Sat. Nov 23rd, 2024

அண்ணாமலை மீது பாய்ந்ததைப் போல மோடி மீது பாயும் துணிச்சல் இருக்கிறதா அதிமுக தலைவர்களுக்கு…

கொந்தளிக்கும் ரத்தத்தின் ரத்ததங்கள்…

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து, சமூக ஊடகங்களிலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் எடப்பாடியாருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய விவகாரம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா.. என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னணி தொழில் அதிபர்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாக இருக்கிறது.

எடப்பாடியாருக்கு எதிராக மட்டுமல்ல அதிமுகவில் முன்னணி தலைவராக உள்ள பலருக்கு எதிராவும் அண்ணாமலை வீசிய அம்புகள் அத்தனையும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் கள யதார்த்தமாக உள்ளது.

தமிழக அரசியல் களத்தில் எடப்பாடியார்  சாணக்கியரா என்ற கேள்வியை எழுப்பினால், ஆதரவு கருத்துகளை விட எதிர்ப்பான கருத்துகள்தான் அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது.

அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர், அன்றைய தேதியில் அரசியல் எதிரியாக இருந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை எதிர்கொள்வதற்கு, மத்திய அரசுடன் நல்ல நட்பை பேணி வந்தார். ஆனால், அதே சமயம் மாநில நலன்களில் ஒருபோதும் எம்ஜிஆர் சமரசம் செய்து கொண்டதே இல்லை. எம்ஜிஆருக்குப்  பிறகு அதிமுகவுக்கு தலைமை ஏற்ற மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, இந்தியாவிலேயே துணிச்சல் மிகுந்த அரசியல் தலைவராக உருவெடுத்தார். மாநில நலன்களில் சமரசம் செய்து கொள்ளாதது மட்டுமல்ல, அண்டை மாநிலங்களுடனான நதி நீர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை வென்று எடுப்பதற்கு அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளை வென்று எடுத்தவர் செல்வி ஜெயலலிதா.

அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் காலத்தில், மாநில கட்சிகளுடன் மட்டுமின்றி தேசிய கட்சிகளுடனும் கூட்டணி வைத்த போது கூட, அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் அளவிற்கு ஆளுமைக்குரிய தலைமையாக தன்னை நிரூபித்தவர் எம்ஜிஆர். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்த நேரத்தில் கூட தன்மானத்தை இழக்காமல் தான் ஆளுமையை வெளிப்படுத்தியவர் எம்ஜிஆர்.

மக்கள் செல்வாக்கை அமோகமாக பெற்றிருந்த எம்ஜிஆரை விட அசாத்திய துணிச்சல் கொண்டவராக திகழ்ந்த செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவைக்கு தேர்தல் என்றாலும் சரி, நாடாளுமன்றத்திற்கான தேர்தலாக இருந்தாலும் சரி, மாநில கட்சிகளை மட்டுமல்ல, பல மாநிலங்களில் ஆளும்கட்சியாக திகழ்ந்த செல்வாக்கு மிகுந்த  தேசிய கட்சிகளையும்கூட தமது வீட்டை தேடி வரும் வகையில் கம்பீரம் காட்டியவர் செல்வி ஜெயலலிதா.

தேசிய கட்சிகளின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு கூட முக்கியத்துவம் தராமல், கட்சியின் தலைமைக்கு இணையான செல்வாக்கு கொண்ட தலைவர்களை போயஸ் கார்டனுக்கே வர வைத்தவர் செல்வி ஜெயலலிதா.

காங்கிரஸோடு கூட்டணி வைத்த போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு  மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியே போயஸ் கார்டன் வர வேண்டியிருந்தது. அதுபோலவே 1998 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில், பாஜக ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பிரதமரின் தூதுவர்களாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும்  பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் ஆகிய இருவரும் சென்னைக்கே பறந்து வந்து செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்தினார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்தி மோடி நிறுத்தப்பட்ட போது, இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்கும் வகையில் மோடியா.. இந்த லேடியா என்ற முழக்கத்தை முன் வைத்தவர் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா.

தமிழகத்தில் ஆளும்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் அதிமுக இருந்த போதும் கூட, தேசிய தலைவர்களை தமது வீட்டு வாசலில் காக்க வைத்தவர் செல்வி ஜெயலலிதா.

அதிமுகவின் தேர்தல் வரலாற்றில், பிற கட்சிகளின் தயவை, அது மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி, தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, எம்ஜிஆரோ, செல்வி ஜெயலலிதா தன்மானத்தை இழந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக சரித்திரமே கிடையாது

தனித்த ஆளுமை குணத்துடன் தேர்தலை எதிர்கொண்டதுடன், கூட்டணி கட்சிகளிடம் ஒருவிதமான பயத்தையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் எம்ஜிஆரும் செல்வி ஜெயலலிதாவும். அதிமுக தயவு இல்லை என்றால் வெற்றி பெறவே முடியாது என்ற நிலையில்தான் இரண்டு தலைவர்களின் தேர்தல் காலங்களும் சரி களங்களும் சரி அமைந்திருந்தது.

இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சி அதிமுகதான் என்ற நிலைக்கு உயர்ந்தியவர் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா.

