தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்.
தினமணி நாளிதழ் முரசொலி போல மாறிக்கொண்டிருக்கிறது…
முரசொலி நாளிதழ், தினமணி போல மாறி அறிவுக்கண்ணை விசாலாமாக்கிறது…
இரண்டு நாளிதழ்களுக்கான ஒப்பீடு, ஒருசேர ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கூட வாசகர்களுக்கு ஏற்படுத்தலாம்..
ஆனால், அண்மைக்காலமாக தினமணியையும், முரசொலியையும் ஒருசேர வாசிப்பவர்களுக்கு, நல்லரசுவின் பார்வையில் உள்ள அர்த்தம், புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கும்..
ஜனவரி 6 ஆம் தேதி வெளியாகியிருக்கும் இரண்டு நாளிதழ்களிலும் வியப்பிற்குரிய செய்திக்கட்டுரை வெளியாகியிருப்பதன் பின்னணியில், நல்லரசு சிறப்புச் செய்தியில், 25 ஆண்டு கால அரசியலில் மாற்றம் மட்டுமல்ல, ஊடகம் உள்பட சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வெளிச்சம் போட்டும் வகையில் அமைந்திருக்கிறது என்பதுதான் உண்மை..
2013 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை, தமிழக பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்சியதாக அக்கட்சியினர் கருதினர்..
2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருச்சிக்கு வரவேயில்லை..
2024 ல் மோடியின் திருச்சி வருகை மூலம் பாஜகவின் தேர்தல் பிரசாரத்திற்கு உரமிட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக விலகிய பிறகு தமிழகம் மீது பிரதமர் மோடி, தனி கவனம் செலுத்துவதை கவனிக்க முடிகிறது.
தமிழகம் வரும்போதெல்லாம் தன்னுள் புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்வதாக, பிரதமர் மோடி பெருமிதப்பட்டார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது, தேமுதிகவினரை பாஜக கூட்டணி வசம் ஈர்க்கும் உத்தியாக கருதப்படுகிறது.
மோடியின் திருச்சி வருகை திருப்புமுனையாகுமா? என்ற தலைப்பில், தினமணியில் மூத்த செய்தியாளர் ஆர்.முருகன் பெயரில் வெளியாகியிருக்கும் இந்த சிறப்புக் கட்டுரை, ஏறக்குறைய, பாஜகவின் அதிகாரப்பூர்வ இதழான ஒரே நாடு செய்தியின் மறுபதிப்பாகவே இருக்கிறது என்று வேதனைப்படுகிறார்கள் தினமணியின் நீண்ட கால வாசகர்கள்.
மிக்ஜாம் புயலால் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களும், ஒரே வார இடைவெளியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. நெல்லையும், தூத்துக்குடியும் முழுமையாக சிதிலமடைந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உடைமைகளை முழுமையாக இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சிக்கு வந்த பிரதமர் மோடி, வெள்ளப் பாதிப்பை பார்வையிட வரவில்லை என்ற கோபத்தில் 8 மாவட்ட மக்கள் மத்திய பாஜக அரசை வசைபாடி வருவதெல்லாம் தினமணி நாளிதழுக்கு ஒருபொருட்டாக தெரியவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கடுமையான குற்றச்சாட்டாகும்.
தினமணி நாளிதழின், தமது கொள்கையை மாற்றிக் கொண்டதற்கு, ஊடகவியலாளரை நொந்து பயன் இல்லை என்பதும் ஒருசாராரின் கருத்தாக இருக்கிறது.
செய்தியாளர் ஆர்.முருகன், 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருபவர். சென்னையில் அவர் பணியாற்றிய காலங்களில், காவல்துறை தொடர்பான செய்திகளை தரும் பணியில்தான் ஈடுபட்டிருந்தார். 2000 ஆம் ஆண்டில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் போது, சென்னை மாநகரில் நகைப் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன என்று அன்றாட நிகழ்வுகளை வரிசைப்படுத்தி சிறப்பு செய்தி வெளியிட்டிருந்தார். அதிகாலையிலேயே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்த கலைஞர் மு.கருணாநிதி, தினமணியை செய்தியை வாசித்த நொடியே, காவல்துறை தலைமை இயக்குனர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை தொலைபேசி வாயிலாக கடிந்து கொண்டு, காவல்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி, ஒட்டுமொத்த காவல்துறையும் புதுபாய்ச்சல் காட்டும் வகையில் முடுக்கிவிட்டவர் மறைந்த திமுக தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி.
