Sat. Nov 23rd, 2024

மீனா ஜெயக்குமார்……. பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல…

கோவையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக உடன்பிறப்புகளுக்கு இடையே முக்கிய பேச்சாக இருப்பதே மீனா ஜெயக்குமாரின் தில்லான செயல்பாடுகளை பற்றிதான்.

வருமான வரித்துறையின் அதிரடி சோதனைக்குப் பிறகு, வேதனைக்கு உள்ளாகும் பிரபலங்கள் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆளும்கட்சி பிரபலங்களும் கூட விதி விலக்கல்ல..

அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடங்கி, திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் முறையே அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளால் வறுத்தெடுக்கப்பட்டார்கள்.

5 நாள் கெடுபிடி ரெய்டால் ஆத்திரம் அடைந்துவிட்டார் அமைச்சர் எ.வ.வேலு. அவரைத் தவிர மற்ற பிரபலங்கள், மத்திய பாஜக அரசுக்கு எதிராக அடக்கியே வாசித்தார்கள்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சிறை வாசம், ஒட்டுமொத்த திமுக அமைச்சர்களையும் ஆட்டம் காணவே செய்திருக்கிறது என்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள்.

நவம்பர் மாத கோட்டாவில் அடுத்து, யார் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்.. வருமான வரித்துறை எப்போது  அதிரடி காட்டும் என மூத்த அமைச்சர்களே ஒருவருக்கு ஒருவர் ரகசியமாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுகவின் பொதுச் செயலாளரும் இரண்டாம் கட்ட தலைவருமான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனே, ஒவ்வொரு நாளும் திக்..திக்..என்றே நாளை கடத்தி கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

மத்திய பாஜக அரசின் விசாரணை அமைப்புகளின் அதிரடியை பார்த்து திமுக மூத்த தலைவர்களே பயந்து கொண்டிருக்கும் போது, மீனா ஜெயக்குமார் செம குஷியாக இருப்பதாக கூறுகிறார்கள் அவரது விசுவாசிகள்.

கோவை மாவட்ட திமுகவினருக்கு மட்டுமே தெரிந்திருந்த மீனாவை, தமிழ்நாட்டை கடந்து, இந்தியாவை கடந்து, உலகளவில் பிரபலமடைய வைத்துவிட்டது வருமான வரித்துறை.

மீனா மற்றும் அவரது மகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் மூலம் அமைச்சர் எ.வ.வேலுவுடன் உள்ள தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டதே,  மீனா ஜெயக்குமாரின் சந்தோஷத்திற்கு காரணம் என்கிறார்கள் கோவை திமுக பிரமுகர்கள்.

மீனா ஜெயக்குமாரை பற்றி யூ டியூப்புகளில் வெளியான செய்தி,  பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை  சென்றடைந்திருக்கிறது.

அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் குறித்த செய்திகள் ஏற்படுத்திய அதிர்ச்சியை விட, மீனா ஜெயக்குமாரை பற்றி, ஆதியும் அந்தமுமாக வெளிப்படுத்தப்பட்ட விறுவிறுப்பான செய்திகள்தான், யூ டியூப்களில் தீயாக பரவியது.

வருமான வரித்துறை சோதனைப் பற்றி செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, மீனா ஜெயக்குமாரை பற்றிய கேள்விக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் பதில் அளித்திருந்தார்.

தன்னை பற்றி அமைச்சர் எ.வ.வேலுவே வெளிப்படையாக விளக்கம் கொடுத்துவிட்டதால், அமைச்சர் எ.வ.வேலுவின் ஆள்தான் மீனா என்பதை தமிழ்நாட்டு மக்களும், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மீனா ஜெயக்குமாரின் செல்வாக்கு, வருமான வரித்துறைக்கு முன்பு, வருமான வரித்துறைக்கு பின்பு என்று பிரித்து பார்க்க வேண்டிய தருணம் தான் இப்போது நிலவி வருகிறது.

2021 கோவை மாநகராட்சி தேர்தலில், மேயர் பதவியை குறி வைத்து, காய் நகர்த்திய மீனா ஜெயக்குமாருக்கு, கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கே வாய்ப்பு தரவில்லை.

கோவை மாநகர மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்திக் தான், தன்னை பழி வாங்குகிறார் என்று அப்போதே ஆவேசமாக கூறிக் கொண்டிருந்தார் மீனா.

அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவும், திமுக பொதுச் செயலாளரும் இரண்டாம் கட்ட தலைவருமான துரைமுருகனின் ஆதரவையும் முழுமையாக பெற்றிருக்கும் மீனா, கோவை மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆவேசமாக பொங்கினார்.

மேடையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார்… திமுக பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் பங்கேற்று உள்ளார்கள் என்பதை பற்றியெல்லாம் சிறிதும் யோசிக்காமல், மேடையில் வைத்தே மாநகர மாவட்டச் செயலாளர்  கார்த்திக்கை அவமானப்படுத்தினார் மீனா.

மீனா ஜெயக்குமாரின் ஆவேச பேச்சு ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக வெளியாகி, திராவிட மாடல் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்தில் ஒரு பெண் பிரமுகர், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதை அமைச்சர் செந்தில் பாலாஜியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

மீனா ஜெயக்குமாரின், கட்சி விரோத செயல்பாட்டை, திமுக தலைமைக்கு போட்டுக் கொடுத்தார் செந்தில்பாலாஜி.

அவரின் புண்ணியத்தால், மீனா ஜெயக்குமாரிடம் இருந்த கட்சி பதவி பறிக்கப்பட்டதுடன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அப்போதும் அசரவில்லை மீனா.

கோவை மாவட்ட திமுகவில், தனது செல்வாக்கை நிலை நிறுத்த, கோவையில் இருந்து சென்னைக்கு அடிக்கடி விமானத்தில் பறந்தார்.

மீனா ஜெயக்குமாரின் பரிந்துரைகளுக்கு கோவை மாவட்ட அதிகாரிகள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கட்டுப்பட்டு, மீனா ஜெயக்குமாரை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மீனா வீட்டிற்கு கட்சி நிர்வாகிகள் செல்வதை குறைத்துக் கொண்ட போதும், கான்ட்ராக்டர்கள், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை பெற விரும்பிய தொழில் அதிபர்கள், மீனா ஜெயக்குமார் வீட்டில் தவம் கிடந்தார்கள்.

கோவை மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திக்கை நம்பியிருந்த தொழில் அதிபர்கள், தங்கள் ரூட்டை மாற்றி கொண்டு மீனா ஜெயக்குமாரின் கண் பார்வைக்கு காத்திருந்ததை பார்த்து, மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், கார்த்திக்கின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருவதைப் பார்த்து, வேதனைப்பட்டார்கள். விசுவாசமிக்க உடன்பிறப்புகள் கார்த்திக் பக்கமே நின்ற நேரத்தில், ஆதாயத்திற்காக அரசியல் செய்யும் திமுக உடன்பிறப்புகள், மீனா பக்கம் சாய்ந்து விட்டார்கள்.

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்ட பிறகும் மீனாவின் செல்வாக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் கொடி கட்டி பறப்பதை பார்த்து மனதிற்குள் புலம்ப தொடங்கினார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைவாசியான பிறகு, மீனாவிற்கு மீண்டும் திமுகவில் உச்சம் கிடைத்தது.

திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன், பகுத்தறிவு பாசறையில் பதவியும் வழங்கப்பட்டது. அதை விட அதிர்ச்சியளிக்கும் விஷயமாக,  அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த தொகுதியான அரவக்குறிச்சியின் நாடாளுமன்ற திமுக பொறுப்பாளர் பதவியும் மீனாவை தேடி வந்தது.

செந்தில்பாலாஜியின் பரிந்துரையால் நீக்கப்பட்ட மீனாவுக்கு, கோவை மாவட்டத்தை கடந்து கரூர் மாவட்டத்திலும் செல்வாக்கு மிகுந்த பதவி வழங்கப்பட்டதை அடுத்து, கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆடிப் போனார்கள். மீனாவின் செல்வாக்கிற்கு பயந்து, அவரது பக்கமே தலை வைத்து படுக்காமல் பதுங்கி கொண்டார்கள். ஆனால், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக், தனது பதவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்றும் வகையில், மீனாவை கண்டு கொள்ளவே இல்லை.

கோவை மாவட்டத்தில் பாரம்பரிய திமுக நிர்வாகிகளுக்கு கூட மரியாதை தராமல், தன் இஷ்டத்திற்கு செயல்பட்டு வருகிறார் மீனா என்பதுதான் ஒட்டுமொத்த திமுகவினரின் குற்றச்சாட்டாகும்.

