கொந்தளிக்கும் வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்…
தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்….
அதிமுக தலைமையில் எம்பி தேர்தலை சந்திப்பதற்கு பாமகவும், தேமுதிகவும் தயக்கம் காட்டி வரும் நேரத்தில், ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவால் விடும் வகையில் பலம் பொருந்திய கூட்டணி அமையாததால், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மனம் சோர்ந்து போய்விட்டார் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
கூட்டணி பலமாக அமையாத நேரத்தில், தனித்து தேர்தலை சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், 39 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதிலும் எடப்பாடியாரால் சுயமாக முடிவெடுக்க முடியாத அளவுக்கு இரண்டாம் கட்ட அதிமுக தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள் என்று கொந்தளிக்கிறார்கள் இபிஎஸ்ஸின் தீவிர விசுவாசிகள்.
39 எம்பி தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க முடியாத அளவுக்கு எடப்பாடியாருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நேரத்தில், விவிஐபி தொகுதியான வேலூரில், எடப்பாடியார் தேர்வு செய்து வைத்திருக்கும் வேட்பாளரையே மாற்ற வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போர்க்கொடி தூக்கியிருப்பதுதான் வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை ஆவேசம் கொள்ள செய்திருக்கிறது. அவர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில், வேலூர் எம்பி தொகுதிக்கு நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலின்போது அதிமுக உறுப்பினராக கூட இல்லாத, ஆம்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் கலீல் ரஹ்மான் கலந்துகொண்டதுதான் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கலீல் ரஹ்மான் யார்..?
கலீல் ரஹ்மானின் பின்னணி என்ன ? விசாரித்தபோது, அதிர்ச்சியான தகவல்கள் அலை அலையாக பெருக்கெடுக்க, ஒட்டுமொத்த வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் கோபமும், வேலூர் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பாய்ந்துள்ளது.
வேலூர் எம்பி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஆர்வத்தில் கடந்த பல மாதங்களாக பல லட்சம் ரூபாய் செலவழித்து களப் பணியாற்றிய முக்கிய பிரமுகர்கள் தேர்தல் கனவோடு நடமாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஆம்பூரில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு கூட அறிமுகம் இல்லாத வகையில் கலீல் ரஹ்மானை அதிமுக வேட்பாளராக நிறுத்துவதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரிடம் பரிந்துரை செய்திருக்கிறார் கே.சி.வீரமணி என்பது உறுதியானதை அடுத்து, ஒட்டுமொத்த வேலூர் மாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகளும், எடப்பாடியாரின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.
வேலூர் எம்பி தொகுதி வாக்காளர்களிடமும், அதிமுகவினரிடமும் மிகவும் பிரபலமான அதிமுக நிர்வாகி ஒருவரை வேட்பாளராக அறிவித்தால், அன்றைய தினமே அதிமுகவின் வெற்றி உறுதி என்று சொல்லும் அளவிற்கு ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிரான அதிருப்தி அலை அதிகமாக வீசிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதிமுகவுக்கே துரோகம் செய்யும் வகையில் திரைமறைவில் கே.சி.வீரமணி ஆடி வரும் நாடகம் அம்பலமானதால், வேலூர் எம்பி தொகுதி அதிமுக நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக கொந்தளிக்க வைத்துவிட்டது.
திமுக பொதுச் செயலாளராகவும் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள துரைமுருகனால், அவரது சொந்த தொகுதியான காட்பாடிக்கு மட்டுமல்ல, வேலூர் மாவட்டத்திற்கும் துளியும் நன்மை கிடையாது. அதுபோலவே, அவரது பிள்ளையான கதிர் ஆனந்த் எம்பியாலும், வேலூர் எம்பி தொகுதியில் பயனடைந்த ஒரே ஒரு பொதுமக்களை கூட அடையாளப்படுத்திவிட முடியாது.
