சமூக விரோதிகளுக்கும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கம் சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்திருக்கிறார். இருவருமே, சட்டம் ஒழுங்கு பிரச்னையில் அதீத கவனத்தை செலுத்தியிருக்கிறார்கள். போதை ஒழிப்பு, சமூக விரோதிகளின் கொட்டத்தை ஒடுக்குதல் என பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு எதிராக துணிவுடன் செயல்பட்டவர்கள்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் புதிதாக கட்டப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2023 ஆம் ஆண்டு மே மாதம்தான் திறந்து வைத்தார். அன்றைய தேதியில் அந்த மாவட்டத்தின் எஸ்பியாக இருந்த பாலகிருஷ்ணன், புதிய அலுவலகத்தில் தொடர்ந்து ஆண்டு இறுதிவரை கூட பணியாற்ற அனுமதிக்காமல், அவசர அவசரமாக அவரையும் தூக்கியடித்திருக்கிறார்கள்.
சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ் 90 நாட்கள் மட்டுமே திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றியிருக்கிறார்.
மிகவும் குறுகிய கால பணியாக இருந்தாலும் கூட, சிபி சக்கரவர்த்தியை இன்றைக்கும் கூட திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மறந்துவிடவில்லை.
ஒட்டுமொத்த காவல் அலுவலர்களின் மனதில் இடம் பிடிக்கும் வகையில் பரிசு திட்டம் ஒன்றை அறிவித்த சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ், ஆத்ம திருப்தியுடன் காவல் பணியை மேற்கொள்ளும் காவலர்களுக்கு நாள்தோறும் வெகுமதி வழங்கப்படும் என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்து, எஸ்பியாக அவர் பணியாற்றிய நாட்கள் முழுவதும் நிறைவேற்றியிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்கள், இரவு ரோந்து, குற்ற வழக்குகளில் முனைப்பான நடவடிக்கை மேற்கொள்ளுதல், சமூக விரோதிகளை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டவர்களை கண்டறிந்து நாள்தோறும் வெகுமதிகளை வழங்கி பாராட்டியிருக்கிறார் சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியை நிறுவிய 2021 ஆம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய டாக்டர் விஜயகுமார் ஐபிஎஸ், திமுக ஆட்சியில் சில மாதங்கள் கூட தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்காமல், தூக்கியடிக்கப்பட்டார்.
டாக்டர் விஜயகுமாரில் தொடங்கி, எம்.ஆர்.சிபி சக்ரவர்த்தி 90 நாட்களும் கால்நடை மருத்துவர் கே.பாலகிருஷ்ணன் ஓராண்டிற்கு குறைவாகவும், ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ் ஓராண்டு காலம் என 2021 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகளில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்பட்டிருக்கிறார்கள்.
ஏலகிரி, ஜவ்வாது மலை உள்ளிட்ட பல்வேறு மலைப் பிரதேசங்கள் நிறைந்திருக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்றைக்கும் கூட கள்ளச்சாராயம் குடிசை தொழில் போலதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் விஷச் சாராய சாவுகள் அதிகரிப்பதை முழுமையாக தடுக்க கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிப்பதற்கு துணிச்சல் கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே மாவட்டத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பணிபுரிய திமுக அரசு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
நன்றி நண்பர்களே., மற்றொரு சிறப்பு செய்தி தொகுப்புடன் மீண்டும் சந்திக்கிறோம்.