தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 10 ஆம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனித் தீர்மானத்தை தாக்கல் செய்து உரையாற்றினார்.
தமிழ்நாட்டின் மானத்தை காப்பாற்றும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை உணர்ச்சி மிகுந்ததாக அமைந்திருந்தது. தனித் தீர்மானத்தின் மீது பேசிய நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆவேசத்தை காட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கினார்.
முதல்வரின் தனித் தீர்மான உரையை விட, மூத்த அமைச்சர் துரைமுருகனின் பேச்சு, தமிழ்நாட்டை கடந்த இந்திய முழுவதும் மிகப்பெரிய கவனத்தை பெற்றது.
பொதுக்கூட்ட மேடை பேச்சோ சட்டப்பேரவை பேச்சோ.. எதுவாக இருந்தாலும் மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பொங்கினால், அதற்கு பின்னால், தனிப்பட்ட அரசியல் லாப நட்டக் கணக்கு நிச்சயமாக மறைந்திருக்கும். துரைமுருகனின் அரசியல் வாழ்க்கையை நீண்ட காலமாக பின் தொடர்ந்து வருபவர்களால் மட்டுமே யூகிக்க முடியும் என்று பொடி வைத்து பேசுகிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான பேச்சு மட்டுமல்ல, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகன், கோபாலபுரத்து விசுவாசி என்று உருக்கமாக சட்டப்பேரவையில் கண்ணீர் சிந்தினாரே… இந்த இரண்டு பேச்சுக்கு பின்னால் சுவாரஸ்யமான இரண்டு மூன்று நிகழ்வுகள் மறைந்திருக்கின்றன.
நல்லரசு யூ டியூப் சேனல், துரைமுருகனின் அரசியல் சித்து விளையாட்டுகளை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட மூத்த திமுக நிர்வாகிகள் அன்பு கட்டளையிட்டார்கள்.
80 வயதை கடந்துவிட்ட திமுகவின் மூத்த தலைவர், சீனியர் மினிஸ்டர் துரைமுருகன், தனது மறைவுக்குப் பிறகு தன்னுடைய கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுத வேண்டும் என உணர்ச்சிகளை கொட்டியதற்கு பின்னால், வேலூர் மாவட்ட திமுக அரசியல் பஞ்சாயத்து ஒன்றும் மறைந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிக்குரிய அம்சமாகும்.
வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருபவர், அனைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமார். அமைச்சர் துரைமுருகனின் சிஷ்யரான இவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் புதல்வர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோரின் விசுவாசக் கூட்டததில் முக்கியமானவர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மூத்த தலைவர் துரைமுருகன் என்பதால், அவருக்கு உரிய மரியாதையை கொடுத்து வருபவர்தான் ஏ.பி.நந்தகுமார் என்றாலும், சோளக்காட்டு பொம்மை போல வாழ்ந்து கொண்டிருக்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்திற்கு அடங்கி போகிற பழக்கம் இல்லாதவர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ என்கிறார்கள்.
திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன் இருக்கும் காலத்திலேயே, வேலூர் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் கதிர் ஆனந்த், ஏ.பி.நந்தகுமாரிடம் இருந்து வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை பறிக்க திரைமறைவில் காய் நகர்த்தி கொண்டிருக்கிறார்.
கட்சி பதவி விவகாரத்தில், கதிர் ஆன்ந்த்திற்கும் ஏ.பி.நந்தகுமாருக்கும் இடையே பனிப்போர் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏவின் ஒவ்வொரு அசைவையும் கதிர் ஆனந்த் எம்பி கண் குத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பாக, வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் துரைமுருகனின் மரணத்தை பற்றி ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ பேசியதாக பொய்யான தகவல் ஒன்று பரப்பப்பட்டிருக்கிறது.
வயது மூப்பின் காரணமாக துரைமுருகன் வெகு சீக்கிரமாக இறந்துவிடுவார். அதன் பிறகு வேலூர் மாவட்ட திமுக அமைச்சர் தான் தான் என்று ஏ.பி.நந்தகுமார் பேசியதாக, எந்தவிதமான ஆதாரமும் இல்லாத ஒரு தகவல், அவசர அவசரமாக துரைமுருகனின் காதுக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் சூத்திரதாரி கதிர் ஆனந்த் எம்பிதான் என்கிறார்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலையான திமுக நிர்வாகிகள்.