திமுக எப்போதெல்லாம் ஆளும்கட்சியாக வருகிறதோ, அப்போதெல்லாம் அப்பாவும், பிள்ளையும் ஆட்சி அதிகாரத்தை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டுவதையே அன்றாட பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள். விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கோ, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துதரப்பு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கோ துரைமுருகனும், கதிர் ஆனந்த்தும் துளியளவு கூட பணியாற்றவில்லை என்ற கோபம், பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே பொதுமக்களிடம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் துரைமுருகனை எதிர்த்து அதிமுகவில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ராமுவிடமே தோல்வியடையும் நிலையில்தான் துரைமுருகனின் செல்வாக்கு இருந்தது. அந்த நேரத்திலும் சாதி பாசத்தில், அதிமுக மாவட்டச் செயலாளரும், அப்போதைய அமைச்சருமான கே.சி.வீரமணி, ராமுவின் வெற்றிக்காக பாடுபடாமல், துரைமுருகனின் வெற்றிக்காகதான் மறைமுகமாக உழைத்தார். 9 முறை எம்எல்ஏவாக இருந்த துரைமுருகனை வீழ்த்த முடியுமா என்ற சந்தேகத்திலேயே ராமு, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதால், 800 வாக்குகள் வித்தியாசத்தில் தட்டுதடுமாறி வெற்றி பெற்றுவிட்டார் துரைமுருகன்.
50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான துரைமுருகனை 3 ஆண்டுகளுக்கு முன்பே காட்பாடி வாக்காளர்கள் தூக்கியெறிவதற்கு தயாராக இருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தை அதிமுக முழுமையாக பயன்படுத்தியிருந்தால், இன்றைக்கு அமைச்சராக துரைமுருகனால் வலம் வர முடியாத நிலை உருவாகியிருக்கும். அவரைப் போலவே, 5 ஆண்டுகளுக்கு முன்பு எம்பி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திடம் தோல்வியை தழுவியிருப்பார் துரைமுருகனின் தவப்புதல்வன் கதிர்ஆனந்த்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசு அமல்படுத்திய முத்தலாக், சிஏஏ போன்ற சட்டங்களால், கதிர் ஆன்ந்திற்கு ஆதரவாக வெற்றி காற்று வீசிவிட்டது.
5 ஆண்டு எம்பியாக இருந்த போதும் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதிக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை என்று வேலூர் மாவட்ட திமுகவினர் கோபத்தை வெளிப்படுத்தி வரும் நேரத்தில், அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத திமுக தலைமை, 2024 எம்பி தேர்தலில் மீண்டும் கதிர் ஆனந்தையே திமுக வேட்பாளராக அறிவிக்கவுள்ளது என்ற தகவலை கேட்டு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்கள் மட்டுமல்ல, திமுகவினரும் கதிர் ஆனந்தை ஓட ஓட விரட்டும் எண்ணத்துடனேயே காத்திருக்கிறார்கள்.
2019 தேர்தலை போலவே, 2024 தேர்தலிலும் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு, திமுக எம்பி கதிர் ஆனந்தின் வெற்றிக்கு மறைமுகமாக உதவும் வகையில்தான், வேலூர் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணி, வேலூர் எம்பி தொகுதி அதிமுக வேட்பாளராக கலீல் ரஹ்மானை அறிவிப்பதற்கு முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம், வேலூர் மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் எழுந்திருக்கிறது.
அதிமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்ட அதிமுக மூத்த நிர்வாகி நல்லரசுவிடம் மனம் திறந்து பேசினார். “வேலூர் எம்பி தொகுதியில் பிரபலம் இல்லாத சாதாரண தொண்டரை நிறுத்தினால் கூட திமுக எம்பி கதிர் ஆனந்தை எளிதாக வீழ்த்தி அதிமுக வெற்றியை உறுதி செய்துவிடலாம் என்று கருத்துக்கணிப்புகள் வெளியான நேரத்தில், பிரபல தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் உறவினரான வேலூர் மாநகராட்சி முன்னாள் அதிமுக கவுன்சிலர் ரிஷிக்குமாரை, அதிமுக வேட்பாளராக நிறுத்துவதற்கு எடப்பாடியார் முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியானபோது, வேலூர் எம்பி தொகுதிக்குட்பட்ட ஆறுசட்ட மன்ற தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
ஆனால், வேட்பாளர் நேர்காணலின் போது, அதிமுக நிர்வாகிகளுடன் கட்சிக்கு துளியும் சம்பந்தமில்லாத கலீல் ரஹ்மானும் கலந்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக பிரமுகர்கள், சுயசிந்தனையோடு வேட்பாளரை எடப்பாடியார் தேர்வு செய்ய முடியாத அளவுக்கு கே.சி.வீரமணியின் உள்குத்து அரசியல் பகிரங்கமாகவே வெளிப்பட்டுவிட்டது” என்று ஆவேசமாக கூறினார்.
கலீல் ரஹ்மானுக்கும் அதிமுகவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆம்பூரில் தோல் பொருள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ள கலீல் அஹமதுக்கு சென்னையில் பல இடங்களில் தோல் பொருள் விற்பனை மையங்கள் இருப்பதுடன், இங்கிலாந்து நாட்டிலும் ஷோ ரூம் சொந்தமாக இருக்கிறது. பல நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட கலீலுக்கு அரசியல் ஆசை ஏற்படவே, 2015 ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் நேஷனல் பார்ட்டி என்ற பெயரில் புதிய கட்சியைத் துவக்கினார்.
இளைஞர்கள் மேம்பாட்டிற்கு உழைப்பதுதான் முதன்மையான நோக்கம் என்று கலீல் முழங்கிய போதும், அவரது கட்சி போணியாகவில்லை. சொந்த கட்சி மூலம் அரசியலில் பிரபலமாக முடியாத கலீல் அஹமது, அதிமுக வேட்பாளராக வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளார்.
கே.சி.வீரமணியுடன் ஏற்கெனவே இருந்த அறிமுகத்தை பயன்படுத்தி வேலூர் எம்பி தொகுதியை கலீல் குறிவைத்த நேரத்தில், திரைப்படங்களில் வரும் அதிரடி திருப்பங்கள் போல, துரைமுருகனுக்கு வாழ்நாள் வில்லனாக அண்மைகாலத்தில் மாறியிருக்கும் ஆம்பூரைச் சேர்ந்த மற்றொரு பிரபல தொழில் அதிபர் ஃபரிதா பாபுவின் திருவிளையாடல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதுதான், வேலூர் அதிமுக வேட்பாளர் தேர்வில் முக்கியமான டிவிஸ்ட் ஆகும்.
ஆம்பூரில் ஃபரிதா குழுமம் என்ற பெயரில் தோல் பொருள் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார் மெக்கா ரஃபீக் அகமத். நிஜப் பெயரைவிட ஃபரிதா பாபு என்பதுதான் ஆம்பூரை கடந்து வேலூர் மாவட்டம் முழுவதும் பிரபலம்.
கே.சி.வீரமணி, கலீல், ஃபரிதா பாபு ஆகிய மூன்று பெருந்தலைகளும் ஒன்றாக சேர்ந்து, துரைமுகனின் பிள்ளையான கதிர் ஆனந்தை தோற்கடிப்பதற்காக எடுத்துள்ள சபதம்தான், வேலூர் மாவட்ட அதிமுகவில் காலம் காலமாக கட்சியின் வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாயை செலவழித்து, வியர்வை சிந்தி உழைத்த அதிமுக மூத்த நிர்வாகிகளை எல்லாம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேநேரத்தில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவினரிடம், கொண்டாட வைத்துள்ளது. கதிர் ஆனந்தின் தோல்விதான் துரைமுருகனின் பணத்தாசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று வெளிப்படையாகவே திமுகவினர் கூறிவருகிறார்கள்.
