தாரை வே இளமதி, சிறப்புச் செய்தியாளர்.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளிலாவது ஒத்த பைசாவுக்கு மதிப்பில்லாத யாரையாவது ஒருவரை மயிலாடுதுறை வேட்பாளராக அறிவித்து தொலையுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸுக்கு, தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை வகித்து வரும் ஆளுமை, மனம் நொந்து போய் கூறியதாக தகவல் வெளியானது.
மயிலாடுதுறை வேட்பாளராக யாரை அறிவித்தாலும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மீது தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் வசைமாரி பொழிவார்கள் என்றளவுக்குதான், டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் வெளியாகி கொண்டிருந்தன.
ராகுலின் தேர்வான பிரவீன் சக்கரவர்த்தியா.. இல்லை சோனியாவின் தேர்வான மணிசங்கர் அய்யரா.. இவர்களை கடந்து திருநாவுக்கரசர், மருத்துவர் செல்லகுமாரா, நாசே ராமச்சந்திரனா, எஸ்.பி.ரமணியா என மூத்த நிர்வாகிகளின் பெயர்கள் ஒவ்வொரு நாளும் யூகமாக வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்த யாரை வேட்பாளராக அறிவித்தாலும் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எந்தவொரு மகிழ்ச்சியும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்ற வகையில்தான் விரக்தியின் உச்சத்திற்கே சென்றிருந்தார்கள் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்..
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையை மேற்கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினே மனம் வெறுத்து போகும் அளவிற்கு, காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயரை தவணை முறையில் அறிவித்து, கடுப்பேற்றியது காங்கிரஸ் மேலிடம்.
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான மார்ச் 27 ம் தேதிக்கு முதல்நாள் இரவில், மயிலாடுதுறை வேட்பாளரை அறிவிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த காங்கிரஸ் மேலிடத்தின் மீது, தமிழகத்தில் இருந்த பாய்ந்த கண்டனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
எவ்வளவு அசிங்கப்பட்டாலும், வேட்பாளர் தேர்வில், நெருக்கடிகளுக்கு அடிபணிந்து, சொத்தை வேட்பாளரைதான் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என்ற அழிக்க முடியாத வரலாற்றை முதல்முறையாக சுக்குநூறாக உடைக்கும் அளவுக்கு வேட்பாளர் அறிவிப்பில் காங்கிரஸ் மேலிடம் மிகப்பெரிய புரட்சியையே செய்திருக்கிறது.
மார்ச் 26 பின்னிரவில் மயிலாடுதுறைக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் பெயரை பார்த்து, ஒட்டுமொத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் சுயநினைவோடுதான் இருக்கிறோமோ என்று ஒருகணம் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதாவை காங்கிரஸ் மேலிடம் கடைசி நேரத்தில் அறிவித்து, ஒட்டுமொத்த தமிழ்நாடு காங்கிரஸையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
மயிலாடுதுறைக்கு வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவிலை என்றால், திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கெடு விதித்ததாககூட தகவல் கசிந்தநேரத்தில், மார்ச் 26 பின்னிரவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெயரைப் பார்த்து, டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளே அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளவர் குறித்து மூத்த ஊடகவியலாளர்கள், யூ டியூப்பர்கள், திமுக கூட்டணி நிர்வாகிகள் வெளிப்படுத்திய யூகங்களில் பெயரளவுக்கு கூட அடிபடாத வழக்கறிஞர் சுதா பெயரை, காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாகும்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட போதும் கூட பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கரூர் ஜோதிமணியை, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லாமல்தான் இருந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியை தவிர்த்துவிட்டு வேறு ஒரு பெண் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று வதந்தியாக கூட செய்தி வெளியாகாத நேரத்தில், வழக்கறிஞர் சுதா பெயரை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது என்பது, அசாத்திய துணிச்சலாகதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்.
யார் இந்த வழக்கறிஞர் சுதா…
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் சுதா. 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் சஞ்சலமற்ற மனதோடு பயணித்துக் கொண்டிருப்பவர். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த சுதா, அவர் சார்ந்த சமுதாயம், அரசியல் கட்சியாக தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய நேரத்தில் கூட, சமுதாய உணர்வோடு அந்த கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல், காங்கிரஸ் பேரியக்கத்தின் மீதான ஆழமான பற்றின் காரணமாக, காங்கிரஸ் கட்சியிலேயே உறுதியோடு நீடித்தவர்.