திமுக நிர்வாகிகளின் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்பதை போலதான், முதல்வரின் புதல்வரும், திமுக இளைஞரணியின் மாநில செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மாநிலம் முழுவதும் பெருமை சேர்க்கும் கட்சி நிகழ்ச்சியில் கூட, பங்கேற்காமல் புறக்கணித்து இருக்கிறார் மீனா.

சேலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் ஆதரவை திரட்டும் வகையில், 188 இளைஞரணி நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் பேரணியாக செல்கிறார்கள்.

இந்த பேரணியை நவம்பர் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

பல்வேறு தொகுதிகளுக்கு சென்ற பேரணி, நவம்பர் 17 ஆம் தேதி கோவை மாநகருக்கு வந்தது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்தி, படை பரிவாரங்களை திரட்டிச் சென்று, இருசக்கர வாகனபேரணியை வரவேற்று, அவரும் பங்கேற்றார். ஆனால், உள்ளூரிலேயே இருந்த மீனா ஜெயக்குமார், வாகன பேரணி வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. பேரணியிலும் பங்கேற்வில்லை.

திமுகவின் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான் என்று மூத்த தலைவர்களே கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், உதயநிதியின் பெருமைகளை பரப்பும் வாகன பேரணி ஊர்வலத்தை புறக்கணிக்கிறார் மீனா என்றால், அவருக்கு எவ்வளவு தில்லு இருக்க வேண்டும் என்று வியப்புடன் கேட்கிறார்கள் கோவை திமுக நிர்வாகிகள்.

உதயநிதியின் ஆதரவு எல்லாம் எங்கள் அக்காவிற்கு தேவையில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு செல்வாக்கு இருக்கும் வரை கோவை மாவட்டத்தில் மீனாவின் கொடியே உயர உயர பறக்கும்.

கோவை எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி கொண்டிருக்கிறார் மீனா. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக விளம்பரம் கிடைப்பதற்கு பைசா  செலவில்லாமல் புகழை தேடி தந்துவிட்டது வருமான வரித்துறை.

ரெய்டு மட்டும் நடைபெறாமல் இருந்தால், கோவை மாவட்டம் முழுவதும் விளம்பரத்திற்கு மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்.

சரியான நேரத்தில்தான் ரெய்டை நடத்தி இருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அதற்காக அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும் என்று காலடியில் கிடக்கும் விசுவாசிகளிடம் உற்சாகமாகவே பேசிக் கொண்டிருக்கிறாராம் மீனா ஜெயக்குமார்.

கோவை மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத நபராக இருந்து கொண்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவருக்கு இணையான செல்வாக்கு பெறும் வகையில்தான் மீனா, காய் நகர்த்தி கொண்டிருக்கிறார். அரசியலிலும் சட்டத்திற்கு புறம்பாக சொத்து குவிப்பதிலும் எஸ்.பி.வேலுமணியை தான் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டிருக்கிறார் மீனா ஜெயக்குமார் என அதிர்ச்சியை கிளப்புகிறார்கள் மீனா ஜெயக்குமாரின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கம் உள்ளூர் திமுக நிர்வாகிகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு கோவை மாவட்டத்தில் அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மீனாவுக்கு எதிராக திமுக தலைமையிடம் புகார் சொல்வதற்கு கூட, கோவை மாவட்ட திமுக பிரமுகர்கள் பயப்படுகிறார்கள்.

எதிரணியினரின் அச்சம்தான், மீனாவின் அசுர வளர்ச்சிக்கு உரமாக இருந்து கொண்டிருக்கிறது.

வருமான வரித்துறை ரெய்டு..

மூத்த திமுக நிர்வாகிகளிடம் எதிர்ப்பு என்று அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்தாலும் கூட, பீனிக்ஸ் பறவை போல, சிலுப்பிக் கொண்டு அரசியல் ஆட்டத்தில், முதல் ஆளாக நின்று கொண்டிருக்கும் மீனா ஜெயக்குமார், திமுக தலைமையின் கருணையால், ஒட்டுமொத்த கோவை மாவட்ட திமுகவின் செயலாளராக நியமிக்கப்பட்டாலும் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றும் இல்லை என்று, பாரம்பரிய திமுக நிர்வாகிகள் விரக்தியோடு கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் இதெல்லாம் சாதரணம் அப்பா…