Sat. Nov 23rd, 2024

தாரை இளமதி., சிறப்பு செய்தியாளர்

ஆட்சியாளர்களை மகிழ்விப்பது பணியா அல்லது மனவேதனையில் உள்ள மக்களின் குரலாக ஒலிப்பது ஊடகக் கடமையா? என்றால் இரண்டாவதையே எப்போதும் தேர்வு செய்து வருகிறேன்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

இந்தக் குறளை தராசு ஆசிரியர் ஷ்யாம் 500 க்கும் மேற்பட்ட முறை பொதுக் கூட்டங்களில் உரக்க கூறியதை 1993 -1996 காலகட்டத்தில் திரும்ப திரும்ப கேட்டது,  தாய்ப்பாலை போல ஊக்கம் கொடுத்து இருக்கிறது.

நந்தகுமார் ஐஏஎஸ், திராவிட மாடல் ஆட்சியில் மிகவும் அதிகாரம் படைத்த உயர் அதிகாரியாக இருக்கிறார் என்பது அவர் பணியாற்றும் துறைகள் மூலம் அம்பலமாகி கொண்டு இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் இதற்கு முன்பு இல்லாத நடைமுறையாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டார் நந்தகுமார் ஐஏஎஸ்..அவரின் சீரிய நிர்வாகத்தால் மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதுவது தடுக்கப்பட்டது.

அதற்கு பதிலாக ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் போல அன்றாட பணிகளை எழுதும் நிலை உருவாகி விட்டது. பள்ளி பருவத்தில் மாணவர்கள் படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள், ஆட்டம் பாட்டம் என்று பள்ளி கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடந்து வரட்டும் என்று முடிவெடுத்து விட்டதை பெற்றோர்களே ஆரவாரமாக வரவேற்று கொண்டு இருக்கிறார்கள்.

நந்தகுமாரர் ஐஏஸின் நிர்வாகம் தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் மூடு விழா கண்டிருக்கும்.

செல்வாக்கு மிகுந்த ஆணையர் பதவியில் இருந்து, அதிகமாக பிரபலமாகாத பொதுத் துறைக்கு மாற்றப்பட்ட போது அவரது நலம் விரும்பிகள் அதிர்ச்சியடைந்தார்கள். அதீத திறமை படைத்த அதிகாரியை அரசு பணியாளர்களின் பணி பதிவேடுகளை பார்க்கும்+ பராமரிக்கும் சாதாரண துறைக்கு செயலாளராக நியமிக்கபட்டிருக்கிறாரே என்று வேதனையடைந்தார்கள். அவர்கள் வேதனை அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்பது தான் நிம்மதி தரக்கூடிய இன்றைய சிறப்பு செய்தி.

யார் கண் பட்டதோ.,பொதுத் துறைக்கு மாற்றப்பட்டார் நந்தகுமார் ஐஏஎஸ் .

ஜுன் 30 ஆம் தேதி தலைமை செயலாளராக பதவி ஏற்ற சிவ தாஸ் மீனா ஐஏஎஸ் கையெழுத்து போட்ட முதல் உத்தரவே பொதுத் துறை செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ் பணி மாற்றத்திற்கானது தான்.

பழைய திரைப்படம் ஒன்றில் நடிகர் சத்யராஜ் காவல் துறை (DSP) துணை கண்காணிப்பாளராக ஒரு ஊருக்கு மாறுதல் ஆகி செல்வார். மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகளை அடித்து நொறுக்குவார். மனவேதனையுடன் கட்டளையை நிறைவேற்றிய காவலர் ஒருவர், “என்ன தப்பு செய்தார்கள் ? ஏன் கடைகளை அடித்து நொறுக்க சொன்னீர்கள்?” என்று கேட்பார். அப்போது “ஒரு எம்எல்ஏ, அமைச்சர், அரசியல்வாதி ஊருக்குள் வந்தால் மக்களுக்கு பயம் வருகிறது. அவர்களின் வருகையை கொண்டாடுகிறார்கள். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி இடம் மாறி வந்தால் யாருக்கும் பயமே இருப்பதில்லை “என்று கலாய்த்து, வன்மம் நிறைந்த காவல்துறை அதிகாரிகளை அம்பலப்படுத்துவார் சத்யராஜ்.

அந்த திரைப்படக் காட்சியை இன்று நந்தகுமார் ஐஏஎஸ் கண் முன்னே நிறுத்திவிட்டார் என்று கண்ணீர் சிந்துகிறார்கள் தலைமை செயலக பணியாளர்கள்.

அசாதாரண மனிதர்கள்,  மூங்கில் மரத்தை கூட சந்தன மரமாக மாற்றுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நந்தகுமார் ஐஏஎஸ்தான்.

தலைமைச் செயலகத்தில் 10 ஆண்டு காலம் ஒரே துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் தட்டச்சர்+ எழுத்தர் போன்ற நிலையில் இருந்து அன்டர் செகரெட்டரி வரையில் உள்ளவர்களை வேறு துறைக்கு மாற்றும் நடவடிக்கையில் முனைப்பு காட்டிவருகிறார் நந்தகுமார் ஐஏஎஸ் என்கின்றார்கள்.

கல்வி துறையில் 10 ஆண்டு பணியாற்றி விட்டீர்களா? சமூக நலத்துறைக்கு போய் வேலை பாருங்கள் என்று கூறி 50க்கும் மேற்பட்ட துறைகளில் அதிரடி பணி மாற்றம் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.

வனத் துறையில் கண்காணிப்பாளராக உள்ள அதிகாரி,  அந்த துறையில் உள்ள அனைத்து விவகாரங்களும் விரல் நுனியில் வைத்து இருப்பார். அவரை போய் சுகாதார துறையில் பணியாற்று என்று கூறினால் அந்த துறையின் செயல்பாடுகளை புதிதாக கற்றுக் கொள்ள மாதக்கணக்கில் ஆகும். அதையும் தவிர, கீழ்நிலை பணியாளர் முதல் துணைச் செயலாளர் வரை 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் அறிமுகம் ஆகி கொண்டு அவரவர் மனநிலைக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும்.

ஒரே அடியாக. பணி மாற்ற விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறார் நந்தகுமார் ஐஏஎஸ். உடல்நிலை, குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களை கூறி இடம் மாற்றம் வேண்டாம் என்று கூறுபவர்களிடம் “அரசு வேலைக்கு வந்து விட்டால் எங்கு அனுப்பினாலும் மேல் அதிகாரி உத்தரவுக்கு அடிபணிந்து வேலை பார்க்க வேண்டும்” என்பது தான் நந்தகுமார் ஐஏஎஸ்ஸின் அறிவுரையாக இருந்து வருகிறது.

திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக கொந்தளிப்பில் உள்ள அரசு பணியாளர்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டு மனம் நொந்து போய் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் இடமாற்றம் என்ற பெயரில் இதுவரை இல்லாத நடைமுறையில் வேகம் காட்டுவது ஏன்?என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் தலைமை செயலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள்.

நந்தகுமார் ஐஏஎஸ்க்கு முன்பாக பொதுத் துறையில் செயலாளராக பணியாற்றிய மூத்த அதிகாரி ஜெகநாதன் ஐஏஎஸ் இருக்கும் இடம் தெரியாமல் பணியாற்றி கொண்டிருந்தார் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டுயிருக்கிறது.

 உயர் அதிகாரிகள் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை உபத்திரம் செய் யாமல் இருந்தாலே புண்ணியமாக இருக்கும் என்கிறார்கள் ஓய்வு நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசு அலுவலர்கள்.