Sun. Apr 20th, 2025

மாமன்னன் வெற்றிக் கொண்டாட்டத்தில் திமுக அமைச்சர்கள் ஆர்வம்

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்..

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து திராவிட மாடல் அமைச்சர்களுக்கு துளியுளவு கவலை இருப்பதாககூட தெரியவில்லை. முதல்வரின் புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுப் பிள்ளைப் போல, மாமன்னன் திரைப்பட கொண்டாட்டத்தில் தான் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

உதயநிதியிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்பதற்காகவே, புதுமுக அமைச்சர் மதிவேந்தன் முதல் மூத்த அமைச்சர் ரகுபதி வரை ஒருவர் பாக்கி இல்லாமல் கடந்த சில நாட்களாக மாமன்னன் படத்தை பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் பெற்ற இன்பம், திமுக நிர்வாகிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாநிலம் முழுவதும் மாமன்னன் படம் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகளில் நாள்தோறும் ஒட்டுமொத்த டிக்கெட்டுகளை விலைக்கு வாங்கி, மாமன்னன் திரைப்படத்தை வெற்றி விழாவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தீண்டாமை கொடுமைக்கு எதிராக ஆவேசமாக பொங்கிய அதிவீரனை, நிஜத்திலும் பார்ப்பதற்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு அலுவலர்கள் ஆர்வமாக உள்ளார்கள் என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போகிற மாரி செல்வராஜ் யார் என்பதுதான் பலரின் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

மாமன்னன் திரைப்படத்தில் தனது தந்தைக்கு உரிய மரியாதையும், இருக்கையும் வழங்காத ஆதிக்க சாதியினரை எதிர்த்து கடுமையாக பொங்கியது மட்டுமின்றி உயிரை பற்றியும் கவலைப்படாமல் கடுமையாக சண்டையிட்டு சுயமரியாதையை காப்பாற்றிய உதயநிதி ஸ்டாலினை, அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டிக் கொண்டிருப்பதாக பெருமையோடு கூறி வருகிறார்கள் இளைஞர் அணி நிர்வாகிகள்.

அதேசமயத்தில், மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலேயே, தலைநகரான சென்னையில், இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகவே ஐஏஎஸ் உயர் அதிகாரி ஒருவர் மரியாதைக்குறைவாக நடத்தினார். தீண்டாமை கொடுமையை அனுபவித்ததைப் போல, அவமானங்களை சுமந்தேன். மனஉளைச்சலுக்கு உள்ளானேன். தற்கொலை செய்து கொள்ள நினைத்த நேரத்தின் தந்தையின் ஆறுதல்தான் தனது உயிரை காப்பாற்றியது என்றெல்லாம் பகிரங்கமாகவே தெரிவித்தாரே.. அதெல்லாம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியுமா..?

அனைவரும் சமம் என்பதை அழுத்தமாக பேசி வரும்  திராவிட மாடல் ஆட்சியில் தீண்டாமை கொடுமையா? என்று பொங்கினாரா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று ஆவேசமாக கேள்விகளை எழுப்புகிறார்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள்.

சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக பணியாற்றிய இளம் ஐஏஎஸ் அதிகாரியான மணீஷ் நர்னவரே, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் தான் என்பதால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் துன்புறுத்தினார் என்று பகிரங்கமாக புகாராகவே தெரிவித்திருந்தார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன் தீப் சிங் பேடியின் அனைத்து செயல்களுமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார், மணீஷ் நர்னவரே.

தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு மூலை முடுக்குகளில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகள், மாநிலத்தை கடந்து பெரியளவில் கவனத்தை பெறாது. ஆனால், இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தீண்டாமை கொடுமையை அனுபவிக்கிறேன் என்று குற்றம் சுமத்தியது, நாடு முழுவதும் பரவி,  பெரியார் மண்ணிற்கே மிகப்பெரிய அவப்பெயரை தேடி தந்திருக்கிறது.  

இந்த விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏதாவது கருத்து தெரிவித்தாரா.. பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் என்று அவமானப்படுத்தியதால் மனம் உடைந்துபோய் தற்கொலைக்கு முயன்றேன் என்று கதறிய இளம் ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் நர்னவரேவை நேரில் அழைத்தோ அல்லது கைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினாரா.. தீண்டாமை கொடுமை, தமிழ்நாட்டில் கூட தலை தூக்குவதை திராவிட மாடல் ஆட்சி அனுமதிக்காது. உறுதியளித்தாரா..

