Fri. Nov 22nd, 2024

தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்..

வீரபாண்டியாரின் சகோதரர் மகன் பாரப்பட்டி சுரேஷ் உள்குத்து ஆட்டம்.
எம்பி வேட்பாளர் தேர்வால் சேலம் மாவட்ட திமுகவில் பதற்றம் அதிகரிப்பு…

நல்லரசு வாசகர்களுக்கு அன்பு வணக்கம்…

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஆளும்கட்சியான திமுக, முதன் முதலாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திருநெல்வேலி, ஈரோடு, நாமக்கல், திருப்பெரும்புதூர், தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பரப்புரரை நடைபெற்று வருகிறது. திமுக மூத்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில், தற்போதைய தூத்துக்குடி எம்பியும் திமுக மாநில மகளிரணி தலைவர் கனிமொழி கருணாநிதியும் கலந்துகொண்டு உரையாற்றினார். முதல்வரின் புதல்வரும் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரையை ஆளும்கட்சியான திமுக, மற்ற அரசியல்கட்சிகளுக்கு முன்னதாகவே தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்து, தேர்தல் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக மற்றும் தோழமைக் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடுகள் முழுமையாக முடிவடையாத நிலையில், திமுகவின் தேர்தல் பரப்புரை, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம், தொண்டர்களிடம் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரியாததால் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட குழப்பமான மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

சென்னை உள்பட கன்னியாகுமரி வரை தேர்தல் பரப்புரையை திமுக முடுக்கிவிட்டுள்ள நிலையில், சேலம் எம்பி தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாவட்டம் முழுவதுமும் ஒருவிதமான பரபரப்பு நிலவி வருகிறது. சேலம் எம்பி தொகுதியின் தற்போதைய எம்பி பார்த்தீபனுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், சேலம் எம்பி தொகுதியை குறி வைத்து, சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த மறைந்த திமுக தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகள், திமுக தலைமையிடம் முறையிட்டு வருகிறார்கள்.

சேலம் எம்பி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், வீரபாண்டியாரின் செல்வாக்கு மூலம் உறுதியாக வெற்றி பெற்றுவிடலாம் என்று வீரபாண்டியாரின் வாரிசுகள் மட்டுமின்றி அவரது விசுவாசிகள் கூட்டமும் நம்பிக்கையோடு களமாடி வருகிறார்கள். வீரபாண்டியார் மறைந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, வீரபாண்டியாரின் செல்வாக்கு இன்றைக்கும் குறையவில்லை என்பதை வீரபாண்டியாரின் வாரிசுகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பாக சேலத்தில் அண்மையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாடு அமைந்துவிட்டது என்பதுதான் சுவாரஸ்யமான ஒன்றாகும்.


தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திரண்டு வந்த இளைஞரணி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் லட்சக்கணக்கில் திரண்டிருந்த மாநாட்டில், வீரபாண்டியாரின் பெயரை திமுக எம்பி கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் உச்சரித்த போதெல்லாம், ஒட்டுமொத்த மாநாட்டு கூட்டமும் ஆர்ப்பரித்து முழக்கமிட்டதைப் பார்த்து, முதல்வரும் திமுக தலைருவமான மு.க.ஸ்டாலினே வியந்து போய்விட்டார் என்கிறார்கள் சேலம் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.


மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வியும், மகளிரணி தலைவியுமான கனிமொழி எம்பி உரையை தொடங்கும் போது, வீரபாண்டியாரின் பெயரை உரக்க உச்சரித்தார். கலைஞர் குடும்பத்து வாரிசின் உதடுகளால் வீரபாண்டியாரின் பெயர் உச்சரிக்கப்பட்டதை பார்த்து, உணர்ச்சி மிகுந்த வீரபாண்டியாரின் தொண்டர்கள், உற்சாக மிகுதியில் எழுப்பிய முழக்கம், அடங்குவதற்கு சில வினாடிகள் ஆகியதை பார்த்து, திமுக இரண்டாம் கட்ட தலைவர்களும் மூத்த அமைச்சர்களும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தார்கள்.

கனிமொழியை தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் வீரபாண்டியாரின் பெயரை உச்சரித்த போதும், மாநாட்டில் திரண்டிருந்த திமுகவினரின் உற்சாக கரகோஷம் அடங்குவதற்கு பல நிமிடம் ஆனது. சேலம் மாவட்டத்தை கடந்து மாநிலம் முழுவதும் வீரபாண்டியாருக்கு விசுவாசிகள் நிறைந்திருக்கிறார்கள் என்பதும், அவரது மறைவுக்குப் பிறகு 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட வீரபாண்டியாரின் செல்வாக்கு அழிந்து போகாமல், வீறுகொண்டு எழுகிறது என்பதை திமுக தலைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள் என்கிறார்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்ட திமுக மூத்த நிர்வாகிகள்.

