அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஒரு சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெறுவதே கேள்விக்குறியாகவிட்ட நேரத்தில், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் டிடிவி தினகரன்தான் என்று நாள்தோறும் ஓயாமல் கூறிக் கொண்டிருக்கும் பைத்தியத்தை பற்றி தான் இன்றைய சிறப்பு செய்தியில் விரிவாக பார்க்க இருக்கிறோம்..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடியார் தலைமையிலான அதிமுக, வட்டார கட்சியாக மாறிவிட்டது என்று நக்கலாக பேட்டியளித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் சொந்த சாதி செல்வாக்கு நிறைந்த தொகுதியான கோவில்பட்டியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி அவமானகரமான தோல்வியை சந்தித்தவர்தான் டிடிவி தினகரன்.
கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் பெற்ற வாக்குகள் கூட, கயத்தாறு நகரில் மட்டுமல்ல, கோவில்பட்டி தொகுதி முழுவதும் மிகுந்த செல்வாக்கை பெற்றிருக்கும் மாணிக்க ராஜாவின் கடுமையான உழைப்பால் கிடைத்தவைதான்.
2017ல் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அப்போதைய எதிர்க்கட்சியான திமுக, ஆளும்கட்சியான அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக டிடிவி தினகரன் களத்தில் இறங்கிய போது, ஊடகங்கள் மூலம் கிடைத்த விளம்பரமும் மன்னார்குடி குடும்பத்தின் சொத்தான நயவஞ்சக குணமும் தான், டிடிவி தினகரனின் வெற்றியை உறுதி செய்ததுடன், ஒப்பற்ற தலைவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த வைத்தது.
2016 நிறைவில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா காலமானதையடுத்து, தர்மயுத்த நாயகர் ஓ.பன்னீர்செல்வத்தின் கபட நாடகம் அட்டர் பிளாப் ஆக, விபத்து போல அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்.
அன்றைய தேதியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையும் தன் காலடியில்தான் என்ற ஆணவத்தில் இருந்தவர்தான் டிடிவி தினகரன்.
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில், அவரின் இல்லமான போயஸ் கார்டனில் அமைச்சர்கள் அடிமைகள் போல வரிசைகட்டி நின்றதை நினைவுக்கூர்ந்து, செல்வி ஜெயலலிதாவுக்கு கிடைத்து வந்த பயம் கலந்த மரியாதையை தனக்கும் தர வேண்டும் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களையும் துன்புறுத்தியவர்தான் டிடிவி தினகரன்.
ஆளுமை குணமே இல்லாத மன்னார்குடி குடும்பத்திற்கு நயவஞ்சம் மட்டுமே உடல் முழுவதும் பரவியிருக்கிறது.
செல்வி ஜெயலலிதாவை ஆட்டுவித்ததைப் போல, எடப்பாடியார் தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையும் சுண்டு விரலுக்கு கூட கட்டுப்பட்டு நிற்க வேண்டும் என்று அதிகார திமிரை வெளிப்படுத்தியவர்தான் டிடிவி தினகரன்.
2016 ல் முதல்முறையாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்ற போது, ஓபிஎஸ் அணியை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக களத்தில் நின்ற டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அமைச்சரவையும், அதிமுக மாவட்ட செயலாளர்களும் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர்.
அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தெரு தெருவாக வாக்கு சேகரித்த நேரத்தில், கால்கள் தரையிலே படாத வரம் பெற்ற மகாராஜா போல டிடிவி தினகரன், தனது வீட்டில் வெட்டியாக அமர்ந்து கொண்டு பொழுதை கழித்த நேரம்தான் அதிகம்.
அதைவிட கொழுப்பு எடுத்து செய்த மற்றொரு காரியம்தான், மிகவும் மட்டரகமானது.
அதிமுக ஆட்சியின் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியையும் தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்பி வைத்த டிடிவி தினகரன், முதல் அமைச்சர் பதவிக்கு உரிய கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், எடப்பாடி பழனிசாமியை தெரு தெருவாக அலைய விட்டவரும் டிடிவி தினகரன்தான்.
எடப்பாடி பழனிசாமி எங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பட்டியலிட்டு அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் என்ற அதிகாரத்திமிரோடு அறிக்கை வெளியிட்டவரும் டிடிவி தினகரன்தான்.
ஆடறா ராமா.. ஆடறா ராமா என்று சாட்டைக்கு ஆடும் குரங்கைப் போல, குதித்துக் கொண்டிருந்த இபிஎஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களும், சட்டமன்றத் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் விழித்துக் கொண்டார்கள்.
நான்காண்டு சிறைத்தண்டனையில் வி.கே.சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரால் அதிமுகவிற்கும், ஆட்சிக்கும் ஒரு புண்ணியமும் இல்லை. அவரால் சோளக்காட்டு பொம்மை போல, துணை பொதுச் செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்ட டிடிவி தினகரனுக்கு ஏன் அடிபணிந்து நடக்க வேண்டும் என்று திமிறி எழுந்தது இபிஎஸ் தலைமையிலான ஒட்டுமொத்த அதிமுக அமைச்சரவை.