மாமன்னன் படத்தில் நடித்தார் என்பதற்காக மட்டுமே உதயநிதி ஸ்டாலினிடம் இந்த விவகாரத்தை முன்வைத்து கேள்விகளை கேட்கவில்லை. திமுகவின் அடுத்த தலைவர்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முதல்வராக பதவியேற்க போகிறவர் என்றெல்லாம் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களே முழங்கிக் கொண்டிருக்கிறார்களே.. திமுகவை, தமிழ்நாட்டை வழிநடத்தப் போகிறவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்களே.. அப்படியொரு நிலை உருவானால்,அதற்குரிய தலைமை பண்புகள் நிஜ உதயநிதி ஸ்டாலினிடம் இருக்க வேண்டும் அல்லவா.

மணீஷ் நர்னவரே விவகாரத்தில் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் விளக்கம் அளித்திருந்தாலும் கூட, டிவிட்டர் மூலம் மணீஷ் பகிர்ந்த குற்றச்சாட்டுகள், இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்பதால், அவர் முன்வைத்த வன்கொடுமை புகார் மீது திராவிட மாடல் அரசியலை முன்னெடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை பொதுவெளியில் பகிர்ந்தால்தானே நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தீண்டாமை கொடுமை புகார் தீயாக பரவியே அதேகாலகட்டத்தில் மாமன்னன் படத்திற்கான டப்பீங் பணியில் கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டிருக்கலாம். திரைப்படத்தில் சுயமரியாதையை நிலைநாட்ட பொங்கிய, ஆவேசம் காட்டிய உதயநிதி, தான் பங்கேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக மணீஷ் விவகாரத்தில் என்ன தீர்வை முன்வைத்தார். யாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதை அறிந்து கொண்டால்தான், உண்மையிலேயே தீண்டாமை கொடுமையை முழுமையாக அழிக்க உறுதி பூண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையும், அதே உறுதியோடு அரசு அதிகாரிகளிடம் நிலவும் சாதிய வேற்றுமைகளையும் கண்டிப்பாக களையெடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டால், உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காக, விளிம்பு நிலை மக்களுக்காக எப்போதுமே அரணாக நிற்பார் என்று கொண்டாட தயாராகவே இருக்கிறோம் என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் உயர் அலுவலர்கள்.

தலைமைச் செயலகத்திலேயே சாதி வெறியுள்ள அரசு அலுவலர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்கள் மூலம் பணியாளர்களிடையே தீண்டாமை கொடுமை தலை தூக்குவதை கேள்விபட்டவுடனேயே அதிரடியாக ஒடுக்க வேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகளே, சாதி ரீதியாக பிளவுப்பட்டு நிற்பதை காலம் காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிந்திருப்பாரோ..

ஒட்டுமொத்த மாநில ஐஏஎஸ் அதிகாரிகளிடம், வட மாநிலத்தவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதுதான் முதன்மையான பிரச்னையாக இருந்து வருகிறது. . இரண்டாவதாக, பார்ப்பனர் சாதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு குழுவாகவும், பார்ப்பனர் அல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றொரு குழுவாகவும் வருகிறார்கள். இதைவிட கொடுமையாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளிடையே நிலவும் சாதியுணர்வுதான் அச்சமூட்டும் வகையில் இருந்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் ஒரு குழுவாகவும், பிற சாதிகளைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றொரு குழுவாகவும் உள்ளதாலும், அரசு நிர்வாகத்திலும், பொதுமக்களுக்கு சேவையாற்றுவதிலும் குழு மனப்பான்மைதான் தலை தூக்குகிறது.

