Fri. Nov 22nd, 2024

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கிடைத்த செல்வாக்கைவிட 2024 தேர்தலில் அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் 19 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பிடித்திருந்த செல்வாக்கு மிகுந்த கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே, தற்போதைய தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ளது.

வடக்கு மாவட்டங்களில் பாமகவுக்கு செல்வாக்கு இருந்தாலும் கூட, பாரதிய ஜனதாவின் மானத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் டெபாசிட் வாங்குவதற்காகவது உதவுமா என்பதுதான் பாஜக வேட்பாளராக களத்தில் நிற்பவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை மற்றும் வடக்கு மண்டலத்தில் திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 7 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு பாஜக தலைமையில் போட்டியிட்டபோது, தென் சென்னையில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவரும் தற்போதைய நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், 2 லட்சத்து 58 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இல.கணேசன் பெற்ற வாக்குகளை நம்பிதான், ஆளுநர் பதவியை துறந்துவிட்டு, தமிழிசை களத்தில் நிற்கிறார்.

2019 ஆண்டில் கூட்டணி பலத்தோடு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்தான் தற்போதும் போட்டியிடுகிறார்.

தமிழச்சியா.. தமிழிசையாக என்றால், சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. கடந்த கால தேர்தல் வரலாற்றை சுட்டிகாட்டும் அரசியல் திறனாய்வாளர்கள், தமிழச்சிதான் மீண்டும் வெற்றி பெறுவார் என்கிறார்கள்

இரண்டாம் இடம் யாருக்கு என்பதில்தான் தமிழிசைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் புதல்வர் ஜெயவர்த்தனுக்கும் இடையே போட்டி இருக்கும் என்கிறார்கள்.

வடசென்னை, மத்திய சென்னையில் ஆளும்கட்சியான திமுகவின் சிட்டிங் எம்பிக்களை வீழ்த்திவிட்டு பாஜக வெற்றி பெறும் என்பதைவிட டெபாசிட்டாவது வாங்குமா என்பதுதான் சந்தேகமாக உள்ளது..

2014 மற்றும் 2019 தேர்தல் வரலாற்றை புரட்டி பார்த்தால், பாமகவுக்கு அதிகமான வாக்குவங்கி இந்த இரண்டு தொகுதிகளிலும் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் சென்னையில் பாஜக அபரிதமான செல்வாக்கு பெற்றுவிட்டது என்றும் ஆணித்தரமாக கூற முடியாது என்கிறார்கள் தேர்தல் வரலாற்று ஆய்வாளர்கள்.

இரண்டு தொகுதிகளிலும் பாஜக டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டாலே மரியாதைக்குரிய வெற்றிதான் என்று கூறலாம் என்கிறார்கள்.

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் பாமக செல்வாக்கு இருந்தாலும் கூட, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணிக்கு சாதகமாக பாமக வாக்குகள் கிடைக்கவில்லை.

பாரதிய ஜனதாவுடன் பாமக கூட்டணி வைத்ததால், ராமதாஸ் மீதும் அன்புமணி மீதும் வன்னியர் சமுதாயத்தினர் அதிகமாக கோபத்தில் இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், திருவண்ணாமலையிலும், கிருஷ்ணகிரியிலும் பாஜக டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதுதான் கள யதார்த்தமாக உள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதியில் பாஜக டெபாசிட் வாங்கினாலே பெரிய வெற்றியாக கொண்டாடி கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்த தலைவராக கே.பி.முனுசாமி உள்ளார். அண்ணாமலைக்கும் முனுசாமிக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்து வரவில்லை. இருவருக்கும் இடையே அரசியலை கடந்து பகை இருந்து வருகிறது.

அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறிவிட்டது என்ற பெயரை எடுப்பதற்கு தனது சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரி இடம் பெறுவதை உயிரே போனாலும் அனுமதிக்க மாட்டார் கே.பி.முனுசாமி என்கிறார்கள் அவரது தீவிர ஆதரவாளர்கள்.

