Fri. Nov 22nd, 2024

இரக்க குணத்தால் விஸ்வரூபம் காட்டிய விஜயகாந்த்.
சுயசிந்தனையின்றி சுருண்ட கதை துயரமானது…

திரையுலக பிரபலங்களால் ஆசை ஆசையாக கேப்டன் என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜயகாந்த், இன்றைய தேதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். .திரையுலகில் ஈட்டிய வருமானத்தில் பெருமளவு தர்மம் செய்த நடிகர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்கூட, நடிகர் ரஜினிகாந்த், பட்டிமன்ற புகழ் பாரதி பாஸ்கர் ஆகியோருக்காக உருகிய தமிழ் இனம், கருப்பு தங்கமாக ஜொலித்த விஜயகாந்த்தின் உயிருக்காக உருகவில்லை என்று வருத்தத்தோடு புலம்புகிறார்கள் விஜயகாந்தின் உண்மையான விசுவாசிகள்.

தாய்மார்கள் மீது உண்மையான அக்கறையை காட்டிய விஜயகாந்த்தின் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வா.. சாவா போராட்டமாக அமைந்திருப்பதுதான் துயரமானது. சுயநினைவோடு இருக்கிறாரா, விஜயகாந்த் என்றே தெரியாத நிலையிலும் கூட, அவரை பொம்மை போல அமர வைத்து, தேமுதிகவை கைப்பற்றும் தீய குணத்துடன் பிரேமலதா மேற்கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற செயல்கள்தான், ஒட்டுமொத்த தேமுதிக தொண்டர்களையும் ரத்தக்கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.

திமுக., அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் இயக்கம் ஒன்று உயிர்ப்போடு எழுந்த நேரத்தில், அற்ப ஆயுளைப் போல முடங்கி போனதால், விஜயகாந்த் மீது பரிதாபம் கொள்பவர்களின் எண்ணிக்கை தான் அதிமாக இருக்கிறது என்ற உண்மையை உரக்க சொல்ல முனைகிறது இன்றைய சிறப்பு செய்தி தொகுப்பு…

மதுரையில் விலாசமே இல்லாமல் வாழ்ந்த விஜயராஜ் அழகர்சாமி, தமிழ்நாட்டின் சிறந்த ஆளுமைகளாக திகழ்ந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியையும் அதிமுகவின் இரும்பு பெண்மணியான செல்வி ஜெயலலிதாவின் நிம்மதியையும் ஒருசேர குலைத்தவராக விஜயகாந்த் உயர்ந்தது, 100 ஆண்டு கால தமிழக அரசியலில் புதிய சகாப்தமாகும்.

பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்த விஜயகாந்த், தமிழ் திரையுலகில் வெற்றி கொடி நாட்டியதற்கு திறமை மட்டுமே முக்கிய காரணமாக அமைந்திருக்கவில்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் ஈகை குணத்திற்கு ஏற்ப, பசித்த வயிறுகளுக்கு எல்லாம் படையல் வைத்தவர் என்பதாலேயே, திரையுலகத்தில் பெரும்பான்மையோர் இன்றைக்கும் நன்றி கண்ணீரோடு விஜயகாந்த்தின் அளவற்ற கருணையை மெச்சி கொண்டிருக்கிறார்கள்.

சராசரி மனிதரைப் போல தோற்றமும், உருவ அமைப்பும், தமிழ் மண்ணிற்கு உரிய கருப்பு நிறமும், விஜயகாந்த்தின் தனித்த அடையாளம் என்றால்… பசித்தோருக்கு வாரி வாரி வழங்கியதில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு புரட்சி கலைஞர் விஜயகாந்த்தைதான் நினைவுக் கூறுகிறது தமிழ் திரையுலகம் என்பதுதான் வாழும் போதே வள்ளல் ஆன சரித்திரம் ஆகும்..

