Mon. Nov 25th, 2024

நல்லரசு வாசகர்களுக்கு அன்பு வணக்கம்..

விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியின் கட்சித் தாவல், காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியிலும் புயலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விஜயதாரணியின் திடீர் முடிவால் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் எழுந்த சீற்றம் குறித்து விரிவாக பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களை அவமதிக்கும் வகையில் மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவர்களை வெறுப்பு ஏற்றும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகிவிட்டார் விஜயதாரணி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

விஜயதாரணி கட்சி தாவலுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை, மிதவாதிபோல எதிர்ப்பு தெரிவித்த போதும், இளம் காங்கிரஸ் எம்பியான விஜய் வசந்த், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த புதிய தலைமுறை அரசியல்வாதியான விஜய் வசந்தின் எதிர்ப்பு, விஜயதாரணியின் அரசியல் வாழ்க்கை மீது அமிலத்தை ஊற்றுவதைப் போல அமைந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.


திருமதி விஜயதாரணி மாற்று கட்சியில் இணைந்துள்ளது, அவரை 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகுப் பார்த்த விளங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகமாகும் என்று அனல் வார்த்தைகளை வெளியிட்டுள்ளார் விஜய் வசந்த் எம்பி.


கன்னியாகுமரி மாவட்ட மக்கள் விஜயதாரணியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று சாபம் விடாத வகையில் விஜய் வசந்த் எம்பி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அதேநேரத்தில், அரசியல் முகவரி கொடுத்த காங்கிரஸ் மீதான உண்மையான விசுவாசத்தையும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மானமுள்ள குடிமகன் என்பதையும் நிலைநாட்டவும் முயற்சித்துள்ளார் விஜய் வசந்த் எம்பி.
விஜய் வசந்த் எம்பியைப் போலவே விருதுநகர் காங்கிரஸ் எம்பியும், அகில இந்திய காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல்காந்தியிடம் நெருக்கமான நட்பை கொண்டிருக்கும் மாணிக்கம் தாகூரும், விஜயதாரணி மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளதன் மூலம் புதை குழியில் விழுவதற்கு சமமான முடிவை எடுத்துள்ளார் விஜயதாரணி என ஆவேசம் காட்டியுள்ளார் மாணிக்கம் தாகூர்.

விஜயதாரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கு விஜயதாரணி முன்வைத்த காரணமே, அவரின் பதவி ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகதான் இருக்கிறது என்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட அரசியல் கள திறனாய்வாளர்கள்.


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த நேரத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை எதிர்பார்த்தார் விஜயதாரணி. ஆனால், விஜயதாரணிக்கு மட்டுமல்ல, அவரை விட சீனியர் எம்எல்ஏக்களின் தியாகத்தையும் கேலி கூத்தாக்கும் வகையில்தான் முதல்முறை எம்எல்ஏவான செல்வப்பெருந்தகையை சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்து அறிவித்தது அகில இந்திய காங்கிரஸ் கட்சி.


அன்றைய தேதியில் இருந்தே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீதும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மீதும் அதிருப்தியிலேயே இருந்து வந்தார் விஜயதாரணி.
15 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் வாழ்க்கையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கும் குறி வைத்து காய் நகர்த்தி வந்தார் விஜயதாரணி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே அவரது தலைமையை ஏற்றுக் கொள்ள முன்னணி நிர்வாகிகள் தயாராக இல்லை. அதுபோலவே, டெல்லி காங்கிரஸ் மேலிடத்திலும் விஜயதாரணிக்கு புதிய பொறுப்புகள் வழங்குவதற்கு பரிந்துரை செய்யும் அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒருவர் கூட முன்வரவில்லை.


