தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 20 நாட்களாக சென்னையில் முகாமிட்டு, திமுக தலைமையின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறார்கள்.
எம்எல்ஏ மற்றும் எம்பி தேர்தல்களின் போதுகூட இந்தளவுக்கு கோவை மாவட்ட திமுக பிரபலங்கள் சென்னைக்கு படையெடுத்தது இல்லை என்று சொல்லும் அளவுக்கு அண்ணா அறிவாலயத்தைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள் கோவை மாவட்ட திமுக பிரபலங்கள் என்பதுதான் சுவாரஸ்யமான செய்தியாகும்.
கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்து கல்பனா ஆனந்தகுமாரின் லஞ்ச லாவண்யம் உச்சத்திற்கு சென்றதையடுத்து, திமுக தலைமையின் வற்புறுத்தலின் காரணமாக மேயர் பதவியில் இருந்து ஜூலை 4 ஆம் தேதி விலகினார். அன்றைய தினத்தில் இருந்தே மேயர் பதவியை கைப்பற்றுவதற்காக திமுக முன்னணி நிர்வாகிகளும், பிரபல திமுக பெண் கவுன்சிலர்களும் சென்னைக்கு அடிக்கடி படையெடுத்து வந்து, அவரவருக்கு அறிமுகமான மூத்த அமைச்சர்களின் பரிந்துரைக்காக முனைப்பு காட்டி வருகின்றனர்.
மேயர் பதவிக்கான ரேஸில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலத்தின் பெயர், முதலிடத்திற்கு வருவதாகவும், மற்றொரு பிரபலத்தின் முனைப்பான முயற்சியால் முன்னணியில் இருப்பவரின் பெயர் பின்தங்குவதாகவும் கோவை திமுக நிர்வாகிகளிடையே சூடான விவாதம் நடைபெற்று வருகிறது.
20 நாட்களுக்கு மேலாக கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, கோவை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்பதுதான்.
கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்விதான் கோவை மாநகராட்சியின் புதிய மேயராக பதவியேற்பார் என கார்த்திக்கின் தீவிர ஆதரவாளர்கள் உற்சாகமாக கூறி வருகிறார்கள்.
இளஞ்செல்விதான் மேயர் என்று தனது ஆதரவாளர்கள் கூறி வருவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ள கார்த்திக், திமுக தலைமையிடம் தனது மனைவி இளஞ்செல்விக்கு மேயர் பதவி தர வேண்டும் என்று எந்தவொரு கோரிக்கையையும் நேரடியாக முன்வைக்கவில்லை என்ற தகவல் கசிவதுதான் வியப்பிற்குரியது.
மேயர் பதவிக்கு ஆசைப்படுகிறார் கார்த்திக் என்ற அவப்பெயர் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் உருவாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் கார்த்திக், தனது மனைவி இளஞ்செல்விக்குப் பதிலாக கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபாலின் மனைவி அம்பிகாவுக்கு மேயர் பதவியை வழங்க வேண்டும் என திமுக தலைமைக்கு பரிந்துரைத்திருப்பதாக இளைஞரணி நிர்வாகிகளே முணுமுணுக்கிறார்கள்.
நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவராக கார்த்திக் இருந்தாலும் கூட கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தனபாலின் மனைவி அம்பிகாவுக்காக திமுக தலைமையோடு முட்டி மோதுகிறார் என்பதால், அந்த சமுதாயத்தின் கோபம் தமக்கு எதிராக திரும்பாது என்ற கார்த்திக்கின் நம்பிக்கைதான் முதன்மையான காரணம் என்கிறார்கள் கோவை திமுக பிரமுகர்கள்.
இளஞ்செல்விக்கு கிடைக்க கூடிய அரசியல் அங்கீகாரத்தை அம்பிகாவுக்கு விட்டு கொடுக்கும் அளவுக்கு பெருந்தன்மை வாய்ந்தவரா கார்த்திக் என்ற சந்தேகத்தை முன்வைக்கும் எதிரணியினர், மேயர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவே, கார்த்திக்கே அதிர்ச்சியடைந்துவிடும் அளவுக்கு பொருளாதார ரீதியான ஆஃபரை வெகுமதியாக வழங்கவும் முன்வந்திருக்கிறார் தனபால் என்கிறார்கள் இளைஞரணி நிர்வாகிகள்.
தனபால் மனைவி அம்பிகாவுக்குதான் மேயர் பதவியை வழங்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் எக்ஸ் எம்எல்ஏ கார்த்திக் பரிந்துரை செய்திருக்கிறார் என்று தகவல் கசிந்து வரும் நேரத்தில், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கார்த்திக்கை நேரில் சந்திப்பதையே தனபால் தவிர்த்து வருவதைப் பார்த்து, மேயர் பதவி விவகாரத்தில் இருவருக்கும் இடையே மோதல் உருவாகிவிட்டது என்று அதிர்ச்சியளிக்கிறார்கள் கோவை மாநகராட்சி அதிகாரிகள்.
