முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அசைக்க முடியாத சக்தியாக நடமாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசின் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது, தமிழக அரசையே ஆட்டம் காண செய்துவிட்டது.
தமிழக அரசியல் வரலாற்றில், அமைச்சர் பதவியில் நீடித்து வரும் ஒருவர், ஊழல், பணமோசடி, சட்டவிரோத பண பரிவர்த்தனை ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திலும், இருதய அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் வகையில் சலுகை காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அவர் வசமிருந்த மின்சாரம் துறை, ஆட்சி நிர்வாகத்தில் அனுபவம் மிகுந்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.
அதுபோலவே, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை, மூத்த தலைவரும் வீட்டு வசதித்துறை அமைச்சருமான எஸ்.முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதிமுக முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு, செல்வாக்கு மிகுந்த இரண்டு துறைகளை ஒதுக்கிய நேரத்திலேயே, பாரம்பரியமாக திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழுந்து கொண்டிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கொதித்துப் போனார்கள்.
கடந்து இரண்டு வருடமாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மீது ஒரு கண் வைத்திருந்த மூத்த அமைச்சர்கள் பலர், செந்தில்பாலாஜி விசாரணை கைதியாக இருக்கும் இந்த நேரத்திலாவது தங்கள் மீது கருணை காட்டுவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு மூத்த அமைச்சர்கள் சிலரிடம் இருந்து வந்தது.
மின்சாரத்துறையை யாருக்கு வழங்குவார்.. மதுவிலக்கு துறையை யாரிடம் ஒப்படைப்பார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நேரத்தில், இரண்டு துறைகளையும், திமுக தலைமைக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய இரண்டு முக்கிய அமைச்சர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தையடுத்து, சலசலப்பே இல்லாமல், அமைதியான முறையில் துறை மாற்றம் நடந்தேறியிருக்கிறது.
2021 ம் ஆண்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் தொழில்துறை அமைச்சராக பதவியேற்றவர் தங்கம் தென்னரசு.
பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தில் பிறந்தவர் என்ற தகுதியை விட சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் திறம்பட பணியாற்றும் ஆற்றல் கொண்டவர் தங்கம் தென்னரசு என்று எதிர்க்கட்சியினரே பாராட்டும் அளவுக்கு ஆட்சி நிர்வாகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருப்பவர்தான் தங்கம் தென்னரசு.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தால், அமைச்சரவையில் மூன்றாவது முறையாக மாற்றம் செய்ய வேண்டிய நெருக்கடி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.
மே 11 ஆம் தேதி அமைச்சரவையை மாற்றியமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வசம் இருந்த நிதித்துறையை பறித்து, தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில்துறையை மிகவும் செம்மையாக நிர்வாகம் செய்து வந்ததுடன், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வந்தவர் தங்கம் தென்னரசு.
தொழில்துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டிய போதும், தங்கம் தென்னரசுவின் விருப்பத்திற்கு மாறாக அவருக்கு நிதித்துறையை வழங்கிவிட்டு, டிஆர்பி ராஜாவிடம் தொழில்துறையை ஒப்படைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தங்கம் தென்னரசுவிடம் இருந்து தொழில்துறை பறிக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மூத்த பத்திரிகையாளர் மணி, எஸ்.பி. லட்சுமணன் ஆகியோர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையை கண்டிக்கவும் செய்தார்கள்.
தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். திமுக நிர்வாகிகளை சமாளிப்பதற்கும், கட்சி பணிகளை செம்மையாக செயல்படுத்துவதற்கும் நிதித்துறை எந்தவகையிலும் உதவிகரமாக இருக்காது என்றும் குற்றம் சாட்டினார் எஸ்.பி.லட்சுமணன்.
இப்படிபட்ட பின்னணியில், நிதித்துறையிலும் முழுமையாக கவனம் செலுத்தி வந்தவர்தான் தங்கம் தென்னரசு.
அவரின் கடுமையான உழைப்புக்கும் திமுக தலைமை மீதான அப்பழுக்கு அற்ற விசுவாசத்திற்கும் உடனடி பலனாக மின்சாரத்துறை கூடுதலாக கிடைத்திருக்கிறது.
இன்றைய தேதியில் எல்லோரும் நம்பிக் கொண்டிருப்பதை போல பொன் முட்டையிடும் வாத்து என்று சொல்வதற்கு ஏற்பவெல்லாம் மின்சாரத்துறை பொன் கொழிக்கும் துறையாக இல்லை.
இரண்டு லட்சம் ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தவில்லை என்றால், மத்திய அரசின் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற நிலைதான் உள்ளது.
மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை, தான்தோன்றித்தனமாக செயல்படுபவர்கள் நிறைந்திருக்கும் நிலைமைதான் திராவிட மாடல் ஆட்சியிலும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் பணியாற்றி வருகிற இளநிலை பொறியாளர்கள், துணை இயக்குனர் என அனைத்து அதிகாரிகளும், பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு லஞ்சத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் ஊற்று எடுக்கும் துறையாக இருக்கும் மின்சாரத்துறையை சீர்படுத்தி, செம்மையான நிர்வாகத்தை வழங்குவதற்கே அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
இதைவிட மிகவும் முக்கியமானதாக மின்சார வாரியத்தின் தொழிற்சங்க நிர்வாகிகள் சுமத்தும் குற்றச்சாட்டுதான் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.
மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் முதல் முக்கிய பல்வேறு பிரிவுகளில் தலைமைப் பொறியாளர்களே பணியில் இல்லை.
2021 ம் ஆண்டு மே மாதம் மின்சாரத்துறைக்கு அமைச்சராக பொறுப்பு ஏற்ற செந்தில் பாலாஜி, புதிய பார்முலா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அனுபவம் மிகுந்த தலைமைச் பொறியாளர்கள் பலரை கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தி இருக்கிறார்.
