நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமானின் அண்மைக்கால செயல்பாடுகள் மட்டுமின்றி அவருடையே மேடைப் பேச்சுகளும், செய்தியாளர்களுடனான சந்திப்புகளும் கூட கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்பதுதான் பரிதாபத்திற்குரிய ஒன்றாகும்..
அரசியல் நாகரிகம் துளியும் இன்றியும் தமிழர்களுக்கே உரிய பண்பாட்டை காற்றில் பறக்கும் விடும் வகையில் தான் சீமானின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டுகிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
தமிழ் தேசியத்தை முன்னெடுத்து, தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் என்று சீமானை வெகுவாக பாராட்டும் அரசியல் ஆய்வாளர்கள், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் தேசியத்தை விரும்பும் தமிழ் மக்கள், சீமானை நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கிறார்கள் என்பதையும் நினைவு கூர்கிறார்கள்.
தமிழ் மரபு என்பதே உலகளவில் எங்குமே காணப்படாத மிதமிஞ்சிய பண்பாட்டை கொண்டிருப்பவர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியத்தை கட்டமைப்பதற்காக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துக் கொண்டிருக்கும் சீமான், உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் கடல் கடந்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்கிறார்கள்.
கடந்த 24 மணிநேரத்தில் சீமானின் பேட்டிகள், பேச்சுகள் என அனைத்து செயல்பாடுகளும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் தமிழ் தேசிய ஆதரவாளர்கள். பெண் சமுதாயத்தை மிகவும் கண்ணியத்துடன் நடத்தியவரும், மிகுந்த மரியாதை வழங்கியவருமான மாவீரன் பிரபாகரனின் பிள்ளை என்று கூறிக் கொள்ளும் சீமானின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் இவ்வளவு அவமரியாதைக்குரிய சொற்களாக விழுவதைப் பார்த்து மனது மிகவும் துயரமடைகிறது என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் தம்பிமார்கள்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஒருமையில் சீமான் பேசியிருப்பது தான் இன்றைய தேதியில் மிகுந்த சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தப் போது, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பிரதமர் மோடிக்கும், அகில இந்திய பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கும் வெளிப்படையாகவே பாராட்டு தெரிவித்தார்கள். ஆனால், குடியரசுத் தலைவர் பதவிக்கு உரிய கண்ணியத்தை வழங்காமல், வழிபாட்டுத் தலங்களில் திரௌபதி முர்முவை சிறுமைப்படுத்தும் வகையில் நடைபெறும் அநாகரிக செயல்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கே மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது என்று கொந்தளிக்கிறார்கள் தேச பக்தர்கள்.
இந்தியாவை பொறுத்தவரை குடியரசுத் தலைவர் ஒரு பொருட்டே அல்ல என்ற வகையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பி விழாவின் போதும், வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும் இந்தியாவின் முதல் குடிமகளான திரௌபதி முர்முவுக்கு மத்திய பாஜக அரசு அழைப்பே விடுக்கவில்லை. ஆனால், அதேசமயம் பிரபல திரைப்பட நடிகைகள் கலந்து கொண்டது நாடு முழுவதும் சர்ச்சையாகி இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், திரௌபதி முர்முவை ஒருமையில் அழைத்து மிகவும் அசிங்கப்படுத்தி விட்டார் என்று கொந்தளிக்கிறார்கள் தேசபக்தர்கள்.
அண்மைக்காலமாக சீமானின் கோபம் உச்சத்தில் இருக்கிறது என்பதன் வெளிபாடுதான் முர்முவுக்கு எதிரான பேச்சு என்று கூறும் பண்பாளர்கள், ஊடகவியலாளர்களை மிரட்டும் போக்கும், பொதுக்கூட்ட மேடைகளில் அநாகரிகமான பேச்சு, இளம் தலைமுறையினரை தவறாக வழிநடத்தும் போக்கு ஆகியவை அதிகமாகி கொண்டே வருகிறது என்கிறார்கள்.
தமிழ் தேசியம் என்ற நாகரிக உலகத்திற்கு வழிவகுக்கும் பண்பாளர்களை கொண்ட ஒரு அமைப்புக்கு தலைமை ஏற்கும் தகுதி சீமானுக்கு இருக்கிறதா என்றும் ஆவேசம் காட்டுகிறார்கள் உண்மையான தமிழ் தேச பற்றாளர்கள்.