Sat. Nov 23rd, 2024

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டார் அமைச்சர் எ.வ.வேலு என்பதுதான் பாஜக உள்ளிட்ட அவரது எதிரிகளுக்கு சந்தோஷமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

வருமான வரித்துறையினரின் சோதனை முடிந்த கையோடு அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

திமுகவின் கோடிக்கணக்கான பணம் எல்லாம் அமைச்சர் எ.வ.வேலுதான் பதுக்கி வைத்திருக்கிறார். கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றெல்லாம் கடந்த 5 நாட்களுக்கு மேலாக செய்திகள் தீயாக பரவி வந்தது.

முகநூல், வாட்ஸ் அப், யூ டியூப் என சமூக ஊடகங்களில் பரபரப்பட்ட அனைத்து செய்திகளுக்கும் விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

2006 ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக அமைச்சராக பொறுப்பு ஏற்றிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. அதற்கு முன்பாக அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்திலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார் எ.வ.வேலு. திரைப்பட விநியோகம், திரைப்படம் தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டதாக கூறுகிறார். லாபமோ, நட்டமோ தொழிலில் கிடைத்த பணம் எல்லாம் அவரது குடும்பத்தினரின் சொத்துகளாக தான் மாறியிருக்கும்..

சட்டவிரோதமான முதலீடுகள் என்றால், அதனை அப்போதே கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டிய பொறுப்போ, தண்டிக்க வேண்டிய கடமையோ வருமான வரித்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசிற்கு தான் இருக்கிறது.

 அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்பே அவரது தாயார் சரஸ்வதி பெயரில் அறக்கட்டளையை தொடங்கிவிட்டதாக தெளிவுப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு..

அறக்கட்டளை என்பதே, சட்டத்திற்கு உட்பட்டோ அல்லது நன்கொடைகள் என்ற பெயரில் குவியும் பணத்தையோ முதலீடு செய்வதற்குரிய ஒரு அமைப்புதான் என்பதை அரசியலில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இன்றைய தேதியில் சாதாரண மனிதர்கள் கூட புரிந்து வைத்திருக்கிறார்கள்.

2006 முதல் 2011 வரை ஐந்து ஆண்டுகள் மட்டுமே அமைச்சராக பொறுப்பு வகித்திருக்கிறார் எ.வ.வேலு என்கிற போது, 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அவரது குடும்பத்தினர் பொறியியல் கல்லூரிகள் தொடங்கிவிட்டார்கள்.. மருத்துவக்கல்லூரியை தொடங்கிவிட்டார்கள் என்கிற போது, அவரின் அசுர வளர்ச்சியை மத்திய அரசு தான் கண்காணித்திருக்க வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு அமைந்து 9 ஆண்டுகள் முடித்துவிட்டன. இன்னும் 6 மாதத்தில் பத்தாவது ஆண்டும் முடியப் போகிறது. பாஜக ஆட்சி முடியும் நேரத்தில், வருமான வரித்துறையினர்  5 நாட்கள் முகாமிட்டு அமைச்சரின் உதவியாளர், கார் டிரைவர், தனிமனிதர் காப்பீடு விவகாரங்களை கவனிக்கும் உதவியாளர் என பலரை மிரட்டும் வகையில் வருமான வரித்துறையினர் விசாரித்தார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பதில் இருக்கிறதா?

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தனக்கு கோபம் இல்லை. அவர்கள் வெறும் அம்புதான். ஏவி விட்டவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார் அமைச்சர் எ.வ.வேலு.

 தனது முழு பேட்டியிலும் அமைச்சர் எ.வ.வேலு ஒரே ஒரு கருத்தைதான் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை முடக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் நோக்கமாக இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாகவே கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

5  நாட்கள் நடைபெற்ற ரெய்டில், தன்னிடம் இருந்தோ, தனது மனைவியிடம் இருந்தோ அல்லது தனது இரண்டு மகன்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் இருந்தோ ஒரு பைசா கூட வருமான வரித்துறையினர் கைப்பற்றவில்லை என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

அப்படியென்றால், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர் என்ற கேள்விக்கான பதிலை வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாகவோ அல்லது அறிக்கை மூலமோ பதில் சொல்ல வேண்டும். வருமான வரித்துறையினருக்கு தெம்பு இல்லை என்றால் அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்லியாக வேண்டும் என்று திருவண்ணாமலை திமுக நிர்வாகிகள் ஆவேசம் காட்டுகிறார்கள்.