பணியாளர்கள் நலன்களை பேணுகிற பொறுப்பு தலைமைப் பொறியாளர்தான் காலம் காலமாக பார்த்து வந்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரியத்தில் தலைமைப் பொறியாளர் பணியிடத்தை நிரப்பமாலேயே, செயற் பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இதேபோல, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல்மின்நிலையங்களில் ஒன்றில் கூட தலைமைப் பொறியாளர் பணியில் உயர் அதிகாரி இல்லை.
செயற் பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அவர்கள் மூலமே மின்உற்பத்தி நிலையங்களின் நிர்வாகமும் நடைபெற்று வருகிறது.
மின்சாதனங்கள் பராமரிப்பு என பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு அனல்மின் நிலையங்களிலும் வேலைகள் நடைபெற்றதாக கணக்கு காட்டி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்கள் செயற் பொறியாளர்கள் என்பது மின்வாரிய பணியாளர்கள் சங்கங்களின் கடுமையான குற்றச்சாட்டாகும்.
வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களை விரைந்து ஆய்வு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய வேண்டிய கடமை, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு இருக்கிறது என்கிறார்கள்.
அனல் மின் நிலையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் செயற் பொறியாளர்கள், தங்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைக்கும் மின்வாரிய அதிகாரிகளை முக்கியமான பிரிவுகளுக்கு நியமித்து, பல்வேறு முறைகேடுகளில் காலம் காலமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் பிரதானமான குற்றச்சாட்டாகும்.
வடசென்னையில் உள்ள அனல் மின்நிலையத்தில் செயற் பொறியாளர் பதவியில் கணவன், மனைவி ஆகிய இருவர் பணியாற்றி வருகிறார்கள். இதில் ஒருவர் தலைமைப் பொறியாளர் பணியிடத்தை கூடுதலாக கவனித்து கொள்கிறார். இவர்களின் மகன், இதே பிரிவில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். குடும்பமே கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்பதும் அங்குள்ள பணியாளர்களின் புகாராக இருந்து வருகிறது.
புதிய மின்தடம் உருவாக்கும் பணிகளில், உப கரணங்களில் அதிகளவு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக ஒப்பந்ததாரர்கள் குமறுகிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மாவட்டங்களில் செயற் பொறியாளர்களாக பணியாற்றி வருபவர், ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனங்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக விலை நிர்ணயித்து, 2000 ரூபாய் அளவுக்கு கொள்ளையடித்து வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
மின்வாரியத்தில் நடைபெறும் கொள்முதல்களை ஒழுங்குபடுத்த நேர்மையான தலைமை பொறியாளர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும் என்றும், மாவட்ட அளவில் நடைபெறும் கொள்முதல்களை ரத்து செய்துவிட்டு, மின்வாரிய தலைமை அலுவலகமே நேரடி கொள்முதல்களை செய்ய வேண்டும் என்பதும் ஒப்பந்ததாரர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
மின்வாரியத்தின் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர்மையாகவும் நியாயமாகும் நடைபெற்ற மின்பயன்பாட்டாளர் சங்க நிர்வாகிகளை, மாதத்திற்கு ஒருமுறை மின்துறை அமைச்சர் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு தீர்வு கண்டிட வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.
அதுபோலவே மின்கட்டண உயர்வில், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோரும் புதிய மின் இனைப்புகளை பெறுவதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள்.
மின் இணைப்பு கோரும் விண்ணங்களை ஆன் லைன் மூலம் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் காலதாமதம் இன்றி மின் இனைப்புகள் வழங்கும் நடைமுறையை அடிக்கடி உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமான கோரிக்கை என்பது, மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மின்சாரத்துறைக்கு புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வர வேண்டும் என்பதுதான் மின்வாரிய பணியாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
திராவிட மாடல் ஆட்சிக்கு சிறப்பு சேர்க்கும் எண்ணம் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு இருந்தால், அவருக்கு அரிய வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது.
மகளிர் இலவச பயணத் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை போன்று, மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடும் முறையை சோதனை அடிப்படையில் அமல்படுத்தி பார்த்தால் கூட, அமைச்சர் தங்கம் தென்னரசுவை ஒட்டுமொத்த தமிழகமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும். 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்கும் வழிவகுக்கும் என்கிறார்கள் மின்நுகர்வோர் சங்க நிர்வாகிகள்.
நிறைவாக, அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான மதிப்பீடு என்பது, மின்வாரிய பணியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் ஒருமித்த உணர்வோடு இருக்கிறது. எவ்வளவு சிக்கலான பிரச்னைகளையும் காது கொடுத்து கேட்பவர் என்பதால், அமைச்சர் தங்கம் தென்னரசுவை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து மின்வாரிய பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை முன்வைத்து தீர்வு கண்டிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதுதான், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் உள்ள சிறப்பு குணமாகும்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் நிர்வாகத்தின் கீழ் மின்சார வாரியம், கடந்த கால கசப்புகளை எல்லாம் துறந்து, தூய்மையான நிர்வாகம் என்ற நற்பெயரை எடுப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்கிறார்கள்.
மின்வாரிய பணியாளர்களின் நம்பிக்கைதான் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மிகப்பெரிய பலமாகும். மின்வாரியம் எதிர்கொண்டிருக்கும் சவால்களை எல்லாம் தனது கடுமையான உழைப்பின் மூலம் சாதனைகளாக மாற்றிடுவார் என்ற நம்பிக்கை மின்வாரிய ஒப்பந்ததாரர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
வீழ்ந்து கிடக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தனிப்பட்ட ஆற்றலால் வீறு நடை போடுமா.. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.