வீரபாண்டியாரின் விசுவாசிகளிடம் காணப்பட்ட எழுச்சியை நேரில் பார்த்த, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆண் வாரிசான மருத்துவர் பிரபும், வீரபாண்டியாரின் மூத்த மகன் செழியனின் மருமகனான மருத்துவர் தருணும், உணர்ச்சி கொந்தளிப்பில் தத்தளித்து போனார்கள். வீரபாண்டியார் குடும்பத்து வாரிசுகள் என்ற அடையாளத்தை சுமத்திருக்கும் பிரபும், தருணும், சேலம் மாவட்டத்தில் மிகவும் துடிப்புடன் கட்சிப் பணியாற்றி ஆற்றி வருபவர்கள்.

ஆண் வாரிசுகளைப் போல, வீரபாண்டியாரின் இளைய மகன் மறைந்த ஆ.ராஜாவின் புதல்வி மலர்விழியும், சேலம் மாவட்ட திமுகவில், தனது தாத்தா வீரபாண்டியாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது வாரிசுகளாக, மாவட்டம் முழுவதும் நிறைந்திருக்கும் நிர்வாகிகள் இல்ல விழாக்கள் மற்றும் துயரம் மிகுந்த நேரங்களில் பங்கேற்று, ஆதரவாக நிற்பதை கடந்த பல ஆண்டுகளாகவே முனைப்புடன் செய்து கொண்டிருக்கிறார்.


வீரபாண்டியார் குடும்பத்தின் நேரிடையான வாரிசுகளான டாக்டர் பிரபு, டாக்டர் தருண், மலர்விழி ஆகியே மூன்று பேரும் தேர்தல் அரசியலில் தீவிரம் காட்டி வரும் நேரத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போதே, வீரபாண்டியாரின் பூர்வீக ஊரான வீரபாண்டியை உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட, திமுக தலைமைக்கு வீரபாண்டியாரின் வாரிசுகள் கடும் நெருக்கடி கொடுத்தார்கள்.

மூன்று பேர் தவிர, வீரபாண்டியாரின் உறவினர்களும் கடும் போட்டியாளராக நின்ற நேரத்தில், சேலம் மாவட்டத்தில் பிரபல மருத்துவராக புகழ் பெற்றிருந்த ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி காசி விஸ்வநாதனின் மருமகனும் மறைந்த வீரபாண்டி ஆ.செழியனின் மருமகனுமான மருத்துவர் தருணை, வீரபாண்டி சட்டமன்ற திமுக வேட்பாளராக களமிறங்கியது திமுக தலைமை. வீரபாண்டியார் குடும்பத்திற்குள் உருவான பகைமை மற்றும் வீரபாண்டியாரின் இறுதி காலத்தில் அவரின் மெய் காப்பாளராக களமாடிய அவரது உறவினர் பாரப்பட்டி சுரேஷ், டாக்டர் தருணின் வெற்றிக்காக முழு வீச்சில் தேர்தல் பணியாற்றாததால், ஏறக்குறைய 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் மருத்துவர் தருண், முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதைப் பார்த்து, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் ஆதரவு பரிபூரணமாக கிடைத்து வருகிறது.

சேலம் எம்பி தொகுதியில் மருத்துவர் தருண் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டால், ஏற்கெனவே எம்எல்ஏ தேர்தலில் தோல்வியடைந்தவர் என்ற அனுதாபமும் கை கொடுக்கும் என்பதால், நிச்சயமாக தருண் வெற்றி பெற்று விடுவார் என்று அவரது விசுவாசிகள் திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். மருத்துவத் தொழிலுக்கு தரும் முக்கியத்துவத்தை விட அதிகமாக திமுக ஐடி விங்கின் செயல்பாடுகளுக்கு பகல், இரவு பாராமல் உழைத்து வருவதால், முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மற்றும் திமுக இரண்டாம் கட்டத் தலைவர்களிடமும் மருத்துவர் தருணுக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது என்பதும் சிறப்பு அம்சம் என்று கூறும் சேலம் மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள், வீரபாண்டியார் குடும்பத்தின் மருமகன் என்ற அடையாளம் இருந்தாலும் அமைதியான செயல்பாடுகள் மூலம், சேலம் மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் மருத்துவர் தருண் என்கிறார்கள்.


