
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அவர் மறைந்தார். அதற்கு முன்பு வரை பிப்ரவரி 24 என்றால், அ.தி.மு.க. தொண்டர்களிடம் காணப்படும் எழுச்சியியை அந்த மாதத்தின் முதல்நாளில் இருந்தே பார்க்கலாம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராமம் தோறும், நகரம் தோறும் களைகட்டும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா. ஆட்சியில் இருந்தால் பதவியை தக்க வைத்துக் கொள்ள மண்சோறு சாப்பிடுவது முதல் அக்னி குண்டம் இறங்குவது வரை, அ.தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த ஒட்டுமொத்த நிர்வாகிகளும் மஞ்சள் புடவையில் அம்மனாகவே காட்சியளிப்பார்கள்.
ஆட்சியில் இல்லாவிட்டால், கட்சிப் பதவி பறிபோய்விடக் கூடாதே என்ற பயத்தில், கடன்பட்டாவது பிறந்தாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். இந்த எழுச்சியெல்லாம் , ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் தான் பிரம்மாண்டமாக இருந்தது. அவரின் மறைவுக்குப் பிறகு, 2017 ஐ தவிர்த்து கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா உப்பு சப்பில்லாமல், வெறும் சடங்காகவே மாறிவிட்டது. தன்னைச் சுற்றியிருப்பவர்கள் உலக மகா நடிகர்கள் என்பதை புரிந்துகொள்ளாமலேயே ஜெயலலிதா மறைந்து போனதுதான் துயரம்.
ஜெயலலிதாவைச் சுற்றியிருந்த நடிகர்களில் உச்ச நடிகர் சசிகலா நடராஜன்தான். அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்று வழிநடத்திய 30 ஆண்டுகளில் 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் ஜெயலலிதா. கட்சியாலும், ஆட்சியாலும் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்திருக்கிறார்கள். அதுபோலவே சசிகலா குடும்பத்தினரும் செல்வந்தர்களாக மாறினார்கள். ஆனால், அவரின் செயல்பாடுகளையும், அவரது ஆளுமையை பற்றியும் வெளியுலகத்திற்கு நாள்தோறும் கொண்டு சென்ற, அவரது பெயரைத்தாங்கி நிற்கும் ஜெயா தொலைக்காட்சி பணியாளர்கள் இன்றைக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.
1991 ல் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று, 5 ஆண்டு நிறைவு செய்தார். 1996 தேர்தலில் தனது தோல்விக்கு சன் டிவிதான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து, 1999ல் தொடங்கப்பட்டதுதான் ஜெயா தொலைக்காட்சி. நூற்றுக்கும் குறைவான பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட ஜெயா தொலைக்காட்சி, அவர் இரண்டாவது முறையாக பதவியேற்ற 2001 -06 காலகட்டத்தில் உச்சத்தை தொடடது. சுமார் 500 பணியாளர்களைக் கொண்ட, லாபத்தை ஈட்டும் நிறுவனமாக உயர்ந்தது. செய்தி தொலைக்காட்சி என்ற அடையாளத்தை கடந்து, பொழுதுபோக்கு தொலைக்காட்சியாகவும் புதிய பரிமாணத்தை அடைந்தது. அதன் வளர்ச்சி, அவர் மறைந்த காலமான 2016 வரை நீடித்தது.
எம்.ஜி.ஆர் காலத்திலேயே அரசியலுக்கு வந்திருந்தாலும், அவரின் பிறந்தநாள் விழா எப்போதிலிருந்து களை கட்டத் தொடங்கியது என்று பார்த்தால், 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான். அப்போது நடைபெற்ற பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையவில்லை. அதற்கு காரணம் அப்போது, அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தக் கூடிய தொலைக்காட்சி இல்லை. ஜெயா டிவி தொடங்கிய பிறகு, அவரின் ஒவ்வொரு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களும் அ.தி.மு.க. தொண்டர்களிடையும், மக்களிடையேயும் முழுமையாக சென்றடைந்தது.