தன்னுடைய தொழில், தனது இரண்டு மகன்களின் தொழில் பற்றி விரிவாக கூறிய அமைச்சர் எ.வ.வேலு, அரசியலில் ஈடுபட்ட பிறகு, அமைச்சராக பதவியேற்ற பிறகு யாரிடமாவது ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்று இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று சவால் வேறு விட்டிருக்கிறார்.

இப்படி வெளிப்படையாக பேட்டி கொடுக்கிற அளவுக்கு, கேள்வி கேட்கிற அளவுக்கு தைரியம் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு இருப்பதே விசித்திரமான ஒன்றுதான்.

காஸா கிராண்ட், அப்பாசாமி பில்டர்ஸ் குறித்த கேள்விகளுக்கு எல்லாம் நேரடியாகவே பதில் கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

இரண்டு நிறுவனங்களுடன் தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது அமைச்சர் எ.வ.வேலுவின் துணிச்சலான பதிலாக பார்க்கப்படுகிறது.

40 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நடந்துனராக இருந்தவருக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் சேர்ந்தது என்ற கேள்விகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் சொல்வதை விட, இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அவரது குடும்ப சொத்துகளாக மாறியதை கண்டுபிடிக்காமல் அனுமதித்தது மத்திய அரசின் குற்றம் தானே..

எ.வ.வேலு குடும்பத்தினர் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களாக வளர்ந்த போதே, வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்விகள் கேட்டு, அதிரடி சோதனையை மேற்கொண்டு, எ.வ.வேலுவின் அபரிதமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருக்க வேண்டும் அல்லவா.

2024ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது என்பதற்காக ஆளும்கட்சியின் பணத்தில் பெரும் பகுதி எ.வ.வேலுவிடம் தான் இருக்கிறது என்று பரப்பப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறையை தூண்டி விட்டதா மத்திய பாஜக அரசு.

பொதுப்பணி மற்றம் நெடுஞ்சாலை என இரண்டு செல்வாக்கு மிகுந்த துறைகளுக்கு அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இரண்டு துறைகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு திட்டப் பணிகள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

ஒப்பந்தங்களை பெறுவதற்கு கான்ட்டிராக்டர்கள் கமிஷன் கொடுப்பதும் உண்மை. ஒரு பைசா கூட கமிஷன் வாங்கியது இல்லை என்று வெளிப்படையாக, நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

கமிஷன் கொடுத்த கான்ட்ராக்டர்கள், நாங்கள் கமிஷன் கொடுத்துதான் ஒப்பந்தங்களை பெற்றோம் என்று நேரடியாக சொல்வதற்கு தைரியம் இருக்கிறதா என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆளும்கட்சியான திமுகவை பழிவாங்குவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலில் உற்சாகமாக பணியாற்ற விடாமல் முடக்குவதற்கும் பகீரத முயற்சிகளை மேற்கொள்ளும் மத்திய பாஜக அரசு, வருமான வரித்துறையை ஏவிவிட்டதற்கு பதிலாக டூப்ளிக்கேட் ஒப்பந்ததாரர்களை ரெடி செய்து, பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் போட போனேம். அமைச்சர் எ.வ.வேலு 16 பர்சென்ட் லஞ்சம் கேட்டார் என்று பேட்டி கொடுப்பதற்கு தயார் செய்து இருக்க வேண்டாமா..

தொழில் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, தனிப்பட்ட கேள்விகளுக்கும் கூட பதில் அளித்திருக்கிறார்.

கோவை பெண் திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமாரை தொடர்பு படுத்தியும், அமைச்சரின் பினாமி என்றும் செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு, ஜெயக்குமாரின் பூர்வீகம் திருவண்ணாமலை. ஊர்காரர் என்ற பாசத்தில் கோவையில் தன்னை சந்தித்திருக்கிறார். அவரின் மனைவி மீனா,  கோவை திமுக நிர்வாகிகளின் மூலம் கட்சியில் பதவி பெற்றிருப்பார். அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.?