வேலூர் எம்பி தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து சுயமாக முடிவு எடுக்க முடியாத அளவுக்கு எடப்பாடியாரின் கைகளை கட்டிப் போட்டுள்ள கே.சி.வீரமணியை உள்ளடக்கிய மூவரின் திருவிளையாடல், படுபயங்கரமானதாக இருக்கிறது. அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடியாரை விட செல்வாக்கு மிகுந்தவர்களாக மாறியிருக்கிறார்கள் கே.சி.வீரமணி, கலீல், பரிதா பாபு ஆகிய மூவரும் என்பதுதான், வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை, பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு எதிராக கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.
துரைமுருகன், அவரது பிள்ளை கதிர் ஆனந்த் ஆகிய இருவருக்கு எதிராக வேலூர் மாவட்டம் முழுவதும் அதிருப்தி அலை அதிகமாக வீசிக் கொண்டிருக்கும் நேரத்தில், சாதாரண அதிமுக நிர்வாகியை வேட்பாளராக அறிவித்து கடுமையாக தேர்தல் பணியாற்றினால், எளிதாக வேலூரை அதிமுக கோட்டையாக மாற்றிவிடலாம் என்பதுதான் ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிமுகவுக்கு துளியும் சம்பந்தமே இல்லாத கலீல் ரஹ்மானை அதிமுக வேட்பாளராக அறிவிக்க, கே.சி.வீரமணியும், பரிதா பாபுவும் ஆடி வரும் சித்து விளையாட்டுகளைப் பார்த்து, அதிமுக நிர்வாகிகளிலே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
அமைச்சர் துரைமுருகனின் பிள்ளை கதிர் ஆனந்த்தை தோற்கடிப்பதற்கு அதிமுகவை பயன்படுத்திக் கொள்ள பரிதா பாபு ஏன் துடிக்கிறார் என்று விசாரித்தால், தமிழ் சினிமாவில் ஒன்றுக்குமேற்பட்ட கிளைமாக்ஸ்கள் இருப்பதை போல, துரைமுருகனின் அதிகார வெறியால் காயம் அடைந்த மனதிற்கு கதிர் ஆனந்தை எம்பி தேர்தலில் மண்ணை கவ்வ வைத்து, அதிமுகவை வெற்றி பெற வைத்து, காயம்பட்ட மனதை ஆற்றிக் கொள்ள துடிக்கிறார் ஃபரிதா பாபு என்கிறார்கள்.
கலீலை விட பன்மடங்கு கோடீஸ்வரரான ஃபரிதா பாபு என்று அழைக்கப்படும் மெக்கா ரஃபீக் அகமதும், ஆம்பூரில் செல்வாக்கு மிகுந்த தோல் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் அதிபராக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பிரபலமான தோல் தயாரிப்பு நிறுவன அதிபராக மட்டுமின்றி இந்திய அளவிலும் தோல் பொருள் ஏற்றுமதியில் மிகவும் பிரபலமானவர்,ஃபரிதா பாபு. அகில இந்திய அளவில் தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்று சேர்த்து அமைத்துள்ள சங்கத்தின் தலைவராகவும் ஃபரிதா பாபு பதவி வகித்து வருகிறார்.
ஆம்பூரில், ஃபரிதா பாபுவுக்கு சொந்தமான தோல் பொருள் உற்பத்தி நிறுவனத்தில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவருடன், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்கட்சி தலைவர்களும் பல ஆண்டுகாலமாகவே நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதெல்லாம், துரைமுருகன் காட்பாடியில் இருந்து ஆம்பூருக்கு தனியாக சென்று ஃபரிதா பாபுவை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் ஃபரிதா பாபுவை எஜமான்' என்று அழைக்கும் அளவுக்கு துரைமுருகன் தனது ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கைக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில்
பரிதா பாபுவிடம் பணிவு காட்டி வந்திருக்கிறார்.