நாம் விசாரித்த வரையில், 2000 ஆம் ஆண்டில் இருந்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவின் மகிழ்ச்சி, அ.தி.மு.க. தொண்டர்களிடமும், பொது மக்களிடம் இருந்த அளவிற்கு கூட ஜெயா டிவி பணியாளர்களிடம் இருந்திருக்கவில்லை என்பதுதான். பிப்.24 அன்று காலை 6 மணிக்கு தொடங்கும் செய்தி ஒளிப்பரப்பு, இரவு 11 மணியளவில் நிறைவடையும் வரை, பிறந்தநாள் விழா நிகழ்வுகளை மட்டுமே உள்ளடக்கிய செய்தியாக ஒளிப்பரப்பும் பணியில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருப்பார்கள். இரண்டு பகுதிகளாக வேலை பார்ப்போருடன், இரவுப் பணிக்கு வரும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களும், பிப்ரவரி 24 ஆம் தேதியையும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்ட நாளாக மாற்றி விடுவார்கள்.
ஊர், உலகமெல்லாம் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடும் பிறந்தநாள் விழா செய்திகளை 24 மற்றும் 25 தேதி என இரண்டு நாள்களுக்கு ஒளிபரப்பும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு, ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று ஒரு சாக்லெட்டை கூட சுவைக்கும் வரம், ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் கிடைத்ததில்லை. அவரின் மறைவுக்குப் பிறகும் வாய்க்கவில்லை என்பதுதான் சோகம்.
ஒவ்வொரு ஆண்டும், பிப். 24 ஆம் தேதி காலை முதலே ஜெயலலிதாவின் வயதுக்கு ஏற்ப இத்தனை கிலோ கேக் வெட்டினார்கள்., தொண்டர்களுக்கு, பொதுமக்களுக்கு ஜிலோபி, அல்வா உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்பட்டது என்ற செய்தி, ஜெயா டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பப்ட்டு வரும். சிறுநீர் கழிக்க செல்வதற்கு கூட நேரம் இல்லாமல் பணியாளர்கள் உழைத்துக் கொண்டிருப்பார்கள். காலை 6 மணிக்கு பணிக்கு வருகிறவர்கள், காலை நேர உணவை வீட்டில் இருந்து எடுத்து வர முடியாது. பிறந்தநாள் செய்தியின் பரபரப்பு, அங்குள்ள பணியாளர்களின் ரத்தத்தை சூடாக்கிக் கொண்டே இருக்கும். காலை உணவை கூட சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவோ, மதிய உணவோ, இரவு உணவோ, ஜெயா டிவி நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்ததில்லை.
மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்களுக்கு பிரியாணி வழ்ங்கப்பட்டது, பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது என்ற செய்தியை எழுதுகிறவர்களும், வீடியோ காட்சிகளை எடிட் செய்து ஒளிப்பரப்பும் வேலையை பார்ப்பவர்களும், ஒரு வித ஏக்கத்துடனேயே பார்த்துவிட்டு நேரம் தவறி ஹோட்டல்களுக்குப் போய் உணவு சாப்பிட்ட நாட்கள் நிறையவே உண்டு.
இதுதான் கடந்த 20 ஆண்டு காலமாக ஜெயா டிவி ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக அனுபவித்து வரும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அனுபவங்கள். அவரின் பிறந்தநாள் அன்று ஜெயா டிவியில் சிறிய அளவிலான பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது என்ற சரித்திரமே கிடையாது. இத்தனைக்கும் ஜெயா டிவியின் நிர்வாகம் நேரடியாக சசிகலாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தது. தனது பெயரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனக்காக பணிபுரியும் ஊழியாகள், தன்னுடைய பிறந்தநாள் அன்று மகிழ்ச்சியாக இருந்தார்களா? என்று கேட்டு தெரிந்து கொள்கிற அல்லது தன் நிறுவன ஊழியர்களை அழைத்து பிறந்தநாள் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்கிற மனப்பான்மை இன்றியே மறைந்து போனவர்தான் செல்வி ஜெயலலிதா. சாதாரண தேநீர் கடை வைத்திருக்கும் உரிமையாளர் கூட, தன்னிடம் வேலைப் பார்ப்பவர்களுக்கு, பிறந்தநாள் அன்று புத்தாடைகளும், வெகுமதிகளையும் வழங்குவதை பார்த்திருக்கிறோம். பார்த்து வருகிறோம்.