விஜயகாந்தின், தூரத்து இடிமுழக்கம் திரைப்படம் வெற்றிபெறும் வரையில் விஜயகாந்த் எதிர்கொண்ட விமர்சனங்கள் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத எதிர்மறை விமர்சனங்கள்..
1978 ஆம் ஆண்டில் விஜயகாந்தின் நடிப்பில் வெளியான அகல் விளக்குதான் அவரின் முதல் படமாகும்.
தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய முதல் படத்தின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்த விஜயகாந்த், தனக்கு அறிமுகமான அனைவரிடமும் முதல் படத்தை பற்றிய விமர்சனத்தை குழந்தைகளுக்கு உரிய ஆர்வமுடன் எதிர்பார்த்தார். விஜயகாந்த் எனும் நடிகரை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது தூரத்து இடி முழுக்கம்தான்.
கருப்பு தங்கமாக காட்சியளித்த விஜயகாந்த்தை, நடுத்தர மக்களும் விளிம்பு நிலை மக்களும் கொண்டாட தொடங்கியது என்றால், அவரின் நடிப்பில் வெளிவந்த சிகப்பு மல்லி திரைப்படம் தான். புரட்சிகரமான வசனங்களை, கண்கள் சிவக்க, சிவக்க ஆவேசம் கொண்டவராக வெளிப்படுத்திய நடிப்பை பார்த்து, ஏழை எளிய மக்கள், விஜயகாந்த்தை தங்களின் குடும்பத்தில் ஒருவர் என்று அன்பு செலுத்த தொடங்கினார்கள்.


1980 காலகட்டத்தில் தலை சிறந்த நடிகர்களாக கொண்டாடப்பட்டவர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும்தான். வெற்றி கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருந்த இருவர்களை கடந்து விஜயகாந்த் நடித்த திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றிப்படமாக மாறுகிறது என்ற உற்சாக குரல், திரையுலகின் எல்லா திசைகளிலும் ஒலிக்க தொடங்கியது.
நடிகர் விஜயகாந்த்தை தலைச் சிறந்த நடிகராக்கிய பெருமை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரையே சாரும். 1981ல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை, திரையுலகில் மட்டுமின்றி, அரசியல் உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்தும் எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்த கைகளாக மாறிய போது, நெஞ்சில் துணவிருத்தால், சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி என வரிசையாக படங்களை வெளியிட்டு, கோடம்பாக்கத்தின் தூக்கத்தையே கெடுத்தார்கள்.


குறுகிய காலத்திலேயே கோடம்பாக்கத்தின் பொக்கிஷம் விஜயகாந்த் என்று பேசும் அளவிற்கு நடிப்பிலும், மனிதாபிமானத்திலும் சக நடிகர்களை வியக்க வைத்தார்.
1984 ஆம் ஆண்டு விஜயகாந்திற்கு பொற்காலம் என்றே சொல்லலாம். இயக்குனர் மணிவண்ணனின் நூறாவது நாள், ஆர்.சுந்தரராஜனின் வைதேகி காத்திருந்தாள் ஆகிய இரண்டு படங்கள் மூலம் விஜயகாந்தின் வெற்றிக்கொடி உயர உயர பறந்தது.
வசதிகளும் வாய்ப்புகளும் அளவுக்கு மீறி குவிந்த போதும், தன்நிலை மாறாமல், மதுரையில் எந்த மனதோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தாரே அதே மனநிலையிலேயே இருந்தவர் விஜயகாந்த்.