இப்படிபட்ட வரலாற்று சிறப்பு கொண்ட அதிமுகவிற்கு இன்றைய தேதியில் பொதுச் செயலாளராக வலம் வந்து கொண்டிருக்கும் எடப்பாடியார், எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் அரசியல் வாரிசாகவா திகழ்க்கிறார் என்பதை இன்றைய தேதியில் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் கூட உரக்க கூற வெட்கப்படுகிறார்கள்.

எடப்பாடியார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோருக்கு  சமுதாய ரீதியாக மட்டுமின்றி எல்லா வகையிலும் பக்க பலமாக இருக்கும் கொங்கு கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு மண்டலத்தில் எடப்பாடியார் உள்ளிட்ட கொங்கு அதிமுக தலைவர்களை கூண்டோடு ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு சித்து விளையாட்டுகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை.

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு பெரும்பான்மையாக வாக்கு வங்கியை கொண்டிருக்கும் வடக்கு மண்டலத்திலும் தெற்கு மண்டலத்திலும் 2019 மற்றும் 2024 ஆகிய இரண்டு பொதுத்தேர்தல்களில் அதிமுகவை விட திமுக தான் அதிக வாக்குகளை பெற்றது. திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கை குறைத்து திமுக செல்வாக்கை உயர்த்திவிட்டார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

ஆளும்கட்சியான திமுக மீதான அதிருப்தியை அதிமுகவுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் கொங்கு அதிமுக தலைவர்களை கதிகலங்க வைக்கும் வகையில் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவுக்கு ஒன்றை தலைமை இடத்திற்கு வருவதற்கு கடும் போராட்டங்களை எதிர்கொண்ட எடப்பாடியாரின் செல்வாக்கை தரை மட்டமாக்க துணிந்தவர் அண்ணாமலை.

கடந்த ஓராண்டுக்கு மேலாக எடப்பாடியாரின் ஆளுமை மிகுந்த தலைமையை கேலி குள்ளாக்கும் வகையில்தான் அதிமுக மீது புழுதி வாரி தூற்றி வந்தார் அண்ணாமலை. திமுகவுக்கு அடுத்து இரண்டாம்  இடத்தை பிடிப்பதற்காக காய் நகர்த்தி கொண்டிருக்கும் அண்ணாமலையின் சதுரங்க வேட்டையை சாதாரணமாக எடை போட்டுவிட்டார் எடப்பாடியார்.

அதிமுகவை குறி வைத்து அண்ணாமலை தாக்குதல் நடத்திய நேரங்களில் எல்லாம், மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை எடப்பாடியார் முன்னெடுத்து இருந்தால், பாஜக மேலிட தலைவர்கள் ஆடிப் போய் இருப்பார்கள்.

பொருளாதாரத்தில் கொங்கு மண்டலம் உயர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதுதான். பெரிய பெரிய நூற்பாலைகள், எந்திர உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமின்றி சிறு,குறு தொழில் நிறுவனங்களும் லட்சக்கணக்கில் இருக்கின்றன

பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டுக்கு உயர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி வசூல்,, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் கொங்கு மண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

தமிழ்நாட்டில் மட்டுமே எதிர்க்கட்சியாக அரசியல் செய்து கொண்டிருந்த எடப்பாடியார் தலைமையிலான அதிமுக, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஒரு போதும் போராட்டத்தை நடத்தவே இல்லை. மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் எம்ஜிஆரும் செல்வி ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க ஒருபோதும் தயங்கியதே கிடையாது.

செல்வி ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை அசிங்கப்படுத்திய போதும், பிரதமர் மோடி தலைமை தான் இந்தியாவுக்கு தேவை என்று குரல் கொடுத்தவர்கள்தான் அதிமுக தலைவர்கள்.

பேரறிஞர் அண்ணாவை பற்றி உண்மைக்கு மாறான கருத்துகளை அண்ணாமலை கூறிய போதும், அகில இந்திய பாரதிய ஜனதாவுடன் தான் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது என்று கூறியவர்கள் செல்வாக்கு மிகுந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.

ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்று முட்டுக்கொடுத்த எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டிருக்கும் கே.அண்ணாமலை, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்த மாட்டோம் என உறுதிபட கூறியபோதுதான், உண்ட வீட்டுக்கே துரோகம் செய்கிறது பாரதிய ஜனதா கட்சி என்று விழித்துக் கொண்டது அதிமுக தலைமை.

2026 ல் அதிமுக தயவோடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அண்ணாமலையின் பேராசைக்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் துணை நிற்கிறார்கள் என்பதை காலதாமதமாக அறிந்து கொண்ட பிறகுதான், பாஜக கூட்டணியில் இருந்தும் தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் அதிமுக வெளியேறியிருக்கிறது.

கே.அண்ணாமலை மீது உள்ள கோபம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது எடப்பாடியார் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் காட்டுவார்களா.? எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோர் காட்டி காத்த மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக நின்று மத்திய பாஜக அரசை எடப்பாடியார் எதிர்ப்பாரா?

கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று அறைகூவல் விடும் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தால்தான், எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடியாரை அதிமுகவினர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

இல்லையென்றால், குறுகிய அரசியல் லாபத்திற்காக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடியார் முயன்றால், எம்ஜிஆருக்கும் செல்வி ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்துவிட்டார் எடப்பாடியார் என்ற அவப்பெயரை வாழ்நாள் முழுவதும் இபிஎஸ் சுமக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் எம்ஜிஆர் காலத்து அதிமுக முன்னோடிகள்.