ஆனால், தனது பெயரால் இயங்கும் ஒரு நிறுவனத்தில், அதுவும் ஊடக நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற சிந்தனையே செல்வி ஜெயலலிதாவுக்கு இருந்ததில்லை. தப்பிதவறி, 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நேரத்தில், தன்னுடைய மகிழ்ச்சியை, ஜெயா டிவி பணியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது, வெற்றி கிடைப்பதற்கு ஒரு வகையில் உறுதுணையாக இருந்த ஜெயா டிவி பணியாளர்கள், குறிப்பாக செய்திப் பிரிவில் இருந்த நூற்றுக்கணக்கானோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முன்வந்தார். 20க்கும் மேற்பட்ட பணியாளர்களை போயஸ் கார்டன் இல்லத்திற்கே அழைத்து, அவரது கையாலேயே ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார். இதேபோல, மற்ற ஊழியர்களுககும் ஒரு லட்சம் ருபாயை வழங்க உத்தரவிட்டார் ஜெயலலிதா. ஆனால், புண்ணியவான்கள, அலுவலகத்தில் இருந்த ஊழியர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்கிவிட்டு, மீதி தொகையான 50 ஆயிரம் ரூபாயை ஆட்டையைப் போட்டுவிட்டார்கள். இது சசிகலா நடராஜனின் கைங்கரியமாக? என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.
ஜெயலலிதாவின் தோழியாக இருந்து கொண்டு, தன்னுடைய உறவுகளை, ஆயிரக்கணக்கானோரை கோடீஸ்வரர்களாக ஆக்கி சந்தோஷப்பட்டுக் கொண்ட சசிகலா, ஜெயா டிவி ஊழியர்களை கசக்கி பிழிந்தார், ரத்த கண்ணீர் வடிக்க வைத்தார் என்பதுதான் உண்மை. ஜெயா டிவியின் நிர்வாகப் பொறுப்பிற்கு, சசிகலாவால் பல பேர் நியமிக்கப்பட்டனர். அதில், டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதாவும் ஒருவர். அவர், ஜெயா டிவியின் நிர்வாகத்தை கவனித்து வந்த காலத்தில், பணியாளர்களின் நலனில் அக்கறை காட்டியிருக்கிறார். அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்டு நிவர்த்தி செய்தியிருக்கிறார். ஆனால், அது கொஞ்ச காலம்தான். அதற்குப் பிறகு சசிகலாவால், நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் ஜெயா டிவியை வைத்து தங்களை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, ஜெயா டிவி ஊழியர்களுக்கு ஒரு நன்மையையும் செய்யவில்லை.

ஜெயலலிதா மீது இருந்த அபரிதமான விசுவாசத்தால கொத்தடிமையாக தாங்கள் நடந்தப்படுகிறோம் என்பதை உணர்ந்திருந்தபோதும், ஜெயலலிதா மீதான பக்தியின் காரணமாக அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை பார்த்தார்கள், இன்றைக்கும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் ஜெயா டிவி ஊழியர்கள்.
இப்படி பல்வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டு வேலை பார்த்து வந்த அந்த அப்பாவிகளுக்கு நல்ல காலம் ஒன்றும் பிறந்தது. அது 2011 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவுகள் 13 பேரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டாரே ஜெயலலிதா, அப்போதுதான் ஜெயா டிவிக்கும் விடுதலை கிடைத்தது. அங்கு பணியாற்றிய பணியாளர்கள் சுதந்திரமான சுவாசக் காற்றை அப்போதுன் அனுபவித்தார்கள். சசிகலா வெளியேற்றப்பட்டபோது ஜெயா டிவி நிர்வாகத்தை கவனிக்க ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எ.ஸ் அதிகாரி ராகவேந்திர ராவ் என்பவரை நியமித்தார், செல்வி ஜெயலலிதா. உண்மையிலேயே அந்த மனிதர் தங்கமானவர். ஜெயா டிவி ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதியைப் பார்த்து, அதிர்ச்சியடைந்து, சசிகலா செய்த அத்தனை தீங்குகளையும் ஒரு மாதத்திலேயே நீக்கி, பல்வேறு சலுகைகளை அமல்படுத்தினார். அத்தனயும் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு நடைபெற்றது.
