சாணக்யா டிவி நிறுவனர், மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், ஒவ்வொரு காணொளி பேட்டிகளுக்கும் வார்த்தைக்கு வார்த்தை நல்லரசுவால் விமர்சனம் வைக்க முடியும்.
இத்தனை காலம் அவரைப பற்றி சிந்திக்காத நல்லரசு, இன்றைய தினம் அவருக்கு எதிராக விமர்சனம் வைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.
ஒடிசா ரயில் விபத்து குறித்து முகநூலில் பாண்டே ஆழ்ந்த கவலையோடு பகிர்ந்திருக்கும் பச்சாதாபம்தான்.. விமர்சனத்திற்குரியதாக அமைந்துவிட்டது. அவருடைய பதிவிற்கே, அரசியல் சார்ப்பற்றவர்கள் அளித்திருக்கும் சூடான பதில்களே, பாண்டேவின் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும். (எந்த காலத்திலும் அப்படி நடக்காது என்பது நல்லரசுக்கு தெரியும். )
நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி எழுந்த சர்ச்சையைப் பற்றி யூ டியூப் காணொளியில் பேசிய பாண்டே, பிரதமர் மோடி, இதுவரை இந்தியாவில வாழ்ந்த தலைவரை விட மிகச் சிறந்த தலைவராக வான் அளவிற்கு புகழ்ந்து தள்ளியிருந்தார்.
ஒருவரை புகழ்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், தனக்கு பிடித்த ஒருவரை உயர்த்தி பிடிப்பதற்காக, உண்மையான நேசத்தோடு, தியாகத்தோடு, அறிவாற்றலோடு வாழ்ந்த தலைவர்களை இகழ்வது என்பது ஏற்புடையதல்ல என்பதற்காகவே, பாண்டேவின் பச்சாதாபம், ஊடக அறத்தோடு இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய கடமை, நல்லரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் பிரபலமாக உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோருமே, அடுத்த தேர்தலை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் மோடி மட்டுமே 100 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் நேரத்தில், அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றம் எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு செயல்படுத்தியவர் என்று செம பில்டப் கொடுத்திருப்பார் பாண்டே.
நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்றால், இன்றைக்கு இருக்கிற தொழில் நுட்பத்தை வைத்து, ஓராண்டிற்குள் அட்டகாசமாக கட்டி முடித்து விட முடியும்.
ஆனால், ஒடிசா ரயில் விபத்து போன்ற கோர நிகழ்வை தடுக்க வேண்டும் என்றால், பல ஆண்டுகள் செலவழித்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். ரயில் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக, துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்த அம்சங்களை செயல்படுத்த பல ஆண்டுகள் செலவிட வேண்டும். ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும் என்றாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்பது புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை விட முக்கியமானது, முதன்மையானது என்பது பிரதமர் சிந்தனையில் தோன்றினால்தான், அவர் மக்களின் தலைவராக பரிணாமம் அடைய முடியும்.
அப்படிபட்ட தீர்க்கதரிசனத்தோடு, அறிவார்ந்த எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலாவது 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ளதா., என்றால் பதில் இருக்காது.
ஸ்டார்ட் அப், முத்ரா திட்டம் என பலவற்றை கூறினாலும், இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதலாக அதானி குழுமத்திற்கு இந்திய மக்களின் பணம் ஒதுக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை என்பதால்தான், இந்திய நாட்டின் மீது உண்மையான தேச பக்தி கொண்டிருக்கும் பல லட்சம் மக்கள், மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்று அறச்சீற்றம் காட்டுகிறார்கள். இப்படிபட்ட கோபத்தை பாண்டேவிடம் இருந்து ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில், தமிழ் ஊடகங்களில் திராவிட சித்தாந்ததங்களை ஆதரிக்கிறார்களா.. அதற்கு போட்டியாக, இந்து மத சித்தாந்ததங்களை தூக்கிப் பிடிப்போம் என்ற கொள்கையோடு ஊடகத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார் பாண்டே. அவரின் வியூகம், பணத்தை மழையாக பொழிய வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால், ஊடகவியலாளருக்கான அறச்சீற்றத்தை பாண்டேவிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
ஒடிசா ரயில் விபத்து என்பது, ஆள் பற்றாக்குறை, 12 மணிநேரத்திற்கு மேலான கூடுதல் வேலை நேரம், தண்டவாளம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பராமரிப்பில் அலட்சியம், தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் கஞ்சதனம் போன்றவைதான் முக்கிய காரணம் என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் தைரியம், ஊடக அறத்தோடு செயல்படுவதாக கூறும் பாண்டேவுக்கு இருந்திருக்க வேண்டும்.