படப்பிடிப்பின் போது கதாநாயகர், கதாநாயகி ஆகியோருக்கு தனியாக உணவு பரிமாறியதையும், மற்ற கலைஞர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறியதை விஜயகாந்தால் சகித்து கொள்ளவே முடியவில்லை. கதாநாயகர், கதாநாயகி உள்பட அனைவருக்கும் ஒருமாதிரியான உணவு வழங்குவதற்கும் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறி, மேலானவர், கீழானவர் என்ற பாகுபாட்டை உடைத்தெறிந்தவர் விஜயகாந்த்.
இன்றைய தேதியில் சமூக நீதிக்கான குரல் ஓங்கி ஒலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பிறப்பில் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது. அனைவரும் சமம் என்ற அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று உரக்க கூறப்பட்டு வருகீறது. ஆனால், சமூக நீதியை, 40 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் என்று சாதாரணமாக கூறிவிட்டு கடந்து சென்றுவிட முடியாது.
அதுநாள் வரை நடிகர்களுக்கு ஒரு உணவு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு உணவு, சாதாரண தொழிலாளர்களுக்கு ஒரு உணவு என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான சைவ அசைவம் கிடைக்கும் வகையில் விஜயகாந்த் செய்த சமபந்தி என்பது அன்றைய காலத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்க செய்தது விஜயகாந்தின் நல்ல மனது…
இந்த மனதை தான் கொண்டாடி தீர்க்கிறது தமிழ் சினிமா..படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி அசத்தி காட்டிய சமபந்தி சமத்துவம்..
விஜயகாந்தின் சினிமா அலுவலகம்தான் அன்றைய தேதியில் சினிமா வாய்ப்பு தேடி போராடும் உதவி இயக்குனர்களுக்கு அடைக்கலம் தந்த இடமாகும். 1980களில் தமிழ் சினிமாவின் கனவுகளோடு சென்னைக்கு குடியேறிய நூற்றுக்கணக்கான விளிம்புநிலை இளைஞர்களுக்கு தாஜ்மஹாலாக மாறி போனது விஜயகாந்தின் அலுவலகம்.


படப்பிடிப்பு இரவு வரை நீளும் நேரங்களில் வீடு திரும்பும் வழியில், தமது அலுவலகத்தில் உறக்கம் கொள்ளும் உதவி இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு எளியவருக்கு எளியவராக வாழ்ந்திருக்கிறார் விஜயகாந்த். .
விஜயகாந்த்தின் விருகம்பாக்கம் வீட்டில் எந்தநேரமும் உணவு வழங்கப்பட்டு கொண்டே இருந்தது. சினிமா வாய்ப்பு தேடி அலைந்த உதவி இயக்குனர்கள் பலரும் பிரசாதம் போல நெகிழ்ந்து போனார்கள். தமிழ் திரையுலகில் இன்றைக்கு வெற்றிகர இயக்குனர்களாக உள்ள பலரும் விஜயகாந்த் வீட்டில் உணவு உண்டவர்கள் என்பது விஜயகாந்த் புகழ் தமிழ் சினிமாவில் இன்னும் நிலைத்திருக்கும் முக்கிய காரணமாகும்…


இப்படி பல சாதனைகளை சொல்லி கொண்டே போனாலும் விஜயகாந்தின் மிகப்பெரிய சாதனையாக அனைவரும் தவறாமல் குறிப்பிடுவது நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்ட நிகழ்வும் வரலாறாக மாறியிருக்கிறது..
அசாத்திய துணிச்சல் கொண்ட பாகுபலி போல விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, பெரும் கடனில் இருந்து நடிகர் சங்கத்தை மீட்டார். அதற்கு முன்பு தலைவராக இருந்த நடிகர் சிவாஜி கணேசனால் நிகழ்த்தி காட்ட முடியாத சாதனையாகும்.
100 வது படமாக கேப்டன் பிரபாகரனில் நடித்ததால் மட்டுமே அவரை கேப்டன் என்று திரையுலகினர் கொண்டாடவில்லை. மனிதாபிமானம், சினிமாவிற்குள் நுழைந்த போது தன்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவரையும் கைதூக்கி விட்டவர். அந்த வரிசையில் ஒருவராகதான் வைகை புயல் வடிவேலும், திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க முடிந்தது. சின்னகவுண்டர் படத்தில் வடிவேலுக்கு அழுத்தமான கேரக்டரை வாங்கி தந்தவர் விஜயகாந்த். திரையுலகில் இன்றைக்கு நடிகர் வடிவேலு உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றால், அதற்கு அஸ்திவாரம் அமைத்து தந்தவர் கேப்டன் விஜயகாந்த்தான்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்த காலத்திலேயே தமிழகம் கொண்டாடிய ஆகச் சிறந்த ஆளுமைகளான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு பாராட்டி வந்தார் விஜயகாந்த்.
மக்களிடம் அபரிதமான செல்வாக்கு பெற்றிருந்த இரண்டு தலைவர்களும் மாறி மாறி ஆட்சி அமைத்த காலத்திலேயே, அரசியல் கட்சியை துணிச்சலுடன் தொடங்கினார். கலைஞர் மு.கருணாநிதி ஆட்சியில் இருந்த காலத்தில், 2005 ல் தேதிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கி, 2006 சட்டமன்றத் தேர்தலில் 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தேமுதிக. பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதிக்கம் நிறைந்த ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்த், தனியொருவராக சட்டமன்றத்திற்குள் கம்பீரமாக நுழைந்தார்.