ஊதிய உயர்வு, மருத்துவக் காப்பீடு, அலுவலகத்திலேயே பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் என பல சலுகைகளை வாரி வழங்கினார். அதே காலத்தில்தான் மறைந்த பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மற்றும் டி.கே.ராமமூர்த்தி இரட்டையருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. ஜெயா டிவியின் 14 வது ஆண்டு விழாவாக அது கொண்டாடப்படடது. அந்த விழா மேடையில் சசிகலாவின் தீய குணத்தை மனம் நொந்து போய் ஜெயலலிதாவே பேசி, ஜெயா டிவி ஊழியர்களுக்கு 40 சதவிகிதம் வரை ஊதிய உயர்வையும்,மருத்துவக் காப்பீடு, உணவு வழங்கும் திட்டம் ஆகியவற்றை அதே மேடையிலேயே அறிவித்தார்.

அந்த நேரத்தில்தான் அவருக்கு உண்மை தெரிந்திருந்தது. ஜெயா டிவி பணியாளர்களை சசிகலா எப்படியெல்லாம் கொடுமை படுத்தியிருக்கிறார் என்று. அதற்கு பரிகாரம் செய்யும் விதமாக, ஜெயா டிவியில் இருந்து எனக்கு வருமானமே வேண்டும். எவ்வளவு தொகை கிடைத்தாலும், அதை அங்குள்ள ஊழியர்களின் நலனுக்கே செலவு செய்துவிடங்கள் என்று கூறினார் ஜெயலலிதா.
ஆனால், சசிகலாவை விட கொடூர மனம் படைத்தவர்களாக இருந்தனர் அவரால் நியமிக்கப்பட்ட சில நிர்வாகிகள். அவர்களுடன் மல்லுகட்டி, மல்லுகட்டி வெறுத்துப் போன ராகவேந்திர ராவ், தன்னால் முடிந்தளவுக்கு ஊழியர்களுக்கு பல நன்மைகளை செய்துவிட்டு, ஓரிரு மாதங்களிலேயே பதவி விலகினார். அதற்குப் பிறகு தலைமை பொறுப்புக்கு வந்தவர், நீண்ட நெடிய ஊடக அனுபவம் பெற்ற சுனில் என்ற மூத்த செய்தியாளர். சசிகலா போயஸ் கார்டனுக்கு மீண்டும் திரும்பிய அந்த இடைபட்ட காலத்தில் 10 கோடி அளவுக்கு ஜெயா டிவி லாபம் ஈட்டியிருந்தது. அந்த பணத்தில், ஜெயா டிவியில் பணியாற்றும் சொந்த வீடு இல்லாத பணியாளர்களுக்கு வீட்டுமனை வாங்கி தரலாமா? என்ற ஒரு யோசனையை ஜெயலலிதாவிடம் கூறியிருந்தால் கூட, அப்போது அவர் இருந்த மனநிலைக்கு, சந்தோஷத்துடன் ஒப்புதல் வழங்கியிருக்க கூடும்.

ஆனால், நிலம் வாங்குவதன் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, சுனிலும், அவரோடு இருந்த சிலரும், தற்போது உள்ள ஜெயா டிவி அலுவலகத்தின் பக்கத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தை ஜெயா டிவி பெயரில , அந்த பத்துகோடி ரூபாய்க்கு வாங்கி, அதன் பத்திரத்தை கொண்டு ஜெயலலிதாவிடம் கொடுத்தார்கள். அதை பார்த்த அவர், எனக்கு எதுக்கு சொத்து என்றுதான் கேட்டிருக்கிறார். அந்த பணத்தில் ஊழியர்களுக்கு ஏதாவது செய்திருக்கலாமே என்றுதான் கேட்டிருக்கிறார். அப்படி கொடைதன்மையோடு இருந்த ஜெயலலிதாவிடம், அந்த நேரத்தில், ஜெயா டிவி பங்குகளை ஊழியர்களின் பெயருக்கு பரிமாற்றம் செய்யலாமா என்ற கோரிக்கையை வைத்திருந்தால் கூட ஜெயலலிதா சம்மதம் தெரிவித்திருக்க கூடும். அதற்கும் ஒரு முன்னூதாரணம் இருந்தது. பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான இன்ஃபோஸ்சிஸின் உரிமையாளரான நாராயண மூர்த்தி, தனக்கு சொந்தமான பங்குகளை ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்திருந்தார்.