வீரபாண்டியாரின் 2 வது மனைவியின் புதல்வர் மருத்துவர் பிரபு என்பதால், வீரபாண்டியாருடன் நெருக்கமாக பழகிய சேலம் மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள், பிரபுக்கு முழு மனதோடு ஆதரவு தராமல் விலகி நிற்கிறார்கள். எம்பி தேர்தலில் போட்டியிடும் வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்து களப் பணியாற்றி வரும் பிரபு, வீரபாண்டியாரின் வழியில், சேலம் மாவட்டம் முழுவதும் பயணித்து, வீரபாண்டியாரின் விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதையே முதற் நேரப் பணியாக, முழுநேர கடமையாக செய்து கொண்டிருப்பதால், தருணுக்கு நேரடி போட்டியாளராக இன்றைய தேதியில் பிரபு களத்தில் நிற்கிறார்.


பிரபு மற்றும் தருணைப் போல, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமது தந்தையும் வீரபாண்டியாரின் இளைய புதல்வருமான மறைந்த ஆ.ராஜா வாய்ப்பை இழந்ததைப் போல, எம்பி தேர்தலில் தானும் இழந்து விடக் கூடாது என்று மனவுறுதியோடு, எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று சேலம் மாவட்ட அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் முறையிட்டு வருகிறார், மருத்துவர் மலர்விழி ஆ.ராஜா.

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் மலர்விழி ஆ.ராஜா, வீரபாண்டியாரால் தொடங்கப்பட்ட விஎஸ்ஏ கல்லூரியின் தலைவர் பதவியும் வகித்து வருகிறார்.
சேலம் மாவட்டத்தை, திமுகவின் நிர்வாக வசதிக்காக, கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு, எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி, ஆ.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகிய மூன்று பிரபலங்களும் முறையே மாவட்டச் செயலாளர்களாக பதவி வகித்து வந்தாலும், மலர்விழி ராஜாவுக்கு மூன்று மாவட்டத்திலும் உள்ள திமுக முன்னோடிகள் முதல் மரியாதை தருவதற்கு தயங்கியதே கிடையாது என்று சொல்கிறார்கள் வீரபாண்டியார் குடும்பத்து விசுவாசிகள்.


சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் நேரு, அரசு முறை பயணமாக வந்தாலும், கட்சி நிகழ்ச்சிக்காக வந்தாலும், மலர்விழி ராஜாவை தவிர்க்க முடியாத பிரமுகராகதான் திமுக மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
வீரபாண்டியாரின் வாரிசு என்ற அடையாளத்தோடு மூன்று பிரபலங்கள் எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர் கே.என்.நேருவின் சிபாரிசுக்காகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களின் ஆதரவையும் பெறுவதற்காக கடந்த பல மாதங்களாக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வரும் நேரத்தில், திமுகவின் புதிய வரவாக மாறியிருக்கும் சேலம் மாவட்ட நடிகர் உதயநிதி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி பாபுதான், சேலம் எம்.பி. தொகுதியின் திமுக வேட்பாளராக போட்டியிடவுள்ளார் என்ற தகவல் பரவி வருவதைப் பார்த்து , வீரபாண்டியாரின் விசுவாசிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள்.

சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த வீரபாண்டியார் குடும்பத்து வாரிசுகளை அவமானப்படுத்தும் வகையில், தொலைக்காட்சி ஊடகங்களில் உதயநிதி நற்பணி மன்ற தலைவர் பாபுதான், சேலம் தொகுதி திமுக எம்பி வேட்பாளர் என்ற செய்தி பரவுதற்கு, சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளே காரணமாக இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை முன் வைக்கிறார்கள வீரபாண்டியார் குடும்பத்து விசுவாசிகள். அதுவும் வீரபாண்டியாரின் சகோதரர் மகன் பாரப்பட்டி சுரேஷ்தான், வீரபாண்டியாரின் வாரிசுகள் அரசியலில் தலையெடுக்காதவாறு முட்டுக்கட்டை போட்டு வருவதாக குமறுகிறார்கள் பாரம்பரிய திமுக நிர்வாகிகள்.

எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்குவதற்கு முன்பே, பாபு பெயர் ஊடகங்களில் அடிபடுவதைப் பார்த்து, மருத்துவர் தருண், மருத்துவர் பிரபு, மருத்துவர் மலர்விழி ஆகிய மூன்று பேருமே, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் உள்ள அறிமுகத்தை வைத்து, சேலம் எம்பி தொகுதி திமுக வேட்பாளராக பாபு போட்டியிட போகிறார் என்ற தகவலை மறுத்து, திமுக தலைமை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
உதயநிதி நற்பணி மன்ற தலைவரான பாபு, சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், உதயநிதி ஸ்டாலினின் பிரத்யேக செயலாளர் என்ற அடையாளத்தின் காரணமாக, கடந்த மூன்று வருடங்களில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுகவில் அசூர வளர்ச்சியைப் பெற்றிருக்கிறார் என்று கூறும் பாரம்பரிய திமுக நிர்வாகிகள், எம்பி தேர்தலையொட்டி பாபு பெயர் பலமாக அடிபடுவதற்கு, வீரபாண்டியாரின் உறவினரான பாரப்பட்டி சுரேஷ், பொய்யான செய்தியை பரப்பி விடுகிறாரோ என்றும் வீரபாண்டியாரின் வாரிசுகள் சந்தேகம் அடைந்திருக்கிறார்கள் என்று சேலம் திமுக முன்னணி நிர்வாகிகள் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