சாதிப் பற்று, மொழிப்பற்று, இனப்பற்று போன்றவற்றை கடந்து மற்றொரு தீய சிந்தனை போக்கும் அதிகமாக காணப்படுகிறது. திமுக ஆதரவு, அதிமுக ஆதரவு என இதுவரை ஐஏஎஸ் வரலாற்றில் இல்லாத வகையில் இன்றைய தேதியில் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் போட்டி மனப்பான்மை அதிகமாகவே தலைதூக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலையிலேயே சீழ் அதிகமாக புரையோடி போய் இருக்கும் இந்த நேரத்தில், திமுகவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் புரையோடி போய் இருக்கும் சாதி வெறியை, உணர்வை முழுமையாக நீக்க, அதி வீரனை போல எப்படிபட்ட ஆயுதத்தை எப்போது கையில் எடுப்பார் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்கிறார்கள் பெரியார் பள்ளியில் பயின்ற அரசு அலுவலர்கள் பலர்.

நிறைவாக, நல்லரசுவின் வேண்டுகோளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன் வைக்கிறோம்.

மாமன்னன் திரைப்படத்தின் வெற்றி, உங்களை  தலைகால் புரியாமல் ஆட வைத்திருக்கிறது.  

திமுகவுக்கு வாக்களித்த பொதுமக்கள், உதயநிதி ஸ்டாலினை, கலைஞர் மு.கருணாநிதியின் பேரனாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வராக, திமுக இளைஞரணி செயலாளராக, அமைச்சராகவே பார்க்கிறார்கள்.

மாமன்னன் வெற்றி குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள செய்தியாளர்களை சந்தித்த போது, நீங்கள் (உதயநிதி)  நடந்து கொண்ட விதமும் உங்கள் உடல்மொழியும் மிகவும் அறுவருக்கத்தக்க வகையில் அமைந்திருந்ததை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

இயக்குனர் அடிப்பார் என்று கூறி, மாரி செல்வராஜ் பின்பு ஒளிந்து கொண்டதை எல்லாம், திராவிட போர்வாளின் மானமிகு செயலாகவே தெரியவில்லை. திராவிட பாசறையில் என்னமாதிரியான பயிற்சி பெற்றீர் என்பதெல்லாம் சந்தேகமாக இருக்கிறது.

மாமன்னன் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்து முழுமையாக விலகி வந்து பொதுமக்கள் படும் துயரங்களை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள். தக்காளி விலை கடந்த பத்து நாட்களுக்கு மேலாக 100 ரூபாயை கடந்து விற்கிறது. நான்கு தக்காளி, ஒரு பால்பாக்கெட்டின் விலையை கூட அதிகமாக இருக்கிறது. துவரம் பருப்பு 160 ரூபாயை கடந்து விற்பனை ஆகி கொண்டிருக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில், அதுவும் அரசியல் பாரம்பரிய குடும்பத்தின் வாரிசாக இல்லாத முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் மாதத்திற்கு மளிகைப் பொருட்களுக்கு 5000 ரூபாய் செலவழித்த நடுத்தர குடும்பத்தினர், திராவிட மாடல் ஆட்சியில் 8000 ரூபாய் அளவுக்கு செலவழிக்கும் வகையில் விலைவாசி கூடியிருக்கிறது.

கலைஞரின் குடும்பத்து வாரிசே.. மாரி செல்வராஜு ஒன்றும் அன்றாட கூலியில்லை. மினி கூப்பர் காரை விலை கொடுத்து வாங்குவதற்கு வசதியில்லாத ஏழையில்லை அவர். பல லட்சம் ரூபாய் செலவில் கார் வாங்கியதற்கு பதிலாக, திமுக இளைஞரணி சார்பில் தக்காளி விலைக்கு வாங்கி, மாநிலம் முழுவதும் உள்ள ஏழைக்குடும்பங்களுக்கு ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கியிருந்தால் கூட, கோடிக்கணக்கான ஏழை தாய்மார்கள் உங்களை கொண்டாடுவார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கான ஆதரவு வாக்குகள் கூட அதிகமாகலாம்.  மாமன்னன் திரைப்படத்தை பார்க்க வருபவர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தால் கூட 100 நாட்களை கடந்து சாதனை படைக்க அட்டகாசமான வாய்ப்பை ஏற்படுத்தி விடலாம்..

விளையாட்டுப் பிள்ளையாக இருக்காதீர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். எந்தவொரு வெற்றியையும் தலைக்கு ஏற்றிக் கொள்ளாத மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால்தான் அடுத்த தலைமுறையின் தலைவராக மிளிர முடியும்.