சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ளன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் தி.மு.க வெற்றி பெற்றது. மத்திய மாவட்டச் செயலாளரான வழக்கறிஞர் ராஜேந்திரன்தான் வெற்றி கதாநாயகன். தற்போது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்பதால், வரும் தேர்தலில் 11 தொகுதிகளையும் கொத்தாக அள்ள திட்டமிட்டு, அதற்கான தேர்தல் பணிகளை கடந்தாண்டு இறுதியில் இருந்தே முடுக்கிவிட்டுள்ளார்.
சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் செய்துள்ள பல நூறு கோடி ரூபாய் வளர்ச்சித்திட்டங்கள், அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கும் என பெரிதாக நம்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், முதலமைச்சர் தொகுதியான எடப்பாடியிலேயே அவரை தோற்கடிப்பதற்கு மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிராமம் கிராமமாக சென்று, அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களைப் பட்டியலிட்டு பொதுமக்களிடம் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவரைப் போலவே, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்ற, தி.மு.க.வினர் பம்பரமாக சுழன்றுக் கொன்டிருக்கின்றனர்.
அதேநேரத்தில், தி.மு.க. சார்பில் வேட்பாளராக களத்தில் குதிக்க, 11 தொகுதிகளிலும் தி.மு.க. பிரபலங்கள், படை பரிவாரங்களைக் திரட்டிக் கொண்டு, அண்ணா அறிவாலயத்திற்கு நாள்தோறும் வந்து, விருப்பப் மனுக்களை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருகின்றனர். விருப்பப் மனு வழங்கும் பணி தொடங்கிய கடந்த 5 நாள்களில் மட்டும், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் தலா 20 பேருக்கு மேல் விருப்ப மனுக்கள் வந்துள்ளதாக, அண்ணா அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அந்த வரிசையில், அண்ணா அறிவாலயத்தில் இன்றும் சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் கூட்டம் அலைமோதியது. வீரபாண்டித் தொகுதிக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் புதல்வர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, மருத்துவர் பிரபு ஆகிய இருவருமே தனித்தனியாக விருப்ப மனுக்களை வழங்கினர். மேலும், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், பனமரத்துப்பட்டி ராஜா ஆகியோரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
சேலம் மேற்கு தொகுதிக்கு முன்னாள் சூரமங்கலம் மண்டலக் குழுத்தலைவர் சர்க்கரை சரவணன், மறைந்த கு.சி. வெங்கடாசலத்தின் மகன் தாமரைக்கண்ணன், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகனான மறைந்த நெடுஞ்செழியன் மருமகன் மருத்துவர் தருண், சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் உள்பட பலர் விருப்பமனு வழங்கியுள்ளனர்.
இதேபோல, கெங்கவள்ளி தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷிணி உள்பட பல நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்துள்னர்.
ஏற்காடு தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்ச் செல்வன், சிவராமன், ரேவதி, அவரது கணவர் மாதேஸ்வரன் உள்பட பலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். சேலத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்க போட்டி போட்டுக் கொண்டு குழு, குழுவாக வரும் தி.மு.க. பிரமுகர்களைப் பார்த்து, அண்ணா அறிவாலய மூத்த நிர்வாகிகளே வியந்து போய் இருக்கிறார்கள்.
முதலமைச்சர் மாவட்டத்தில் இருந்தே இவ்வளவு எழுச்சியாக தி.மு.க. பிரபலங்கள் திரண்டு வருவதைப் பார்த்து, முதலமைச்சர் தனது சொந்த தொகுதியிலேயே வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்று, தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட தி.மு.க. பிரபலங்கள் குழு, குழுவாக அண்ணா அறிவாலயத்தில் முகாமிட்டதால், திருவிழா போல காட்சியளித்தது, தி.மு.க. தலைமைக் கழகம். அதுவும் இன்றைய முகூர்த்த நாள் என்பதால், மகளிர் அணியைச் சேர்ந்த தி.மு.க. மகளிர் பிரபலங்கள், காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள்ளாகவே விருப்ப மனுக்களை ஆர்வமுடன் தாக்கல் செய்துள்ளார்கள்.
சேலம் மாவட்ட தி.மு.க.வினரால் அண்ணா சாலையே திணறிய அதே நேரத்தில், அ.தி.மு.க. அலுவலகத்தில் கூட்டம் இன்றி காணப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று என்பது ஒருபுறம் இருக்க, விருப்ப மனு வழங்கும் பணி இன்றுதான் அ.தி.மு.க.அலுவலகத்தில் தொடங்கியது என்ற போதிலும், அங்கு குறைந்த அளவிலான பிரபலங்களே இன்று விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். முதல்நாளிலேயே, எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வராததால், மூத்த அமைச்சர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டதாக, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
களையிழந்த அ.தி.மு.க தலைமைக் கழகம்..
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பத்து பதினைந்து நிர்வாகிகள்தான் உடனிருந்தனர்.