மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள சென்னை மக்களின் கோபம் ஒட்டுமொத்தமாக திராவிட மாடல் ஆட்சி மீது பாய்ந்து கொண்டிருந்தாலும் கூட, ஒரே ஒரு அமைச்சரை, அதுவும் பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசுவை சென்னை மக்கள் வெகுவாக பாராட்டிக் கொண்டிருப்பதுதுன் வியப்பிற்குரிய செய்தியாகும்.
அடை மழை பெய்ய தொடங்கிய நேரத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், 24 மணிநேரத்திற்குள்ளாக மீண்டும் உயிர்த்து எழுந்ததால், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை மனதார பாராட்டும் மக்களின் எண்ணிக்கை தான் மிகமிக அதிகம்.
மின்சார வாரியத்தில் சத்தம் இல்லாமல் அமைச்சர் தங்கம் தென்னரசு நிகழ்த்திக் கொண்டிருக்கும் சீர்த்திருத்தங்களை பார்த்து, ஒட்டுமொத்த மின்சார வாரியமும் அமைச்சர் தங்கம் தென்னரசுவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சோகத்தில், சிறுதுளி அளவுக்கு நிம்மதியை தருகிற விடயமாகும்..
6 மாதங்களுக்கு முன்பு மின்சாரத்துறைக்கு கூடுதலாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட போது, நல்லரசு சுட்டிக்காட்டிய தவறுகளை எல்லாம் அமைச்சர் தங்கம் தென்னரசு களைந்திருக்கிறார் என்ற தகவலால் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருசேர தாக்கியதைதான் விவரிக்கிறது இன்றைய சிறப்பு செய்தி தொகுப்பு….
திராவிட மாடல் ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எப்போதுமே எழுவதில்லை.
பொறுமை, நிதானம், மனிதநேயம் ஆகிய நற்பண்புகளை கொண்டவர் தங்கம் தென்னரசு என்று விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களிடமும் நற்பெயரை பெற்றிருப்பவர்.
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டிருக்கும் இந்த நேரத்தில், மின்சார வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என ஒட்டுமொத்த துறையுமே உயிரைக் கொடுத்து பணியாற்றி வருகிறார்கள் என்பதை சென்னை மாநகரில் உள்ள மக்கள் அனைவருமே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மிக்ஜாம் புயல் விஸ்வரூபத்தை காட்டிய டிசம்பர் 4 நள்ளிரவு நேரத்தில் சென்னை மாநகர் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புயலும் மழையும் போட்டி போட்டுக் கொண்டு சென்னை மாநகரை தாக்க தொடங்கிய திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு வரை சென்னை மாநகரமே இருளில் மூழ்கியது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழை, 2015 ஆம் ஆண்டை விட சென்னை மக்களை பெரிதும் அச்சுறுத்தியது.
வடசென்னையும், தென் சென்னையும் அதிகமாக பாதிக்கப்பட்ட நேரத்தில், சென்னையின் இதயப்பகுதியான மத்திய சென்னையில், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் மின்சார விநியோகம் டிசம்பர் 5 ஆம் தேதி மாலையே மீண்டும் உயிர்த்தெழுந்தது.
டிசம்பர் 6 ஆம் தேதியன்று, செவ்வாய்கிழமை மாலையில் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீரானதை பார்த்து பொதுமக்களே வியப்பில் ஆழ்த்தனர். வடசென்னை மற்றும் தென்சென்னையில் டிசம்பர் 6 ஆம் தேதி கூட சில பகுதிகள் இருளில் மூழ்கி கிடந்த நேரத்தில், புயல் கரையை கடந்த 24 மணிநேரத்திற்குள் சென்னை ஒளி வெள்ளத்தில் மிளிர்ந்தது என்றால், அதற்கு முக்கிய காரணம், மின்சார வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் மிதமிஞ்சிய உழைப்புதான்.
வழக்கமாக மின்சார வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் என்றாலே பொதுமக்களிடம் ஒருவித வெறுப்புணர்வு தலை தூக்கும். காலம் காலமாக இருந்து வரும் வெறுப்புணர்வை மிக்ஜாம் புயல் பகுதியளவு துடைத்தெறிந்து விட்டது என்றே கூறலாம்.
2015 ஆம் ஆண்டில் புயலையொட்டி துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீரமைப்பதற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் ஆனது. ஆனால், மிக்ஜாம் புயல் தாக்குதலின் போது, 30 மணிநேரத்தில் மின்விநியோகம் சீரானதை பார்த்து வியந்து போன சென்னை மாநகர மக்கள், மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மிக்ஜாம் புயல் தாக்குதல் குறித்த அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பே, மின்சார வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் மற்றும் தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கூட்டத்தை பலமுறை கூட்டி ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
400 மெகாவாட் அளவுக்கு மின்சார விநியோகத்தை டிசம்பர் 5 ஆம் தேதியே தமிழ்நாடு மின்சார வாரியம் சீராக்கியதற்கு ஒட்டுமொத்த பாராட்டும் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சாரும்.