நன்றிக்கடன், உண்மையான விசுவாசத்திற்கு எல்லாம் மன்னார்குடி கும்பலிடம் மரியாதை இருக்காது என்ற உண்மையை உணர்த்துக் கொண்டு, டிடிவி தினகரனை ஒருநாளில் கிள்ளுக்கீரை போல தூக்கியெறித்தது இபிஎஸ் தலைமையிலான அதிமுக அமைச்சரவை.
அதிமுக கட்சியும் ஆட்சியும் மன்னார்குடி குடும்பத்தின் பரம்பரை சொத்து என்ற ஆணவத்தில், அதிமுகவையே பிளப்பதற்கு துணிந்தார் டிடிவி தினகரன். அன்றைய தேதியில் செல்வி ஜெயலலிதாவுக்கு இணையான செல்வாக்கு படைத்தவர் என்ற பிம்பத்தை கட்டமைப்பதற்கு பிரபலமான ஊடகவியலாளர்கள் பலர் களத்தில் இறக்கப்பட்டனர். தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் செல்வாக்கு இல்லாத போதும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களை கரண்ஸி நோட்டுகளால் விலைபேசி விட்டனர்.
பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்கிற நேரத்தில், செல்வி ஜெயலலிதா உயிரோடு காலத்தில் பதுங்கு குழியில் மறைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த டிடிவி தினகரனை, வான் அளவுக்கு உயர்த்தி பிடித்தன ஊடகங்கள்.
டிடிவி தினகரன் வாயை திறந்தாலே தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறிவிட்டது என்பதை போல பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பிரசாரம் செய்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு, 18 எம்எல்ஏக்களை தனி அணியாக பிரித்து, கண்ணாமூச்சி ஆடினார் டிடிவி தினகரன். அதே காலகட்டத்தில், தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ்ஸும் செல்வி ஜெயலலிதா உருவாக்கி தந்த ஆட்சியை கவிழ்க்க இருதுருவங்களாக நின்று கத்திகளை வீசிக் கொண்டிருந்தனர்.
ஆட்சி அதிகாரத்தை குறுகிய காலத்திற்குள்ளாகவே ருசி பார்த்திருந்த எடப்பாடி பழனிசாமி, மத்திய பாஜக அரசின் செல்வாக்கோடு, டிடிவி தினகரனையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் செல்லாகாசாக்கினார். இருவரின் சொந்த சமுதாய மக்கள், அதிமுகவுக்கு எதிரான நின்று மிரட்டிய போதும், அசராமல், தன் நிலையை அழுத்தம் திருத்தமாக கட்டமைத்துக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி.
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது டிடிவி தினகரன் தலைமையிலான அணி, 15க்கும் மேற்பட்ட எம்பி தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிகுந்த சமுதாய தலைவர்கள் பொய் பிரசாரத்தை பரப்பினர். மூத்த ஊடகவியலாளர்கள் சிலரும், டிடிவி தினகரன் தலைமையிலான அணியை விட ஆளும்கட்சியான அதிமுகவின் வேட்பாளர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் வெற்றி பெறுவார்கள் என்று எகத்தாளம் செய்தார்கள் டிடிவி தினகரனின் அடிபொடிகள்.
அதிமுகவிற்குள்ளேயே முட்டல்கள் அதிகரித்ததையடுத்து, திமுக கூட்டடணி 38 தொகுதிகளில் அசால்ட்டாக வெற்றி பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் டிடிவி தினகரனின் செல்வாக்கை வெட்ட வெளிச்சமாக்கியதை அடுத்து, அவரை அதிமுகவில் இருந்து வெளியேறிய 18 எம்எல்ஏக்களின் அரசியல் வாழ்க்கையும் அற்ப ஆயுளில் முடிவுக்கு வந்துவிட்டது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போதைய பாஜக தலைவர் அமித்ஷா மூலம், எடப்பாடி பழனிசாமியை பணிய வைத்து, 11 சட்டமன்றத் தொகுதிகளை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என ரகசியமாக போராடி பார்த்தார் டிடிவி தினகரன்.
ஆனால், அதிமுக ஆட்சி மீது பொதுமக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது என்ற எண்ணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை ஒருபோதும் அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று உறுதிபட கூறியிருக்கிறார்.
அன்றைய தேதியில் எடப்பாடி பழனிசாமியை ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருந்த அமித்ஷா, கையறு நிலையில் டிடிவி தினகரனை நட்டாற்றில் தள்ளிவிட்டு டெல்லிக்கு நள்ளிரவிலேயே பறந்து விட்டார்.