அரசியல் பயணத்தில், தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காகவே போராட்டங்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட வழக்கறிஞர் சுதா, தமிழக காங்கிரஸுக்கே உரிய கோஷ்டி பூசலில் சிக்கி கொள்ளாமல், கவனமாக, நிதானமாக பயணித்து, மகிளா காங்கிரஸில் அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொரு நிலையைக் கடந்து மகிளா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக, கடந்த 2021 ம் ஆண்டில் பதவியேற்றவர், வழக்கறிஞர் சுதா. அந்த தலைவர் பதவிக்காக வழக்கறிஞர் சுதா எதிர்கொண்ட போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
ஆணாதிக்கம் அதிகமாக கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில், செல்வாக்கு மிகுந்த பெண் தலைவராக வழக்கறிஞர் சுதா தன்னை நிலைநிறுததிக் கொள்வதற்கு கட்சிக்கு உள்ளேயும், பொது தளங்களிலும் எதிர்கொண்ட போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸில் பெண் நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் என்பது விருந்தில் பரிமாறப்படும் ஊறுகாயை போலதான் இருந்து வந்தது. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த மரகதம் சந்திரசேகர், செல்வாக்கு மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், மறைந்த முன்னாள் எம்எல்ஏ யசோதா, முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் என விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் பெண் தலைவர்கள் அங்கீகாரம் பெற்றிருந்தார்கள். இவர்கள் வரிசையில், வழக்கறிஞர் சுதாவும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் கவனத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டார் என்ற போதும், அதிகார அரசியலில் இப்போதுதான் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்.
டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் நெருக்கமான நட்பு கொண்டிருக்கும் கரூர் ஜோதிமணி எம்பியை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவர் கூட பொருட்டாக மதிப்பதில்லை என்பதால், தமிழகத்தில் ஒட்டுமொத்த காங்கிரஸ் நிர்வாகிகளின் பேரன்பை பெற்றவர் என்ற பட்டியலில் ஜோதிமணி எம்பி எப்போதுமே இடம் பெறுவதே இல்லை.
திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்காத சுதா, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக எம்எல்ஏ, எம்பி ஆகிய பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை தமிழ்நாட்டிலும், காங்கிரஸ் மேலிட தலைவர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரின் நீண்ட கால போராட்டத்திற்கு 2024 எம்பி தேர்தலில்தான் வெற்றி கிடைத்துள்ளது.
மயிலாடுதுறை எம்பி தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர் சுதா என்பதால், வேட்பாளராக அறிவித்ததிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்புக்காக மேலிடத்துடன் மல்லுக்கட்டிய செல்வாக்கு மிகுந்த தலைவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு வழக்கறிஞர் சுதாவை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது என்றால், கடந்த நான்கு நாடாளுமன்றத் தேர்தல்களில் முதல்முறையாக, காங்கிரஸ் கொள்கையில் உறுதியான நிலைப்பாடு, போராட்டத்திற்கு அஞ்சாத குணம், உண்மையான விசுவாசம், கோஷ்டி அரசியலில் ஈடுபடாத தனித்த ஆளுமை பண்பு, நேர்மை, எளிமை என அரசியல் பாதையை வடிவமைத்துக் கொண்டது, ஊடகவியலாளர்களுடன் நேசமிகு பழக்கம் என அரசியலில் விதிவிலக்காக நற்பண்புகளுக்கு சொந்தக்காரரான வழக்கறிஞர் சுதாவின் தேர்வு என்பது, தமிழக காங்கிரஸ் கட்சியிலும் கூட செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்ப பின்னணி இல்லாத ஒருவருக்கு குறிஞ்சி மலரைப் போல எப்போதாவது ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது என பூரிப்போடு கூறுகிறார்கள் காங்கிரஸ் பெண் தலைவர்கள்.
மயிலாடுதுறை தொகுதிக்கு வழக்கறிஞர் சுதாவை போல மிகவும் பொருத்தமான வேட்பாளர் வேறு யாருக்கும் இருக்க முடியாது. வெளியூரைச் சேர்ந்தவர் என்ற ஒரே ஒரு குறையைத் தவிர, மற்ற அனைத்து அம்சங்களிலும் காங்கிரஸ் வேட்பாளராக களமாடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் வழக்கறிஞர் சுதா என்பதால், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், கோஷ்டி மனப்பான்மையை மறந்துவிட்டு வழக்கறிஞரின் சுதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதுதான் மகளிர் காங்கிரஸின் தமிழ்நாடு பிரிவில் உள்ள அனைத்து பெண் நிர்வாகிகளின் உருக்கமான வேண்டுகோளாக இருக்கிறது.