அதிமுகவை விட பாஜக கூடுதல் வாக்குகள் பெற்றுவிட்டால், கே.பி.முனுசாமியை எப்போது ஓரம் கட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருககும் மற்றொரு அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமியின் பலவீனத்தை பிரசாரமாக்கி, எடப்பாடியாரோடு நெருக்கமாகிவிடும் ஆபத்தும் உள்ளது.

சமுதாயம் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் இப்படிபட்ட எதிர்கால ஆபத்து இருப்பதால், கே.பி.முனுசாமி, உயிரை கொடுத்து தேர்தல் பணியாற்றுவார் என்கிறார்கள் அவரது தீவிர விசுவாசிகள்.

2014 தேர்தலில் பாஜக, மதிமுக கூட்டணியோடு களம் கண்ட பாமகவின் அப்போதைய தலைவர் ஜி.கே.மணியே மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டார். 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர் செல்லகுமார்தான் வெற்றி பெற்றார். இப்போதும் அவரே போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி தொகுதியும் அண்ணாமலையின் தலைமைக்கு பெருமை தேடி தராது.

திருவண்ணாமலை தொகுதியிலும் பாஜக பருப்பு வேகாது என்று சொல்லும் அளவிற்குதான் 2014 மற்றும் 2019 தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. திமுக அமைச்சர் எ.வ.வேலுவை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார் அண்ணாமலை. திமுகவில் இரண்டாம் இடத்திற்கு குறி வைத்திருக்கும் அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலையில் பாஜக டெபாசிட் வாங்கவே கூடாது என்றுதான் தேர்தல் வேலைகளை விறுவிறுப்பாக்கியிருக்கிறார்.

2019 ல் கூட்டணி பலத்தோடு திமுக வேட்பாளர் 6 லட்சத்து 66 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் பெற்று எம்பியான சி.என்.அண்ணாமலைதான் தற்போதும் களத்தில் போட்டியிடுகிறார். திருவண்ணாமலையில் பாஜக டெபாசிட் வாங்க கூடாது என்ற வெறியோடு களமாடி வரும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு, திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாமலை அதிகமாக சிரமத்தை கொடுக்க மாட்டார் என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.

திமுக மூத்த அமைச்சர் எ.வ.வேலுவும், கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வரும் கே.பி.முனுசாமியும் அண்ணாமலைக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று உறுதிபட கூறுகிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

நாமக்கல் தொகுதியில் பாரதிய ஜனதாவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு எல்லாம் இல்லை என்கிறார்கள் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகிகள். கொங்கு மண்டலத்தில் அண்ணாமலைக்கு செல்வாக்கு இருக்கிறதா இல்லையா என்பதை, 2024 தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டிவிடும் என்று கூறும் அரசியல் திறனாய்வாளர்கள்.,

2014 தேர்தலில் பாஜக,பாமக.மதிமுக கூட்டணி வேட்பாளரான தேமுதிக பெற்ற வாக்குகள் ஒரு லட்சத்து 46 ஆயிரம்தான் என்பதை நினைவுகூரும் நாமக்கல் பாஜக மூத்த நிர்வாகிகள், 2014 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக பாஜகவுக்கு கிடைத்தால் அண்ணாமலையின் தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லிக் கொள்ளலாம். கொங்கு சமுதாயத்திற்கே என்று தனியாக துவக்கப்பட்ட கட்சியே, திமுக கூட்டணியில் களத்தில் நிற்கிறது. 2019 ல் திமுக கூட்டணி பெற்ற வெற்றியே 2024 தேர்தலிலும் உறுதி செய்யும்.

தென் சென்னையை நம்புவதை போல, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய நான்கு தொகுதிகளை அதிகமாக நம்புகிறார்கள் தமிழக பாஜக மூத்த தலைவர்கள். அண்ணாமலையின் தலைமைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்திருக்கும் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் கை கொடுக்கும் என்பதுதான் பாஜகவினரின் மிகப்பெரிய நம்பிக்கை. அதைவிட மற்றொரு மிக முக்கியமான விஷயம், தேர்தல் நேரங்களில் நினைத்ததை சாதிக்க கூடிய செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையும் சாதகமாக்கி கொள்வார் அண்ணாமலை என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் நம்பிக்கையாகும்.