ஊடகவியலாளரின் பணி என்பது, ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் குளிர்விப்பதற்காக அமைந்துவிடக் கூடாது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரக்க, உரைக்க கூறுவதுதான் ஊடகவியலாளரின் அறமாகும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.முருகனிடம் காணப்பட்ட அறச்சீற்றம், மோடியின் திருச்சி வருகை திருப்புமுனையாக அமையும் என்று எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுதான், அரசியல், சமூகம் உள்பட அனைத்து துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றம், ஊடகத்துறையையும் அரிக்க தொடங்கிவிட்டது.
இந்த பின்னணியோடு, ஜனவரி.6 ஆம் தேதி வெளியாகியிருக்கும் முரசொலி நாளிதழில், அதன் தாரக மந்திரமான இன்றையச் செய்தி, நாளைய வரலாறு என்பதை உண்மையாக்குவதை போல, திமுக முன்னாள் அமைச்சர், முதுபெரும் அரசியல்வாதி பொன் முத்துராமலிங்கம் எழுதியுள்ள இந்தியா கூட்டணி வெற்றி!வரலாற்றுக் கட்டாயமாகும்!! என்ற கட்டுரையில் இடம் பிடித்திருக்கும் ஒவ்வொரு வரியும்., ஏன் ஒவ்வொரு வரியும், இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிரும் ஆபத்தை விவரித்திருப்பதை வாசிக்கும் போது, ஜனநாயகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்களின் நாடி, நரம்பை எல்லாம் கொதிக்க வைக்கிறது என்றால், அது மிகையல்ல.
இத்தனைக்கும், 2023 டிசம்பர் மாத நிறைவில், த ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையைதான், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், மொழிபெயர்த்துள்ளார் என்றாலும் கூட, ஆங்கில வார்த்தைகளை விட அக்னி மிகுதியாகவே இருக்கிறது முரசொலி கட்டுரையில்..
இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் மதச்சார்ப்பற்ற ஆட்சி முறை தான் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இன்றுள்ள பாரதீய ஜனதாக்கட்சியின் ஆட்சி இந்து மதக் கோட்பாட்டின் அடிப்படையிலான இந்து ராஷ்ட்ரத்தை உருவாக்கத் திட்டமிட்டு, தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கட்டுரையில் சுட்டிக்காட்டுவது, திமுகவினரால் மட்டுமல்ல, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள அனைத்து தலைவர்களாலும் முன் வைக்கப்பட்டு வரும் கருத்தாக்கம்தான் என்றாலும் கூட, வழக்கமான முழக்கமாக இல்லாமல், அமெரிக்க ஆட்சிமுறையை ஒப்பிட்டும், இந்தியாவின் 73 கால ஆண்டு கால ஆட்சி மாண்பை பட்டியலிட்டும் ஜனநாயகத்தை காப்பது என்பதற்கான அடிநாதத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், பழுத்த அரசியல் தலைவர் பொன் முத்துராமலிங்கம்.
இந்தியாவிற்கே சிறந்த ஆட்சி முறையாக, திராவிட மாடல் ஆட்சிதான் அமையும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிந்தனைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், சகோதரத்துவத்தையும் சமூக நீதியையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா கூட்டணி என்பதையும் தமது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
திராவிட மாடல் கோட்பாடு, இந்தியா முழுவதும் எந்தளவுக்கு தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதையும், திமுகவின் தொடக்க காலம் முதல் இன்றைய தேதி வரை திராவிட சிந்தனையில் இருந்து தடம் மாறாத உணர்வாளர்களின் மனவுறுதியை வெளிப்படுத்தும் வகையில், கலைஞர் மு.கருணாநிதி மீது அளவுகடந்த விசுவாசத்தை காட்டிய பொன் முத்துராமலிங்கம், தேர்ந்தெடுத்து பதிவு செய்த வார்த்தைகளே சாட்சியாக இருக்கிறது.
பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தி நிரந்தரப்படுத்தும் சக்தியும் ஆற்றலும், சமூக நீதிக்கு உண்டா அல்லது இந்துத்துவக் கோட்பாட்டிற்கு உண்டா என்றால், எந்த ஒரு இந்தியக் குடிமகனும் வேறுபாடுகளை மறந்துவிட்டு சமூக நீதியைத்தான் தேர்ந்தெடுப்பான் என்ற நிலை அகில இந்தியா முழுமையும் உள்ள மக்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளால் அறிய முடிகிறது.