தனபாலின் மனைவி அம்பிகாவுக்கு மேயர் பதவியை வழங்குமாறு திமுக தலைமையிடம் பரிந்துரை செய்ததால்,, கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வியையே மேயர் பதவிக்கு திமுக தலைமை முன்நிறுத்திவிடும் என்று சுயநலத்துடனேயே செயல்பட்டு வருகிறார் கார்த்திக் என்பதுதான் தனபாலின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
பதவி மோகத்தில் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது கார்த்திக்கிற்கு கைவந்த கலைதான் என்று கூறும் தனபாலின் ஆதரவாளர்கள், கடந்த 2022 ஆம் ஆண்டில் மேயர் தேர்தல் அறிவிப்பு வெளியான நேரத்திலேயே அமைச்சர் எ.வ.வேலுவின் ஆசிபெற்ற மீனா ஜெயக்குமாரை கவுன்சிலர் தேர்தலிலேயே நிற்க முடியாமல் சதி செய்தவர்தான் கார்த்திக் என்று குமறுகிறார்கள் தனபாலின் ஆதரவாளர்கள்.
கார்த்திக்கும் நாயுடு. மீனா ஜெயக்குமாரும் நாயுடு. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் கோவை மாவட்ட திமுகவில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தாலும் கூட மீனா ஜெயக்குமாரின் அரசியல் வளர்ச்சியில்தான் அதிகமாக அக்கறை காட்டி வந்தார் செல்வாக்குமிகுந்த இரண்டு துறைகளின் அமைச்சரான எ.வ.வேலு என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.
கவுன்சிலர் தேர்தலில் மீனா ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால், மேயர் பதவியில் மீனா ஜெயக்குமாரை அமைச்சர் எ.வ.வேலு நிச்சயம் அமர வைத்துவிடுவார். எ.வ.வேலுவின் செல்வாக்கை மீறி தமது மனைவி இளஞ்செல்வியை மேயர் பதவியில் அமர வைக்க முடியாது என்ற நயவஞ்சகத்துடனேயே கவுன்சிலராக கூட மீனா ஜெயக்குமார் போட்டியிட முடியாத அளவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்தான் எக்ஸ் எம்எல்ஏ கார்த்திக் என்கிறார்கள் மீனா ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளர்கள்.
கார்த்திக்கின் நயவஞ்சகத்திற்கு மீனா ஜெயக்குமார் பலியானதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கும் தனபால், மேயர் பதவியில் தனது மனைவி அம்பிகாவை எப்படியாவது அமர வைத்துவிட வேண்டும் என்ற வெறியோடு, திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் சரணடைந்திருக்கிறார்.
கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான சமுதாயத்தைச் சேர்ந்தவராக அம்பிகா தனபால் இருந்தாலும் கூட, மேயர் பதவிக்கான கடுமையான போட்டியில், அமைச்சர் உதயநிதி தனித்த ஆர்வத்துடன் பரிந்துரை செய்ய முன்வந்திருந்தாலும்கூட, இந்த நிமிடம் வரை அம்பிகாவுக்குதான் மேயர் பதவி என்பது உறுதியாகவில்லை என்கிறார்கள் கோவை திமுக பிரமுகர்கள்.
கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி, தனபாலின் மனைவி அம்பிகா ஆகிய இருவருமே மேயர் பதவிக்காக பரிசீலனைக்கப்படுகிறார்களோ இல்லையோ, மீனா லோகு என்பவரின் பெயர் சென்னை அண்ணா அறிவாலயத்திலும் பலமாகவே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய திமுக பிரமுகர் என்பதுடன், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பிக்கு நெருக்கமானவர் மீனா லோகு என்பதாலும், 2022 ஆம் ஆண்டில் இருந்தே மேயர் பதவியை குறிவைத்து திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் பரிந்துரை மூலம் திமுக தலைமையின் ஆதரவை பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் மீனா லோகு சென்னையில் முகாமிட்டிருந்தாலும்கூட, மீனாவின் தனிப்பட்ட சில நடவடிக்கைகளால் திமுகவுக்கே அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதால், கடைசி நிமிடம் வரை மீனா லோகு மேயர் பதவிக்கு முன்னிறுத்துவார்கள் என்பது சந்தேகம்தான்.
இளஞ்செல்வி, அம்பிகா, மீனா லோகு வரிசையில் நான்காவது நபராக சாந்தி முருகனும் மேயர் ரேஸில் இருக்கிறார். தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த முருகன், திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் என்பதால், திருச்சி சிவா எம்பி., பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மூலம் மேயர் பதவியில் அமர்ந்துவிட முழுவீச்சில் முயற்சித்து வருகிறார் முருகன்.