அமைச்சர் கே.என்.நேருவின் ஆத்மார்த்த சீடராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கும் பாரப்பட்டி சுரேஷ், வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் மகன் ஆவார். வீரபாண்டியாரின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்து வாரிசுகள், சேலம் மாவட்ட அரசியலில் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்ற தீய எண்ணம் படைத்தவர் என்று கூறும் திமுக முன்னணி தலைவர்கள், பிரபு, தருண், மலர்விழி ஆகிய மூவரும் எம்எல்ஏவாகவோ, எம்பியாகவோ பதவி வகித்து விடக் கூடாது என்று ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார் பாரப்பட்டி சுரேஷ் என்பதுதான் சேலம் மாவட்ட திமுகவில் சூடான விவாதமாகும்.


வீரபாண்டியாரின் குடும்ப வாரிசுகளுக்கு இடையே நிலவும் போட்டியும், அவரது உறவினர்களிடையே உருவாகியுள்ள அதிகார போட்டியும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருவதால், வீரபாண்டியாரின் ரத்தபந்தங்களுக்குள் மோதல் போக்கு உருவாவதை தடுப்பதற்காக, வீரபாண்டியாரின் குடும்பத்தினரை, உறவினர்களை தவிர்த்துவிட்டு, திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பது திமுக இரண்டாம் கட்ட தலைவர்களின் பரிந்துரையாக இருக்கிறது என்கிறார்கள்.
வீரபாண்டியாரின் குடும்பத்து வாரிசுகளை தவிர்த்துவிட்டு , சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகமானவரை எம்பி வேட்பாளராக அறிவித்தாலும் கூட , சேலம் எம்பி தொகுதியில் அதிமுக எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று கூறும் அளவுக்கு ஒரு தரப்பு திமுகவினர் இருந்தாலும் கூட, வீரபாண்டியார் வாரிசுகளை புறக்கணிப்பது என்பது அவரது ஆத்மாவிற்கு செய்யும் துரோகம் என்று சாபம் விடாத குறையாக பொரிந்து தள்ளுகிறார்கள் வீரபாண்டியாரின் விசுவாசிகள்.

சேலம் எம்பி தொகுதியை குறி வைத்து உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வரும் உள்குத்து அரசியல் பற்றி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிக்கு தெரியுமா.. என்று கேள்வி எழுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் மூன்று மாவட்டச் செயலாளர்களின் ஆதரவாளர்கள்.


கலைஞர் மு.கருணாநிதியின் வாரிசான மதுரை மு.க. அழகிரிக்கு ஆதரவாக நின்றவர் வீரபாண்டியார் என்ற ஆதங்கம், அவரின் மறைவு வரை தளபதி மு.க.ஸ்டாலினுக்கு இருந்து வந்ததாக கூறும் சேலம் மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள், வீரபாண்டியாரின் மறைவுக்குப் பிறகும் கூட தமது மனநிலையை மாற்றி கொள்ளவில்லை தளபதி என்பதை, ஆ.ராஜாவின் மறைவு உணர்த்திவிட்டதாக வருத்தத்தோடு கூறுகிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி ஆ.ராஜாவுக்கு போட்டியிடும் வாய்ப்பு கொடுத்திருந்தால், ஆ.ராஜா அடுத்த 5 மாதத்திற்குள்ளாகவே உயிர் இழந்திருக்க மாட்டார். தளபதி தன்னை புறக்கணித்துவிட்டார் என்ற மனஉளைச்சல் அதிகமானதாலேயே வீரபாண்டி ஆ.ராஜா, மாரடைப்பு ஏற்பட்டு இளம் வயதில் மரணமடைந்துவிட்டார் என்று வேதனையை பகிர்ந்து கொள்ளும் அவரது உறவினர்கள், நாடாளுமன்றத் தேர்தலிலும் வீரபாண்டியாரின் வாரிசுகளை புறக்கணித்தால், ஒட்டுமொத்த வீரபாண்டியாரின் விசுவாசிகளின் சாபம், திமுக தலைமையை நோக்கியே திரும்பும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கிறார்கள் சேலம் மாநகர திமுக முன்னோடிகள்..

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்குள் என்ன கூத்து எல்லாம் நடக்குமோ என்று அச்சத்தில் நடமாடி வருகிறார்கள் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள்.