அதுமட்டுமல்ல, அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சமூகநீதிக் கோட்பாட்டின் முன்னர், வரும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இந்துத்துவக் கோட்பாடு மக்கள் மத்தியில் சிக்கிச் சிதறுண்டு போகும் என்றும் பொங்கியிருக்கிறார் பொன் முத்துராமலிங்கம்.
மத்திய பாஜக அரசு எந்தளவுக்கு பாசிச ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை, கட்டுரையின் நிறைவில் மிகுந்த வேதனையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் நிறைவுக்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அச்சம் தருபவையாக அமைந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாத நிலைப்பாட்டிற்கு அனைவரையும் ஓரணியில் திரட்டுகிறார் பொன் முத்துராமலிங்கம்.
ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதித்துவ மன்றமான நாடாளுமன்றத்தில் அதிகாரத்தையும், உரிமையையும், ஆட்சிக்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி ஆக்கிரமித்துக் கொண்டதாகதான் கருத முடியும். அதுமட்டமல்ல நாடாளுமன்ற ஜனநாயகத்தை மாற்றி ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வருவதற்கான வெள்ளோட்டமாகத்தான் இந்த நடவடிக்கையை அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் என்று பொங்கியிருப்பதன் மூலம் உண்மையான திராவிட சிந்தனையாளராக, 70 வயதை கடந்த பிறகும் ஆவேசம் காட்டும் பொன் முத்துராமலிங்கத்தின் மனவுணர்வுகள்தான் ஆச்சரியளிக்கக் கூடிய ஒன்றாகும்.
கட்டுரையின் நிறைவில், நாடாளுமன்றம், சர்வதிகாரியின் கரங்களுக்குள் சென்றுவிட்டதோ என்று அச்சப்படும் வகையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 எம்பிக்களை இடைநீக்கம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இந்தியா கூட்டணி, இந்தியாவுக்கு ஏன் தேவை.. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியதற்கான அவசியம் குறித்து முத்தாய்ப்பாக, விலை மதிக்க முடியாத முத்துகளைப் போல, இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை, இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் உறுதிமொழி போல ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் பொன் முத்துராமலிங்கம்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தார்கள் தமிழக வாக்காளர்கள். 5 ஆண்டு பதவிக்காலம் இன்னும் 4 மாதங்களில் நிறைவடையவுள்ளது.
மதவாத பாஜகவுக்கு எதிரான அரசியலை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அனல் கக்கும் வகையிலேயே வைத்திருக்கும் சிந்தனை, திமுக எம்பிக்களிடமும், கூட்டணி கட்சி எம்பிக்களிடமும் அதிகமாக தலைகாட்டவில்லை. ஆனால், கலைஞர் மு.கருணாநிதியிடம் கற்றுக் கொண்ட பாடத்திற்கு ஏற்ப, அவரிடம் மிகுதியாக இருந்த சுயமரியாதை கொள்கையை நீர்த்துப் போகச் செய்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில், மூத்த தலைவர் பொன் முத்துராமலிங்கம்,கருத்தாழமிக்க கட்டுரையை தீட்டியிருக்கிறார்.
இப்படிபட்ட கட்டுரைகள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருப்பதால்தான், இன்றைய செய்தி, நாளைய வரலாறு என்ற தாரக மந்திரத்தை, அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மறைந்த திமுக தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி.
24 மணிநேரமும் திமுக தலைமை மீதான விசுவாசமும், உறுதியான கொள்கைப் பிடிப்பும் உள்ள தியாக சீலர்கள், பொன் முத்துராமலிங்கம் போல, எண்ணற்றோர் திமுகவின் அடித்தளத்தை பாதுகாத்து நிற்கிறார்கள்.
சுயநலத்தோடு, திமுக தலைமைக்கு அவப்பெயரை தேடித் தருபவர்களை எல்லாம் அரவணைத்து, அருகில் வைத்து அழகுப் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்.முத்துராமலிங்கம் போன்ற கலைஞரோடு உறவாடிய மூத்த தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அரவணைத்தால், திமுகவை வீழ்த்திவிடுவோம் என்று கொக்கரிப்பவர்கள் ஒருநாளும் தலைதூக்கிவிட முடியாத அளவுக்கு சம்மட்டி அடிகொடுத்து விட முடியும் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது என்று உணர்ச்சிப் பொங்க கூறுகிறார்கள் கலைஞரைப் போலவே, முரசொலியை முதல்வாரிசாக சீராட்டிக் கொண்டிருக்கும் திராவிட உணர்வாளர்கள்.