துரைமுருகன் ஒருத்தருக்கு பணிவு காட்டுகிறார் என்றால், அதன் பின்னணியில் இருப்பது பண ஆதாயம் மட்டுமே. திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில், கோடிக்கணக்கில் கட்சி நிதியாக ஃபரிதா பாபுவிடம் இருந்து துரைமுருகன் பெற்றிருக்கிறார் என்று அவரது விசுவாசிகளே வெளிப்படையாக கூறுகிறார்கள். கைநீட்டி காசு வாங்கியதற்கு பிரதிபலனாக, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆம்பூரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வேலூர் மாவட்டத்திலும் ஃபரிதா பாபுவின் கண் சிமிட்டலுக்கு ஏற்ப பல்வேறு விவகாரங்களை கமுக்கமாக நிறைவேற்றி தந்து, தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன் என்கிறார்கள் ஃபரிதா பாபுவின் தொழில் கூட்டாளிகள்.
ஆட்சி அதிகாரம் இல்லாத போது ஃபரிதா பாபுவையே சுற்றி சுற்றி வந்த துரைமுருகன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஃபரிதா பாபுவை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுதான், இன்றைக்கு அவருக்கும், கதிர் ஆனந்திற்கும் தீராத தலைவலியை உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதத்தில் தமது தொழில் விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகனின் உதவியை கேட்டு, சென்னைக்கு சென்றிருக்கிறார் ஃபரிதா பாபு. அப்போது, உடனடியாக சந்திக்காமல் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பாபுவை காக்க வைத்ததால், ஆத்திரம் அடைந்த ஃபரிதா பாபு, துரைமுருகனை சந்திக்காமலேயே ஆம்பூருக்கு கோபத்துடன் திரும்பியிருக்கிறார்.
அன்றைய தேதிதான், துரைமுருகனின் அரசியல் வாழ்க்கைக்கு வேலூர் மாவட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சபதமே எடுக்கும் மனநிலைக்கு பாபுவை தள்ளியிருக்கிறது. அவரின் சபதத்திற்கு சவால் விடும் வகையில் எம்பி தேர்தலும் நெருங்கிவிட்டதால், கதிர் ஆனந்தை வீழ்த்துவற்கு எத்தனை கோடி ரூபாய் தேவைப்பட்டாலும் சொந்த பணத்தை தருகிறேன். ஆனால், தனக்கு நம்பிக்கைக்குரிய பிரமுகரை, அதுவும் இஸ்லாமியர் ஒருவரைதான் வேலூர் எம்பி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கே.சி.வீரமணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் ஃபரிதா பாபு.
ஆளும்கட்சி அந்தஸ்தை அதிமுக இழந்து மூன்றாம் ஆண்டை நெருங்கும் நேரத்தில், துரைமுருகனைப் போல, கே.சி.வீரமணியும் அதிகாரத்தில் இல்லாத நேரங்களில், ஃபரிதா பாபுவிடம் மிகவும் நெருக்கம் காட்டியவர் கே.சி.வீரமணி.
துரைமுருகன் உருகுவதை விட பலமடங்கு கே.சி.வீரமணியும் உருகியதுடன், எஜமான் என்று துதிப்பதை, மந்திரம் போல மாற்றிக் கொண்டிருக்கிறார் கே.சி.வீரமணி. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதான் பாதம் பணிந்து அரசியல் வாழ்க்கையை கடந்திய கே.சி.வீரமணிக்கு, ஃபரிதா பாபுவிடம் சரணடைவது மானப் பிரச்னையாக இல்லாமல் போனதால், பாபுவின் நன்கொடை, ஒவ்வொரு சந்திப்பின் போதும் கனம் அதிகரித்தே வந்திருக்கிறது. பாபுக்கு செஞ்சோற்று கடனாக, அவரின் விருப்பத்தை நிறைவேற்றி தரும் வகையிலேயே கலீல் ரஹ்மானை வேலூர் அதிமுக வேட்பாளராக அறிவிப்பதற்கு முழுவீச்சில் எடப்பாடியாருக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் கே.சி.வீரமணி என்று அதிமுக வேட்பாளர் தேர்வுக்குக் பின்னால் மறைந்திருக்கும் பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்தார்கள் கே.சி.வீரமணியின் விசுவாசமிக்க வேலூர் நகர அதிமுக பிரமுகர்கள்.