வெளிமாவட்டங்களில் இருந்து 400 மின்சார துறை பொறியாளர்கள் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, இரவு பகல் பாராமல் தடைபட்ட மின்சாரத்தை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது சாதாரணமாக கடந்து போகிற விடயம் அல்ல.
உண்மையிலேயே போர்க்கால நடவடிக்கை தான் என்று வியப்பு மேலிட பாராட்டுகிற அளவுக்குதான் மின்சார வாரிய பணியாளர்களின் சேவை, மெச்சதகுந்த வகையில்தான் அமைந்திருக்கிறது.
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மின்விநியோக பெட்டிகளை சீரமைப்பது என்பது கடுமையான வேலையாகும். முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு மின்சார பணியாளர்கள் கடமையுணர்வோடு செய்த வேலைகளை நேரில் பார்த்த மக்கள், மனம் நெகிழ்ந்து போய் இருக்கிறார்கள்.
புயல் தாக்குகிறது என்று செய்தி வெளியாகும் போதெல்லாம், சென்னை மாநகரை பொறுத்தவரை மாநகராட்சி பணியாளர்கள் மீதுதான் மக்கள் கோபம் அதிகமாகவே இருக்கும். மிக் ஜாம் புயல் தாக்குதல் போது,, ஒட்டுமொத்த அமைச்சரவையும் சென்னையில் முகாமிட்டது.
நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளுக்கு பொறுப்பு ஏற்றிருக்கும் அமைச்சர்கள் மீது மக்களின் கோபம் அதிகமாக இருந்ததே தவிர, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக மக்களின் கோபம் அதிகமாக எழவில்லை என்றே சொல்லாம்.
ஒன்றிரண்டு பகுதிகளில் மின்விநியோகம் உடனடியாக சீராகாத போது சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று இருக்கிறது என்பதை மறைப்பதற்கு இல்லை.
மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில், மிகவும் நிதானமாக அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை விரிவாக எடுத்துரைத்தார்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் முழுவதுமாக வடியவில்லை. உயிர் இழப்புகளை தடுக்கவே மின்விநியோம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மழைநீர் அகற்றப்பட்டவுடன் மின்னல்வேககத்தில் மின்விநியோகம் சீராகிவிடும் என்று கூறி பொதுமக்களை அமைதிபடுத்தினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
திராவிட மாடல் ஆட்சியில் தங்கம் தென்னரசுவக்கு முன்பாக மின்சாரத்துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இரும்புக் கர பிடி போல மின்சார வாரியத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்சார வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என ஒட்டுமொத்த துறைக்குமே முழு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார்,
நெருக்கடி மிகுந்த காலத்தில் பொறியாளர்கள், உயர் அலுவலர்களின் ஆலோசனைகளுக்கு பொறுமையாக செவி மடுக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்த போது நெருப்பு மீது நிற்பதை போன்ற உணர்வே இருந்து கொண்டிருக்கும். ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பு ஏற்ற பிறகு, நிம்மதியாக வேலை செய்ய முடிகிறது என்று மனம் திறந்து பேசுகிறார்கள் மின்சார வாரிய பொறியாளர்கள்.
தலைமை பொறியாளர் முதல் சாதாரண பணியாளர்கள் வரை, அவரவரின் உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தை தந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. தான் வைத்ததுதான் சட்டம் என்று பிடிவாதம் காட்டாமல் பொறுமையாக, நிதானமாக, உண்மையான அக்கறையோடு மின்சார வாரியத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு என்று மனம் திறந்து பாராட்டுகிறார்கள் மின்வாரிய ஒப்பந்ததாரர்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார துறைக்கு தலைமை ஏற்றவுடனேயே, சேர்மன் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸை, அடிமை போல ஆக்கிவிட்டார். சுயசிந்தனையோடு அலுவல் சார்ந்த எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது. அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்த வேண்டும். மனிதாபிமானத்தோடு ஒரு பணியாளரை, பொறியாளரை கூட பணி மாறுதல் செய்ய கூடாது. அமைச்சர் அலுவலகத்திற்கு தெரியாமல் சிறிய அளவிலான மாறுதல்களை கூட செய்யக் கூடாது என்று கண்டிப்பான கட்டளைகளை போட்டு, ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்ஸை சிறையில் அடைத்து வைத்திருப்பதை போன்று சித்ரவதையை செய்து கொண்டிருந்ருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
ஐஏஎஸ் என்ற பதவிக்குரிய ஆளுமை குணத்தோடு ராஜேஷ் லக்கானி செயல்படுவதை தடுக்கும் வகையில் உளவாளி ஒருவரையும் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தி வேவு பார்த்தவர்தான் செந்தில்பாலாஜி என்கிறார்கள் வேதனையோடு மின்வாரிய உயர் அலுவலர்கள்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தான் வைத்துதான் சட்டம் என்ற வகையில்தான் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் இரண்டு ஆண்டுகளாக அமைந்திருந்தது. ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு, ஐஏஏஸ் அதிகாரிக்கு, தலைமை பொறியாளர்களுக்கு, செயற் பொறியாளர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையை சிறிது தயக்கம் இன்றியும் வழங்கியிருக்கிறார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் நிர்வாகம் என்பது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இருண்ட காலமாகும். இருளை அகற்றும் கதிரவன் போல அமைச்சர் தங்கம் தென்னரசு தோன்றி, மின்சார வாரியத்தைதயே பிரகாசமாக மாற்றிவிட்டார்.