ஆனால், ரயில்வே துறையின் கடைநிலை ஊழியர்களை பலி கொடுக்கும் விதமாகவும், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களை காப்பாற்றும் விதமாகவும், முகநூலில் பதிவிட்டுள்ளார் பாண்டே.
கடந்த 9 ஆண்டு கால பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை விமர்சனம் செய்பவர்கள், பாஜகவில் செல்வாக்குமிக்க தலைவராக அடையாளப்படுத்துவதற்கு முன்பு மோடியின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் மர்மங்களையும் வெளியுலகிற்கு தெரியும் வகையில் பகிர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருவதை, சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, பொது தளங்களிலும் பார்க்க முடிகிறது.
பாண்டேவின் ஆதர்ஷ தலைவராக திகழ்ந்து கொண்டிருக்கும் மோடிக்கு, அவரது இன்றைய ஒட்டுமொத்த பிம்பத்தையும் சுக்கு நூறாக்கும் வகையில் மறுபக்கத்தில் எவ்வளவு மர்மங்கள் நிறைந்திருக்கிறதோ.. அதைப் போலவே பாண்டேவின் கடந்த காலமும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரோடு இணைந்து பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர்கள் பலர், இன்றைய தேதியிலும் கூட நினைவுக் கூர்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியளிக்க கூடிய ஒன்றாகும்.
பாண்டேவே, தனது கடந்த கால ஊடக வாழ்க்கையை பெருமையாக சொல்லிக் கொள்வதைப் போல, 25 ஆண்டு கால ஊடக வாழ்க்கையில், அவரே வகுத்துக் கொண்ட தனி பாதையில் வெற்றிகரமாகவே பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். பொருளாதார ரீதியிலும் கற்பனைக்கு எட்டாத வகையில் உயர்ந்து நிற்கிறார்.
அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ, ஊடகம் மற்றும் பொதுவாழ்க்கையில் எட்டியிருக்கும் உயரத்தின் மீதோ நல்லரசுக்கு துளியளவும் பொறாமை இல்லை. பாண்டேவை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்ததில்லை.
ஆனால், தான் சொல்வதை எல்லாம் அப்படியே தெய்வ வாக்காக நினைத்துக் கொண்டு நம்பக் கூடிய ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் நேரத்தில் (ஒவ்வொரு பேட்டியையும் கணக்கில் கொண்டு சொல்கிறோம். சில வீடியோக்கள் மாதக்கணக்கில் ஒரு லட்சத்தை கூட எட்டாமல் இருக்கிறது என்பது தனிக்கதை) கொஞ்சமாவது மனசாட்சியுடன், ஊடகத்தர்மத்திற்கு உட்பட்டு பேச வேண்டும் என்ற சிந்தனையே பாண்டேவுக்கு இல்லை என்பதுதான் நல்லரசுக்கு உள்ளது. மிகப்பெரிய வருத்தமாகும்.
ஆரம்ப கட்ட ஊடக வாழ்க்கையை பற்றி, பேசும்போதெல்லாம் பாண்டே பிரமிப்பாகவே கூறுகிறார். மதுரை தினமலரில் தொடங்கிய பணி, சேலம் காலைக்கதிரில் ஆற்றிய சாகசங்கள் என சித்ரா லட்சுமணன் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை பார்க்கும் போது நல்லரசுக்கு ஏற்பட்ட வியப்பு கொஞ்சம் நஞ்சமல்ல.
ஊடகப் பணியில் அடியெடுத்து வைத்த நாள் முதலாகவே, பிரமிக்க வைக்கும் சாகசங்களை புரிந்துள்ள பாண்டேவை பற்றி, 20 ஆண்டுகளுக்கு பின்பு, அதாவது இன்றைய இளம் ஊடகவியலாளர்களுக்கு படிப்பினையாக்க வேண்டிய கடமை நல்லரசுக்கு இருக்கிறது. ஏனெனில், இன்றைய சமூக ஊடகங்களில் பாண்டே பாணி தான் பேமஸ் ஆகியிருக்கிறது.