ஜெயா டிவியில் பணியாற்றிய கே.பி.சுனிலும், ஒரு கட்டத்தில் தன்னை முதலாளி போலவே பாவித்துக் கொண்டார். ஊடகவியலாளர்களின் நலனே கண்ணுக்கு தெரியவில்லை. அப்போது ஜெயா டிவியின் செய்திப் பிரிவுக்கு அவர்தான தலைவர். தமிழே, எழுத, படிக்க தெரியாதவர், தமிழ் தொலைக்காட்சிக்கு தலைமையேற்றது சாபக்கேடு. ஜெயா டிவி, அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தது. அதன் செல்வாக்கை பயன்படுத்தி, தனியாக சில தொழில்களை செய்து லாபம் ஈட்டிக் கொண்டிருந்தார். அப்படிபட்ட மனநிலையில், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய பணியாளர்களைப் பற்றி அவர் துளியும் கவலைப்படவில்லை.
சசிகலா வெறியேற்றப்பட்ட அந்த காலம்தான் ஜெயா டிவி ஊழியர்களுக்கு பொற்காலமாக இருந்தது. மீண்டும் போயஸ்கார்டன் திரும்பிய சகிகலா, கொஞ்ச காலம்தான் அமைதியாக இருந்தார். மீண்டும் ஜெயா டிவி நிர்வாகத்தில் அவர் தலையிட ஆரம்பித்தவுடன், அடிமை உடையை உடுத்திக் கொண்டனர் ஜெயா டிவி பணியாளர்கள். ஈவு இரக்கமற்றவர் சசிகலா என்பதற்கு அ.தி.மு.க. எனும் கட்சிக்குள்ளும், ஆட்சி அதிகாரத்தில் அ.தி.மு.க. இருந்தபோதும் எண்ணற்ற நிகழ்வுகளை பட்டியலிடலாம். ஆனால், ஜெயா டிவியில் அவர் அரங்கேற்றிய கொடுங்கோன்மையான சில நிகழ்வுகளை மட்டுமே இங்கே முன் வைக்கிறோம்.
2012 மார்ச் மாதம் சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு திரும்பிய காலத்தில் இருந்து ஜெயலலிதா மறைந்த 2016 க்கு இடையிலான காலகட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியுள்ளார் சசிகலா. இப்படியெல்லாம் ஜெயா டிவியில் நடந்திருக்கிறது என்பது, ஜெயலலிதாவுக்கு, அவர் மறைந்த காலம் வரை தெரியாது.

அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது நியாயம் கேட்டால், சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்களை எதிர்த்துப் பேசினால், உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அந்த செயல்கள், தொழிலாளர் நலனுக்கு முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற வகையிலும் இருந்தது. நாமக்கல் வழக்கறிஞர் செந்தில், தனது படை பரிவாரங்களோடு ஜெயா டிவி அலுவலகத்திற்கு வருவார். பணியில் இருந்து நீக்கப்படவுள்ள ஊழியர்களை அழைத்து, எதற்காக பணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்ற காரணதைக் கூட சொல்லாமல், அலுவலக அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டு, வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்.
இப்படி 300 க்கும் மேற்பட்டவர்கள், 2012 ல் இருந்து 2016 வரை வெளியற்றப்பட்டிருக்கிறார்கள். மாதச் சம்பளத்தை தவிர வேறு வழியில்லாத ஊழியர்கள், அந்த அலுவலகதை விட்டு வெளியேறி சாலையில் நிற்கும்போது, அவர்களது எதிர்காலமே சூன்யமாகி விட்டதே என்று நினைத்து கண்ணீர் வடிந்த தருணங்கள் நிறைய உண்டு.
2014 ம் ஆண்டில் செய்திப்பிரிவின் தலைமைக்கு இரண்டு புறம்போக்குகளை அடுத்தடுத்து நியமித்தார் சசிகலா. முதல் புறம்போக்கு, மாவட்ட செய்தியாளர்களுக்கு அதுவரை கிடைத்த சம்பளப் பணத்தை குறைத்து, அவர்களின் வயிற்றில் அடித்தான். அவனுக்குப் பிறகு இரண்டாவது புறம்போக்கு ஒன்று வந்தது. (இவனின் தில்லுமுல்லுகள் பற்றி நாளை தனியாக ஒரு செய்தி வெளியாகப் போகிறது) அவன் பெண் பணியாளர்களிடம் மிக,மிக கேவலமாக நடந்து கொண்டான். இந்த இரண்டு பேரின் காலத்திலும் பழி வாங்கப்பட்ட ஊழியர்கள் ஏராளம்.