வேலூர் எம்பி தொகுதியில், கலீல் ரஹ்மானை அதிமுக வேட்பாளராக அறிவிக்க, கே.சி.வீரமணி, ஒற்றை நபராக போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், கலீல் ரஹ்மானையும், கே.சி.வீரமணியையும் ஒருசேர எதிர்ப்பதற்கு ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் ஓரணியில் நின்று எதிர்ப்பு குரல் கொடுப்பதற்கு தயாராகி வருவதால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அனல் காற்று அதிகமாக வீசிக் கொண்டிருக்கிறது.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் விசுவாசமிக்க தொண்டராக இருந்த தனக்கே உச்சபதவிகளான முதல்வர் பதவியும், பொதுச் செயலாளர் பதவியும் கிடைத்திருக்கிறது என்பதை ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் உணர்ந்து உண்மையான விசுவாசத்தோடு கட்சி பணியாற்ற வேண்டும் என்று மேடைதோறும் முழங்குகிறார் எடப்பாடியார். அவரின் உள்ளத்தில் இருந்து இந்த வார்த்தைகள் உண்மையாக வெளிப்பட்டு இருந்தால், வேலூர் எம்பி தேர்தலிலும் அதிமுகவுக்காக உயிரை கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்களில் ஒருவரை எடப்பாடியார் தேர்வு செய்து அறிவிப்பாரா..என்று சூடாகவே கேள்விகளை முன்வைக்கிறார்கள் வேலூர் மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள்.
சாதாரண தொண்டருக்கு உயர்ந்த அந்தஸ்தை செல்வி ஜெயலலிதா கொடுத்து வந்ததைப்போல, எடப்பாடியாரும், பண பலம், படை பலம் ஆகியவை வேட்பாளருக்கு உரிய தகுதியாக பார்க்காமல், உண்மையான அதிமுக விசுவாசியை வேலூர் எம்பி தொகுதியில் வேட்பாளராக களம் இறக்க வேண்டும்.
திமுக அமைச்சர் துரைமுருகனுடன் உருவான தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ள அதிமுகவை ஒரு கருவியாக ஃபரிதா பாபு பயன்படுத்திக் கொள்ள முற்படுவதை ஆரம்பத்திலேயே எடப்பாடியார் கிள்ளி எறிந்தால்தான், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு உரிய மாண்பை எடப்பாடியாரால் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று ஆயிரக்கணக்கான வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் மனங்களில் கனன்று கொண்டிருக்கும் ஆதங்கத்தை போட்டு உடைத்தார்கள் வேலூர் நகர அதிமுக மூத்த நிர்வாகிகள்.
அதிமுக வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் ஃபரிதா பாபுவிற்கு எதிராக வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், துரைமுருகனும், கதிர் ஆனந்தும் தற்காலிமாக நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பரப்புரை தொடங்கிவிட்டால், ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஃபரிதா பாபுவின் சபதம், கெட்ட ஆட்டம் போட்டு, துரைமுருகனையும், கதிர் ஆனந்தையும் உற்சாகமாக தேர்தல் பணியாற்றாமல் செய்துவிடும் என்று உற்சாகமாகவே கூறுகிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
என்ன செய்யப் போகிறார் எடப்பாடியார்..?. வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள்…
ஃபரிதா பாபுவின் சபதம் நிறைவேறுமா? ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவினரின் உற்சாகம் நீடிக்குமா? காத்திருப்போம்…