மேயர் ரேஸில் 5 வது நபராக தெய்வாணை தமிழ்மறையின் பெயரும் அடிபடுகிறது. முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்மறை, திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளர் என்பதால், திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் மூலம் முயற்சித்து வருகிறார்.
திமுக மூத்த அமைச்சர்கள், முன்னணி தலைவர்களின் பரிந்துரைக்காக கோவை திமுக பெண் கவுன்சிலர்கள் சென்னையில் முகாமிட்டிருக்கும் அதேநேரத்தில், நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் ஐக்கியமான மாநில மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தியும் கூட, தனது ஆதரவாளரான சுபஸ்ரீ சரத்தை மேயர் பதவியில் அமர வைப்பதற்கு காய் நகர்த்தி வருவதுதான் கோவை திமுக நிர்வாகிகளிடம் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுபஸ்ரீயின் கணவர் சரத், பொருளாதார வசதியில் மேம்பட்டிருப்பவர். பெட்ரோல் பங்க், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில்களில் முன்னணியில் உள்ளதால், தனது மனைவி சுபஸ்ரீ மேயர் பதவியில் அமர்ந்தால், கோவை மாவட்டத்தில் தொழில் ரீதியான தமது செல்வாக்கை மேலும் பன்மடங்கு உயர்த்திவிட முடியும் என ராஜிவ்காந்தி கூறும் ஆலோசனைகளுக்கு அப்படியே தலையாட்டி வருகிறார் சரத்.
சுபஸ்ரீ சரத்தை மேயர் பதவியில் அமர வைப்பதற்காக முழு வீச்சில் செயல்பட்டு வரும் ராஜிவ் காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் சம்மதத்தை பெறுவதற்காக நிதியமைச்சர் டிஆர்பி ராஜா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
செய்தியின் நிறைவில் இடம் பெறும் ரங்கநாயகி ராமு என்பவரின் பெயரும் கூட பலமாக அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேயர் ரேஸில் ஏழு பெண் கவுன்சிலர்கள் போட்டியாளர்களாக இருந்தாலும் கூட ரங்கநாயகிதான் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவு பெற்றவராக இருக்கிறார் என்கிறார்கள் கோவை திமுக மூத்த நிர்வாகிகள்.
கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமாரின் பரிந்துரை மூலம் ரங்கநாயகி, மேயர் பதவியில் அமர்ந்துவிடும் கனவோடு நடமாடிக் கொண்டிருக்கிறார். அதிமுக முன்னாள் மேயரான கணபதி ராஜ்குமார், செந்தில் பாலாஜியின் நட்பின் மூலமே திமுகவில் ஐக்கியமாகி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் எம்பியாகிவிட்டார்.
சிறையில் இருந்தவாறே கோவையில் அரசியல் செய்து வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவுரையின் பேரிலேயே அரசியல் செய்து வரும் கணபதி ராஜ்குமார், செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பேரில் கல்பனா மேயரானதைப் போல ரங்கநாயகியும் மேயர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக், இளைஞரணி அமைப்பாளர் தனபால், மகளிரணி நிர்வாகி மீனா லோகு என செல்வாக்கு மிகுந்த பிரமுகர்கள் மேயர் ரேஸில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், பகுதி செயலாளராக உள்ள ரவியும் கூட தனது மனைவி பேபியை மேயராக்கிவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு அடிக்கடி பயணமாகிக் கொண்டிருப்பதுதான் கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு பெண் மேயர் என்று அறிவிக்கப்பட்டவுடனேயே பாரம்பரியம் மிகுந்த திமுக குடும்பத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர்தான் மேயராக பதவியேற்பார் என்ற பேச்சு பலமாக எழுந்த நேரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பரிந்துரைத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல் கல்பனா ஆனந்தகுமாரை கோவை மாநகராட்சி மேயராக அறிவித்தார் முதல்வர் மு.கஸ்டாலின்.
கல்பனாவின் பெயரைக் கேட்டவுடனேயே திமுக மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.
கோவை மாநகரில் திமுகவின் மூத்த நிர்வாகிகளின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தியதுடன், அரசு அதிகாரிகளை மிரட்டியும் ஊழலில் திளைத்த கல்பனாவால், திராவிட மாடல் ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.
கல்பனாவால் ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கு அதிகார ஆசையில்லாத, பொதுசேவையில் ஆர்வமுள்ள, கோவை மாநகராட்சி நிர்வாகத்தை செம்மையாக வழி நடந்தக் கூடிய திமுக பெண் கவுன்சிலர் ஒருவரை தேர்வு செய்து உடனடியாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.