வதந்தி போல பரவிய தன் இறப்புச் செய்தியால், ஏ.பி.நந்தகுமார் மீது கோபம் கொண்டிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் பஞ்சாயத்து சென்றிருக்கிறது. தீர விசாரணை நடத்தியதில், ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ மீது எந்த தவறும் இல்லை என்பது ஊர்ஜிதமானதால், அமைச்சர் துரைமுருகனை சாந்தப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உயிரோடு இருக்கும் போதே, வேலூர் மாவட்டத்தில் தனது மரணத்தைப் பற்றிய பேச்சு எழுந்துவிட்டதே என்று கலங்கி போன அமைச்சர் துரைமுருகன். மனப் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில்தான், சட்டப்பேரவையில் உருக்கம் காட்டியிருக்கிறார்
கோபாலபுரத்து விசுவாசி என்று உருக்கம் காட்டியது, வேறு ஒரு திசையில் பூகம்பமாக வெடிக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் எதிர்பார்த்திருக்கவில்லை.
அமைச்சர் துரைமுருகனின் விசுவாசத்தை சவுக்கு சங்கர் கேலி செய்யும் அளவிற்கும், திமுகவையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்கும், அமைச்சர் துரைமுருகனே தீனி போட்டு விட்டாரே என்று குமறுகிறார்கள் அவரது தீவிர ஆதரவாளர்கள்.
கோபாலபுரத்து விசுவாசி என்று அமைச்சர் துரைமுருகன் கூறியதை, அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகள் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒரு கருத்துப்படம், தீயாக பரவியதைக் கண்டு, அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்திற்கு ரத்தம் கொதித்து இருக்கிறது.
திமுக ஆட்சியில் அதுவும் பொதுச் செயலாளராக தனது தந்தை பதவி வகித்து வரும் நேரத்தில், தங்கள் குடும்பத்தின் மீது அவதூறு பரப்பினால், பின்விளைவுள் கடுமையாக இருக்கும் என்பதை காட்ட துடித்திருக்கிறார் கதிர் ஆனந்த் எம்பி.
அமைச்சர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளரும், காட்பாடி திமுக நிர்வாகியுமான வன்னிய ராஜாவுக்கு டெல்லியில் இருந்தவாறே கதிர் ஆனந்த் எம்பி, கட்டளை பிறப்பித்திருக்கிறார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுக ஐடி விங் நிர்வாகி அருண் குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்கிறார்கள்.
சூட்டோடு சூடாக ஏப்ரல் 5 ஆம் தேதி காட்பாடி போலீசார், பொள்ளாச்சிக்கு விரைந்து சென்று அருண் குமாரை அதிரடியாக கைது செய்து, அமைச்சர் துரைமுருகனின் ஊரான காட்பாடிக்கே அழைத்து வந்து அங்குள்ள சிறையில் அடைக்கிறார்கள்.
பாரதிய ஜனதாவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய சிடிஆர் நிர்மல் குமார் மூலம் அருண் குமார் கைது செய்யப்பட்ட தகவல், சவுக்கு சங்கருக்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே தான் மட்டுமே சிறந்த புலனாய்வு புலி என்று பீற்றிட்டுக் கொள்ளும் சவுக்கு சங்கர், எந்தளவுக்கு அடி முட்டாள் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே, அருண்குமார் கைது குறித்து சவுக்கு சங்கர் வெளிப்படுத்திய செய்தி அமைந்திருக்கிறது என்பதுதான் நல்லரசுவின் குற்றச்சாட்டு.
சிடிஆர் நிர்மல் குமார் கொடுத்த தகவலை மட்டுமே தனது டிவிட்டரில் வாந்தியெடுத்த சவுக்கு சங்கர், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் அருண் குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று வாங்குகிற காசுக்கு மேலே கொஞ்சம் அதிகமாக பொங்கியிருந்தார் சவுக்கு சங்கர்..
அருண்குமார், அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், அமைச்சர் எனும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் துரைமுருகன் என்பதுதான் சவுக்கு சங்கரின் பிரதான குற்றச்சாட்டு.