2016 க்கு முன்பு போயஸ் கார்டனில் வாசலில் தவமாய் தவமிருந்த எடப்பாடி பழனிசாமி போல, முதல் அமைச்சராக பதவியில் அமர்ந்திருப்பவர் இல்லை என்பதை அன்றைய காலகட்டத்திலேயே உணர்ந்து கொண்டவர்தான் டிடிவி தினகரன்.
2021 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுகவிற்குள் கலகத்தை மீண்டும் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் நின்று கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்து வந்தார்.
அதே சட்டமன்றத் தேர்தலிலேயே ஆளும்கட்சியான திமுகவிற்கே அச்சம் மூட்டும் வகையில் 66 அதிமுகவுடன் எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக விஸ்வரூபம் காட்டினார் எடப்பாடியார்.
டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகிய மூன்று பேரும் கடந்த மூன்று ஆணடுகளாக எடப்பாடி பழனிசாமியை அட்ரஸ் இல்லாமல் செய்வதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதி பார்த்தார்கள். சாதி பலத்தை காட்டியும் அச்சுறுத்தினார்கள்.
எதிரியின் பலத்தை நன்கு அறிந்து கொண்டும், செல்வி ஜெயலலிதாவின் லட்சியத்தையும் கனவையும் நிறைவேற்றும் வகையில், திமுகவின் நெம்பர் ஒன் எதிரி அதிமுக என்ற பாதையிலேயே பயணித்து, அதிமுகவின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் அந்தஸ்துக்கே உயர்ந்துவிட்டார்.
தென் மாவட்டங்களில் சமுதாய உணர்வோடு இருந்து வந்த மக்கள் கூட, இன்றைய தேதியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதையும் திமுக எதிர்ப்பில் உறுதியாக நிற்பதையும் பார்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை நோக்கி சாரை சாரையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல்களில் நின்றால் கூட வெற்றி பெறுவது சுலபமல்ல என்ற அளவுக்கு செல்வாக்கை இழந்து நிற்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியார் ஒரே குரலில் எடப்பாடி பழனிசாமியை தலைமையிலான அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை என்று கூறுவதை அவரவர் வீட்டு குழந்தைகள் கூட நம்ப தயாராகவில்லை.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, டிடிவி தினகரனுடன் ஒட்டி உறவாடியாக அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஒருவர் கூட இன்றைய தேதியில் இல்லை. 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை டிடிவி தினகரனுடன் இருந்த அதிமுக ஆளுமைகளும் டாட்டா காட்டிவிட்டார்கள்.
தனியெருவராக வீம்புடன் சுற்றிக் கொண்டிருக்கும் டிடிவி தினகரனின் இன்றைய நிலையைப் பார்த்து, அவரது முன்னாள் ஆதரவாளர்களே வருத்தப்படும் அளவுக்குதான் நிலைமை படுமோசமாக இருக்கிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அடையாளம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு கூட நிர்வாகிகள் ஒருவர் கூட கண்ணில் படவில்லை.
டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் நம்ப தயாராக இல்ல. வி.கே.சசிகலாவும் முழுமனதோடுஆதரிக்க தயாரில்லை.
செல்வி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கொள்ளையடித்த பணத்தை வைத்து உருவாக்கிய ஜெயா டிவியில் டிடிவி தினகரன் பெயரே உச்சரிக்கப்படுவதில்லை.
புள்ளி ராஜா போல பரிதாபத்திற்குரியவராக மாறியிருக்கும் டிடிவி தினகரனைதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கூவிக் கொண்டிருக்கிறார் திருப்பூர் விசாலாட்சி. திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயரான விசாலாட்சி, தனக்கு அரசியல் வெளிச்சத்தை கொடுத்த மன்னார்குடி குடும்பத்தின் மீது வைத்துள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே டிடிவி தினகரனை வானாளவுக்கு கொண்டாடி வருகிறார்.
சொந்த சமுதாய மக்கள் கைவிட்டதால், நடு வீதிக்கு வந்துவிட்ட பிறகும் கூட டிடிவி தினகரன் மீது நம்பிக்கை வைத்து, தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று ஓயாமல் கூவிக் கொண்டிருக்கும் திருப்பூர் விசாலாட்சியை முழு பைத்தியமாகதான் பார்க்கிறது நல்லரசு என்பதல்ல செய்தி. விசாலாட்சி அழைக்கும் போதெல்லாம் ஓடோடி செல்லும் ஒன்றிரண்டு அமமுக நிர்வாகிகள், பாசத்திற்குரிய அக்கா, முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டாரே என்றுதான் கவலையோடு பேசுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு நல்லரசு முன் வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், டிடிவி தினகரன் மீது பக்தியோடு இருக்கும் திருப்பூர் விசாலாட்சியை அதிமுகவில் சேர்த்து, 2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பதுதான்.
விசாலாட்சி போன்ற அடிமைகள் அதிமுகவுக்கு அவ்வளவு எளிதாக கிடைத்து விடமாட்டார்கள்.