நல்லரசு பார்த்த பாண்டேவுக்கும், தன்னைப் பற்றி இப்போது அவர் கூறுவதற்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, திரைப்படங்களில் வருகிற இரட்டை வேடங்களைப் போல, இரண்டு பாண்டேக்கள் இருந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கவே முடியவில்லை.
கடந்த ஒரு வார காலமாக நல்லரசுவின் சிறப்பு செய்தியாளர், சேலத்தில் தங்கியிருந்த போதும் கூட, சேலத்தில் பணியாற்றி வரும் நிருபர்கள் வழக்கமாக காலை நேரத்தில் கூடும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் போனது. தவிர்க்க முடியாத ஒரு பணிக்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக செலல வேண்டியிருந்ததால், அதன் அருகில் உள்ள அரசு வளாகத்தில் சேலம் செய்தியாளர்கள் கூடும் இடத்திற்கு சென்றார் நல்லரசுவின் சிறப்புச் செய்தியாளர்..
20 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பாண்டே பணியாற்றியதாக கூறிய காலத்தில், அவரோடு களத்தில் சமகாலத்தில் பயணித்த நண்பர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
சென்னை தினமலரின் சகோதர நிறுவனமாக சேலத்தில் துவக்கப்பட்டதுதான் காலைக்கதிர் நாளிதழ்.
ஒவ்வொரு நாள்காலைப்பொழுதும் அரசியல்வாதிகளுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் வெடிகுண்டைப் போலதான், அதிர்ச்சியளிக்கும் வகையில் சூடான செய்திகளை சுமந்து கொண்டிருந்திருக்கிறது, காலைக்கதிர்
அதில் வெளியாகும் சிறப்புச் செய்திகளில், அந்த செய்தியை திரட்டிய செய்தியாளரின் பெயர் அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், சேலத்தில் காலைக்கதிர் செய்தியாளராக பணியாற்றிய போது ரங்கராஜ் பாண்டே பெயரில் வெளியான செய்திகளின் பட்டியலை அவரால் வெளியிட முடியுமா?என்பதுதான் நல்லரசுவின் கேள்வியாக இருக்கிறது.
அவருக்கு முன்பாகவும் பின்பாகவும் பணியாற்றிய மார்க்கபந்து என்ற செய்தியாளர், ஊர் ஊராக அலைந்து திரட்டிய செய்திகள், சேலம் மாவட்டத்தை மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே பரபரப்பை பற்ற வைத்திருந்திருக்கிறது.
அவருக்கு இணையாகவே ரமேஷ் கண்ணன் என்ற செய்தியாளரும் (தற்போது தேனி மாவட்ட புதிய தலைமுறை செய்தியாளர்) அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் கதற விட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.
இன்றைய தேதியில் பிரதமர் மோடியின் படிப்பும், ஆரம்ப கட்ட வாழ்க்கையும் எப்படி சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ.. அதுபோலவே, சேலத்து சிங்கம் என்று அழைக்கப்பட்ட மறைந்த வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் பிறந்த தேதி, படிப்பு, கல்வித்தகுதி என பலவற்றை தோண்டி துருவி, ரமேஷ் கண்ணன் வெளியிட்ட ஆதாரங்களுடன் கூடிய அட்டகாசமான செய்தி, சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளையே கொந்தளிக்க வைத்தது என்பது எல்லாம் வரலாறு.
சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மரத்தை, சிறு குழந்தை போல சுற்றி சுற்றி வருவதுதான் ரமேஷ் கண்ணனின் அன்றாட செயலாக இருக்கும். ஆனால், மறுநாள் காலை வெளியாகும் காலைக்கதிரில் பிரபலமான அரசியல்வாதியின் முகமூடி சுக்கு நூறாக உடைந்திருக்கும் அல்லது மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயரதிகாரிகள் என அரசு நிர்வாகத்தின் உச்சபதவியில் இருப்பவர்களின் அதிகார திமிரை உடைத்து எறிந்திருப்பார். அந்த பட்டியலில் 20 ஆண்டுகளுக்கு முன்பே சிக்கியவர்தான், தற்போதைய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.