2016 ஆம் ஆண்டு தேர்தலிலும் அ.தி.மு.க.வே வெற்றிப் பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. அப்போதும், முந்தைய 2011 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ருபாய் வெகுமதி வழங்கியதைப் போல, ஜெயலலிதா மீண்டும் வழங்குவார் என்று ஊழியர்கள் ஆசையோடு இருந்தனர். ஆனால், போயஸ் கார்டனில் இருந்து ஒரு சாக்லேட் கூட ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அ.தி.மு.க.வினருக்கும் பொதுமக்களுக்கும் எப்படி புரியாத புதிராக ஜெயலலிதா இருந்தாரோ, அதுபோல தான் மறையும் வரை ஜெயா டிவி ஊழியர்களுக்கும் அவர் காட்சியளித்தார். .
பணிநீக்கம் செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பி.ஃஎப் எனும் வருங்கால வைப்பு நிதி தொகைதான் கிடைத்ததே தவிர, ஜெயா டிவியில் இருந்து, பணிக்கொடை பணம் என ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. 5 ஆண்டு பணியில் இருந்தாலும் சரி அதற்கு மேல் பணியில் இருந்தவர்களையும் வெறும் கையோடு அனுப்பிவைத்தவர்தான் சசிகலா. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா சிறைக்கு சென்றப் பிறகு, ஜெயா டிவியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட, இளவரசி ஜெயராமனின் மகன் விவேக், அந்த குடும்பத்து உறுப்பினர்களிடையே வித்தியாசமான, மனிதநேயம் மிகுந்தவராக இருந்ததைக் கண்டு நிம்மதி பெருமுச்சு விட்டார்கள் ஜெயா டிவி பணியாளர்கள்.

அவரின் கீழ் நிர்வாகம் வந்தவுடன் ஊழியர்களை அழைத்து அன்பாக பேசிய அவர், அவர்களின் பெரும்பாலான குறைகளை களைந்து, பணியாளர்களை உற்சாகப்படுத்தினார். அவரது தலைமையே தொடர்ந்தால் தங்களுக்கு விடியல் நிரந்தரம் என நம்பினார்கள். ஆனால், துரதிர்ஷ்டம் கொரோனோ வந்தது. அங்கு பணியாற்றிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் மாவட்ட நிருபர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டது. கொரோனோ தொற்று விலகிய பிறகு, குறைக்கப்பட்ட சம்பளத்தை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவார் என்று ஏக்கத்தோடு இருக்கிறார்கள் ஜெயா டிவி ஊழியர்கள்.
விவேக் ஜெயராமன் தலைமையேற்ற இந்த மூன்றாண்டுகளிலும் கூட ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று ஜெயா டிவியில் கேக் வெட்டப்படவில்லை என்பதும், அதுபோன்று ஒரு விஷேசமான நாள், பிப்ரவரி 24 இல்லை என்ற சிந்தனையுடன்தான் ஊழியர்கள் பணியாற்றிக் கொடிருக்கிறார்கள். ஜெயா டிவி ஊழியர்களைப் பொறுத்தவரை பிப்ரவரி 24 என்பது மற்ற நாள்களைப் போல ஒரு சாதாரண நாளாகதான் கடந்து போகிறது என்பதுதான் துயரம்.
ஜெயா டிவிக்கு அரசியல் ரீதியாக போட்டி தொலைக்காட்சியாக பார்க்கப்படுகிற சன் தொலைக்காட்சியில், நாள்தோறும் மூன்று வேளை உணவு வழங்கினாலும், முரசொலி மாறன் பிறந்தநாளில் விஷேச உணவு வழஙகப்பட்டு வருகிறார்கள் என்ற தகவலும் உண்டு. அவர்களுக்கு உள்ள மனிதநேயம் கூட சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இல்லாமல் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.
இப்போது சொல்லுங்கள், சசிகலா நன்றிக்குரியவரா, ஜெயலலிதா மீது பக்தி கொண்டவரா?
.