2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அழைத்த போதும், விருப்பமே இல்லாமல் இருந்த விஜயகாந்த், செல்வி ஜெயலலிதாவின் கட்டாயத்தின் பேரில் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. விஜயகாந்த் உள்பட 29 தேதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக வெறும் 23 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றதால், சட்டப்பேரவையில் மூன்றாவது இடத்தில் அமர வேண்டிய நிலை உருவானது.
2011 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் எதிர்கொண்ட சவால்கள்தான், அவரின் இன்றைய உடல்நிலைக்கு முக்கியமான காரணமாகும். அதிமுக கூட்டணியில் வேண்டா வெறுப்பாக சேர்ந்த விஜயகாந்த்தை, அவரால் வளர்தெடுக்கப்பட்ட நடிகர் வடிவேலு தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார். திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதம் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் வடிவேலு, விஜயகாந்த் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்ட தரக்குறைவாக பேசி, விஜயகாந்தின் மனதை நோகடித்தார். நடிகர் வடிவேலுவின் நாகரிகமற்ற பேச்சை பார்த்து, விஜயகாந்தின் எதிரிகள் கூட வருத்தப்பட்டார்கள்.


2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடும் என்று முழு நம்பிக்கையில் இருந்து வந்தார் வடிவேலு. விருகம்பாக்கத்தில் எதிரும் புதிருமாக வசித்து கொண்டிருந்த விஜயகாந்தும் வடிவேலுவும் பகையாளியானதே பெரிய சோகமாகும்.
விஜயகாந்த்தின் அக்கா கணவர் காலமான நேரத்தில், அவரது வீடும் வடிவேலு அலுவலகமும் அருகருகே இருந்த நேரத்தில், துக்க நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்களின் கார்கள் அந்த தெருவில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த வடிவேலு, தனது அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க சொல்லியிருக்கிறார். விஜயகாந்தின் உறவினர்கள் கார்கள் என்று கூறிய நேரத்தில், மரியாதைக்குறைவாக விஜயகாந்த்தை வடிவேலு வசைபாட, கேப்டனின் உறவினர்கள், விசுவாசிகள் நடிகர் வடிவேலுவை கடுமையாக தாக்கியுள்ளனர்.


2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய காலத்தில் திரையுலகில் பிரபலமாகியிருந்த வடிவேலுவால், தாக்குதலால் ஏற்பட்ட அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விஜயகாந்த்தை அழித்துவிட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் திமுக அழைக்காத போதும் வாலண்டரியாக பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு விஜயகாந்த்தையும், அவரது குடும்பத்தையும், தேதிய முற்போக்கு திராவிட முன்னேற்றக்கழகத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். வடிவேலுவின் துரதிர்ஷ்டம் 2011 தேர்தலில் ஆளும்கட்சியான திமுக தோல்வியை தழுவி விட, அதிமுக ஆட்சியை பிடித்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, கேபினட் மினிஸ்டருக்கு உரிய மரியாதையோடு வலம் வந்தார் விஜயகாந்த்.


விஜயகாந்துடனான மோதலையடுத்து, பாக்ஸர்கள் துணையுடன் படப்பிடிப்புக்குச் சென்ற வடிவேலு, தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவுகளை வைத்ததுடன், அவரின் நடவடிக்கைகளும் திரையுலகினரை மனம் வெறுக்க வைத்தது. கோடம்பாக்கமே வடிவேலுவை வெறுக்கத் தொடங்கியதை அடுத்து, படப்வாய்ப்புகள் நழுவிப் போயின. ஆண்டுக்கு ஆண்டு வடிவேலு வீட்டு பக்கமே திரையுலக பிரபலங்கள் தலை காட்டாததால், வீட்டுக்குள்ளே முடங்கி போகும் நிலை உருவானது.


எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகும் கூட விஜயகாந்த், பழைய பகையை வைத்து வடிவேலுவை பழிவாங்க முற்படவே இல்லை. அவர், அமைதியான வழியில் திரையுலக பயணத்தை மேற்கொண்டபோதும், அதிமுகவுடனான கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில், சட்டப்பேரவையில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் மோதினார் நடிகர் விஜயகாந்த். எதிர்க்கட்சித் தலைவர் அளவுக்கு உயர்த்திய போதும் நன்றியுணர்வு இல்லாமல் இருக்கிறார் என்ற கோபத்தில் தேமுதிகவையே உடைத்தார் ஜெயலலிதா. அரசியல் வாழ்க்கையில் நடிகர் விஜயகாந்திற்கு எழுச்சியை கொடுத்த செல்வி ஜெயலலிதாவே எதிரியாக நின்றார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் உருவான கசப்பான அனுபவத்தால், 2016 ல் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவோடு தேர்தலை எதிர்கொண்டார் விஜயகாந்த். அதிமுகவின் ஆட்சியை சகித்து கொள்ள முடியாத திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, விஜயகாந்த்தை திமுக கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியில் அதிக கவனம் காட்டினார்.

கலைஞரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவரது புதல்வி கனிமொழி, தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் ஐக்கியமாகும் வகையில் பிரேமலதா மனதை கரைத்து, தேமுதிகவுக்கு 70 எம்எல்ஏ தொகுதிகள் ஒதுக்குவதாக உறுதியளித்தார். தேர்தல் செலவுகளுக்கு பணம் கொடுப்பதாக உறுதியும் வழங்கப்பட்டது. கனிமொழியின் பேச்சுவார்த்தையை மேலும் வெற்றிகரமனதாக ஆக்கும் வகையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் விஜயகாந்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விஜயகாந்த் கேட்ட ஒரு வாக்குறுதிதான், திமுக தலைவர் கலைஞரையே அதிர்ச்சிக்குள்ளாக்க வைத்தது. சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றால், ஆட்சியில் துணை முதல்வர் பதவியை தேமுதிகவுக்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் விஜயகாந்த். தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, வரலாற்று சிறப்பு மிக்க வார்த்தைகளை உதிர்த்தார் கலைஞர் மு.கருணாநிதி. பழம் கனிந்துவிட்டது. பாலில் விழ வேண்டியதுதான் பாக்கி என்று கூறினார் கலைஞர்.

திமுக கூட்டணியில் சேர தேமுதிக இசைந்துவிட்டது என்ற தகவல், அன்றைய காலத்தில், இளைஞரணி செயலாளரான மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிமுகவை வீழ்த்திவிட்டு திமுக அரியணையில் அமர்ந்துவிடும் என்று சந்தோஷப்பட்ட மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் பதவியை குறி வைக்கிறார் விஜயகாந்த் என்பதை அறிந்தவுடன், திமுகவுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது. கூட்டணியில் தேமுதிக இல்லையென்றாலும் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை யாரும் பறித்துவிட முடியாது என்று கலைஞர் மு.கருணாநிதியிடம் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார் மு.க.ஸ்டாலின்.

விஜயகாந்தின் பிடிவாதம்.. மு.க.ஸ்டாலினின் புறக்கணிப்பு ஆகியவற்றால், அதிமுகவே மீண்டும் ஆட்சியை பிடித்தது. துணை முதல்வருக்கு ஆசைப்பட்ட விஜயகாந்த்தை, மக்கள் நலக் கூட்டணி முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தேர்தலை சந்தித்தன. 2005ல் கட்சியை ஆரம்பித்து 2006ல் தேர்தலை தனித்து சந்தித்த தேமுதிக எட்டு சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றது.

ஆனால், 2016ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் தேர்தலை சந்தித்த தேமுதிக, 3 சதவீதத்திற்குள் சரிந்தது.