மார்க்கபந்து, ரமேஷ் கண்ணன் வரிசையில் ஐந்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், களப் போராளிகளாக வாழ்ந்த காலங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். இளமைக்காலம் முழுவதையுமே போராட்ட வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் எதிர்த்து வாழ்ந்த செய்தியாளர்களை மிஞ்சிய திறமை பாண்டேவிடம் இருந்தது எது என்று ஆராய்ந்து பார்த்தால், அவரின் வாத திறமையும், அவரின் அப்பாவி முகத் தோற்றமும்தான்.
காலம் செய்த கொடுமையாக இளம் வயதில் மார்க்கபந்து மரணம் அடைந்ததும், குடும்ப சூழல் காரணமாக, கடைக்கோடி மாவட்டமான தேனியில் ரமேஷ் கண்ணன் அடைக்கலம் புகுந்ததை போல, திறமையுள்ள எண்ணற்ற ஊடகவியலாளர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்காததால், பாண்டேவின் ஆட்டம், தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது..
இன்றைக்கும் சேலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்களாக பணியாற்றியவர்கள், மலரும் நினைவுகளை பகிர்ந்தால, அதில் பாண்டேவின் பெயரே உச்சரிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
அர்ப்பணிப்புணர்வுடன் எந்தவொரு பணியையும் மேற்கொள்பவர்களின் வாழ்க்கை மீது புகழ் வெளிச்சம் ஒருபோதும் படுவதில்லை.
ஆனால், வாய் சவடால், முழு பொய்யை உண்மை என நம்ப வைக்கும் கயமைத்தனம், மதவெறி, அர்த்தமற்ற அவதூறுகள், பொது வாழ்விற்கு விரோதமான குணநலன்கள் என பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு வகையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளில், பெரும்பாலானவை ரங்கராஜ் பாண்டேவுக்கும் பொருத்தமாக அமைந்திருப்பதும், ஊடகவியலாளர் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு, பாசிசத்திற்கு ஆதரவாகவும் ஒரு சார்பாகவும் வாதங்களை முன்வைக்கிற வித்தைகளும் எவ்வளவு நாளைக்கு கை கொடுக்கும் என்பதை காலமே தீர்மானிக்கும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
ஆளுநர் ஆர்.என்.ரவியோடு நெருக்கமான நட்பு எப்படி பாண்டேவுக்கு ஏற்பட்டது.? அறிவுக்கூர்மையுள்ள ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கு தேவையா?.. அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு தேவையா?… பேசும் தைரியும் இருக்கிறதா பாண்டேவுக்கு…
ஜுன் 4 ஆம் தேதி சாணக்யா வெளியிட்ட மாசிலாமணி பிள்ளையின் நேர்காணலிலில் பாண்டேவின் பணிவை பார்ப்போர்கள், பாண்டேவின் காலில் விழுந்து வணங்குவதற்கு கூட தயங்க மாட்டார்கள். ஆனால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பாண்டே வெளியுலகிற்கு தெரியும் வகையில் செய்த சேட்டைகளை பட்டியலிட்டால், பாண்டேவின் மறுபக்கம் அதிர்ச்சியளிப்பதாகதான் இருக்கும்.
இன்றைக்கு நிம்மதியாக மூன்று வேளை உணவை நிம்மதியாக பாண்டேவால் உட்கொள்ள முடிகிறது என்றாலும், அவரது சந்ததி நிம்மதியாக வாழ முடிகிறது என்றாலும், அதற்கு கடந்த 50 ஆண்டுகளில் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் அசைக்க முடியாத கட்டமைப்புகள்தான். அதைவிட முக்கியம், மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தமிழர்கள் என்பதும்தான்.
ரங்கராஜ் பாண்டே எப்படிப்பட்டவர் என்பது குறித்து செய்தி தொகுப்பு மிக அருமை அவர் எப்படி பட்டவர் என என் எனக்கு எண்ணம் தோன்றுகிறதோ அதே அடிப்படையில் செய்தி வெளியாகி இருந்தது ஊடகவியலாளாக எனக்கு தோன்றியது மறு பிரதிபலிப்பு செய்தி தான் இது என நிச்சயமாக சொல்ல முடியும்.