திமுக நிர்வாகிகள் அமைச்சர்களை சந்திக்க கூடாதா என்று எல்லா கேள்விகளுக்கு கேள்வியாகவே பதில் கூறியிருக்கிறார் அமைச்சர் எ.வேலு.

மீனா ஜெயக்குமாரை பற்றி நல்லரசுவும் செய்தி வெளியிட்டிருக்கிறது.  ஊர்க்காரர் என்ற பாசத்தை மீறி, அமைச்சர் எ.வ.வேலுவின் அரவணைப்பு கிடைத்த பிறகுதான் மீனாவின் வளர்ச்சியும் ஜெயக்குமாரின் வளர்ச்சியும் அதிர்ச்சியடையும் வகையில் உயர்ந்திருக்கிறது என்பது கோவை திமுக பிரமுகர்களின் குற்றச்சாட்டுகளாகும்.

நிறைவாக, வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்கள் அமைச்சர் எ.வ.வேலு குடும்பத்தை, அவரது உதவியாளர்களை விசாரணை என்ற பெயரில் கடுமையாக மிரட்டி அச்சுறுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் அமைச்சர் எ.வ.வேலுவின் அவசர பேட்டிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அமைச்சர் எ.வ.வேலு சத்தியம் செய்யாத குறையாக, தான் நேர்மையானவன், மனசாட்சிக்கு கட்டுப்பட்டவன் என்று கூறினாலும் கூட, பொதுப்பார்வையில் அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் உள்ள சொத்துகள், சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்டவைதான் என்ற விமர்சனத்தை எக்காலத்திலும் அழித்து விட முடியாது.

அமைச்சர் எ.வ.வேலு நேர்மையானவரோ, அறம் தவறியவரோ.. மத்திய மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகளாலும், நீதித்துறையாலும் மட்டுமேஉண்மையை கண்டறிந்து நற்சான்றிதழ் கொடுக்க முடியும்.

அரசியல் ரீதியாக எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி கொண்டவர் என்பதை அமைச்சர் எ.வ.வேலு நிரூபித்துவிட்டார்.

ஆனால், அவருக்கு முன்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு மேலாக கெடுபிடி சோதனையை, விசாரணையை மேற்கொண்டார்கள்.

சோதனையின் போதோ, விசாரணையின் போதோ என்ன நடந்தது என்பதை பற்றி செய்தியாளர்களை சந்தித்து ஜெகத்ரட்சகன் எம்பி விளக்கம் அளிக்கவில்லை.

அப்படியென்றால் மத்திய பாஜக அரசை பார்த்து ஜெகத்ரட்சகன் எம்பி பயந்து போய்விட்டார் என்று தான் எடுத்து கொள்ள முடியும்.

இவர்கள் இரண்டு பேரை அடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை, அமலாக்கத்துறை, குற்றவாளியை போல தான் நடத்தியது.

அமலாக்கத்துறையின் அதிகாரத்திற்கு மிஞ்சிய விசாரணை முறையை க.பொன்முடி கேள்வி கேட்கவில்லை.

அமலாக்கத்துறை மத்திய பாஜக அரசுதான் ஏவி விட்டிருக்கிறது என்று அமைச்சர் பொன்முடியால் பொங்க முடியவில்லை..

தனிப்பட்ட முறையில் கோழையாக இருக்கிறாரா க.பொன்முடி, பொதுக்கூட்ட மேடைகளிலும், செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மட்டும் தான் ஆளுமைக் குணத்தை வெளிப்படுத்துவீர்களா..

இது என்ன நாடகம் கோபால் என்று தான் அமைச்சர் பொன்முடியை பார்த்தும் ஜெகத்ரட்சகன் எம்பியையும் பார்த்தும் திமுக உடன்பிறப்புகள் கேள்வி எழுப்புகிறார்கள்.  

பதில் சொல்வார்களா பொன்முடியும், ஜெகத்ரட்சகனும்…