2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக தலைமை ஏற்றததுதான் நடிகர் விஜயகாந்தின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துவிட்டது. செல்வி ஜெயலலிதாவால் எதிர்க்கட்சி தலைவராக உயரத்தை தொட்ட விஜயகாந்த், திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தவறவிட்ட வாய்ப்பால் அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மீள முடியாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தார்.

திரையுலகில் இருந்து முழுமையாக விலகி அரசியல் வாழ்க்கையில் ஆயுளையும் ஆஸ்தியையும் இழந்த நடிகர் விஜயகாந்தின் பரிதாப நிலையை பார்த்து, அவரால் திரையுலகில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல இயக்குநர்கள், கதாநாயகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்தார்கள்.

ஆனால், 2011ல் விஜயகாந்தை கடுமையாக தாக்கிய நடிகர் வடிவேலு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் பகையை மறக்காமல் இருந்ததால், 2016ல் மட்டுமல்ல, அடுத்தடுத்த ஆண்டுகளில் உடல் மிகவும் நலிவுற்று அமெரிக்கா, சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகும் கூட நேரில் சந்தித்து விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவில்லை நடிகர் வடிவேலு.

விஜயகாந்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வடிவேலு மனம் கலங்கவில்லை. நடிகர் நாசர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பிரபலங்கள் நடிகர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்து வந்துள்ளார்கள்.

நடிகர் வடிவேலு பழைய பகையை மறந்துவிட்டு விஜயகாந்த்தை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக நிற்க வேண்டும். பழைய தவறுக்கு பிராயச்நித்தம் தேடுவதற்கு நடிகர் வடிவேலுக்கு இன்றைய காலமே பொருத்தமாக இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்கள் விஜயகாந்திற்கும் வடிவேலுவுக்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மதுரை மண்ணின் திரையுலக பிரபலங்கள்.

மனம் வருந்தி, நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து நலம் விசாரித்தால், நிஜவாழ்க்கையிலும் நடிகர் வடிவேலு மாமனிதனாக திகழ்வார்.
நன்றி நண்பர்களே மற்றொரு சிறப்பு செய்தி தொகுப்போடு சந்திக்கிறோம்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த்தை பொதுமக்களின் பார்வைக்கு முன் நிறுத்தாத பிரேமலதா, தேமுதிகவை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, விஜயகாந்தின் உயிரோடு விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரது ரசிகர்கள்,தேமுதிக நிர்வாகிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். விஜயகாந்த்திற்கு சுயநினைவு இருக்கிறதா என்று இத்தனை காலம் சந்தேகப்பட்டு வந்த அவரது ரசிகர்களை பதைபதைக்கும் வகையில் தேமுதிக பொதுக்குழுவிற்கு அழைத்து வந்தார் பிரேமலதா.

மேடையில் அமர வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த், உயிரோடு இருக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பும் விதமாகதான், அவரது உடல், இருக்கையில் இருந்து சாய்ந்தது. அப்போது கூட இரக்கம் கொள்ளாத பிரேமலதா, கட்சி நிர்வாகிகளின் துணையோடு மீண்டும் நிமிர்ந்து உட்காரும் வகையில், விஜயகாந்தின் உடலை சரி செய்ய வைத்தார்.

விஜயகாந்த்தின் பரிதாபநிலையை பார்த்து, ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களும் மனம் வெம்பி, அழத் தொடங்கியதுதான் துயரமானது. பிரேமலதா என்ற ஈவு இரக்கமில்லாதவரிடம் சிக்கிக் கொண்டு விஜயகாந்த் படும் துயரம், வேறு யாருக்கும் வரக்கூடாது என்று மனம் துடிக்க துடிக்க பேசுகிறார்கள் அவரின் ஆரம்ப கால வளர்ச்சியில் பெரிதும் துணை நின்ற திரையுலக பிரமுகர்கள்.

பிரபஞ்ச சக்தியே… விஜயகாந்த்திற்கு நினைவுகள் திரும்ப ஆற்றலை கொடு.. என்பதுதான் விஜயகாந்த்தை மனப்பூர்வமாக நேசிப்பவர்களின் ஒட்டுமொத்த வேண்டுதலாக இருந்து வருகிறது.