துரைமுருகனை திட்டி தீர்த்த அதே நேரத்தில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு செயல்படுகிறது என்றும் குற்றம் சுமத்திய சவுக்கு சங்கர், வழக்கம் போல, முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் அவதூறுகளை வாரி இறைத்து இருக்கிறார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நிர்வாகியான அருண்குமாரை மட்டும் பழிவாங்கவில்லை துரைமுருகனும் அவரது மகனுமான கதிர் ஆனந்த்.
சொந்த கட்சியான திமுகவைச் சேர்ந்த ஐடி விங் நிர்வாகியையும் பழிவாங்கியிருக்கிறார்கள் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் என்ற தகவலே சவுக்கு சங்கருக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் அவரை அடி முட்டாள் என்று நல்லரசு விமர்சனம் செய்கிறது.
அருண்குமார் கைதுக்கு முன்பே, வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜகுப்பம் ஜி.முருகானந்தம் என்பவர், திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்று காரணம் கற்பித்து, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார்.
அதிமுக ஐடி விங்க் நிர்வாகி அருண்குமார் கைது செய்யப்பட்டது ஏப்ரல் 5 ஆம் தேதி.
திமுக ஐடி விங்க் ஒருங்கிணைப்பாள் ஜி.முருகானந்தத்தை திமுகவில் இருந்து நீங்கியது ஏப்ரல் 3 ஆம் தேதி.
அருண்குமாருக்கும் ஜி.முருகானந்தத்திற்கும் என்ன தொடர்பு…
இரண்டு பேருக்குமே வில்லனாக மாறியிருப்பவர்கள் அமைச்சர் துரைமுருகனும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பியும்தான்.
துரைமுருகனின் கல்லறை வாசகம் குறித்து அதிமுக நிர்வாகி அருண்குமார் சமூக ஊடகங்களில் பகிர்ந்த கருத்துப் படத்தை, திமுக ஐடி விங்கின் தலைமை, வேலூரில் உள்ள ஜி.முருகானந்தத்திற்கு அனுப்பி வைக்கிறது. அதிமுக நிர்வாகிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வது குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்து தகவல் தெரிவியுங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
அருண்குமாரின் கருத்துப்படத்தை, வேலூர் மாவட்ட திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு முருகானந்தம் அனுப்பிய நேரத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவரது முகநூலில் பதிவாகியிருக்கிறது. பத்து பதினைந்து நிமிடத்திற்குள்ளாகவே தவறை கண்டுபிடித்து, அமைச்சர் துரைமுருகனைப் பற்றி அதிமுக நிர்வாகி அருண்குமார் வெளியிட்டிருந்த கேலி படத்தை நீக்கியிருக்கிறார் முருகானந்தம்.
ஜி.முருகாந்தம், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாரின் தீவிர விசுவாசி என்பதால், அவரை பழிவாங்க காத்துக் கொண்டிருந்த எம்.பி. கதிர் ஆனந்தின் தீவிர ஆதரவாளர்கள், இதுதான் சரியான சந்தர்ப்பம் என முருகானந்தத்திற்கு எதிரான புகாரை தூக்கி கொண்டு சென்னைக்கு ஓடுகிறார்கள்.
ஜி.முருகானந்தத்தின் கவனக்குறைவை கொலைக்குற்றமாக கருதி, சென்னையில் இருந்த அமைச்சர் துரைமுருகனிடம் போட்டு கொடுக்கிறார்கள்.
ஏற்கெனவே அதிமுக நிர்வாகி அருண்குமாரின் கேலி, கிண்டலால் கடும் கொதிப்பில் இருந்த அமைச்சர் துரைமுருகன், தன்னுடைய கட்சியில் இருப்பவர், சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தமே, தனக்கு எதிரான கருத்துப்படத்தை வேண்டும் என்றே சமூக ஊடகங்களில் பரப்பியிருப்பார் என்று நம்பி, முருகானந்தத்தை கட்சியில் இருந்து நீக்க திமுக தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
இந்த சம்பவங்கள் நடந்த நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளாவில் அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று இருந்திருக்கிறார்.
அமைச்சர் துரைமுருகனின் கோபம், திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் மூன்று பேரும் விசாரித்த போது, முருகானந்தம், திமுகவிற்காக உயிரை கொடுத்து வேலை பார்ப்பவர். தற்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுகவிற்காக ஐடி விங்கை உருவாக்கிய நேரத்திலேயே மிகுந்த ஆர்வுடன் வேலூர் மாவட்ட ஐடி விங் நிர்வாகியாக செயல்படுவதற்காக சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேலூருக்கு திரும்பியவர் முருகானந்தம்.