நேர்மை குணம் கொண்ட தலைமை பொறியாளர்களை கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு சகல விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருந்த செயற் பொறியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தலைமை பொறியாளர்கள் பணியாற்றிய பதவிகளில் அமர வைத்து, சட்டத்திற்கு புறம்பாக ஆதாயத்தை அறுவடை செய்தார். பொன் முட்டையிடும் வாத்து போன்ற மின்சார வாரியத்தை பொறுமையாக கையாள்வதற்குப் பதிலாக, ஒருநாளில் அறுத்து ஒட்டுமொத்த ஆதாயத்தையும் அடைந்துவிட வேண்டும் என்று துடித்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரின் அசுரப்பசிக்கு மின்சார வாரியத்தால் ஈடுகொடுக்க இயலாமல், நாளுக்கு நாள் நலிவுற்றது.
திராவிட மாடல் ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் குற்றுயிராக ஆக்கப்பட்ட மின்சார வாரியம், உயிர் பிழைத்தத்தற்கு காரணமாக இருப்பவர் அமைச்சர் தங்கம் தென்னரசுதான் என்று மிகுந்த மனநிம்மதியோடு கூறி சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள் தலைமை பொறியாளர்கள்.
மிக்ஜாம் புயல் உருவாகி வருகிறது என்ற செய்தி வெளியான நாளில் இருந்தே களத்தில் நின்றவர் அமைச்சர் தங்கம் தென்னரசு. அசுர வேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால்தான் குறுகிய இடைவெளியில் மின்சார சப்ளையை துரிதமாக வழங்க முடிந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வதைப் போல, மின்சார வாரியத்தின் அசுர வேக பணிக்கு முழு முதற் காரணம் அமைச்சர் தங்கம் தென்னரசுதான்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவை பொறுத்தவரை ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது கடமையை செய்து கொண்டிருப்பவர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன், அவரிடமிருந்த மின்சார துறை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தேதியிலேயே மின்சார வாரியத்தின் நேர்மையான தலைமை பொறியாளர்கள் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டிருப்பதை நல்லரசு சுட்டிக்காடியது என்று மலரும் நினைவுகளில் மூழ்கிய பொறியாளர்கள், ஓராண்டுக்கு மேலாக மனம் வெதும்பி கொண்டிருந்த தலைமை பொறியாளர்களை சந்தோஷமாக மீண்டும் பணியாற்ற அனுமதித்தவர் அமைச்சர் தங்கம் தென்னரசு என்று பூரிப்போடு கூறுகிறார்கள்.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தலைமை பொறியாளர் பணியிடத்தில் கணவனும், மனைவியும் ஒருசேர அமர்ந்து கொண்டு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வந்ததை நல்லரசு செய்தியின் மூலம் அறிந்து கவலை கொண்டவர் அமைச்சர் தங்கம் தென்னரசு என்கிறார்கள் அனல்மின்நிலைய பணியாளர்கள்.
செயற்பொறியாளர் அந்தஸ்தில் இருந்த கணவரை, அனல்மின்நிலையத்தில் இருந்து மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு மாற்றி விட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு. தலைமை பொறியாளர் போல ஆட்டம் போட்ட அவரது மனைவியான செயற்பொறியாளர்களுக்கு மாற்று பணியிடம் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
கணவன், மனைவி ஆகிய இருவரும் தண்டிக்கப்பட்டதை பார்த்து, வடசென்னை அனல்மின்நிலைய பணியாளர்கள் மிகுந்த சந்தோஷமாக உள்ளார்கள்.
கருணை உள்ளத்தோடு மின்சார வாரிய பணியாளர்களை அணுகும் அதே நேரத்தில் தவறுக்கு மேல் தவறு செய்யும் பொறியாளர்களை தண்டிப்பதிலும் உறுதியான மனநிலையோடு இருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் செயல்பாடுகளைப் பார்த்து, ஒட்டுமொத்த மின்சார வாரியமும் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விடுதலையை பெற்று தந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கருணையால், மின்சார வாரியத்தின் சேர்மன் பதவியே வேண்டாம் என்று இரண்டு ஆண்டுகள் சொல்லிக் கொண்டிருந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் கூட இப்போது உற்சாகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறை தீர்வு நாளில் கோரிக்கை மனுக்களோடு வரும் பொறியாளர்கள், பணியாளர்களுக்கு பணிமாறுதல் வழங்கி, ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்ஸும் புண்ணியம் தேடிக் கொள்கிறார்.
மின்சார துறைக்கு தொடர்ந்து அமைச்சராகவே தங்கம் தென்னரசு நீடித்தால், லட்சம் கோடி கடனில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைப்பதற்கு கூட நல்ல காலம் பிறந்துவிடும் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் மின்சார வாரிய பணியாளர்கள் சங்க நிர்வாகிகள்…