டெல்லியில் அரசியல் செய்ததால்தான், தமிழகத்தில் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதியாக வலம் வர முடியும் என்ற எண்ணத்தில், 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்க கடுமையாக போராடினார் விஜயதாரணி. ஆனால், அவருக்கு போட்டியாளராக நின்ற எம்.வசந்தகுமார், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸாரிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களிடமும் பேரன்பை பெற்றவராக திகழ்ந்தார். கூடுதல் தகுதியாக, பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் சகோதரருமான வசந்தகுமாருக்கு நடுநிலை வாக்காளர்களிடமும் அபரிதமான செல்வாக்கு இருந்து வந்தது.

அதன் காரணமாகவே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றார் எம்.வசந்தகுமார். மக்கள் சேவையில் ஓராண்டுக்கு மேல் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்த எம்.வசந்தகுமார், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திடீரென்று உயிரிழந்தார். அவரின் மறைவால், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்திருந்த நேரத்தில், அவரின் மறைவால் ஏற்பட்ட அனுதாபத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி, அவரது மகன் விஜய் வசந்த்தை இடைத்தேர்தலில் நிறுத்தி, தொகுதியை தக்க வைத்துக் கொண்டது.

தந்தையான வசந்தகுமாரிடம் மோதியதைப் போலவே, இடைத்தேர்தலிலும் விஜய் வசந்திற்கு பதிலாக தன்னை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார் விஜயதாரணி. அப்போதும் அவரது கோரிக்கையை புறக்கணித்தது காங்கிரஸ் மேலிடம்.
இப்படி அடுக்கடுக்காக, விஜயதாரணியின் ஆசைகளை நிறைவேற்றாமல் காங்கிரஸ் மேலிடம் தவிர்த்து வந்ததால், 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை தேடி தரும் திட்டத்துடனேயே, செயல்பட்டு வந்தார் விஜயதாரணி.

காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான விசுவாசத்துடன் விஜயதாரணி நடந்து கொள்ளவில்லை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் மேலிடமும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அறிந்தே வைத்திருந்தது. அரசியல் முகவரி தந்த கட்சியில் இருந்து விலகி, சுயநலத்திற்காக வேறு ஒரு கட்சிக்கு தாவுபவர்கள், தாய் கட்சி மீது சேற்றை வாரி வீசுவதைப் போலவே, விஜயதாரணியும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்று குமறியிருப்பதை பார்த்து, பாஜகவில் உள்ள பெண் தலைவர்களே நகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி நடிகை கௌதமி, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். விஜயதாரணியை விட, காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்த மற்றொரு பிரபல நடிகை குஷ்பு, தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உரிய முக்கியத்தும் கிடைக்காததால் மனப்புழுக்கத்தில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்தமாக பெண்களுக்க எதிரானது என்று கூறுவதுதான், ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட நடிகை குஷ்புக்கே தொகுதி ஒதுக்க மாட்டார்கள் என்ற பேச்சு, தமிழக பாஜகவில் அதிகமாக எழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், விஜயதாரணியை, பாஜக வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் களம் காண்பதற்கு பாஜக மேலிடம் வாக்குறுதி வழங்கியிருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட பாஜக மூத்த நிர்வாகிகள்.


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில், பாஜக மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் பாஜக வேட்பாளராக களம் இறங்குவதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை என்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் நேரத்தில், பொன் ராதாகிருஷ்ணனுக்கு செக் வைக்கும் வகையில் விஜயதாரணியை பாஜகவுக்கு இழுத்து, கன்னியாகுமரி பாஜக வேட்பாளராக களம் இறக்க காய் நகர்த்தி வந்த அண்ணாமலைக்கு முதற்கட்டமாக வெற்றி கிடைத்திருக்கிறது என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.


2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக பாஜகவில் மூத்த தலைவர்கள் அனைவரையும் செல்லா காசாக்கிவிட வேண்டும் என்ற அண்ணாமலையின் திட்டத்திற்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி தான் விஜயதாரணியின் கட்சி தாவல் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் அண்ணாமலையின் சீடர்கள்.


அண்ணாமலையின் விபரீத விளையாட்டு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க உதவுமா அல்லது படுபாதாளத்தில் விழ செய்யுமா..
2024 தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்…