தலைவர் தளபதி மீது மாறாத பக்தி கொண்டிருப்பவர். அவர் திமுகவுக்கு துரோகம் செய்திருப்பார். அமைச்சர் துரைமுருகனை அசிங்கப்படுத்துவதற்காக அதிமுக நிர்வாகி வெளியிட்ட கருத்துப்படத்தை வேண்டும் என்றே பகிர்ந்து இருப்பார் என்று எல்லாம் குற்றம் சுமத்த முடியாது என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கோளாறின் காரணமாகதான் தவறு நடந்திருக்கிறது என்று அமைச்சர் துரைமுருகனிடம் டிஆர்பி ராஜா, ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை ஆகியோர் விளக்கியிருக்கிறார்கள்.
அதனை ஏற்று, பெருந்தன்மையாக முருகானந்தத்தை பெரிய மனதுடன் மன்னித்து அறிவுரை கூற விருப்பம் இல்லாத அமைச்சர் துரைமுருகன், தன்னை எதிர்த்தால் அரசியலில் அழிக்கப்படுவீர்கள் என்பதை வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மீண்டும் ஒருமுறை எச்சரிக்கும் வகையில் முருகானந்தத்தை நீக்கி, முரசொலியில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இந்த பஞ்சாயத்து எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் என்கிறார்கள் வேலூர் மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டார் முருகானந்தம் என வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, திமுக தலைமை கழகத்திற்கு கடிதம் கொடுக்கவில்லை.
அதேபோல, ஐடி விங் நிர்வாகிகயை நீக்கும் உரிமையை பெற்றிருக்கும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் டிஆர்பி ராஜாவும் திமுக தலைமை கழகத்திற்கு புகார் தெரிவித்து கடிதம் வழங்கவில்லை.
இப்படிபட்ட பின்னணியில், சர்வதிகாரியாக மாறி துரைமுருகன், சாதாரண கட்சி நிர்வாகியான முருகானந்தத்தை அதிரடியாக நீக்கியிருக்கிறார் என்றால், திமுக பொதுச் செயலாளராக உயர்ந்த நிலைக்கு சென்ற பிறகும் கூட, அவரிடம் காணப்படும் வன்மம் குறையவில்லை.
வேலூர் மாவட்டத்தில் தனது மகன் கதிர் ஆனந்த் எம்பிக்கு அடிபணிந்து போக மறுக்கும் யாராக இருந்தாலும், தங்கள் குடும்பத்திற்கு விசுவாசம் காட்டாமல், மாவட்ட அளவில் பதவி வகிக்கும் திமுக நிர்வாகிகளின் புகழ் பாடும் கூட்டமாக மாறினால், அவர்களின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் சூன்யமாக்கிவிடுவேன் என்று அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுப்பதாக முருகானந்தம் மீதான நடவடிக்கையை பார்க்கிறோம் என்கிறார்கள் வேலூர் மாநகர திமுக நிர்வாகிகள் வேதனையுடன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் சாதனைகளை, பெருமைகளை வேலூர் மாவட்ட மக்களிடம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவலாக கொண்டு சேர்ப்பதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்த தீவிர களப் பணியாளர் முருகானந்தத்திற்கு கடுமையான தண்டனையை கொடுத்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
மறப்போம்..மன்னிப்போம் என்ற பேரறிஞர் அண்ணா கற்று தந்த பால பாடத்தை அவமதிக்கும் வகையில், முருகானந்தம் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் நடந்து கொண்டது, வேலூர் மாவட்ட திமுகவில் கொந்தளிப்பாக மாறியிருக்கிறது.
இந்த விவகாரம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால், தன்னை நிச்சயம் கண்டிப்பார் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டிருப்பதால்தான், அதில் இருந்து தப்பிக்க சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில், வழக்கத்திற்கு மாறாக கொந்தளித்து இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
முருகானந்தத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி என்றைக்காவது ஒருநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு நிச்சயம் தெரிய வரும். அன்றைக்கு மூதத அமைச்சர் துரைமுருகனின் அதிகார திமிருக்கு சம்மட்டி விழும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.