கொங்கு மண்டலத்திற்குட்பட்ட நான்கு தொகுதிகளில் ஒன்றான கோவையில் அண்ணாமலையே களம் இறங்குகிறார். அண்ணாமலை வெற்றி பெறுவதற்கு மோடியின் பெருமையோ, பாஜக மீதான அபரிதமான ஆதரவோ தேவையிருக்காது. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முதல் இடத்தை பிடிக்க துடிக்கும் எஸ்.பி.வேலுமணி மனது வைத்தால் மட்டும் போதும்.

அண்ணாமலையின் தலைமைக்கு கோவை தொகுதி சவால் என்பதை விட எஸ்.பி.வேலுமணியின் அதிமுக விசுவாசத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாக இருக்கும் என்கிறார்கள் கோவை மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற பயம், எஸ்.பி.வேலுமணியை ஆட்டி படைக்கிறது என்று கோவை அதிமுகவிலேயே ஒருபிரிவினர் தொடர்ந்து கூறிவரும் நேரத்தில்,

அதிமுக பொது செயலாளர் எடப்பாடியாரைப் போல, மத்திய பாஜக அரசுக்கு எதிராக களமாடுவதற்கு தமக்கும் ஆளுமை திறன் இருக்கிறது என்று எஸ்.பி.வேலுமணி துணிந்து விட்டால், அண்ணாமலைக்கு நிச்சயம் தோல்வி தான் கிடைக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். அண்ணாமலையை மட்டுமல்ல, திமுகவின் வெற்றி நினைப்பையும் தவிடு பொடியாக்கிவிட்டு, 2019 தேர்தலில் கோட்டை விட்டதை 2024 தேர்தலில் கைப்பற்றி, அதிமுக எம்பியை கோவையில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கும் சாமர்த்தியம் எஸ்.பி.வேலுமணிக்கு இருக்கிறது என்பது நிரூபனமாகும்.

திருப்பூரும், நீலகிரியிலும் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதை பல ஒரு மாயத்தோற்றத்தை அண்ணாமலை உருவாக்கி வைத்திருக்கிறார். 2024 தேர்தல் முடிவுகள் அண்ணாமலையின் ஒட்டுமொத்த மாயாஜால வேலையையும் தவிடு பொடியாக்கிவிடும் என்கிறார்கள் தமிழக பாஜக மூத்த தலைவர்கள்.

வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம் எப்படி பாரதிய ஜனதாவுக்கு வெற்றியை தேடி தராதோ, அதுபோலதான் மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டலமும் பாஜகவை கைவிட்டு விடும் என்பதுதான் கள யதார்த்தமாக இருக்கிறது என்கிறார்கள்.

கரூர், சிதம்பரம், நாகை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், நெல்லை, குமிரி ஆகிய எட்டு தொகுதிகளில் குமரி, நெல்லை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பாஜகவுக்கு இருக்கிற செல்வாக்கு, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருந்து வரும் தனிப்பட்ட செல்வாக்கு மூலம் தாமரைக்கு இரண்டு எம்பிக்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
குமரியில் பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது இன்றைய தேதியில் உறுதியான ஒன்று என்றும், நெல்லையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனும், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதுதான் கள யதார்த்தம். திமுக ஆட்சி மீதான அதிருப்தி, இரண்டு மாவட்டங்களிலும் திமுக உட்கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசல் போன்றவை, பாஜகவின் வெற்றியை எளிதாக்கும் என்கிறார்கள் கருத்து கணிப்பு நிபுணர்கள்.

பாஜக நிர்வாகிகள் நேரடியாக களமிறங்கும்
19 தொகுதிகளில் இன்றைய தேதியில் நெல்லையும் குமரியும் மட்டுமே வெற்றி பட்டியலில் இடம் பெறும் வகையில் இருந்து கொண்டிருக்கிறது.

நயினார், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வெற்றி தரும் சந்தோஷத்தை விட, கோவை தொகுதியில் தோற்றார் அண்ணாமலை என்ற செய்திதான் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு அதிகளவு சந்தோஷத்தை தரும் என்கிறார்கள் அண்ணாமலையின் எதிர்முகாமில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள்..